‘விடுதலை'யின் வீர வரலாறு காணொலி நிகழ்வில் ஆசிரியரின் உருக்கமிகு உரை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, June 19, 2020

‘விடுதலை'யின் வீர வரலாறு காணொலி நிகழ்வில் ஆசிரியரின் உருக்கமிகு உரை

‘விடுதலை'யின் வரலாறு என்பது  ஒரு தொடர் வரலாறு!


‘விடுதலை'யிலிருந்து என் மூச்சு ஒன்றுதான் என்னைப் பிரிக்க முடியும்!



சென்னை, ஜூன் 19   "விடுதலை'யினுடைய வரலாறு என்பது இருக்கிறதே, இது ஒரு தொடர் வரலாறாக இருக் கும். என்னை ‘விடுதலை'யிலிருந்து பிரிக்க முடியுமானால், என் மூச்சு ஒன்றுதான் பிரிக்க முடியுமே தவிர, வேறு எதுவும் பிரிக்க முடியாது" என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.


‘விடுதலை'யின் வீர வரலாறு!


கடந்த 13.6.2020 அன்று மாலை  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ‘‘‘விடுதலை'யின் வீர வரலாறு'' எனும் தலைப்பில் காணொலி மூலம் கழகத் தோழர்களிடையே சிறப்புரையாற்றினார்.


அவரது உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:


பொன்னம்பலனார் அவர்களைப்பற்றி இங்கே சொன்னார்கள். அவர் பெயரில்தான், வாடகைப் பத்திரமே எழுதி வாங்குகிறார்.


அவர்தான் முதலில் பத்திரிகை ஆசிரியராக வந்தார். அவரே போய், நெ.2 பாலகிருஷ்ணன் பிள்ளை தெரு, சிந்தாதரிப்பேட்டையில் உள்ள அலுவலகத்தைப் பூட்டி சீல் வைக்கவேண்டும்; பெரியாரை வெளியேற்ற வேண் டும்; அவருக்கு உரிமை இல்லை; நமக்குத்தான் உரிமை உண்டு என்றெல்லாம் பேசியவர்கள் உண்டு.


பெரியார் அவர்கள் அதைப்பற்றி கவலைப்படவில்லை. சிரித்துக்கொண்டே, தன்னுடைய பயணத்தைத் தொடர்ந்தார்.


பெரியாருக்கு மனபலம் குன்றியதா?


பெரியாருடைய லட்சியப் பயணம் தடைபட்டதா?


கடைசியாக குருசாமி போனார்; வேதாச்சலம் போனார்; அதைப்பற்றி தந்தை பெரியார் அவர்கள் கவலைப்பட வில்லை. ஏற்கெனவே அண்ணா அவர்கள் திட்டமிட்டிருந் தார், அரசியலுக்குப் போகவேண்டும்; அவரும் போனார், அதைப்பற்றி கவலைப்படவில்லை அய்யா.


‘திராவிடன்' பத்திரிகையில் ஜனகசங்கர கண்ணப்பன் இருந்தார். அவர் தீவிர சுயமரியாதை இயக்கக்காரர்; காங்கிரசை எதிர்த்துப் பேசியவர். அதற்கு நேர் எதிராக, தேசிய நாளேட்டிற்கு ஆசிரியராகப் போய்விட்டார்.


எஸ்.இராமநாதன் அவர்களை, அய்யா அவர்கள் ரஷ்யாவிற்கெல்லாம் அழைத்துச் சென்றார். இராமநாதன் அவர்கள் எம்.ஏ., பி.எல். படித்தவர்; அவர் மிகப்பெரிய ஆழமான சிந்தனையாளர். அவர் கடைசியில், காங்கிரசில் சேர்ந்து, இராஜகோபாலாச்சாரியரிடம் போய், மந்திரி ஆனார்.


கம்யூனிஸ்ட் தோழர் ஜீவானந்தம் அவர்கள், ‘‘பெரியார் கொள்கையில் தீவிரமாக இல்லை; பொதுவுடைமைத் தத்துவத்திலிருந்து பின்வாங்குகிறார் என்று சொல்லி, காங்கிரசை ஆதரித்துப் பின்னால் சென்றார், அந்த அளவிற்குப் பயன்படவில்லை.


கே.எம்.பாலசுப்பிரமணியம், பின்னாளில் திருவாசக மணியானார். ஜின்னாவையும், அம்பேத்கரையும் சந்தித்த பொழுது, எட்டுப் பேர் போனார்கள். அவரையும் அழைத் துக்கொண்டு போனார் அய்யா.


முக்கியஸ்தர்கள் சென்றார்கள், யாராவது பெரியாரி டத்தில் கடைசிவரை இருந்தார்களா? அதைப்பற்றி பெரியார் அவர்கள் கவலைப்படவில்லை. பெரியாருக்கு மனபலம் குன்றியதா? பெரியாருடைய லட்சியப் பயணம் தடைபட்டதா? என்றால், இல்லை.


‘ஒன் மேன் ஆர்மி!'


தந்தை பெரியார் அவர்கள் ஆரம்பத்தில் சொன்னார் பாருங்கள், ‘‘நான் ஒருவனே எழுதி, ஒருவனே அச்சடித்து, ஒருவனே வேண்டுமானாலும் படிப்பேன். எனக்கு அதைப்பற்றி கவலையில்லை'' என்று சொன்னார்.


அதேபோன்று, ‘ஒன் மேன் ஆர்மி' என்று சொல்லக் கூடிய அளவிற்கு, நான் ஒருவனே இந்த இயக்கத்தை நடத்த முடியும்; எனக்கு எதைப்பற்றியும் கவலையில்லை என்று சொன்னார்.


மனிதர்களுக்கு, நானாக இருந்தாலும், மற்றவர்களாக இருந்தாலும், ஒரு நோய் வரும் அல்லது சங்கடம் வரும் - அப்படி வந்தால் ஒரு சலிப்பு வரும். ஆனால், சலிப்பறி யாத சரித்திரமாகத் தந்தை பெரியார் அவர்கள் இருந் திருக்கிறார் என்பது மிகவும் ஆச்சரியம்தான்.


ஜீவ சுபாவம் என்று ஒரே வார்த்தையில் சொல்வார் தந்தை பெரியார் அவர்கள்.


மிகப்பெரிய சங்கடம், மிகப்பெரிய சோதனை - மிகப்பெரிய ஏமாற்றம் என்று வரும்பொழுது, தந்தை பெரியார் அவர்கள் யோசிப்பார் - ‘‘ம், ம், அது அவன் ஜீவ சுபாவம், அப்படித்தான் இருக்கும்; அதை நாம் விட்டு விடலாம்'' என்று சொல்வார்.


ஆகஸ்ட் 15, 1944


தந்தை பெரியாரின்  டைரிக் குறிப்பு!


1944, ஆகஸ்ட் 15 ஆம் தேதி, அவருடைய டைரியில் எழுதி வைத்திருக்கிறார்.


‘‘என் பேப்பருக்கு (விடுதலைக்கு) போதுமான காகிதக் கோட்டா இல்லை. ‘ஜஸ்டிசைட்'டுக்கு அனுமதி மறுக்கப் பட்டது. இவர்களை நம்பி ஜஸ்டிஸ் கட்சி ஒப்புவிக்கப் படவேண்டுமா? நான் யாருக்காவது கெடுதி செய்திருப் பேனா?'' என்று. அப்போதெல்லாம் பேப்பருக்குக் கோட்டா உண்டு. வெளியில் வாங்கினால், பல மடங்காக இருக்கும். மேலும் நட்டமாகிவிடும். அடுத்த 10 நாட்களில் என்ன எழுதுகிறார் தெரியுமா? என்ன கஷ்டம் என்றாலும், உடனடியாக அதைத் தாங்கிக் கொண்டு வெளியில் வந்துவிடுவார். அதற்கொரு உதாரணம் சொல்கிறேன்.


அய்யா அவர்கள் இயக்கத்துப் பணம், தன்னுடைய சொந்தப் பணத்தையெல்லாம் போட்டுப் பெருக்கித்தான், இயக்கத்திற்கு இவ்வளவு பெரிய சொத்தை உண்டாக்கினார் என்பது எல்லோருக்கும் தெரிந்த செய்தி.


‘மில்'லில்கூட பணம் போடுவார்; வங்கியில் போடும் பணத்திற்கு வட்டி குறைவு. மில்லில் பணம் போட்டால், அந்த மில்காரர்கள் அதிகமான வட்டி கொடுப்பார்கள். கோயம்புத்தூர் மில் முதலாளிகள் எல்லாம் அய்யாவிற்கு வேண்டியவர்கள். அவர்கள் எல்லாம் அய்யாவிடம் வந்து பணம் கேட்பார்கள், அய்யா அவர்களும் பணம் கொடுத்து, வட்டியை சரியாக வாங்கி, இயக்கத்திற்காகச் செலவு செய் வார். அந்தப் பணம் இயக்கத்தின் பெயரில்தான் இருக்கும். வட்டி வரவில்லை என்றால், மற்ற விஷயத்திற்காக யாருக் காவது கடிதம் எழுதும்பொழுது, கவரில் எழுதாதீர்கள்; கார்டில் எழுதுங்கள் என்று சிக்கனமாக இருக்கும் தந்தை பெரியார்,  இதற்கோ ‘தந்தி கொடுங்கள்’ என்பார். தந்திக்குப் பணம் செலவாகும் என்று தெரியும். ஆனால், வட்டிப் பணம் தவறக்கூடாது என்று நினைப்பவர். பணத்தில் அவ்வளவு குறியாக இருந்து சேர்த்தவர். அப்படிப்பட்ட தந்தை பெரியார் அவர்கள் மனம் உடையவில்லை.


ஒரு குறிப்பிட்ட மில்லில் ஒரு லட்சம் ரூபாய் பணம் கொடுத்திருந்தார். அந்த மில், லிக்குவிடேட் ஆகிவிட்டது. அது அய்யாவை மிகவும் பாதித்தது. ஏனென்றால், அந்தக் காலத்தில் ஒரு லட்சம் ரூபாய் என்பது சாதாரணமானதல்ல.


அப்பொழுது தந்தை பெரியார் அவர்களுக்கு உடல் நலம் சரியில்லை. எனக்குத் தந்தி கொடுத்திருந்தார்கள், உடனே புறப்பட்டு வரும்படி. நான் எதற்கென்று தெரியா மல், உடனே புறப்பட்டுச் சென்றேன்.


அப்பொழுது அம்மா சொன்னார்கள், ‘‘அய்யாவிற்கு, வயிற்றுப் போக்கு, உடல்நிலை சரியில்லை. அதற்கு என்ன காரணம் என்றால், நேற்று இதுபோன்ற ஒரு செய்தி வந்தது.  அய்யா அவர்கள் கூட்டத்தைத் தள்ளி வைக்கமாட்டேன் என்கிறார். மக்களை ஏமாற்றவேண்டாம் என்று சொல் கிறார். அதனால்தான் உங்களை வரச் சொன்னார். உங் களை முதலில் உரையாற்றச் சொன்னார். அப்படியே சுற்றுப்பயணத்தை முடித்துவிடலாம் என்று சொன்னார்'' என்றார்.


பிறகு அய்யா சொன்னார், ‘‘ஒரு லட்சம் ரூபாய் இப்படி போய்விட்டது; வரும் என்ற நம்பிக்கையில்லை'' என்றார்.


அய்யாவிற்கு நாங்கள் எப்படி சமாதானம் சொல்ல முடியும். நாங்கள் அனைவரும் பேசாமல் இருந்தோம்.


ஒரு அய்ந்து நிமிடம் கழித்து நிமிர்ந்து, ‘‘அவன் எத்த னையோ முறை வட்டி கொடுத்திருக்கிறான்; பல ஆண்டு களாக வட்டி வாங்கியிருக்கிறோம். லட்ச ரூபாய்க்கு மேலேயே பணம் வந்துவிட்டது. பரவாயில்லை'' என்றார்.


என்னை ஏய்க்க முடியுமே தவிர,


என்னை எவராலும் வெல்ல முடியாது, ஏன்?


ஆகஸ்ட் 25 ஆம் தேதி, தன்னுடைய டைரியில் தந்தை பெரியார் அவர்கள் எழுதி வைத்திருக்கிறார்,


‘‘என்னை ஏய்க்க முடியுமே தவிர, என்னை எவராலும் வெல்ல முடியாது. ஏன்? என் கொள்கையும், திட்டமும், என் எண்ணமும், நடத்தையும் அப்படிப்பட்டது. என் சிநேகிதர்களால்தான் நான் வஞ்சிக்கப்படுவேனே தவிர, என் எதிரியால் ஒருபோதும் நான் வஞ்சிக்கப்படமாட்டேன். நான் பதவிப் பித்தனல்ல. அயோக்கியர்களை பதவியில் இருக்க விடக் கூடாது என்ற கவலை உடையவன்'' என்று மிகத் தெளிவாக சுட்டிக்காட்டியுள்ளார்.


ஆகவே, பெரியாருடைய சிந்தனை என்பது ‘விடுதலை' வரலாற்றிலே ஒவ்வொரு காலகட்டத்திலும் மிகத் தெளிவாக, துணிச்சல், தெளிவு, உறுதி, எத்தகைய நட்டம் ஏற்பட்டாலும், இயக்கத்தை, கொள்கையை, தன்னுடைய பயணத்தை விட்டுவிடக் கூடாது என்பதை நினைத்துத்தான் வந்திருக்கிறது.


பாமர மக்களுடைய உதவிகள்,


அன்பளிப்புகள்தான்!


இன்னொரு செய்தியை சொல்லி என்னுரையை முடிக்கின்றேன்.


இயக்கத்தினுடைய முழுச் செலவையும் அய்யாதான் ஏற்றுக் கொண்டிருக்கிறார். பேச்சாளர்களுக்கு எல்லோருக் கும் மொத்தமாக டிக்கெட் எடுத்துக் கொடுப்பார். இயக் கத்திற்காகப் பத்திரிகை நடத்தியிருக்கிறார். இவ்வளவுக்கும் பணம் எங்கிருந்து வந்தது? பொதுமக்களோ நம்மை எதிரி களாகப் பார்ப்பார்கள்; பணக்காரர்களும் கொடுப்பதில்லை. பாமர மக்களுடைய உதவிகள், அன்பளிப்புகள்தான்.


நம்முடைய பங்களிப்பைவிட, மக்கள் பங்களிப்பு இருக்கவேண்டும் என்பதைத்தான் பெரியார் அவர்கள் விரும்புவார். மக்கள் பங்களிப்பு என்பது, இயக்கத்தினுடைய ரத்த ஓட்டமாகும். ஒரு குறிப்பிட்ட பணக்காரர் உதவி செய்து, அதனால் கட்சி நடத்தினால், அந்த இயக்கத்திற்கு வேர் இல்லை என்று அர்த்தம்.


மக்களுடைய பேராதரவு, வாசகர்களுடைய பேராதரவு இருந்தால்தான் பத்திரிகை.


இது மக்களுடைய இயக்கம்,


மக்களுடைய பத்திரிகை ‘விடுதலை!'


இன்றைக்கு இவ்வளவு பேர் நீங்கள் வந்திருக்கிறீர்களே, யாரும் சொல்லி வரவில்லை.


நம்மீது வழக்குப் போட்டாலும், ஜாமீன் கேட்டாலும் - இரண்டாயிரம் ரூபாயை அய்யாவால் கட்ட முடியாதா? என்றால், கட்டலாம். ஏன் மக்கள் மத்தியில் வேண்டுகோள் விடுக்கிறார்கள் என்றால், மக்களுடைய பங்களிப்பு, ஆதரவு இருக்கிறது என்று அரசுக்குத் தெரியவேண்டும்; எதிரிகளுக்குப் புரியவேண்டும் என்பதுதான் மிகவும் முக்கியம்.


இது மக்களுடைய இயக்கம், மக்களுடைய பத்திரிகை என்று சொல்லக்கூடிய அளவிற்கு, அந்த வாய்ப்புகளை உருவாக்கினார்கள். மக்கள் ஆதரவில் இருந்துதான், இந்த இயக்கம் வளர்ந்தது.


பெரியாருக்குப் பணத்தாசை என்று சொல்வார்கள்; ஆனால், அவருடைய பணத்தாசைதானே, இன்றைக்கு இந்த இயக்கம் இந்த அளவிற்கு வளர்ந்திருப்பதற்குக் காரணம்.


அதற்கு ஒரு சிறிய உதாரணம் சொல்கிறேன்.


மதுரைக்கு அருகில் இருக்கின்ற வாடிப்பட்டியில், 28.1.1940 ஆம் ஆண்டு நடைபெற்ற கூட்டத்தில், வாடிப்பட்டி திராவிடர் கழகத்தினர் தந்தை பெரியாருக்குப் பண முடிப்பு அளித்தார்கள். (ஒரு பையை ஆசிரியர்கள் அவர்கள் எடுத்துக்காட்டுகிறார்). அந்தப் பையில், 1001 அணா இருந்தது.


அன்னை மணியம்மையார்


பாதுகாத்து  கொடுத்திருக்கிறார்


எதற்காக இதனைச் சொல்கிறேன் என்றால், இவை அத்தனையையும் அன்னை மணியம்மையார் அவர்கள் பாதுகாத்து  கொடுத்திருக்கிறார்கள்.


இந்த இயக்கத்தினுடைய வேர் எங்கே இருக்கிறது என்றால், பணக்காரர்களின் மத்தியில் அல்ல - லட்சாதி பதிகள், கோடீசுவரர்கள் மத்தியில் அல்ல. சாதாரண எளிய மக்கள் இருக்கிறார்கள் பாருங்கள், ஓரணா, காலணா கொடுத்தார்களே, அவர்களின் மத்தியில்தான் இருக்கிறது; அதனுடைய ரகசியம் அதுதான்.


நெருக்கடி காலகட்டத்தில், வருமான வரித் துறையினர் ‘விடுதலை'யை நிறுத்தவேண்டும்; வாடகையை எங்களி டம்தான் கட்டவேண்டும்'' என்று அவர்கள் சொன்ன பொழுது,


நெருக்கடி காலம் முடிந்து, மிசாவிலிருந்து - சிறையில் இருந்து வெளியே வந்து, ஒரு பார்ப்பன மேலதிகாரியிடம் நான் பேசும்பொழுது சொன்னேன், ‘‘விடுதலையை நிறுத்த முடியாது'' என்றேன்.


நாங்கள் துண்டேந்தி தெருவில் செல்வோம் -


பிச்சை எடுப்போம் - மக்கள் கொடுப்பார்கள்!


“நீங்கள் வெற்றி பெற முடியாது வழக்கில், அவ்வளவு சொத்தும் போய்விடும்'' என்றார்.


‘‘பரவாயில்லை; ஆனால், ஒன்று, நாங்கள் துண்டேந்தி தெருவில் செல்வோம் - பிச்சை எடுப்போம் - மக்கள் கொடுப்பார்கள் - ஒருவர், ஒரு ரூபாய் கொடுத்தால் போதும் என்போம். இயக்கத்தை நடத்துவோம், விடு தலையை நடத்துவோம்'' என்றேன்.


இது வெறும் வார்த்தையல்ல நண்பர்களே, அய்யா அவர்கள் மறைந்து, அம்மா அவர்கள் நான்காண்டு காலம் இயக்கப் பொறுப்பேற்று - அய்யாவிற்கு நூற்றாண்டு விழா வருகிறது - அய்யாவும் இல்லை - அம்மாவும் இல்லை. அப்பொழுதுதான் நான் பொறுப்பேற்று இருக்கிறேன் (1978). என்ன செய்வது என்று தோழர்களிடம் கலந்து பேசி, திட்டமிட்டோம். ஒரு ரூபாய் டிக்கெட் என்று அச்சடித்து, அய்ந்து லட்சம் ரூபாய் வசூல் செய்வது என்று முடிவு செய்தோம்.


பணம் கொடுக்கிறார்கள் என்பதற்காக அல்ல - இது மக்களுக்கான இயக்கம் - மக்களின் ஆதரவு பெற்ற இயக்கம் -  இது தனிப்பட்டவருடைய சொத்தல்ல என்கிற உணர்வை உண்டாக்கவேண்டும் என்பதற்காகத்தான்.


நான் பொறுப்பேற்றவுடன், உயர்நீதிமன்றத்தில் வழக் குப் போட்டார்கள் - பெரியாருடைய அறக்கட்டளை சொத்துக்களை அரசாங்கம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று.


வழக்கு நிதி!


அந்த வழக்கைச் சந்திப்பதற்காக - வழக்கு நிதி என்று ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் கொடுங்கள் என்று சொல்லி, அந்தப் பணத்தைக் கொண்டுதான் வழக்கை நடத்தினோம்.


முதலில் காரைக்குடியில்தான் அந்த நிகழ்ச்சி தொடங் கியது. பெரியார் சிலைக்கு அருகிலுள்ள திடலில் கூட்டம். ஒரு ரூபாய் கொடுங்கள் என்றோம். கூட்டத்தில் பட்டாணி, முறுக்கு விற்றுக் கொண்டிருந்த ஒரு தோழர் (முறுக்குக் கூடை முருகேசனார்), 50 காசு கொடுத்தார்; நான் உடனே சொன்னேன், ‘‘50 ரூபாய் கொடுத்தவர்களைவிட, 50 காசு கொடுத்த நீங்கள்தான் மிகவும் முக்கியம்'' என்றேன்.


அதுபோன்று நண்பர்களே, அன்றைய ஒரணாதான், இன்றைக்கு இவ்வளவு பெரிய அஸ்திவாரம்.


1941 ஆம் ஆண்டில், தந்தை பெரியார் ‘விடுதலை'யை சென்னைக்குக் கொண்டு வந்தார். அதற்கு அஸ்திவாரமாக இருந்தது 101 காலணா, 101 அணா போன்றவைகளை மக்கள் கொடுத்தார்கள். அதையெல்லாம் பத்திரமாக முடிச்சுப் போட்டு, அதையெல்லாம் வட்டிக்கு விட்டு, பெருக்கி, நட்டத்தையெல்லாம் ஈடுகட்டி, எதிரிகளின் கண்களை உறுத்தக்கூடிய அளவிற்கு, இன்றைக்கு இந்த இயக்கம் வளர்ந்திருக்கிறது.


எங்களை அசைக்க முடியாது;


வேர் மக்களிடத்திலே இருக்கிறது


நம்மை அச்சுறுத்தலாம் என்று நினைத்து, அதில் கை வைப்போம், இதில் கை வைப்போம் என்று சொல்கிறார்கள். எதிலே கை வைத்தாலும் எங்களை அசைக்க முடியாது. இந்த வேர் மக்களிடத்திலே இருக்கிறது; மக்கள் ஆதரவு டன் இருக்கிறது.


எவ்வளவுக் கெவ்வளவு எதிர்ப்பு இருக்கிறதோ, அவ் வளவுக் கவ்வளவு அது உரமாக எங்களால் மாற்றப்படுகிறது.


‘விடுதலை'யினுடைய வளர்ச்சிக்கு அது மிக முக்கிய மாக இருக்கிறது. எனவே, இந்த ஆயுதம் ஒரு பேராயுதம். கூர்முனை மழுங்காத ஓர் ஆயுதம். பல சோதனைகளைப் பார்த்த ஓர் ஆயுதம். பல கட்டங்களில், பல போர்களை வென்ற ஒரு போர் வாள், இந்த வாள். அதனுடைய கூர்மை மழுங்குவதில்லை. அவ்வப்பொழுது பெரியாரியம் என்பதிலே தீட்டிக்கொண்டே இருக்கிறோம்.  நாம் அதைப் பார்ப்பதைவிட, எதிரிகள் நமக்கு நல்ல வாய்ப்பைக் கொடுக்கிறார்கள்.


‘விடுதலை'யினுடைய வரலாறு என்பது


ஒரு தொடர் வரலாறு!


ஆகவேதான், ‘விடுதலை'யினுடைய வரலாறு என்பது இருக்கிறதே, இது ஒரு தொடர் வரலாறாக இருக்கும். எங்களைப் போன்றவர்கள் இன்றைக்கு இருக்கலாம்; நாளைக்கு நம்முடைய இளைஞர்கள் அதனை எடுத்துக் கொள்வார்கள். இப்பொழுதே, நல்ல இளைஞர்கள் எழுது கிறார்கள்; நல்ல கருத்தாளர்கள் முன்வந்திருக்கிறார்கள். எங்களுக்கு நம்பிக்கை ஊட்டப்படுகிறது. அதுதான் மிக வும் முக்கியம்.


எனவே, எங்களுடைய பணி 58 ஆண்டுகாலம் என்று சொன்னால், அரசுப் பணியாக இருந்தால், ஓய்வு பெற்றி ருப்பார்கள்; ‘‘எனக்கு ரீ எம்ப்ளாயிமெண்ட் உண்டா?'' என்று கேட்பார்கள். எனக்கு ரீ எம்ப்ளாயிமெண்ட்டும் கிடையாது; ஏனென்றால், எம்ப்ளாயிமெண்ட் ஆர்டர் கொடுத்தவர், பர்மனெண்ட்டாக ஆர்டர் கொடுத்திருக் கிறார்.


‘விடுதலை'யிலிருந்து என் மூச்சு ஒன்றுதான் என்னை பிரிக்க முடியும்!


என்னை ‘விடுதலை'யிலிருந்து பிரிக்க முடியுமானால், என் மூச்சு ஒன்றுதான் பிரிக்க முடியுமே தவிர, வேறு எதுவும் பிரிக்க முடியாது. காரணம் என்னவென்றால், அந்த மூச்சை நான் எங்கே இருந்து பெறுகிறேன் என்றால், உங்களிடமிருந்து பெறுகிறேன் - மக்களிடமிருந்து பெறுகி றேன் - கழகக் குடும்பங்களிடமிருந்து பெறுகிறேன் - இந்த ஆதரவுகள் பெருகுகின்ற காரணத்தினால், எந்த நோய் வந்தாலும் நாம் எதிர்த்து போராடி கொண்டிருக்கும் நோய் கள் மோசமானவை - ஜாதி நோய், பெண்ணடிமை நோய், மூடநம்பிக்கை நோய், தீண்டாமை நோய் - இந்த நோய் களையெல்லாம் எதிர்த்துப் போராடு வதற்கு, மாமருந்து எங்கே இருக்கிறது? ‘விடுதலை' என்ற குப்பியிலேதான் இருக்கிறது.


‘விடுதலை'யைப் பாதுகாப்போம் - பரப்புவோம்!


ஆகவே, அதனைப் பாதுகாப்போம் - பரப்புவோம் என்பதற்குத்தான் உங்களை மீண்டும் சந்திக்கக் கூடிய வாய்ப்பை ஏற்படுத்தச் சொன்னோம். அருமையாக இந்த ஏற்பாட்டை செய்திருக்கிறார்கள். கலந்துகொண்ட அத்தனை தோழர்களுக்கும் நன்றி!


வாழ்க பெரியார்!


‘‘பெரியாரே நம் ஒளி - விடுதலையே நம் வழி!''


நன்றாக அதனைப் பாராட்டுவோம்!


நன்றி, வணக்கம்!


- இவ்வாறு ‘விடுதலை' ஆசிரியர் விடுதலையின் வீர வரலாறு தலைப்பில் நடைபெற்ற காணொலியில் சிறப்புரையாற்றினார்.


No comments:

Post a Comment