சங்கராச்சாரி என்பது ஒரு மூடநம்பிக்கைதானே
தமிழக மக்கள் ஒற்றுமை மேடையின் மாநில தலைவரும், தமிழ்நாட்டின் சிறந்த சமூக வரலாற்று ஆய்வாளருமான எழுத்தாளர் பேராசிரியர் அருணன் அவர்களின் "காலந்தோறும் பிராமணியம்" எட்டு தொகுதிகளும் மிக அரிய சமூக வரலாற்றுப் பெட்டகங்கள் ஆகும். அதில் தந்தை பெரியார் - திராவிடர் கழகம் பற்றிய அவரது கண்ணோட்டம் கருத்துப் பதிவுகளாக வெளிவந்துள்ளன. அவற்றை நாம் இங்கே தொடர் கட்டுரைகளாகத் தருவதில் மகிழ்ச்சி அடைகிறோம்!
சிலவிடங்களில் மாறுபட்ட கருத்துக்கள் கூறப்பட்டிருப்பினும் அத்தகைய அய்யங்களைப் போக்கி, தெளிவுபடுத்தி, புரிதலை ஏற்படுத்துதல் நமது கடமை என்ற உணர்வோடும், பெருமிதத்தோடும் இத்தொடரினை நமது வாசக நேயர் களுக்குப் பயன்பட வெளியிடுகிறோம் - வரலாற்று மீள் பார்வை இதன் மூலம் கிடைக்கிற ஒரு வாய்ப்பு நமக்குக் கிட்டுகிறது! நன்றி...
- ஆசிரியர், 'விடுதலை'
திராவிடர் கழகம்
பூரி சங்கராச்சாரியாரைத் தூண்டிவிட்டு சங்பரிவாரம் 1966இல் டில்லியில் கோமாதா அரசியல் நடத்தியதை அறிவோம். இதைத் தொடர்ந்து கவனித்து வந்த பெரியார் அந்தச் சதி வேலைகளை வன்மையாகக் கண்டித்தார். “இந்தியாவில் 3இல் ஒரு பாகம் மக்களுக்கு - 100க்கு 33 பேர்களுக்கு - உணவுக்கு ஆகாரமாய் இருக்கும் ஒரு ஜீவனைக் கொல்லக் கூடாது என்றால் இதில் ஆணவம் தவிர, கூடாது என்பதற்கு என்ன சமாதானம் சொல்ல முடியும்? உலகில் உண்மையாய் மாமிசம் சாப்பிடாத வர்கள் (300கோடியில்) 20 இலட்சம் பேர்கள் கூட இருக்க மாட்டார்கள். இவர்களுக்காக, இவர்கள் மனம் ‘புண்படும்‘ என்பதற்காக அல்லது இவர்கள் மத சம்பிரதாயத்துக்கு விரோதம் என்பதற்காக யாரும் மாட்டைக் கொல்லக் கூடாது என்று சட்டம் செய்ய வேண்டும் என்று ஒருவர் உண்ணா விரதமிருந்தால் அவரைப் பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் வைத்துத்தான் காப்பாற்ற வேண்டும்“ என்று நறுக்கென்று “விடுதலை”யில் ( 17-10-66) எழுதினார்.
பூரியார் கைது செய்யப்பட்டதும் அதற்காக இந்திரா அரசைப் பாராட்டவும் செய்தார் பெரியார். “அரசாங்கம், சட்டம் மீறுகிறவர்கள் யாராக இருந்தாலும் ஒன்றுபோல் நடத்தப்படுவார்கள் என்பதைக் காட்டிக் கொண்டதற் காகப் பாராட்டுகிறேன்” என்று குறிப்பிட்டார் (விடுதலை 24-11-66). “சங்கராச்சாரி” எனும் இட்டுக்கட்டப்பட்ட மாயை உடை படுவது கண்டு அவர் மகிழ்ந்தார். “சங்க ராச்சாரி என்பது ஒரு மூடநம்பிக்கைதானே” என்றார். உண்மைதானே, ஒரு பிராமணச் சிறுவனைப் பிடித்து அவனுக்கு சந்நியாச வேஷம் கட்டி, பெரியவரானதும் பிராமணியக் காப்பு வேலையில் ஈடுபடுத்துவது தானே இதன் நோக்கம்! சட்ட மீறலுக்காக அவரும் கைதானதும் அந்தப் பொய்மை பீடம் ஆட்டங் கண்டது. ஆகவே, “எனது தோழர்கள் நாடு முழுவதும் சர்க்கரை, மிட்டாய், பப்பர்மின்ட் முதலியவைகளை மக்களுக்கு வழங்க வேண்டுகிறேன்” என்றார். இப்படிச் சொல்லுகிற தைரியம் பெரியாரைத் தவிர வேறு யாருக்கு உண்டு?
இந்தக் காலத்திலும் பெரியார் மூடநம்பிக்கை எதிர்ப்பு இயக்கத்தை விடாது நடத்தி வந்தார். ஜோதிடம், குறி கேட்பது, சகுனம் பார்ப்பது, புராணக் கற்பிதங்கள் அடிப் படையிலான கடவுளர்கள் - பண்டிகைகள் ஆகியவற்றை எதிர்த்துப் பிரச்சாரம் செய்து வந்தார். இதன் ஒரு பகுதியாக 1971 ஜனவரியில் சேலத்தில் “மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாடு” நடத்தினார். அதற்கான ஊர்வலத்தில்தான் அந்த பரபரப்பான சம்பவம் நடந்தது. அது தேர்தல் காலம் என்பதால் பிராமணியவாதிகள் அதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தப் பார்த்தார்கள்.
அந்த ஊர்வலத்தின்போது பெரியாருக்குக் கருப்புக் கொடி காட்ட வந்திருந்தது ஜனசங்கம். அதற்கும் அனுமதி கொடுத்திருந்தது தி.மு.க அரசு. “அய்யா வரும் பகுதி தாண்டும் நிலையில் திடீரென்று கருப்புக் கொடி காட்டுவோர் பகுதியிலிருந்து ஒரு செருப்பு ஊர்வலத்தில் வந்து விழுந்து ஓர் வம்பைத் தொடக்கிவிட்டது. ஆத்திரப் பட்ட கழகத் தோழர்கள், ஊர்வலத்தில் ஒவ்வொரு கட வுளின் பிறப்பு, செயல்கள் பற்றிய இதிகாச புராண ஆதா ரங்களை அடிப்படையாகக் கொண்டு வரையப்பட்ட அருமையான ஓவியங்கள் தனித்தனி வண்டிகளில் பவனி வருகையில் இராமன் படத்தின் மீது கழகத் தோழர்கள் அந்தச் செருப்பைப் பிடித்து ஓங்கி அடித்தனர். இதுவும் கூடத் திட்டமிட்டு நடந்த ஒரு செயல். இல்லை, ஆத்திரப் பட்ட சிலரின் நடவடிக்கை” என்று நடந்ததை விவரித் திருக்கிறார் கி.வீரமணி.
ஆனால், இதையே பிரதான தேர்தல் பிரச்சினையாக் கினார் ராஜாஜி. “துக்ளக்” போன்ற ஏடுகளும் அப்படியே எதிரொலித்தன. அப்போது அதில் இது தொடர்பாக வந்த கேலிச்சித்திரத்தை ஸ்தாபன காங்கிரசார் பெரிய சுவ ரொட்டியாக அச்சடித்து ஒட்டினார்கள். அதைப் பார்க்கிற பாமர வாக்காளர்கள் ஸ்தாபன காங்கிரஸ்- சுதந்திரா கூட்டணிக்கு வாக்களிக்கும் அபாயம் மிகுந்தது. இதனால் வேதனைப்பட்ட பெரியார் “இம்முறை தேர்தல் பிரச் சாரத்திற்குச் செல்ல வேண்டாமென முடிவு எடுத்தார்கள்” என்கிறார் வீரமணி. எனினும், அந்தத் தேர்தலில் ஸ்தாபன காங்கிரஸ் - சுதந்திரா கூட்டணி படுதோல்வி அடையத் தான் செய்தது.
இந்த அனுபவம் மூடநம்பிக்கை எதிர்ப்புப் பிரச் சாரத்தின் தேவையை மறுதலிக்கவில்லை. மாறாக, அதை எவ்வளவு கவனமாக, பாமர மக்களையும் ஈர்க்கும் வகை யில் செய்ய வேண்டும் என்பதையே சுட்டிக்காட்டியது. இது விஷயத்தில் ஒரு சின்னத் தவறு நடந்தாலும் பிராமணியம் ஏட்டைத் திருப்பிவிடும், பாமர மக்களைப் பகுத்தறிவாளர்களுக்கு எதிராகத் திருப்பிவிடும் என்பதையே எடுத்துக்காட்டியது. தி.க.வைப் பொறுத்த வரை அது தொடர்ந்து மூடநம்பிக்கை எதிர்ப்புப் பிரச் சாரத்தை நடத்தவே செய்தது.
இந்தக் காலத்தில் பெரியார் ஒரு முக்கிய மத-சமூகப் பிரச்சினையைத் தீவிரமாகக் கையில் எடுத்தார். அதுதான், அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக உரிமை வேண்டும் என்பது. வேதமதமாக இருந்தபோது வேதம் ஓதுவிக்கிற உரிமையையும், வேள்வி செய்விக்கிற உரிமையையும் தங்களுக்கென்றே வைத்துக் கொண்டார்கள் பிராமணர் கள் என்பதைக் கண்டோம். அப்படியே கோயில் வழி பாட்டு முறை வந்தபோது கருவறையில் நுழைந்து விக் கிரகத்திற்குப் பூசை செய்யும் உரிமையையும் தங்களுக் கென்றே வைத்துக் கொண்டார்கள். பல நூற்றாண்டுகளாக இந்த உரிமையை வெற்றிகரமாகத் தக்கவைத்து வந் தார்கள். இதில் கைவைக்கத் துணிந்தார் பெரியார். மாநிலத்தில் தி.மு.க. ஆட்சி நடந்ததானது நல்ல காலமிது நழுவவிடக் கூடாது என்கிற எண்ணத்தை அவருக்குள் ஏற்படுத்தியிருக்க வேண்டும்.
.- தொடரும்
No comments:
Post a Comment