அறிவியல் எவ்வளவுதான் வளர்ச்சி அடைந்தாலும் ஜோதிடம் உள்ளிட்ட பல மூடநம்பிக்கைகளை நம்பும் மக்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். 2012 ஆம் ஆண்டு மாயன் காலண்டரின்படி, உலகம் அழிந்துவிடும் என்று நம்பிய கூட்டம் இப்போதும் அதே மாயன் காலாண்டரைக் கையிலெடுத்துள்ளது. இம்முறை ஜூன் 21ஆம் தேதியே உலகம் அழிந்துவிடும் என்று கதை கட்டியுள்ளார்கள்.
உள்நாட்டு அமைதியின்மை, பொருளாதார மந்த நிலை போன்றவற்றோடு உலகம் முழுவதும் கரோனா வைரஸ் தொற்று புதிய உச்சம் பெற்றுள்ள நிலையில் 2020ஆம் ஆண்டு மோசமான ஆண்டாக மாறி உள்ளது.
உலகில் பேரழிவை ஏற்படுத்திய ஆண்டாக 2020 வரலாற்றில் மாறி உள்ளது. பொருளாதார முடக்கத்தாலும், நோய் பாதிப்பாலும் பல லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்கள். உலகப் போர்களை விட, பல நாடுகளில் மோசமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எதிர் காலம் இனி எப்படி இருக்கும் என்கிற கவலை மக்களி டையே அதிகமாக உள்ளது.
கரோனா ஒழியாமல் இனி உலகிற்கு விடிவு இல்லை என்கிற அளவிற்கு பெரும் அச்சத்தை உருவாக்கி வரு கிறது அந்த கண்ணுக்குத் தெரியாத வைரஸ்! இந்நிலையில், மாயன் காலண்டர் அடிப்படையில் பார்த்தால், ஜூன் 21 ஆம் தேதியோடு உலகம் அழிந்துவிடும் என்று கூறுகிறார்கள். இது தொடர்பான பதிவுகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன. இதற்கு முன்பும் 2012 டிசம்பர் 21ஆம் தேதி சரியாக இரவு 12 மணிக்கு உலகம் அழியும் என்று மாயன் காலண்டரில் கூறப்பட்டு இருந்ததாக கதைவிட்டு மக்களை பய முறுத்தினர்.
இதற்குக் காரணமாகக் கூறும்போது, அந்த குறிப்பிட்ட தேதிக்கு மேல் அவர்கள் காலண்டரின் எண்களைக் குறிக்கவில்லை. ஆகையால், அதன் பிறகு உலகம் அழிந்துவிடும் என்று கதை விட்டார்கள். ஆனால் உண்மையில் இப்போது உள்ள ஜனவரி முதல் டிசம்பர் 31 வரையிலான காலண்டர்களைப் போல் அவர்களும் குறிப்பிட்ட ஆண்டிற்கான காலண்டர்களை உருவாக்கி யுள்ளனர்.
"கிரிகோரியன் காலண்டருக்கு முன்பு ஜூலியன் காலண்டர் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வந்தது. கிரிகோரியன் காலண்டர் பயன்படுத்தியதால் ஆண்டுகள் குறித்து தவறான கணக்கீடு செய்துள்ளோம் 11 நாள்களை ஒவ்வொரு ஆண்டும் நாம் இழந்துள்ளோம். அதையும் சேர்த்து கணக்கீடு செய்தால் 2020 ஆம் ஆண்டுதான் சரியான ஆண்டு" என்றும் கூறுகிறார்கள்.
இந்நிலையில் இந்த கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டு கணக்கிட்டால் ஜூன் 21, 2020ஆம் தேதி தான் மாயன் காலண்டர் முடியும் நாளாம் முன்பு டிசம்பர் 21, 2012 என்ற தினத்தை உலகின் இறுதி நாள் என்று கூறிய நிலையில் தற்போது ஜுன் 21ம் தேதி தான் உலகின் இறுதி நாளாக இருக்கும் என்று கூறுகிறார்கள். ஏற்கனவே மக் கள் கரோனா அச்சத்தால் நொறுங்கிப்போய் உள்ளார்கள்.
இந்த சூழலில் புது பீதியை மாயன் காலண்டரை வைத்து கிளப்பிக் கொண்டிருக்கிறார்கள்.
மாயன் காலண்டரில் 2012ஆம் ஆண்டு டிசம்பர் 21 அன்று உலகம் அழியப்போகிறது என்று மூடநம்பிக்கை வியாபாரிகள் மக்களை அச்சுறுத்திய அன்று சென்னைக் கடற்கரையில் திராவிடர் கழகத் தலைவர் தலைமையில் திராவிடர் கழகத் தோழர்கள் அணி திரண்டு, காலை உணவு சாப்பிட்டு, அங்கு வந்தவர்களுக்கெல்லாம் இனிப்பு வழங்கியதை நினைவூட்டுகிறோம்.
வரும் 21ஆம் தேதி சூரிய கிரகணத்தின்போது வீட்டில் உள்ள பொருள்களின் மீது தர்ப்பைப் புல்லைப் போட வேண்டுமாம். காலை காயத்ரி ஜபம் செய்ய வேண்டுமாம். துர்க்கை அம்மனுக்கு வெள்ளை மொச்சை யும், ராகுவுக்கு கறுப்பு உளுந்து பயறு வைத்தும் அர்ச்சனை வழிபாடு செய்ய வேண்டுமாம்.
இதுபோன்ற மூடநம்பிக்கைகளைப் பரப்புவதில் பார்ப்பனர்கள் எப்பொழுதும் குறியாகவே இருப்பார்கள். காரணம் மூடநம்பிக்கை வளர்ச்சி தான் பார்ப்பனர்களின் சுரண்டல் தொழிலுக்கான முதலீடு!
இந்தக் கரோனா நேரத்தில் மக்களிடம் பீதியைக் கிளப்புவோர்மீது அரசு நடவடிக்கை எடுக்குமா?
No comments:
Post a Comment