இன்று முதல் ஜூன் 30 வரை சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கரோனா தடுப்புக்கான ஊரடங்கு கட்டுப் பாடுகள் குறித்த அறிவிப்புகள் தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்டுள்ளன.
கடந்த மூன்று மாதங்களாக கரோனா தொற்று தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும், நாளும் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் கெடுபிடிகளை அறிவிப்பது தவிர்க்கப்பட முடியாதது.
தலைநகரமான சென்னையில் நோய்த் தொற்று அதிகமாகி வரும் சூழ்நிலையில் தலைநகரைவிட்டு, சொந்த ஊருக்குச் சென்று விடலாம் என்ற மனநிலை மக்களுக்கு இருப்பதாகத் தெரிகிறது.
இந்த நிலையைப் புரிந்து கொள்ள முடிகிறது என்றாலும் - இதில் உள்ள ஆபத்தையும் தட்டிக் கழித்து விட முடியாது. ஓரளவு கிராமப் பகுதிகளில் கோவிட் 19 தன் கடையைத் திறக்கவில்லை என்று கூறலாம்.
நோய்த் தொற்று கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள தலைநகர் சென்னையிலிருந்து பல்வேறு மாவட்டங்களில் உள்ள சொந்த ஊர்களுக்கு மக்கள் செல்வார்களேயானால் அதன் பாரதூர விளைவுகள் என்ன என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டாமா? நகர்ப்புற அளவில் இருந்த கரோனா கிராமப் பகுதிகளுக்குத் தலைதூக்க வழி அமைத்துக் கொடுக் கலாமா என்பது மிக முக்கியமான கேள்வியாகும்.
கிராமப்புறங்களிலும் கோவிட் 19 வைரஸ் படை எடுக்குமானால் அந்த நிலை மிக மிக அபாயகரமானதாகும். இந்த சூழலில் சென்னையை விட்டு மக்கள் வெளியேறுவது என்பது ஆபத்தாகும்.
வெறும் கெடுபிடியால் மக்களைத் தடுப்பது என்பதைவிட, உண்மை நிலையை விளக்கி மக்களிடம் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட வேண்டும்.
நகர்ப்புறத்தில் இருப்பதனால் உடன் வைத்திய வசதி கிடைக்கிறது. கிராமப்புறங்களுக்குச் சென்று அங்கு நோய்த் தொற்றுக்கு ஆளானால், உரிய அவசர மருத்துவ வசதி கிராமப்புறங்களில் எந்த அளவு கிடைக்கும் என்பதை எல்லாம் நகர்ப்புற மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டியது அவசியம்.
கரோனா தடுப்பு என்பது - வெறும் மருத்துவத்துறை சம்பந்தப்பட்டது என்று குறுக்கிப் பார்க்கக் கூடாது; அதனையும் கடந்த பல்வேறு பிரச்சினைகள் இருக்கத்தான் செய்கின்றன.
இந்த நோயை வெல்லுவோம் என்ற தன்னம்பிக்கை மக்களிடம் ஏற்பட வேண்டும்; அன்றாடம் வரும் செய்திகள் மக்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் ஒரு சூழலில் அவர் களுக்குத் தன்னம்பிக்கையை ஊட்டும் வகையில் அரசு அளவிலும், தனியார் அமைப்புகளைப் பயன்படுத்திக் கொண் டும் பிரச்சாரம் செய்ய அரசு தானே ஏற்பாடு செய்ய வேண்டும்.
கரோனா நோய்க்கு ஆளாகி மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டவர்கள் சொல்லிக் கொள்ளாமல் வெளியேறி விட்டனர் என்பதும், அவர்கள் கொடுத்த முகவரிகள் உண் மையல்ல என்பதும் எத்தகைய விபரீதமானது!
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் தற்கொலை செய்து கொண்டனர் என்கிற செய்திகள் எல்லாம் பொது மக்களைப் பேரச்சத்திற்கு உள்ளாக்கும் விபரீதமாகும்.
மருத்துவர்களும், செவிலியர்களும், காவல்துறையைச் சேர்ந்தவர்களும், நீதிபதிகளும், அமைச்சரும், முதலமைச்சரின் உதவியாளரும்கூட தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதெல்லாம் உறுதி உள்ளவர்களையும் நிலை தடுமாறச் செய்யும்.
இந்த நிலையில் அனைத்துக் கட்சிகளையும் கலந்து கொண்டு, உரியவர்களைப் பயன்படுத்தி மக்கள் தன்னம்பிக்கை இழக்காமல் உறுதியோடு இருக்கச் செய்ய பிரச்சாரத்தை மேற்கொள்வது மிகவும் அவசியமாகும்.
ஏழை, நடுத்தர மக்களின் பொருளாதாரப் பிரச்சினை - கூடுதல் சுமையும் உளைச்சலுமாகும். இதற்கு அரசுதான் வழி காண வேண்டும்; உதவிக் கரத்தை வேகமாக நீட்ட வேண்டும்.
எந்த நிலையிலும் அரசு நம்மைக் கைவிடாது என்ற நம்பிக்கை மக்கள் மத்தியில் ஏற்பட வேண்டும்.
மருத்துவத் துறையைச் சார்ந்தவர்கள் நூறு நாட்களுக்கு மேல் இரவுப் பகலாக உழைத்து வருகிறார்கள். போதிய ஓய்வுடன் கலந்த உழைப்பு என்பது உறுதி செய்யப்பட வேண்டும். இல்லையெனில், மிகப் பெரிய நெருக்கடியை சந்திக்க நேரிடும். அவர்கள் உடல் நலம் பராமரிக்கப்பட்டால் தான் பாதிக்கப்பட்டவர்களுக்கான மருத்துவ உதவியைச் செய்ய முடியும் என்பது நினைவில் இருக்கட்டும்.
ஆங்காங்கே மருத்துவத்துறையினரின் முணுமுணுப்பும் அவ்வப்போது தலை காட்டுகிறது. தமிழ்நாடு அரசு வேறு எந்த காலக்கட்டத்தையும்விட மிகவும் விழிப்பாகவும், விவேகமா கவும் அரசியல் காழ்ப்பின்றியும் செயல்படாவிட்டால், கரணம் தப்பினால் மரணம்தான் எச்சரிக்கை!
திராவிடர் கழகத் தலைவர் - ஆசிரியர் மானமிகு
கி.வீரமணி அவர்கள் விடுத்த வேண்டுகோள் அறிக்கையின் படி, எல்லாவற்றையும் அரசின் கையில் ஒப்படைத்து விடாமல், பொதுமக்கள் தங்கள் அளவில் கடைப்பிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகளை பின்பற்றுவதுதான் மிக மிக முக்கியமானது.
No comments:
Post a Comment