கரோனா பரவல் தடுப்பு, புலம்பெயர்ந்த தொழிலாளர் பிரச்சினைகளில் மத்திய அரசின் அணுகுமுறைகளும், உச்சநீதிமன்றமும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, June 19, 2020

கரோனா பரவல் தடுப்பு, புலம்பெயர்ந்த தொழிலாளர் பிரச்சினைகளில் மத்திய அரசின் அணுகுமுறைகளும், உச்சநீதிமன்றமும்

ஹரீஷ் கரே


தேசிய அளவில் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டதை யடுத்து புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் பரிதவிப்பை கவனத்தில் எடுத்துக் கொண்டு, உச்ச நீதிமன்றம் இந்த விவ காரத்தை விசாரிப்பதற்கு தாங்களாகவே மே மாதம் 26 ஆம் தேதியன்று  முடிவு எடுத்தபோது, நீதிமன்ற அமர்வின் முன் கோபமும் ஆவேசமும் வெடித்துக் கிளம்பும் முறையில் பேசினார் என்பதற்காக சட்ட செய்தியாளர்கள் இந்திய சொலிசிடர் ஜெனரல் துஷார் மேத்தாவை நெருப்பில் போட்டு வாட்டி எடுத்தது சற்று நியாயமற்றது என்று கூட கூறலாம். துஷார் மேத்தா போராட்ட குணம் கொண்ட ஒரு வழக்குரை ஞர் மட்டும்தான்; மக்களின் மனம் கவரும் பழகு தன்மையோ, பாண்டித்தியமோ பெற்ற நீதிபரிபாலகரோ, ஃபாலி நாரிமனோ அல்லது சோலி சொராப்ஜியோ  அல்ல . என்றாலும் நீதிமன்ற அறையில் ஒரு சிறு துரும்பைக் கூட விட்டுவிடாமல் எடுத்து வைத்துக் கொண்டு வாதாடுபவர் என்ற புகழ் பெற்ற வழக்கு ரைஞர் அவர். தனது கட்சிக்காரருக்காக தன்னால் இயன்ற மிகச் சிறந்த சேவையை அளிப்பவர் அவர்.


ஒரு அரசியல் நியமனம்


அவரது கட்சிக்காரர் வேறு யாருமல்ல; மோடி அரசுதான்.  சொலிசிடர் ஜெனரல் நியமனம் ஓர் அரசியல் நியமனம் என்பதை நமக்கு நாமே நினைவு படுத்திக் கொள்ள வேண் டியது அவசியம். இந்திய அரசமைப்பு சட்டத்தின் 76 ஆவது பிரிவு, இந்திய அட்டார்னி ஜெனரல் பதவியை ஒரு மேம்பட்ட நிலையில் வைத்துவிட்டு, சொலிசிடர் ஜெனரல் பதவியை சில்லறை வேலைகளைச் செய்வதற்காக உருவாக்கி வைத் திருக்கிறது. பெரும்பாலும் ஆளும் வர்க்கத்தின் உள் வட்டா ரத்தின் ஒரு பகுதியாகவே அவர் ஆகிவிடுகிறார். அதனால் ஆளும் கட்சியின் அன்றாட சண்டைகளிலும், போராட்டங் களிலும், விருப்பு, வெறுப்புகளிலும் ஈர்த்துக் கொள்ளப்படுவதில் இருந்து அவரால் தப்பித்துக் கொள்ள இயலாது. அன்றைய தினம் ஆட்சியில் உள்ள அரசின் விருப்பங்கள், முடிவுகளுக்கு வெளியே ஒரு தனிப்பட்ட பங்கினை அவரால் ஆற்ற முடி யாது. ஏற்றுக் கொள்ள இயலாதபடி ஆவேசமாக பேசினார், தேவையின்றி அகந்தையுடன் நடந்து கொண்டார் என்று விமர்சகர்கள் அவர் மீது குற்றம் சாட்டுவது நியாயமற்றதாக தோன்றவும் கூடும். தனது கட்சிக்காரரின் மனநிலையையும், ஏதாவது ஒன்றை உடனடியாக செய்துவிட வேண்டும் என்ற அவரது பலத்த உணர்வையும், எதிர்மறையாக எதையேனும் செய்ய வேண்டும் என்ற உணர்வையும் மட்டுமே அவர் தன்னால் இயன்றவரை  மிகச்சிறந்த முறையில்  பிரதிபலித்து உள்ளார். அவர் அரசின் ஒரு கருவி மட்டுமே; சில நேரங்களில், மற்றவர்களை காயப் படுத்தும் கூர்மை நிறைந்த ஒரு  கருவி யாகவும் அவர் விளங்கினார்.


குறிப்பாக, உச்ச நீதிமன்றத்தில் மே 26 அன்று வாதாடும் போது, துஷார் மேத்தா ஒட்டு மொத்த சக  பத்திரிகையாளத் தோழர்களை பிணந்தின்னி கழுகுகளுடன் ஒப்பிட்டுப் பேசி யதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும், அது ஒட்டு மொத்த பத்திரிகையாள சகோதரர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்கு தல் என்றும் அவர் மீது பெருங்கோபம் கொண்டவர்கள் பலர் இருந்தனர். அந்த பேச்சு நாட்டின் மிக உயர்ந்த நீதிமன்றத்தில் பேசப்பட்டதால், அது கடவுள் நிந்தனை அல்லது தேசநிந்த னையைப் போலவே கருதப்பட்டது. 2020 ஜூன் 1 ஆம் நாளிட்ட டைம்ஸ் ஆஃப் இந்தியா இதழுக்கு அளித்த பேட்டி ஒன்றில், கழுகுகள் என்று தான் குறிப்பிட்டது பத்திரிகையா ளர்களைப் பற்றி குறிப்பிட்டது அல்ல என்று மேத்தா விளக்கம் அளிக்க மேற்கொண்ட முயற்சி தோல்வி அடைந்த போதிலும், சந்தேகத்துக்கான ஒரு பயனைப் பெறுவதற்கான அருகதை அவருக்கு உள்ளது. அது பெரிய ஆறுதல் எதனையும் அளிக்க இயன்றதாக இல்லாத போதிலும்,  ஆளுங்கட்சியினர் ஊடகத்தினர் மீது இழைத்த இத்தகைய அவமானங்களையும்,  இரட்டை பொருள் கொண்ட மொழியில் மேற்கொண்ட மறை முக தாக்குதல்களயும் நினைத்துப் பார்க்கும்போது சிறிது ஆறுதல் ஏற்படத்தான் செய்யும். ஓய்வு பெற்ற ராணுவ ஜெனரல் வி.கே.சிங்  பேசியபோது சிறிதும் மரியாதையற்ற முறையில் மிகமிக மோசமான மொழியில் பேசியதுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது துஷார் மேத்தாவின் விமர்சனம் அந்த அளவுக்குக் கடுமையானதாகத் தோன்றவில்லை. எனினும் ஒரு சட்ட அதிகாரியின் அல்லது ஓர் அமைச்சரின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளைப் பற்றி இதற்கு மேலும் விமர்சிப்பது தேவையில்லை என்று கருதுகிறேன். ஆனால், அவர்கள் யாரது பிரதிநிதிகளாக இருக்கின்றனரோ அவர்களது ஆட்சியின் ஒட்டு மொத்த உணர்வுகளை ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்ட ஒவ்வொரு குடிமகனும் பரிசீலனை செய்ய வேண்டியது மிகமிக அவசியமானதாக ஆகிறது.


இங்கே கீழே கூறப்பட்டிருப்பதில் எந்த வித சந்தேகமும் இருக்க முடியாது. மக்களின் மனதில் மிகமிக ஆழமாகவும் பலமாகவும் ஊன்றப்பட்டுள்ள மத, இன, ஜாதி பேத மன உணர்வுகள், மனப் போக்குகள், மனநிலைகள் தங்களது பணி களை இப்போதும் தீவிரமாக செய்து கொண்டுதான் இருக் கின்றன. தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு ஜனநாயக நடைமுறையின் மூலம் தங்களது செயல்பாடுகளுக்கு நியாயம் கற்பிக்க ஆட்சி யாளர்கள் முயன்ற போதிலும், ஜனநாயக ஏற்பாட்டின் மய்யக் கருத்தையே வெட்டி எறிவதற்கு தங்களுக்குக் கிடைத்த வாக்காளர்களின் ஆதரவை அவர்கள் தவறாகப் பயன் படுத்திக் கொள்கின்றனர். எவர் ஒருவரின் கேள்விகளுக்கும் எந்த விதமான பதில்களையும் விளக்கங்களையும்  அளிப்ப தற்கு ஆட்சியாளர்கள் தயாராக இல்லை.


ஆற்றலும், அதிகாரமும் மழுங்கடிக்கப்பட்ட அரசமைப்பு சட்ட அமைப்புகள்


கடந்த ஆறு ஆண்டு கால ஆட்சியில், மோடியின் அரசு அமைதியாகவும், மிகுந்த திறமையுடனும், திட்டமிடப்பட்ட ஒரு நடைமுறையிலும்,  தனது அதிகாரத்தை அரசு  தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்கும் நோக்கத்துடன் உருவாக்கப் பட்ட அரசமைப்பு சட்ட அமைப்புகள் அனைத்தையும், அவற் றின் கட்டமைப்புகளைக் குலைத்துவிடாமல், அதே நேரத்தில் செயல்பட இயலாத தன்மை கொண்டவையாக  அவற்றை  ஆக்கிவிட்டது. மத்திய லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணையம், லோக் பால்,  மத்திய தகவல் பெறும் உரிமை ஆணையம், தேசிய மனித உரிமைகள் ஆணையம், இந்திய தேர்தல் ஆணையம், ஆகிய அனைத்து அமைப்புகளும் காகிதப் புலிகளை விட மிகமிகக் கேவலமானவைகளாக ஆக்கப்பட்டு விட்டன. குறிப்பிடத் தக்க செயல் திறனாலும், மக்களின் கவ னத்தைக் கவர்ந்திழுக்க இயன்ற தெரு அரசியல், போராட் டங்களில் சிறப்பாக செயல்பட இயன்ற தங்களது திறமையினா லும், வினோத் ராய் போன்ற பத்திரிகையாளர்கள் சுயமாக செயல் பட இயலாமல் இருப்பதை அரசு உறுதிபடுத்திக் கொண்டது.


தாங்கள் தேர்ந்தெடுத்துள்ள பாதையே மிகச் சரியான பாதை என்பதை மோடியின் சகாக்கள் மிக உண்மையாகவும், மிகச் சரியாகவும் நம்புகிறார்கள். தங்களது கட்சித் தொண் டர்கள், தலைவர்கள் அர்ப்பணிப்பு உணர்வு, நேர்மை, நாணயம் மற்றும் உள்ளார்ந்த விவேகமும் கொண்டவர்கள் என்று இவர்கள் மயக்கத்தில் உள்ளனர். ஜனநாயக ரீதியிலான எந்த வித எதிர்ப்பையும் அவர்கள் விரும்புவதும் இல்லை பொறுத்துக் கொள்வதும் இல்லை. எனவே, ஊடகங்களில் உள்ள கழுகுகளோ அல்லது அரசு சாரா தொண்டு நிறுவனங் களோ தெரிவிக்கும் கருத்துகளுக்கு செவி சாய்க்க வேண்டும் என்ற தேவையோ கட்டாயமோ இத்தகையதொரு ஆட்சியில் இல்லாமல் போனதில் வியப்பேதும் இருக்க முடியாது.


புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் பிரச்சினைகள்


எந்த விஷயத்திலும் உறுதியாக முடிவெடுக்கும் துணி வான தலைமை கொண்ட கட்சி என்ற  தோற்றத்தைத் தொடர்ந்து காட்டிக் கொண்டிருக்க வேண்டும் என்ற தீர்மான மான விருப்பத்தைப் பின்பற்றி வந்துள்ள தற்போதைய பா.ஜ.க. ஆட்சியாளர்களால், திடீரென்று, முன்யோசனை இன்றி உடனடியாக நடைமுறைப் படுத்திய தேசிய ஊரடங்கு சட்டத் தின் பின்விளைவுகளை எதிர்பார்க்க முடியவில்லை என்பது மட்டுமன்றி,  பாதுகாப்புக்காக தங்களது கிராமங்களை நோக்கி, சரியான உணவின்றி அரைப் பட்டினியுடன் புலம் பெயர்ந்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள் கால்நடையாக திரும்பிக் கொண்டிருந்த உண்மையை ஒப்புக் கொள்ளவும் கூட மத்திய அரசு மறுத்துவிட்டது. புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் பிரச்சினைளை திறமை மிகுந்த அதிகாரிகளின் கைகளில்  அரசு ஒப்படைத்திருக்கிறது என்று உச்ச நீதிமன்றத்தில் சொலிசிடர் ஜெனரல் தெளிந்த மனசாட்சியுடன்தான் கூறியிருக்க வேண்டும்.


தனது கட்சிக்காரரான மத்திய அரசுக்கு, புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பிரச்சினையில்  தங்களின் விருப்பம் போல எப்படி வேண்டுமானாலும் செயல்படுவதற்காக உச்ச நீதி மன்றத்தின் திறந்த ஆணையைப் பெற்று தந்தவர் இந்த சட்ட அதிகாரப்பிரியான துஷார் மேத்தா. கோவிட்-19 தொற்று நோயினால் விடப்பட்ட  சவால்களின் தீவிரத்தை உணர்ந்த உச்சநீதிமன்றம், அரசு என்றால் அவ்வப்போது சில தவறு களையும், குற்றங்களையும் இழைக்க இயன்றவையாகத்தான் இருக்கும் என்றும்,  சில நேரங்களில்  மக்களின் நலன்களைப் பற்றி கவலை அற்றவர்களாகவும், சிடுமூஞ்சித்தனம் கொண்ட வையாகவும் கூட இருக்க நேரும் என்றும் கருதிக் கொண்டு கோடிக்கணக்கான நமது மக்கள் மீது இழைக்கப்பட்ட துன்பங் கள் பற்றி அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டிய தேவை நீதித்துறைக்கு இல்லை என்று கற்றறிந்த நீதிபதிகள் நினைத்து விட்டார்கள் போலும். நோய்த்  தாக்குதல் பற்றி சோதனை செய்வதிலும், சிகிச்சைக்கான மருந்தை கண்டுபிடிப்பதற்கான சோதனைச் சாலை ஆய்வுகளை மேற்கொள்வதிலும், அரசு தனது விருப்பம் போல எப்படி வேண்டுமானால் செயல் படலாம் என்று திறந்த ஆணையை மேத்தா உச்சநீதிமன்றத்தில் இருந்து பெற்று தனது வாடிக்கையாளரான அரசுக்கு அளித்து உள்ளார்.


இதனைத் தொடர்ந்து ஒரு மாபெரும் சோக நிகழ்ச்சி நடைபெறப் போகிறது என்பதை முன் கூட்டியே உணர்ந்து உரைப்பது என்பது மிக எளிதான ஒரு செயலேயாகும். மிகச் சரியான தகவல்களையும், புள்ளி விவரங்களையும் தங்களது நிருவாக இயந்திரத்தின் மூலம் பெற முடியாத அரசு, தனது குடிமக்களின் பெரும் பகுதியினர் பசி, பட்டினி, நோய் போன்ற கொடுந்துன்பங்களுக்கு  உள்ளாக நேரும்போது,  அதை எதிர் கொண்டு மக்களின் குறைகளைத் தீர்ப்பதற்கான ஆற்றல் அற்றதாகவே ஆகிவிடும். சுதந்திரமான, தனித்துவம் கொண்ட ஊடகத்தினர் மீது ஓர் ஆழ்ந்த வெறுப்புணர்வை ஆட்சியா ளர்கள் வளர்த்துக் கொண்டிருக்கும் காரணத்தால்,  தங்களது அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள இயலாத, அவற்றை அவர்களுக்கு அளிப்பதற்கு அரசோ மற்றவர்களோ முன் வராதபோது கோடிக்கணக்கான புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் கிராமங்களுக்குத் திரும்பிச் சென்று கொண்டிருக்கும் காட்சிகளைக் காண்பதற்கு ஆட்சியாளர்கள் மறுத்துவிட்டனர். கரோனா-19 தொற்று நோய் இந்த அளவுக்கு தீவிரமாகவும், ஆபத்து நிறைந்ததாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்காத நிலையில்,  ஆட்சி பரிபாலனத்தில் அளவுக்கு அதிகமாக  முழக்கங்கள் இடம் பெற்றுள்ளன என்பதை எவரேனும் சுட்டிக் காட்டுவதை ஆட்சியாளர்கள் விரும்புவது மட்டுமன்றி வெறுக்கவும் செய்கின்றனர்.


நீதிமன்றம் செயல்பட்ட போது


பின்னர், ஆட்சியாளர்கள் சற்றும் எதிர்பாராத வண்ண மும், விரும்பாத வண்ணமும், குடி மக்களின் துன்பங்களைப் பற்றி அரசு அதிகாரி உணர்வுகளின் நிலையைப் பற்றியும்,  ஆட்சியாளர்களின் அரசியல் ஆண வத்தைப் பற்றியும்,  அரசு கொண்டிருந்த கொள்கைக் குழப்பங்களைப் பற்றியும், அரசின் தவறான நிர்வாகச் செயல்பாடுகளைப் பற்றியுமான கேள்வி களைக் கேட்பதற்கு உச்ச நீதிமன்றம் தானாகவே முன்வந்தது. இவ்வாறு உச்ச நீதிமன்றம் அடித்த பல்டிதான், சொலிசிடர் ஜெனரலை இவ்வாறு கோபா வேசம் கொள்ளச் செய்திருக்கக் கூடும். எனவே, மேத்தாவின் கோபம் பத்திரிகை யாளர்களில் உள்ள கழுகுகளை நோக்கிக் காட்டப்பட்டது அல்ல என்றும், உச்ச நீதிமன்றத்திடம் அவர் கொண்டிருந்த பொறுமை இன்மையை வெளிப்படுத்துவதாகவே இருப்பதாகவும் கருதலாம்.


களநிலை பற்றி எந்த வித அறிவும் அற்றவர்களின் பேச் சுக்கு செவி சாய்த்த உச்ச நீதிமன்றம் அரசிடம் இருந்து ஒரு விளக்கத்தைக் கேட்கத் தொடங்கியது. ஆனால், கள நிலை பற்றிய எந்த ஒரு தகவலையும் எவருடனும் பகிர்ந்து கொள் வதற்கு அரசு தயாராக இல்லை. முன்னம் ஒரு நாள், கொள்ளை நோய் ஆராய்ச்சியாளர்களின் மூன்று சங்கங்களைச் சேர்ந்த தொழில் வல்லுநர்களும் சமூக மருத்துவ  நிபுணர்களும் ஒரு தலைவரால் வழி நடத்திச் செல்லப்படும் ஆட்சி அதிகாரக் கட்டமைப்பு -  குழப்பம் நிறைந்த முறையிலும், திறமையற்ற முறையிலும் கடைப்பிடித்து வரும் - முடிவெடுக்கும் நடை முறையைப் பற்றி சுட்டிக் காட்டிக் குறை கூறினர். ஆட்சியா ளர்களின்  ஆணவத்தாலும், திறமையின்மையாலும் கோடிக் கணக்கான இந்தியக் குடிமக்கள் இதற்காக ஒரு பெரும் விலை யைக் கொடுக்க வேண்டியதாயிற்று.


அப்படியிருந்த போதிலும், தான் இழைத்த தவறுகளைப் பற்றியோ, மேற்கொண்ட தவறான நடவடிக்கைகளைப் பற் றியோ எந்த ஒரு விவாதத்தையும் மேற்கொள்வதற்கு அரசு தயாராக இருக்காது. தன்னை விமர்சனம் செய்பவர்களையும், கண்டிப்பவர்களையும் அவரவர் இடத்தில் வைப்பதற்கு ஒரு கடுமையான ஜனநாயக விரோத அணுகுமுறையை ஆட்சி யாளர்கள் கடந்த சில ஆண்டுகளில் கைக்கொண்டுள்ளனர்.  எவ்வளவு சிறியவர்களாகவும், சிதறியிருப்பவர்களுமாக இருந்தாலும் சரி,  தனது விமர்சகர்களை வெளிப்படுத்தாமல், வாய்மூடி மவுனமாக அவர்களை இருக்கச் செய்வதற்காக மிகப் பெரிய அளவில் பணத்தையும், அதிகாரத்தையும், கவுரவத்தையும், திறமைகளையும் இந்த ஆட்சியாளர்கள் செலவிட வேண்டியிருந்தது. வடகிழக்கு டில்லியில் இருந்து செயல்படும் செய்தியாளர்களான சுதா பரத்வாஜோ,  கவுதம் நவ்லகாவாவது, பிஞ்ரா டாடாவாவது, ஆட்சியாளர்களுக்கு எதிரான அதிருப்தியையோ, கருத்து வேறுபாட்டையோ ஒன்று திரட்டி வெளிப்படுத்த அனுமதிக்கப்பட மாட்டார்கள்.


மே 26 அன்று  உச்ச நீதிமன்றத்தில் வெளிப்பட்டு அனை வராலும் காண இயன்றது இத்தகைய பொறுமை அற்ற, சகிப்புத்தன்மையற்ற சிந்தனைப் போக்குதான். மத்திய பா.ஜ.க. அரசு வடிவமைத்துத் தந்திருக்கும் கண் கண்ணாடிகளையே சொலிசிடர் ஜெனரல் துஷார் மேத்தா பயன்படுத்துவதாகக் கூறப் படுவது உண்மையாகவும் இருக்கக் கூடும்.


நன்றி: 'தி இந்து', 06-06-2020


தமிழில்: த.க.பாலகிருட்டிணன்


No comments:

Post a Comment