‘‘‘விடுதலை'யின் வீர வரலாறு''- காணொலியில் தமிழர் தலைவரின் நெகிழ்ச்சியுரை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, June 15, 2020

‘‘‘விடுதலை'யின் வீர வரலாறு''- காணொலியில் தமிழர் தலைவரின் நெகிழ்ச்சியுரை

கரோனா காலகட்டத்தில் தோழர்களைச் சந்திக்கவில்லை என்ற மன சங்கடம் இருந்தாலும் - நேரம் அதிகமாகக் கிடைக்கிறது - எது நட்டமோ அது லாபமாக இருக்கிறது!


பல விஷயங்களை நானே தெரிந்துகொள்ளக் கூடிய வாய்ப்பு!



சென்னை, ஜூன் 15  கரோனா காலகட்டத்தில் தோழர்களைச் சந்திக்கவில்லை என்ற மன சங்கடம் இருந்தாலும் - நேரம் அதிகமாகக் கிடைக்கிறது - எது நட்டமோ அது லாபமாக இருக்கிறது; பல விஷயங் களை நானே தெரிந்துகொள்ளக்கூடிய வாய்ப்பு ஏற்படுகிறது என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரை யாற்றினார்.


‘விடுதலை'யின் வீர வரலாறு!


கடந்த 13.6.2020 அன்று மாலை  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ‘‘‘விடுதலை'யின் வீர வரலாறு'' எனும் தலைப்பில் காணொலிமூலம் கழகத் தோழர்களி டையே சிறப்புரையாற்றினார்.


அவரது உரை சிறப்புரை வருமாறு:


கழகத் துணைத் தலைவர் மற்றும் பொறுப் பாளர்கள், அருமை ‘விடுதலை' வாசக நண்பர்களாக இருக்ககூடிய தோழர்கள் மற்றும் தமிழன்பர்கள், உலகெங்கும் கேட்டுக் கொண்டிருக்கக் கூடிய வாசகப் பெருமக்களாகிய உங்கள் அனைவருக்கும் என் அன் பார்ந்த வணக்கத்தையும், நன்றியையும் முதற்கண் தெரிவித்துக் கொள்கிறேன்.


இது நெஞ்சை நெகிழச் செய்யக்கூடிய ஓர் அற்புதமான நிகழ்ச்சி - ஒரு நல்ல கலந்துரையாடல் காணொலி மூலமாக.


தங்களுடைய வாழ்வை அர்ப்பணித்த


தொண்டறச் செம்மல்கள்!


இந்த நேரத்தில் முதற்கண் என்னுடைய உரையை தொடங்குவதற்கு முன்பு, நம்முடைய இயக்கத்தில் எத்தனையோ பேர் இயக்கத்திற்காகவே தங்களுடைய வாழ்வை அர்ப்பணித்த தொண்டறச் செம்மல்கள் ஏராளம் உண்டு.


அண்மைக் காலத்தில் அவர்களில் பலர் மறைந் திருக்கிறார்கள் - அவர்கள் அத்துணை பேருக்கும் நம்முடைய வீர வணக்கத்தையும், அந்தக் குடும் பங்களுக்கு  இரங்கலையும் தெரிவிக்கவேண்டியது நம் அனைவருடைய கடமையாகும்.


ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்!


அந்த வகையில், சென்ற வாரம் இறந்த பகுத்தறிவு நெறியாளர் பொறியாளர் திருச்சி பொன்னுசாமி அவர்களுக்கும், அதேபோல, இன்றைக்கு ஒரு செய்தி கிடைத்தது. கடலூரின் ஒன்றியக் கழகத் தலைவரும், எனது நீண்ட கால நண்பரும், ‘விடுதலை' தான் அவருக்கு எல்லாமே - அவர் அதிகம் எழுதப் படிக்கத் தெரியாத நண்பராக இருந்த ஒருவர், மீன் பிடித் தொழில், படகுத் தொழிலை நடத்திக் கொண் டிருந்த குப்புசாமி அவர்கள் மறைந்தார்கள் என்ற ஒரு செய்தி வந்திருக்கிறது.


மிக நாணயமாக, செவி வழிச் செய்திகளிலேயே மிக ஆழமாக எல்லாக் கருத்தையும் பேசக் கூடியவர் அவர். நம்முடைய கழகப் பொதுச்செயலாளர் துரை.சந்திரசேகரன் அவர்கள் அந்தச் செய்தியைச் சொன்னார். அப்படிப்பட்ட அவர்களுக்கு நம்முடைய ஆழ்ந்த இரங்கலை ஒரு சில மணித் துளிகள் தெரிவிப்போம்.


அதுபோன்று பலர் மறைந்திருக்கிறார்கள். அத்தனை பேருக்கும், நம்முடைய இயக்கத்தவர்கள், இயக்கத்திற்கு அப்பாற்பட்டவர்கள், நம்முடைய திராவிட இயக்கத்தவர்கள், குறிப்பாக ஜெ.அன்பழகன் போன்றவர்கள் இன்றைக்குக் காலை யில் மறைந்த பேராசிரியருடைய மகள் மணமல்லி போன்றவர்கள் எல்லோரும் அதில் அடங்குவார்கள். அப்படிப்பட்ட வர்களுக்கு நம்முடைய ஆழ்ந்த இரங்கலை முதலில் தெரிவித்து ஒரு சில மணித்துளிகள் அமைதி காத்து, பிறகு கலந்துரையாடலைத் தொடரலாம்.


(ஒரு சில மணித் துளிகள் அனைவரும் அமைதி காத்தனர்).


அருமை நண்பர்களே, ‘விடுதலை'யின் வீர வரலாறு என்ற அற்புதமான இந்தக்  கலந்துரையாடலில், நம்முடைய கழகப் பொதுச்செயலாளர் துரை.சந்திர சேகரன் அவர்கள் மிக அருமையான ஓர் உரையை நிகழ்த்தினார்.


அதில் ஒரு சிறிய திருத்தம். நெ.2, பாலகிருஷ்ண பிள்ளை தெரு, சிந்தாதரிப்பேட்டை என்பதுதான் முதற்கண் ‘விடுதலை' அலுவலகமாகத் தொடங்கியது சென்னையிலே. அவர்கள் அதை குறிப்பிடுவதற்குப் பதிலாக,  அய்யாவின் இல்லமான மீரான்சாகிப் தெரு என்று சொன்னார்.


அதைச் சொல்லும்பொழுதே, நான் திருத்த வேண்டும் என்று நினைத்தேன். ஆகவே, அந்தத் திருத்தத்தை நான் முதலில் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கின்றேன்.


ஏனென்றால், நம்முடைய தகவல்கள் சரியாகப் பதிவாகவேண்டும் என்பதற்காகத்தான்.


1941 ஆம் ஆண்டு சென்னையில் ‘விடுதலை'


ஈரோட்டிலிருந்து நெ.2 பாலகிருஷ்ண பிள்ளை தெருவில்தான், 1941 ஆம் ஆண்டு ‘விடுதலை' சென் னைக்கு வருகிறது. அப்படி வரும் போது மே 1 ஆம் தேதியில் தந்தை பெரியார், சென்னையில் தொடங் கினார்.


அப்படித் தொடங்குகின்ற அந்தக் காலகட்டத்தில், இடத்தைத் தெளிவாக ஆக்கிக் கொள்ளவேண்டும் என்பதற்காக, 1940ஆம் ஆண்டே இடத்திற்காக ஒப்பந்தம் போட்டு ஏற்பாடு செய்து வைத்தார்.


அய்யா அவர்கள், சிறு சிறு செயல்களில்கூட, மிகக் கவனமாக இருப்பார்கள் என்பதற்கு அடையாளம், இந்தக் கரோனா காலகட்டத்தைப் பயன்படுத்தி நான் இல்லத்திலிருந்து கொண்டே அலுவலகப் பணிகளைச் செய்யும்பொழுது, நிறையப் படிக்கக் கூடிய வாய்ப்பு களும், இன்னும் அதிக நேரம் உழைக்கக் கூடிய வாய்ப்புகளும் இருக்கின்றன. அலுவலகம் சென்றால் கூட, கொஞ்சம் கவனம் சிதறக்கூடிய வாய்ப்புகளும் - பார்வையாளர்கள் சந்திப்புகளும் இருக்கும்.


எது நட்டமோ, அது லாபமாக இருக்கிறது!


ஆனால், வீட்டிற்குள்ளே முடக்கம் என்பதனால், அலுவலகத்தை வீட்டிற்குள்ளேயே வைத்திருப்பத னால், எடுத்தவுடனே ஆராய்ச்சி செய்யக்கூடிய ஒரு மாணவனைப் போல, பல்கலைக் கழகத்தில் தனியே அமர்ந்து கொண்டு, அதையே அலுவலகமாக்கிக் கொண்டு படிக்கக் கூடிய வாய்ப்பைப் பெறும்போது, தோழர்களைச் சந்திக்க முடியவில்லையே என்று மன சங்கடம் இருந்தாலும், இன்னொரு பக்கத்தில், எது நட்டமோ, அது லாபமாக இருக்கிறது என்று பார்க்கும் பொழுது, எனக்கு நேரம் அதிகமாகக் கிடைக்கிறது.


அதைப் பயன்படுத்திக் கொண்டு, நான் ஏற் கெனவே உங்களுக்கு முன் கலந்துரையாடலில் சொல் லியிருக்கிறேன்.


பல விஷயங்களை நானே தெரிந்துகொள்ளக் கூடிய வாய்ப்புகள்!


அய்யாவினுடைய பழைய டைரிக் குறிப்புகளை யும், அவருடைய புத்தகங்களையும், அவருடைய எழுத்துக்களையும் படிக்கிறேன். ‘விடுதலை'யினுடைய வரலாறு மற்றும் பல விஷயங்களை நானே தெரிந்து கொள்ளக் கூடிய வாய்ப்புகள் இன்னும் அதிகமாக இருக்கின்றன.


ஏனென்றால், நாம் தெரிந்துகொண்ட செய்திகளை விட, தெரிந்துகொள்ள வாய்ப்பில்லாத செய்திகள், காலத்தாலும், அல்லது வேறு வகையான வாய்ப்பின் மையாலும் அதிகமாக இருக்கக் கூடும்.


அய்யாவின் டைரிக் குறிப்பு!


அந்த வகையில் பார்க்கும்பொழுது, 1944ஆம் ஆண்டு அய்யா எழுதிய டைரிக் குறிப்பு ஆகும்.


இதில் ஒரு சிக்கல் என்னவென்றால், அந்த டைரி யில் உள்ள எழுத்துக்களை, கல்வெட்டு ஆராய்ச்சி போன்று படிக்கவேண்டும். ஏனென்றால், கூட்டு எழுத்துக்களால் இருக்கும். அய்யாவினுடைய எழுத் துக்களைப் புரிந்துகொள்ளவேண்டும்.


அய்யா அவர்கள் எப்பொழுதுமே, எந்த ஒரு கட்டடத்தைப் பார்த்தாலும், பொறியாளர்களுக்கு எல்லாம் இல்லாத ஒரு திறமை, அய்யா அவர்களிடம் என்னவென்றால், ஒரு கோடு போட்டு விடுவார். அந்தக் கட்டடம் எவ்வளவு உயரம்? குறுக்கே எவ்வளவு அகலம்? எவ்வளவு நீளம்? எத்தனை சதுர அடி? இதற்கு என்ன செலவாகியிருக்கும்? என்ற ஒரு பேப்பரை வைத்தே போட்டு விடுவார்.


அதுபோல, சென்னை சிந்தாதரிப்பேட்டை, பால கிருஷ்ண பிள்ளை தெருவில் உள்ள அந்தக் கட்டடத் திற்கு உரிமையாளர் தேவக்கோட்டையில் உள்ள ஒரு நகரத்தார் - மாணிக்கவாசக செட்டியார் என்று அவருக்குப் பெயர்.


அந்த இடத்திற்காக, அவரிடம் தந்தை பெரியார் அவர்கள் பேசுகிறார், ஒருவர் மூலமாக. அந்தக் கட்டடத்தைப் பார்த்துவிட்டு, தன்னுடைய டைரியில் வரைபடமாக ஆக்கியிருக்கிறார் தந்தை பெரியார் என்பது மிக முக்கியமான செய்தியாகும்.


வாடகைக் கட்டடத்தில் அலுவலகத்தை அமைக் கும்பொழுது, அய்யா அவர்கள் எவ்வளவு ஆழமாக திட்டமிடுவார் என்பதற்கு இது அடையாளமாகும்.


அந்த கட்டட சொந்தக்காரரிடம் பேசி, ஒப்பந்தத் திற்கு வருகிறார்கள். ஒப்பந்தத்தில் என்ன எழுது கிறார்கள் என்று சொன்னால், ‘‘மதராஸ் பிரஸ் கட்டடத் திற்கு, மாணிக்க வாசகம் செட்டியாரால், ஈ.வெ.ராவிற்கு, 17.10.1940 இல் வாடகைப் பத்திரம், அ.பொ. (அ.பொன்னம்பலனார்) பெயருக்கு நெ.2772/40, புக் நம்பர்/1. 17.10.1940 ரிஜிஸ்டர், இன்று வர்த்தமான லெட்டர்.


17.10.1943இலிருந்து 17.10.1946 வரை (ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டது) மாதம் ஒன்றிற்கு 30 ரூபாய் வீதம் வாடகை பேசி, வர்த்தமான கடிதம் எழுதப்பட்டது.


ஆகவே, இந்தப் பணத்தைக் கொடுத்தது முதற் கொண்டு, அந்த டைரியில் எழுதி வைத்திருக்கிறார் அய்யா அவர்கள்.


அந்தக் கட்டடத்தின் அருகில் நம்முடைய ஆதிதிராவிட சகோதர்கள் இருப்பார்கள். அவர்கள் எல்லாம் நம்முடைய இயக்கத்திற்கு ஆதரவானவர்கள்.


30 ரூபாய் வாடகை - பிறகு 100 ரூபாய்!


அந்தக் கட்டடத்தில்தான் அண்ணா அவர்கள் ‘விடுதலை'யின் ஆசிரியராக இருந்தார். பிறகு, குத்தூசி குருசாமி அவர்கள் ஆசிரியராக இருந்தார்கள். அந்தக் கட்டடத்திற்கு அந்தக் காலகட்டத்திலேயே 30 ரூபாய் வாடகை.


பல ஆண்டுகள் கழித்து நான் ‘விடுதலை' ஆசிரி யராகப் பொறுப்பேற்றபொழுது, 1962 ஆம் ஆண்டு வாடகை 100 ரூபாய் அளவிற்கு வந்தது.


தந்தை பெரியார்மீது வழக்கு!


கடைசியாக, 300 ரூபாய் வாடகை கொடுத்தோம். அந்தக் கட்டடத்தைக் காலி செய்யவேண்டும் என்று தந்தை பெரியார்மீது மாணிக்கவாசகம் செட்டியார் வழக்குப் போட்டார். அதுவும் நான் ‘விடுதலை' ஆசிரியராகப் பொறுப்பேற்ற காலத்தில்தான். அந்த வழக்கினை, மறைந்த ஜஸ்டீஸ் கோகுலகிருஷ்ணன் அவர்கள் வழக்குரைஞராக இருந்து நடத்தினார்.


வழக்கு விசாரணையின்போது நீதிபதி கேட்கிறார், ‘‘ஏங்க, அவ்வளவு பெரிய பத்திரிகை அலுவலகம் அந்தக் கட்டடத்தில் இயங்கியிருக்கிறது - பெரியாரு டைய வசதி என்ன? அவருக்கு இயக்கம் இருக்கிறது. ஆனால், அவ்வளவு பெரிய இடத்திற்கு, வெறும் 100 ரூபாய் வாடகைக் கொடுக்குகிறீர்களே, அவர் காலி செய்யச் சொல்வது நியாயம்தானே?'' என்றார்.


வழக்கின் விவரத்தைக் கேட்ட


அய்யா கோபங்கொண்டார்!


‘‘இல்லை, உடனே நாங்கள் காலி செய்ய முடியாது; பெரிய மிஷின் எல்லாம் இருக்கிறது'' என்றார் வழக்கு ரைஞர்.


சரி, அப்படியென்றால், வாடகையை 300 ரூபாயா கக் கொடுங்கள் என்றார் நீதிபதி.


வழக்குரைஞர் கோகுலகிருஷ்ணன், என்னிடம் கேட்டார், என்ன செய்யலாம்? என்று.


அய்யா என்ன சொல்லுவாரோ தெரியவில்லை என்றேன் நான்.


‘‘நான் முடிவு செய்தேன் என்று சொல்லுங்கள்; இல்லையென்றால், வேறு விதமாக தீர்ப்பு அளிப் பார்கள். காலி செய்யுங்கள் என்று சொல்லிவிட்டார்கள் என்றால், கஷ்டம்தானே'' என்றார்.


பிறகு 300 ரூபாய் வாடகைக் கொடுக்கவேண்டும் என்பதற்கு ஒப்புக்கொண்டோம்.


அப்பொழுது அய்யா திருச்சியில் இருக்கிறார். வழக்கு விவரத்தைப்பற்றி அவருக்குச் சொல்ல வேண்டும்.


வழக்கு விவரத்தைத் தொலைப்பேசியில் சொல் லும்பொழுது, அய்யா மிகவும் கோபித்துக் கொண்டார். நான் வெறும் 100 ரூபாய் கொடுத்தேன்; நீங்கள் அதை 300 ரூபாய் என்று ஒப்புக்கொண்டு இருக்கிறீர்களே, அதனால் எவ்வளவு நட்டம் தெரியுமா? என்றார்.


உடனே நான் தொலைப்பேசியை வழக்குரைஞர் கோகுலகிருஷ்ணன் அவர்களிடம் கொடுத்துவிட் டேன்.


 


‘‘அய்யா, அதைத் தவிர வேறு வழியில்லை'' என்று சொன்னவுடன், அய்யா சமாதானமாகிவிட்டார்.


அந்தக் கட்டடத்தை ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு, உரிமையாளரிடம் ஒப்படைத்துவிட வேண்டும் என்று நீதிபதி தீர்ப்பு அளித்திருந்தார்.


பெரியார் திடலில் ‘விடுதலை' அலுவலகம்!


நீண்ட காலமாக நெ.2 பாலகிருஷ்ணன் பிள்ளை தெருவில் உள்ள கட்டடத்தில் ‘விடுதலை' அலுவலகம் இருந்தது. எதிலுமே கெட்ட வாய்ப்பில் ஒரு நல்ல வாய்ப்பு என்பதற்கு அடையாளமாக, பெரியார் திட லில் கட்டடங்கள் அமையாத சூழல் இருந்ததை யெல்லாம் முடித்து, பெரியார் திடலில் ‘விடுதலை' அலுவலகம் தொடங்கப்பட்டது.


(தொடரும்)


No comments:

Post a Comment