உலகம் ஒவ்வொரு நாளையும் ஒரு சிறப்பு நாளாக - நல்லொழுக்க நன்னெறி நிலைத்திட நினைவூட்டும் நாளாக பற்பல நாட்களையும் பகுத்துள்ளது.
அவை வெறும் நாட்காட்டியின் அச்சுதானா? செயலில் காட்டப்படவேண்டியவைகள் அல்லவா!
அன்பெனும்பிடியில் அகப்பட்டு மகிழும் நாள், அந்நாளே! சிந்தித்துப் பிறகு செயலாற்றி மற்றவரையும் மகிழ்வித்து, தங்களது மகிழ்ச்சிக்கும் காப்பீடு செய்து கொள்ளும் நாள் தான் இன்று (ஜூன் 15) முதியோர் கொடுமை ஒழிப்பு விழிப்புணர்வு நாள்!
இந்தத் தலைப்பே ஒரு சோகப் படலத்தைச் சுட்டிக் காட்டி அதற்குரிய புது வழிகாணும் நாள் என்பதைத் தெளிவாகத் தெரிவிக்கிறது.
இது இளைய தலைமுறைக்குப் பெருமையா? சிறு மையா? கொடுமைக்கு அவசியமே இல்லாத அன்பில் திளைத்தவர்களாக மூத்தோர்கள், முதியவர்கள் வாழ்க்கை அமையுமானால், சந்ததியினாரால் கொடு மைகளுக்கு இடம் உண்டா? கொடுமை ஏற்படுவது நியாயமாகுமா?
‘பால் நினைந்தூட்டிய தாயின் மார்பகம் புற்று நோய்க்கு ஆளாகியது' என்பதால் துடித்திடும் பாசத் தின் உருவம்தானே - ஊட்டி வளர்க்கப்பட்ட அந்தப் பிள்ளைகள்? ‘நோய் வந்துவிட்டது, அப்படியே ஒதுக்கி விடு, ஓரங்கட்டி விடு' என்று கூறி, ஓடிப்போவது நன்றி கெட்டத் தனம் மட்டுமா? நல்லவர்கள் ‘‘தூ''வென்று காறித் துப்பும் அவமானத்தின் உச்சமல்லவா?
பிள்ளைகளே, பேரப் பிள்ளைகளே, பிஞ்சுகளே, வீட்டில் உள்ள உங்கள் முதியோர்களை ‘‘ஒன்றுக்கும் உதவாதவர்கள்'' என்று நினைக்காதீர்கள்; எல்லாவற் றிற்கும் உதவியவர்கள் அவர்களே என்பதை மறக் காதீர்கள்; எனவே அவர்களை ஒதுக்காதீர்கள்.
ஒதுங்காதீர்கள் - அவர்களைவிட்டு!
பதுங்காதீர்கள் - அவர்களைப் பார்ப்பதைத் தவிர்க்க!
அவர்கள் வாழ்க்கை எப்படி முதுமையை அடைந்தது?
அவ்வையாரை நினைக்கும்போது, அவர் ஏதோ பிறந்த போதே கிழவியாகத்தான் பிறந்தார் என்பது போன்ற ஒரு தவறான சிந்தனை நம்மில் பலருக்கும் ஏற்பட்டதுண்டு; காரணம் நம் மனதில் பதிந்தது பாட்டி அவ்வையாராகத்தான். அவரது இளமைப் பருவம் தான் முதுமையடைந்துள்ளது என்ற எண்ணமே பல ருக்குத் தோன்றுவதில்லை. அதுபோல்தான் பேரர்க ளும்கூட தாத்தாக்களை, பாட்டிகளை, பிள்ளைகள்கூட வயது தந்தையர்களை - அன்னையர்களைப் பார்க்க (அவரது சந்ததிகள்) தயங்கக்கூடாது!
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்கள் அவரது ‘குடும்ப விளக்கு' இலக்கியத்தில் ஓர் ஓவியம் தீட்டி யுள்ளார்.
("முதியோர் காதல்" - 5ஆம் பகுதியில்)
"ஆடிய பம்ப ரங்கள்
அல்லவா அம்மூத் தோர்கள்?
மணவழகர் உடல்நிலை
மணவழ கர்க்கு முன்போல்
வன்மையோ தோளில் இல்லை!
துணைவிழி, ஒளியும் குன்றக்
கண்ணாடித் துணையை வேண்டும்;
பனையுடல், சருகு! வாயிற்
பல்லில்லை! மயிர்வெண் பட்டே!
உணவெலாம்! பாலின் கஞ்சி;
உலவுதல் சிறிதே ஆகும்.
தங்கத்தம்மையார் உடல்நிலை
நன்னிலாக் கதிர்போல் கூந்தல்
நரைத்தது. கொண்டை யிட்டு
முன்னிலா முகில்உண் டாற்போல்
முகத்தொளி குறைய லானார்!
அன்புடல் அறத்தால் தோய்ந்த
ஆயிரம் பிறைமூ தாட்டி
மன்னுசீர் அன்னாள் மெய்யோ
வானவில் போற்கூ னிற்றே!
முதியோர் அறைக்கு மக்கள்
பேரர் வந்து போவார்கள்
இருபெரு முதியோர் தம்மைத்
தலைக்கடை அறைசு மந்து
பெரும்பேறு பெற்ற தன்றோ!
பிள்ளைகள், அவர்ம னைமார்
வருவார்கள்; அறங்கேட் பார்கள்.
மற்றுள பேர்த்தி பேரர்
வருவார்கள் அளவ ளாவி
மணியோடு பள்ளி செல்வார்.
இரு முதியோர் நிரம்பிய உள்ளம்
மைந்தர்க்குக் கல்வி சேர்த்தோம்
மகள்மார்க்கும் அவ்வா றேயாம்
எம்தக்க கடன்மு டித்தோம்
இனிதாக வாழு கின்றோம்;
முந்துறச் சுற்றத் தார்க்கும்
செய்வன முழுதும் செய்தோம்;
இந்தநாள் வரைக்கும் வாய்மை
இம்மியும் மறந்த தில்லை.
நாட்டுக்கு நலம் செய்தோம்
இந்நாட்டின் நலனுக் காக
நல்லறம் இயற்றி வந்தோம்.
எந்நாளும் பிறர்க்குத் தீமை
எங்களால் நடந்த தில்லை.
சின்னதோர் நன்று செய்தார்
திறம்மறந் தறியோம் என்றே
இன்னிசை பாடும் அன்னார்
இரண்டுள்ளம் இன்பம் கொள்ளும்."
- இப்படி ஒரு கூட்டுக் குடும்பத்து உறுப்பினர்கள், பெற்ற பிள்ளைகள் முதல் உற்ற பேரர்கள் - பேத்திகள் வரை தத்தம் அன்பினை வற்றாத ஜீவநதியின் அலைகளாய்ப் பாய்ச்சிக் கொண்டே கடமையாற்றும் நிலை இருந்திருந்தால், மேற்கண்ட ஒரு நாள் - அதுவும் பன்னாட்டு அளவில் ‘‘முதியோர் கொடுமை ஒழிப்பு விழிப்புணர்வு நாள்!'' என்று உருவாகி இருக்குமா?
அன்பும் பாசமும் காட்டுவது பெருந்தன்மையும், பெருங்கடமையும் மட்டுமல்ல; கொஞ்சம் ஆழமாக இளந்தலைமுறையினர் சிந்தித்துப் பார்த்தால், அது ஒருவகையான விதை நடும் பணி என்பது விளங்காமல் போகாது.
எப்படி என்கிறீர்களா?
முதுமையடைந்த பெற்றோர்களுக்கு நீங்கள் திருப்பித் தரும் பாசம் உங்களுக்கே எதிர்காலத்தில் மீண்டும் திரும்பி வரக்கூடியதே என்பது புரிய வேண் டாமா? நாளைக்கு இளையவர்களும் முதியவர்கள் ஆகும்போது அவர்களது பெற்றோர்களிடம் காட்டிய பாசமும், கடமை உணர்வும் தானே இவர்களுடைய பிள்ளைக்கு வழி காட்டும் துணைவன் - வெளிச்சம் இல்லையா!
முன் ஏர் சரியாகப் போனால்தானே - பின் ஏர்க ளும் சரியாகச் சென்று உழவுப் பணியை ஒழுங்காக முடிக்க முடியும்?
ஆனால், இன்றைய சமுதாயத்திலோ, ‘கணக்குப் போட்டுப் பழகும் கயமைத்தனம், படமெடுத்தாடுகிறது. கடைந்தெடுத்த சுயநலம் கட்டுப்பாடற்ற மக்களின் வாழ்வாகிவிட்டது! சமூகத்தில் எத்தனை எத்தனை சொல்லொணாக் கொடுமைகள்! ஏய்ப்புகள்! சொந்த பெற்றோர்களைக்கூட நடுத்தெருவில் ஈவு இரக்க மின்றி நிறுத்திடும் நயவஞ்சக நரித்தன சொல்லொணாக் கொடுமை!
(நாளை மேலும் ஆராயலாமே!)
No comments:
Post a Comment