பெரியார் சிந்தனை வகுப்புகள் மீண்டும் தொடக்கம்!
‘திராவிடப் பொழில்' காலாண்டு இதழ் ஆரம்பம்!!
‘பெரியார் மின் நூலகம்' ஏற்பாடு!!!
தந்தை பெரியாரின் சிந்தனைகளை மேலும் பரப்பிடவும், வாழ்க்கையில் பெரியார் சிந்தனையே வாழ்வியல் நெறியாக ஒளிரவும் மூன்று முத்தான அறிவிப்புகளை திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிவித்துள்ளார்.
அவை வருமாறு:
நேற்று முன்தினம் (13.6.2020) சனிக்கிழமை மாலை நடைபெற்ற ‘‘விடுதலையின் வீர வரலாறு-2’’ காணொலி நிகழ்வில் கலந்து, கேட்டு, உரையாற்றிய கழகக் கொள்கைக் குடும்பத்தவர்களுக்கும், சான்றோர்களுக்கும் எமது நன்றி கலந்த வணக்கம். உற்சாகம் கரைபுரண்டோடியது; காலம் அதிகமானால் களைப்பு ஏற்படுவது இயல்பு. நேற்றைய முன்தின நிகழ்ச்சியோ எதிர்மறையாகவே அமைந்து, எல்லையற்ற இன்பத்தை அளித்தது - நம் அனைவருக்குமே!
கரோனா தொற்று விரைவில் ஒழிந்து பழைய நல்வாழ்வுச் சூழல் எப்போது தொடங்கும் என்ற அச்சமும், கவலையும் பலரையும் பாதித்து, மன அழுத்தத்தைத் தரும் வேளையில், இதுபோன்ற ஈடுபாடுகள், ஈர்ப்புகள் சரியான இளைப்பாறும் மாமருந்துகளாகும்!
பெரியார் தொண்டர்களுக்குச்
சொல்லியா கொடுக்கவேண்டும்?
இதுவரை கரோனா தொற்றுக்கு மருந்து கண்டுபிடிக்கவில்லை என்று உலகம் சொல்லிக் கொண்டிருப்பது உண்மை; ஆனால், பெரியார் தொண்டர்களாகிய நாம் அதிலிருந்து விடுபட நம்மைத் தனிமைப்படுத்திக் கொள்ளுவது தொடங்கி, முகக் கவசம் அணிவது மிக அவசியம் - கட்டாயம். ஒதுங்கியிருப்பதைவிட, தொற்றுத் தடுப்புக்கு -முகக் கவசமே முக்கியம் என்பது மூத்த மருத்துவ அறிஞர்கள் கருத்து. அதை அணிந்து கொள்ளாமல் வீட்டை விட்டு வெளியேறாதீர்கள்; எதிர் எதிர் பேசுவோர்; தேவை அளவில் பேசுவதும், தள்ளி நின்று பேசுவதும், கிருமி அழிப்பு மருந்துகளைக் கைகளில் தடவுதலும் அவசியம். நாக்கு சுவை குன்றுகிறதா, மூக்கு உணர்தல் (நுகர்தல்) எப்படியிருக்கிறது என்பதைப் பற்றியெல்லாம் கவனத்தோடு இருப்பதுடன், வீட்டில் சத்துள்ள உணவு உட்கொள்ளுதல், சரியான உடற்பயிற்சி செய்தல் - இவற்றை அன்றாட வாழ்க்கை முறையாக ஆக்கிக் கொள்ளுவது அவசியம். சிக்கனம், எளிமைபற்றி பெரியார் தொண்டர் களுக்குச் சொல்லியா கொடுக்கவேண்டும்?
இவற்றைத் தாண்டி, காலத்தைப் பயனுறு வகையில் நாம் செலவழித்தல் அறிவுக்கு உணவாகவும், அனுபவப் பயிருக்கு உரமாகவும் ஆகக் கூடிய வகையில், தந்தை பெரியாரின் பகுத்தறிவு, வாழ்வியல் நெறிகளை வாசித்தால் மட்டும் போதாது; சுவாசிக்கவும் வேண்டும் - இதுதான் அதற்கேற்ற சரியான பருவம்!
‘விடுதலை’யில் வெளியான
பெட்டிச் செய்தி
சென்ற திங்கள் - மே பிற்பகுதியில் ஒரு முக்கிய அறிவிப்பு வெளிவரும் என்று, புதிர் போட்டதைப்போல் கழகத் தோழர்களுக்குச் சற்று ‘‘சஸ்பென்ஸ்’’ வைத்து ஒரு பெட்டிச் செய்தியை ‘விடுதலை’யில் வெளியிட்டோம்; அதுபற்றி பலரும் ஆவலுடன் இன்றுவரை கேட்கிறார்கள்.
இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி பெரியார் தொண்டர்கள் அனைவரும் - உண்மையிலேயே பெரியார் கொள்கைப் பாடங்களின் பெரி யாரியலை மிகவும் நேசிப்பது முக்கியமல்ல; வாசிப்பதைத் தாண்டி சுவாசிப்பது - உள் வாங்குவது - மனதில் ஆழமாகப் புரிந்து செரித்துக் கொள்ளல் அதைவிட மிக மிக மிக முக்கியமாகும்.
பெரியார் சிந்தனை வகுப்புகள்!
அதற்கு நல் வாய்ப்பு - நம் முதல் ‘பெரியார் பேருரையாளரான’ பெரும் புலவர் பேராசிரியர் ந.இராமநாதன் அவர்கள் பெரியார் சிந்தனை வகுப்புகளில் நடத்திய பாடங்கள் (வினாக் களுடன்) இரண்டு முக்கிய புத்தகங்களாக வெளிவந்துள்ளன. இன்னொன்றும் வெளிவர உள்ளது.
அவற்றைத் தோழர்கள் - பெரியாரைப் புரிந்துகொள்ள விரும்பும் இளைய தலை முறையினர் - உலகெங்கும் உள்ளவர்கள் - இந்த வாய்ப்பில் தங்களுக்குத் தாங்களே வகுப் பறை, பாட நூல் ஆகியவற்றை உருவாக்கிக் கொள்ளவும் - அந்த நூல்களைப் படித்த பிறகு, தொடர்பு வகுப்புகளை (Contact Classes) நமது முக்கிய ஆய்வாளர்களும், நம்மைப் போன்ற பெரியார் பணியாளர்களும்கூட நடத்திடும் வாய்ப்பும் - தஞ்சையில் உள்ள பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் நிறுவனத்தின் (நிகர்நிலைப் பல்கலைக் கழகம்) - பெரியார் சிந்தனை உயராய்வு மய்யத்தின் மாணவர்களாகிடும் தகுதியோடு, சான்றிதழ் வாய்ப்பு இருந்தால், தாராளமாகப் பெறலாம்; இன்றேல், இயக்கத் தலைமையே சான்றிதழ் தரலாம் - கிறித்துவ மதவாதிகள் எப்படி ‘பைபிள்’ பற்றி சான்றிதழ் தருகிறார்களோ அப்படி வழங்க இயலும்!
சான்றிதழ் என்பதைவிட, சரியான பெரியாரியல் புரிதல் என்பதே முக்கியம்.
பெரியாரியல் சிந்தனையாளன் என்பது, நமது வாழ்க்கையில் பல்வேறு சிக்கல்கள் எழும்போது எப்படி எதிர்கொள்வது, எதிர்ப்பு அலைகளில் எப்படி எதிர்நீச்சல் அடித்து வெற்றி பெறுவது, சில நேரத் தோல்விகளைக் கண்டு துவளாது, எப்படித் தொய்வின்றி வாழ்க்கைக் களத்தில் நிற்பது என்பதற்கு ஓர் அருமையான பாடமாகும். உளவியல் ரீதியாகத் துணிவும், தெளிவும்கூட இதன்மூலம் நாம் பெற முடியும்.
சமூக விஞ்ஞானம்!
உண்மையான பெரியாரியல் வாழ்க்கை நெறியைப் பின்பற்றுகிறவர்கள் என்றும் மகிழ்ச் சியுடன் வாழ்வார்கள் - எதையும் எதிர்கொண்டு வெல்வார்கள். அதற்கு இது பெரிதும் துணை நிற்கும் - கொள்கைப் பாடங்களாக புறத் தோற்றத்தில் தெரிந்தாலும், அகத்தில் இது ஆழ்ந்த பயனைத் தந்து நம் வாழ்வைச் செம்மைப்படுத்திக் கொள்ள பெரிதும் துணை நிற்கும்; காரணம் இது வெறும் விஞ்ஞானம் அல்ல - சமூக விஞ்ஞானம்.
நிகழ்காலம் - வருங்காலம் எல்லாம் அறி வியல் - விஞ்ஞானத்திற்குத்தான்! மூடநம்பிக் கைகளுக்கோ, பழைய பத்தாம் பசலித்தனத் திற்கோ அல்ல.
பேராசிரியர் ந.இராமநாதன் அவர்களின் இரண்டு பாட நூல்களையும் - மின் புத்தகங் களாக்கியும் (E-Book) தருகிறோம். அதை இணையத்திலிருந்து தரவிறக்கிக் கொள்ளலாம் - அச்சு நூல் வேண்டுமானால், 50 விழுக்காடு சலுகையில் கிடைக்கும்.
தேர்வுகள் தேவைப்படும்போது, எழுத்து - நேர்முகத் தேர்வுகள் எல்லாமே உண்டு.
அறிவுப் பயிற்சி!
பள்ளி மாணவர்களுக்கு ‘‘பெரியார் 1000’’ -
வளர்ந்தவர்களுக்கு ‘‘பெரியாரியல் பாடங்கள்’’ -
இவற்றில் வெற்றி பெறுவது முடியாததல்ல - மிகவும் எளிமை - கொஞ்ச நேரத்தை அன்றாடம் இதற்கென ஒதுக்குங்கள் - அன்றாட உடற்பயிற்சிபோல - இது ஒரு நல்ல அறிவுப் பயிற்சி - மூளைக்கு - உள்ளத்திற்கு!
காலாண்டு ஏடு -
‘திராவிடப் பொழில்’
அடுத்து ஒரு மகிழ்ச்சியான செய்தி.
‘திராவிடப் பொழில்’ என்ற ஆராய்ச்சி காலாண்டு ஏடு (Journal) ஒன்று - பகுத்தறிவு, பண்பாடு, வரலாறு, கலை, நாகரிகம், மொழி, மனிதம் பலவற்றைப் பற்றி பல கண் ணோட்டத்தில் சிறந்த ஆய்வாளர்களின் ஆய்வுக் கட்டுரைகளுடன் வெளிவரும்.
இதற்கு சிறப்பாசிரியர் பணி மேற்கொள்ள அமெரிக்காவில் உள்ள சீரிய சிந்தனையாளர், தொண்டறச் செம்மல் பேராசிரியர் முனைவர் ரவிசங்கர் கண்ணபிரான் (KRS) அவர்களைக் கேட்டுள்ளோம்.
பொறியாளர் டாக்டர் வா.நேரு அவர்கள் இதனை ஒருங்கிணைக்கும் ஆசிரியர் பொறுப்பில் இருப்பார்; ஆசிரியர் குழு ஒன்று - பாரதிதாசன் பல்கலைக் கழக மேனாள் துணைவேந்தர் பேராசிரியர் பெ.ஜெகதீசன், பேராசிரியர் முனைவர் பா.காளிமுத்து, பேரா சிரியர் முனைவர் நம்.சீனிவாசன் முதலியவர்கள் அந்தக் குழுவில் இடம்பெறுவார்கள். (இது மேலும் விரிவாக்கப்படலாம்).
வெளிநாட்டு, உள்நாட்டு அறிஞர்களின் ஆய்வுகள், புதிய உலகு படைக்க உதவும் மகத்தான புத்தறிவு - பண்பாட்டுக்கான ஆக் கங்களைத் தந்து உதவக் கூடும், இத்திராவிடப் பொழில்! இது ஒரு மின்னிதழ் (E-Magazine).
பெரியார் மின் நூலகம்
அதோடு, உலகில் எந்த நாட்டிலிருந்தும் பெரியார்பற்றி அறிந்துகொள்ள முக்கிய நூல்களைக் கொண்ட பெரியார் மின் நூலகம் (Periyar Virtual Library) என்ற பெயரில் தொடங்கப்படவிருக்கிறது.
பெரியார் உலக மயமாகவேண்டும் -
உலகம் பெரியார் மயமாக வேண்டும்!
வருகிற 2020 செப்டம்பர் 17 தந்தை பெரியாரின் பிறந்த நாளிலிருந்தே, அதன் தொடக்கமும், முழு வடிவமும் நடைபெற, ஏற்பாடுகள் இப்போதே தொடங்கி நடை பெறுகின்றன. கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் பொறுப்பில் ஒரு சிறந்த குழு அந்தப் பணியில் அனுபவம் உள்ளவர்களைக் கொண்டு அமைக்கவும் ஏற்பாடு ஆகியுள்ளது!
பெரியார் உலக மயமாகவேண்டும் -
உலகம் பெரியார் மயமாக வேண்டும் -
மக்கள் ‘மனிதம்’ நிறைந்த மனிதர்களாக வேண்டும்!
கி.வீரமணி
சென்னை
தலைவர்
15.6.2020
திராவிடர் கழகம்
No comments:
Post a Comment