கரோனா காலத்திலும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மக்களிடம் கொள்கையை கொண்டு சேர்ப்பதில் 'விடுதலை' நாளிதழ் முதலிடம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, June 14, 2020

கரோனா காலத்திலும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மக்களிடம் கொள்கையை கொண்டு சேர்ப்பதில் 'விடுதலை' நாளிதழ் முதலிடம்

'விடுதலை' விளைச்சல் பெருவிழாவில் கழகப் பொதுச் செயலாளர் உரை



சென்னை, ஜூன் 14- 9.6.2020 அன்று 'விடுதலை' விளைச்சல் பெருவிழா - திராவிட மாணவர் கழக மாநில கலந்துரையாடல் கூட்டம் காணொலியில் நடைபெற்றது. அதில் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்கள் கலந்துகொண்டு உரை யாற்றினார்.


அவரது உரை வருமாறு:


சிறப்பாக நாம் நினைத்ததுபோல் நமது 'விடுதலை' நாளிதழ் 86ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. அதற்கேற்றாற் போல் நாமும் சிறப்பாகச் செயல் பட்டு வந்து கொண்டிருக்கிறோம். தொடர்ந்து நம்முடைய 'விடுதலை' நாளிதழ் இலக்குகள் நோக்கி வெளிவந்து கொண்டிருக்கும். உலகில் உள்ள மற்ற ஏடுகளைக காட்டிலும் இலக்கு வைத்து செயல் பட்டு வருகிறோம். குறிப்பாக  ஓர் இலக்கை வைத்து நாம் செயல்படுகிறோம். இலக்கு


என்பது இதழ் கொண்டு வரு கின்ற குறிக்கோளை வைத்து செயல் பட்டு வருகிறோம். ஏடு களில் மக்களுக்கான ஏடுகள் இருக்கின்றன. அமைப்புகளுக்கான ஏடுகள் இருக்கின்றன. அரசியல் கட்சிகளாக இருக்கலாம். சமுதாய இயக்கங்களாக இருக்கலாம். ஒரு சங்கமாக இருக்கும். ஒரு துறை சார்ந்த விசயமாக இருக்கும்.


இதழ்களின் திட்டங்கள்


இந்த இதழ்கள் எல்லாம் தங்களுடைய எண்ணங்களையும், திட்டங்களையும், கருத்துகளையும் மக்கள் மத்தியில் நிலையாகக் கொண்டு சென்று சேர்க்கும் ஒரு விசயமாகத்தான் அதை எடுப்பார்கள். இதற்கு உறுதுணையாக இருக்கும் இயக்கங்கள் வந்து ஏடுகளின் வேலைகளைச் செய்யும்.


ஏடுகளின் இலக்குகள் என்று பார்க்கும்போது மக்களுக்கான ஏடுகள் என்று இருக்கின்றன. மக்களின் விருப்பங்கள், எதிர் பார்ப்பு, சுவைக்கேற்ற மாதிரி அவற்றை வெளியிடுகின்றார்கள்.


'விடுதலை'யின் தேவை


ஆனால் நம்முடைய 'விடுதலை‘யை எடுத்துக் கொண்டால்  அதற்கு நேர் மாறாக மக்கள் விரும்புகிற விசயங்களை மட்டுமல்லாது மக்களுக்குத் தேவையான விசயங்களையும் கொடுப்பது மட்டும்தான் 'விடுதலை‘யின் நிலை. இதில் அமைப்புகளும், இயக்கங்களும் முக்கியமானப் பங்கை வகிக்கின்றன. இயக்கங்கள், அமைப்புகள், ஏடுகள் என்று பார்த்தால் இது கட்சிக்கும், கொள்கைக்கும், மக்களுக்கும் ஏடுகள் ஒரு பாலம் என்று சொன்னால்கூட 'விடுதலை‘யைப் பொறுத்த மட்டிலும் கட்சிக் கொள்கையான ஏடு என்றால்கூட கட்சித் தலைமைக்கும், தொண்டர்களுக்கும் ஓர் இணைப்புப் பாலமாக இருந்து செயல் பட்டுக் கொண்டிருக்கிறது.


திரிபு வாதத்திற்கு இடம் இல்லை


எந்தவொரு கருத்தாக இருந்தாலும் அதில் எந்தவிதக் குழப்பங்களும் இல்லாமல் கொள்கைகளையும், செயல்களையும் தொண்டர்களுக்கு நேரடியாக எடுத்துச் செல்வதில் நம்முடைய 'விடுதலை‘ ஏடு முக்கியப் பங்காற்றுகிறது. திரிபு வாதத்திற்கு இதில் இடமே இருக்காது. இதுபோல் ஏற்கெனவே நம்முடைய கூட்டங்கள் நடைபெற்றபோது பேராசிரியர் நம்.சீனிவாசன் அவர்கள் 'விடுதலை'யின் வரலாற்றைப் பற்றிச் சொன்னார்கள். ஆசிரியர் அவர்கள் அருமையாக 'விடுதலை'யின் விளைச்சல் என்ற ஒரு வரலாற்றுப் பின்னணியை மக்களுக்கு அறியச் செய்யும் விதமாக ஒரு திட்டத்தையும் வகுத்துக் கொடுத்தார்கள்.


ஊடகத் தொழில்நுட்பத்தில்...


அதில் எங்களுடைய பணி என்பது அவருடைய கொள்கைகளையும், நிலைப்பாடுகளையும் செயல்படுத்துவது மட்டும்தான் முக்கியமான பணி என்று ஏற்றுக் கொண்டு அதைச் செய்து முடிப்பதாகும். இந்தக் கரோனா காலத்திலும் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி மக்களைச் சந்திப்பதிலும். கொள்கை களைக் கொண்டு சேர்ப்பதிலும் திராவிடர் கழகமும், 'விடுதலை‘ நாளிதழும்தான் இன்றைக்கு வரைக்கும் முதலிடத்தில் உள்ளன. மற்றவர்களைக் காட்டிலும் முதலில் அதை ஊடகத் தொழில் நுட்பத்தில் புகுத்தியதும் நாம்தான்.


இ-பேப்பரைக் கொண்டு வந்தது...


அது இன்றைக்கு நேற்றல்ல, ஊடகத்துறை வரலாற்றில் முதன் முதலில் இ-பேப்பரைக் கொண்டு வந்ததும் நம்முடைய 'விடுதலை' நாளேடுதான். ஏற்கெனவே நம் தலைவர்கள் பலரும் சொல்லியிருந்தாலும் நம்முடைய 'விடுதலை‘ நாளேட்டுக்கு சாதனைகள் பல இருந்தாலும் சோதனைகளும் பல்வேறு காலக் கட்டங்களில் நிறைய வந்திருக்கின்றன. நம்முடைய கழகத்தில் உள்ள ஏடுகளுக்கு முதன் முதலில் தந்தை பெரியார் அவர்கள் பெயர் வைத்ததைப் பார்த்தால், பெயர்கள் கூட அவரது குறிக் கோள்களை சிறப்பாக வெளிப்படுத்தும் விதமாகத்தான் இருக் கும்.


பகுத்தறிவு சிந்தனையைத் தாங்கி...


தந்தை பெரியார் நடத்திய ஏடுகள் பலவாகும். திராவிடன், ஜஸ்டிஸ், குடிஅரசு, ரிவோல்ட், புரட்சி, பகுத்தறிவு, விடுதலை, உண்மை, பெரியார் பிஞ்சு, தி மாடர்ன் ரேசனலிஸ்ட் என்று ஏராளமாய் இருந்தன. இப்போதுவரை இருக்கின்றன. இதில் பெரிய விசயம் என்னவென்றால் உலகத்திலேயே பகுத்தறிவுக்கு என்று, பகுத்தறிவுச் சிந்தனையைத் தாங்கிவரும் ஒரு நாளேடு இருக்கிறது என்று சொன்னால் அது 'விடுதலை‘ என்ற நாளேடு மட்டும்தான். உலகின் வேறு எந்த ஒரு நாட்டிலும் அதுவும் தினசரி நாளிதழாக வெளிவரக்கூடிய வேறு இதழ்கள் எதுவும் இல்லை. இது ஓர் உலகச் சாதனையாகும். தந்தை பெரியார் அவர்கள் தொடங்கிய காலம் துவங்கி இன்றைக்கு வரைக்கும் பகுத்தறிவுக்  கொள்கையில் அந்தப் பக்கம் இந்தப் பக்கம் என்று சிறிதளவும் பிசகாமல் பயணித்து வந்து கொண்டிருக்கிறோம். அதற்குக் காரணம் நம்முடைய ஆசிரியர் அவர்கள், அப்புறம் நம் துணைத் தலைவர் அவர்களுடைய வழிகாட்டுதல்களின் பேரில் சிறப்பாகச் செயல் பட்டு வருகிறோம்.


பெட்டிச் செய்தியின் முக்கியத்துவம்


'விடுதலை‘யின் பங்கு என்று பார்த்தால் இட ஒதுக்கீடாகட்டும், ஜாதி ஒழிப்பாக இருக்கட்டும், அனைத்திலும் எக்கச்சக்கமாக இருக்கும். 'விடுதலை'யில் பெட்டிச் செய்தி என்று போட்டால் அதற்கு அவ்வளவு முக்கியத்துவம் அரசாங்கம் அளித்து அதற்கான பலன்கள் உடனே கிடைத்து விடும். அதன் மூலமாக எவ்வளவு பேர் பயன் பெற்றிருக்கிறார்கள் என்பது இங்கிருக்கும் அனைத்துத் தோழர்களுக்கும் தெரியும்.


இது உண்மையா?


சின்ன பெட்டிச் செய்தி. "இது உண்மையா?" என்று 'விடுதலை'யில் வெளி வந்து விட்டால் அதற்கான வேலையை அரசாங்கம் கையில் எடுத்துக் கொண்டு செய்யும். நானும் அதைப் பலமுறை கண்டிருக்கிறேன். 2008-ஆம் ஆண்டில் ஒருவர் தவறான கருத்துகளைப் பதிவு செய்தார் என்ற செய்தியை அடுத்த நாள் 'விடுதலை‘யில் எழுதப்போகிறோம் என்று கட்டம் போட்டு பெட்டிச் செய்தியாக்கி இருந்தோம். அதைப் பார்த்து விட்டு அன்று மாலையே அப்போது முதலமைச் சராக இருந்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் உடனடியாக சம்பந்தப்பட்ட துறை சார்ந்த, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து, இதுபோன்று ஒரு செய்தி வந்திருக்கிறது. இது பற்றி நாளை செய்தி வருவதற்குள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, 'விடுதலை‘ அலுவலகத்திற்கு அலை பேசியில் தொடர்பு கொண்டு, பெட்டிச் செய்தியின் முழுக் காரணம் என்ன என்பதை விசாரித்துத் தெரிந்து கொண்டு, அதை உடனே செயல் படுத்தி, அடுத்த நாள் அந்தக் கட்டுரை வெளியிட வேண்டிய அவசியமில்லாமல் போனதும் நடந்திருக் கிறது. இது போன்ற நிறைய விசயங்கள் விடுதலையால் சாத்திய மாகி இருக்கிறது.


நுழைவுத் தேர்வு


மாணவர்களுக்கு நுழைவுத்தேர்வு வரும்போது எனக்கு நன்றாக நினைவிருக்கிறது.. அப்போது நுழைவுத்தேர்வு குறித்து மாணவர்கள் நுழைவுத்தேர்வு வராது, அது கேன்சல் ஆகப் போகிறது என்று ஒரு செய்தி வந்திருக்கிறதே என்று கேட்டார்கள். அதற்கு விடுதலை எல்லாம் ஒரு பத்திரிகையா? அது சொல்வ தெல்லாம் உண்மையா என்று திருப்பிக்கேட்டார்கள்.


அடுத்த நாள் அது குறித்த அறிவிப்பு வெளிவந்தவுடன் அவர் வந்து மன்னிப்புக் கேட்டு, அடுத்த நாள் முதல் 'விடுதலை' நாளிதழ் வாங்கத் துவங்கினார் என்பது வரலாறு. இது மாதிரி பல்வேறு சுவாரசியமான விசயங்கள் நடந்திருக்கின்றன.


2009-ஆம் ஆண்டு வாகைசூட வாரீர் என்றொரு நிகழ்ச்சி நடத்தினோம். அப்போது விடுதலை நாளிதழில் இந்த நிகழ்ச்சி எங்கெங்கெல்லாம் நடக்கப் போகிறது என்ற செய்தியோடு அது ஏறத்தாழ அது 50-ஆயிரம் மாணவர்களுக்குப் போய்ச் சேரும் அளவிற்கு ஓர் ஏற்பாட்டையும் செய்தோம். அவ்வாறு செய்யும் போது ஒரு டேட்டா பேசிலிருந்து நம்முடன் இணைந்து செயல் பட்ட ஒரு நிறுவனம் கொடுத்த பல முகவரிகளுக்கும் 'விடுதலை‘ போய்ச் சேர்ந்தது. அப்போது விடுதலைப் போய்ச் சேர்ந்த அன்று மாலையே எங்களுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. என்ன ஏது என்று விசாரித்தோம்.


நம்முடைய எதிரிகள்


எதிர்முனையில் பேசியவர் "யார் எங்கள் வீட்டுக்கு 'விடுதலை‘யை அனுப்பியது? நான் எவ்வளவு பாதுகாப்பாக என்னுடைய பிள்ளையை வளர்த்துக் கொண்டிருந்தேன்? விடுதலையை எங்கள் வீட்டுக்கு அனுப்பி வைத்து எங்கள் வீட்டுப் பிள்ளைகளை எல்லாம் படிக்க வைத்துக் கெடுக்கிறீர் களே!" என்று ஆதங்கப் பட்டார். அவர் பார்ப்பனர் என்பதும், அவர்களால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்பதும் பின்னர் தெரிய வந்தது. அப்படியென்றால் நம்முடைய எதிரிகள் 'விடுதலை‘யையும், நம்மையும் எப்படிப் பார்க்கிறார்கள் என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.


இப்போதுகூட மீண்டும் குலக்கல்வியைக் கொண்டுவர புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் ஒரு 70-பக்க திட்ட அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்கள் என்று செய்தி வந்திருக் கிறது. அது பற்றியும் 'விடுதலை‘யில் விரிவான செய்திகள் வெளி வரும். நீங்கள் அனைவரும் அதனைப் பகிர்ந்து கொள்ளுங்கள். இந்த கரோனா காலத்திலேயே அரசு பல்வேறு சமூகத்திற்கு ஒவ்வாத திட்டங்களைச் செயல் படுத்த நினைக்கிறது.


குலக்கல்வி எதிர்ப்புப் படை


இராஜாஜி குலக்கல்வித் திட்டத்தை எடுத்து வந்த காலக்கட்டத்தில் நாகப்பட்டினத்தில் இரண்டு நாள் மாநாடு நடந்தது. 27, 28- ஆகிய இரு நாட்கள் மாநாடு நடந்திருந்த வேளையில் 29-ஆம் தேதி குலக்கல்வி எதிர்ப்புப்படை என்றொரு அமைப்பை - 24-பேர்கள் உறுப்பினர்களாகக் கொண்ட படை நீடாமங்கலம் ஆறுமுகம் தலைமையில் ஏற்படுத்தப் பட்டது. அப்போது அதில் இருந்த 25-பேர் கொண்ட முழுவாக சென்னையை நோக்கிய ஒரு நடைப்பயணம் தொடங்கியது. 29-ஆம் தேதி தொடங்கி தொடர்ந்து சென்று கொண்டிருந்தனர். ஒன்றாம் தேதியன்று அப்போது முதலமைச்சராக இருந்த இராஜாஜி அவர்கள் தனது பதவியை விட்டு விலகினார். அதை பத்தாம் தேதி ஏற்றுக் கொண்டார்கள். 14-ஆம் தேதி காமராஜர் அவர்களை முதலமைச்சராக அறிவித்தார்கள். அவரும் பொறுப்பேற்றுக் கொண்டார்.


விரைவில் நல்ல செய்தி


நாகப்பட்டினத்தில் இருந்து பேரணியாகப் புறப்பட்ட நம்முடைய தோழர்களும் 14-ஆம் தேதி சென்னை திருவல் லிக்கேணியை வந்தடைந்தார்கள். 15-ஆம் தேதியே முதலமைச் சரைச் சந்திக்கும் வாய்ப்பும் கிடைத்தது. அப்போதுகூட அந்தத் தோழர்களிடம் தந்தை பெரியார், எல்லோரும் ஏமாந்து விட்டீர்களா என்று கேட்டாராம். ஆனால் காமராஜர் அவர்கள் விரைவில் நல்ல சேதி கிடைக்கும் என்றாராம். அதே நேரத்தில் குலக்கல்வித் திட்டத்தைக் கைவிடும் அறிவிப்பையும் விரைந்து வெளியிட்டாராம். இதெல்லாம் விடுதலை ஏட்டுக்கான சிறப்புகள் என்பதை அனைவரும் உணரவேண்டும். இது போன்ற பிரச்சினைகளை விடுதலை ஏட்டில் தொடர்ந்து எழுதி வந்த காரணங்களால் இன்று பல்வேறு மாறுதல்களை நாம் சந்தித்து சாதித்து வந்திருக்கிறோம். தொடர்ந்தும் விடுதலை மூலம் அந்தப் பணிகளைத்தான் செய்தும் வருகிறோம்.


'விடுதலை' விளைச்சல்


'விடுதலை‘யை மக்களிடம் கொண்டு சென்று சேர்க்கும் பணியில் இதற்கு முன் எடுத்த முன் முயற்சிகளைவிடவும் குறிப்பாக இந்த கரோனா ஊடரங்கு காலத்தில் நமது தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் உருவாக்கிய 'விடுதலை‘ விளைச்சல் என்ற அறிவிப்பு விடுதலையை நாம் இன்னும் எப்படி அதிக நபர்களுக்கு எடுத்துச் செல்வது, எல்லா பத்திரிகை யும் எப்படியென்றால் 'சப்ஸ்கிரிப்சன்' என்ற முறையில் சந்தாதாரர்களை உருவாக்கும் முயற்சியில் இருக்கும்போது நம்முடைய ஆசிரியர் அவர்கள் 'விடுதலை‘ ஏட்டினை, பிற இதழ்களை இந்த நேரத்தில் எல்லோரும் படிக்க வசதியாக பிடிஎப் வடிவத்தில் வாட்ஸ்அப் மூலம் கொண்டு செல்ல ஏற்பாடு கள் செய்யும்படி சொன்னார்கள்.


பிராட்காஸ்டிங் முறை


அப்படி பலருக்கும் பகிர்வு செய்யும்போது என்ன பார்த்தோம் என்றால் ஒருவர் பலருக்கு அனுப்பும் சூழ்நிலையில் பலர் அனுப்பும் பிடிஎப் வடிவங்கள் ஒரே நபருக்கு வந்து சேரும் நிலையும் ஏற்பட்டது. அப்போது வந்த கருத்துகளின் அடிப்படையில்தான் சில மாறுதல்கள் செய்து டேட்டா பேசில் ஒரு பார்ம் ஒன்று வைத்து அதைப் பூர்த்தி செய்து அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப் பட்டது. அது மிகவும் எளிமையானது ஆகும். அது பற்றி ஒரு தோழர் சொல்லும்போது பிராட் காஸ்டிங் முறையில் அனுப்பும்போது 234-பேருக்கு அனுப்புகிறோம் என்றார். அது உண்மைதான். மிக்க மகிழ்ச்சி. அவர்களுக் கெல்லாம் எனது பாராட்டுகள்.


குறிப்பாக மாணவர்கள். விடுதலை இணைப்புக்குச் சென்று அதில் கீழே ஒரு பட்டன் இருக்கும். அந்தப் பட்டனை அழுத்தினால் நெட்டுக்குப் போய் உங்களது பெயர் கேட்கும். அடுத்து உங்களது தொலைபேசி எண், உங்களது கழக மாவட்டத்தின் பெயர், முகவரியெல்லாம் கேட்கும். அதைத் தேர்வு செய்து பதிவு செய்வது மிகவும் சுலபமாக இருக்கும். அடுத்து கழகப் பொறுப்பாளரா, கழகத் தோழரா, பெரியார் பற்றாளரா, பகுத்தறிவாளரா, விடுதலை வாசகரா என்று கேட்கப் பட்டிருக்கும். அதில் நீங்கள் எதையாவது ஒன்றைத் தேர்வு செய்யலாம். இது உங்களைப் பற்றியான ஒரு சிறு குறிப்பு.


இதற்குப் பிறகு ஒரு பகுதி ஒதுக்கப் பட்டிருக்கும். அதில் நீங்கள் யாருக்கு அனுப்புகிறீர்கள்? அவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதையும்கூடத் தேர்வு செய்து பதிவு செய்யலாம். அதில் பத்து பேர்வரை சேர்ப்பதற்கு ஒதுக்கப் பட்டிருக்கும். இன்னும் நபர்களைக் குறிப்பிட வேண்டும். அந்தப் பட்டியலையும் இதிலேயே சேர்க்க வேண்டும் என்றால் ஆட் மோர் என்று இருக்கும். அதை கிளிக் செய்து அதில் பெயர்களை இணைத்தும் சப்மிட் செய்யலாம். அல்லது இருப்பவர்களை சப்மிட் செய்யலாம். இது அனைத்துமே மிகவும் எளிமையாக இருக்கும். அதே நேரத்தில் யார்யாரைச் சேர்க்கிறீர்களோ அவர்களின் பெயர்களை தட்டச்சு செய்வதற்கு மட்டும் நேரம் பிடிக்கும். இதற்கும் அதிகபட்சம் 15-நிமிடங்கள் பிடிக்கும். இதில் 200-பேரைச் சேர்க்க வேண்டும் என்றாலும் இயலும். அதற்குச் செய்ய வேண்டியது, நீங்கள் யாரைச் சேர்க்கிறீர்களோ அவர்களது பெயர்களை நீங்கள் முதலிலேயே ஒரு தாளில் எழுதி வைத்துக் கொள்வது அவசியம்.


வகைப்படுத்தும் வசதி


ஆசிரியர் அவர்களது இந்தத் திட்டம் அடுத்த தலை முறைக்கும், உலகின் பல்வேறு நாடுகளுக்கும் 'விடுதலை'யை கொண்டு சென்று சேர்க்கும் அருமையானதொரு திட்டமாகும். இதை நீங்கள் நன்றாகப் புரிந்து கொண்டு நிறையச் செய்திருக் கிறீர்கள். உங்கள் அனைவருக்கும் எனது பாராட்டுகளும் வாழ்த்துகளும். ஒருவருக்கே பலரும் அனுப்பும் முறையைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் இந்த ஏற்பாடு என்பதோடு நீங்கள் யார்யாருக்கெல்லாம் அனுப்பு கிறீர்கள் என்பதையும், அவர்களுக்கு மற்றவர்கள் அனுப்புவ தைக் கண்டறிந்து அதைத் தடுத்து இன்னாரின்னார் இன்னா ரின்னாருக்கு மட்டும் அனுப்புங்கள் என்று வகைப் படுத்தவும் வசதியாக இருக்கும் என்பதற்காகத்தான் இந்த ஏற்பாடு. அவ்வாறு வகைப்படுத்தப் பட்ட பிறகு நீங்கள், உங்கள் மூலம் யார் யாருக்கெல்லாம் விடுதலை போய்ச் சேர்கிறது என்ற பட்டியலையும் உங்களுக்கே அனுப்பி வைப்போம். இது பலருக்கும் விடுதலை போய்ச் சேர்வதற்கும், ஒருவருக்கே பலரும் அனுப்பும் நிலையைத் தவிர்க்கவும் மட்டுமே!


இதில் மிகவும் பாராட்டத்தக்க வகையில், அதிலும் நாங்கள் எதிர்பார்க்காத வகையில் நம் தோழர்கள் முயற்சியில் ஆங் காங்கே கூட்டங்கள் நடத்தி விடுதலை விளைச்சல் திட்டத்தின் பங்களிப்பாக ஒவ்வொருவரும் அறிவித்து 26-மாவட்டங்களில் 286-தோழர்கள் ரூபாய் 4-லட்சத்து 67-ஆயிரத்து அய்நூறை இதுவரை அறிவித்திருக்கிறார்கள். உங்கள் அனைவருக்கும் நாங்கள் கடமைப்பட்டிருக்கிறோம். ஆசிரியர் அவர்கள் சொல் வதைப் போல இது நன்றி சொல்ல வேண்டிய ஒரு நேரம்.


'விடுதலை‘யைப் பொறுத்த மட்டிலும் மற்ற பத்திரிகையைப் போல அல்லாமல் தோழர்கள் இணைந்து நடத்தக் கூடிய ஒரு பத்திரிகையாகும். இதில் உள்ள பொதுவான தளத்தைவிடவும் வெளியில் பல தளங்களில் உள்ள வீடியோக்கள், கருத்துகளை நீங்கள் காண நேரிடும். அப்போது அது குறித்த கருத்துகளை நீங்கள் ஏற்புடையதாகவோ, மாறுபட்ட கருத்தாக, பதிலாக, பதிவிட வேண்டிய நிலை வந்தால் பதிவிடலாம். ஆனால் 'விடுதலை'யின் கருத்துகளுக்கும், கொள்கைக்கும் மாறுபடாமல், வார்த்தைக்கு வார்த்தை கவனமாக, சொற்கள் பதிவிட வேண் டும். சில இடங்களில் பிரச்சினைகள் வருகின்றன. அனைத்துக்கும் விடுதலை வழிகாட்டும் என்பது வேறு. ஆனால் நீங்கள் செய்யும் ஒவ்வொரு விசயத்தையும் எதிரிகள் கண்காணித்துக் கொண்டே வருகிறார்கள். அதற்கேற்றவாறு சமூகத்தில் உங்களது பங்களிப் புகள் இருந்து கொண்டிருக்க வேண்டும்.


கரோனா காலத்திலும் 'விடுதலை‘ நாளிதழின் பணியாளர்கள் எந்தவொரு சலிப்புமின்றி தக்க பாதுகாப்புடன் வந்து பணி செய்து கொண்டிருக்கிறார்கள். அதனால் விடுதலை அலுவலகம் தொடர்ந்து செயல் பட்டு வருகிறது. இப்போது பக்கங்களை தவிர்க்க முடியாமல் குறைக்கப் பட்டாலும் நிலை மாறி மறுபடியும் பக்கங்கள் அதிகரித்து முழுமையாக வரும்.


பொருளாதாரம் முக்கியம்


வரும் காலங்களில் புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக மாணவ-மாணவியர் போராடும் நிலை ஏற்படும். கரோனா காலத்தைப் பயன் படுத்திக் கொண்டு மத்திய-மாநில அரசுகள் தங்களது மக்கள் விரோதப் போக்கையும் திட்டங்களையும் திணிக்க முற்படுகிறார்கள். கரோனாவிற்கு எதிராக நாம் கரோனா காலத்தில் போராடுவதைப் போலவே குலக்கல்வித் திட்டத்தின் மறு உருவான புதிய கல்விக் கொள்கைக்கு எதிராகவும் தன்முனைப்போடு போராட வேண்டும். அந்தப் பணியின் பொறுப்புகள் திராவிடர் மாணவர் கழகத்தினருக்கு முக்கியமாக உண்டு. அதே போல்தான் 'விடுதலை‘ பரப்பு வேலைகளை யும் மாணவர் கழகத்தினர் செய்ய வேண்டும். அதற்கு பணம் பொருளாதாரம் ஒரு முக்கியக் காரணமாக இருக்காது என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.


கல்வியைப் பொறுத்த வரைக்கும் எதிர்ப்பார்ப்பது செப்டம் பர் மாதம்தான் கல்லூரிகள் திறக்கப்படும். பள்ளிகள் ஆகஸ்ட் 15-க்கு மேல்தான் திறக்கப் படும் என்ற வாய்ப்புகள் இருந்தாலும் அரசு அக்டோபர் வரை நீட்டிப்பதற்கான வாய்ப்பு களும் உண்டு. கரோனா தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இவ்வேளையில் நீங்கள் அனை வரும் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும்.


'விடுதலை‘யைப் பரப்பும் பணியில் மாணவர் கழகத்தினர் ஈடுபட்டாலும் உங்களைப் பின்தொடர்ந்து மற்ற அணியினரும் வருவார்கள், உங்களுக்கு உதவிகள் செய்வார்கள். இப்போ திருக்கும் பலரும், இன்னும் சொல்லப் போனால் கருப்புச் சட்டை போட்டுக் கொண்டு இயக்கத்திற்கு வந்த பலரும் 'விடுதலை‘யைப் படித்து விட்டுத்தான் வந்ததாகச் சொல்லுகிறார்கள். காணொலிக் கூட்டங்களில் பேசும் தோழர்களும் அதைத்தான் சொல்லியிருக் கிறார்கள். அனைவருக்கும் வாழ்த்துகள்.


இவ்வாறு கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் உரையாற்றினார்.


No comments:

Post a Comment