நடிகர் சிவக்குமார் தவறாகப் பேசினாரா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, June 11, 2020

நடிகர் சிவக்குமார் தவறாகப் பேசினாரா

பிரபல திரைப்படக் கலைஞரும், சிறந்த ஓவியருமான சிவக்குமார் கீழ்க்கண்டவாறு பேசினார்:


"நான் கோயில்களுக்கு அதிகமாக போகாததற்குக் காரணம் சொல்லிவிடுகிறேன். கோயில்களில் இன்னும் தீண்டாமை இருக்கிறது. ஏழை, பணக்காரன் பாகுபாடுகள் கோயிலில் இருக் கின்றன. கி.பி.1,006-லிருந்து 1,010 வரை தஞ்சாவூர் கோயிலைக் கட்டினார்கள். இப்பொழுது ஆயிரமாவது விழா கொண்டாடிய கோயில். அந்தக் கோயிலைக்கட்ட ஆயிரக்கணக்கான சிற்பி களும், ஆயிரக்கணக்கான கொத்தனார்களும், சித்தாள்களும் வேலை பார்த்திருப்பார்கள். இரண்டாவது தலைமுறையும் வேலை பார்த்திருக்கிறது. அந்தக் கோயிலை ஆறு வருஷம் கட்டியிருக்கிறார்கள்.


இரவு - பகலாக கோயிலைக் கட்டி முடிக்கும்போது ஒரு சிற்பி 15 அடிக்கு 15 அடி உயரம் உள்ள ஒரு கல்லை எடுத்து வைத்து, அந்தக் கல்லின்மேல் ஏறி உட்கார்ந்துகொண்டு கொத்து கொத்துன்னு கொத்தி அதை சிவலிங்கம் ஆக்கி யிருக்கிறான்.  நல்லா ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள், அந்த 15 அடி கல்லின்மேல் ஏறி குத்தவைச்சி உட்கார்ந்து கொண்டு கொத்து கொத்தென்று கொத்தி அதை மொழுக்கி சிவலிங்கம் ஆக்கியிருக்கிறான். இப்ப சிவலிங்கம் ஆக்கி உள்ளே வச்சாச்சு, பிரதிஷ்டை பண்ணியாச்சி, கும்பாபிஷேகம் பண்ணியாச்சி.


கும்பாபிஷேகம் செய்து முடிந்தால், மேலே ஏறி உட்கார்ந்து கொத்தினானே அந்த சிற்பி சிவலிங்கத்தையேத் தொட முடியாது. அந்த சித்தாள்களும், கொத்தனார்களும் கோயிலுக்குள்ளே போய் சாமி கும்பிட முடியாது.


இதை நான் தவறாக சொல்வதாக நினைக்காதீர்கள். இதை செம்மொழி மாநாட்டில் நான் பேசும்போது, தஞ்சாவூரில் வாழ்ந்துகொண்டிருக்கிற அந்த சிவலிங்கத்தைச் செய்த 12ஆவது தலைமுறையைச் சேர்ந்த ஒரு சிற்பி போன் பண்ணினான். "அய்யா, இன்னும் அதே நிலைமைதான்.  நான் 12ஆவது தலைமுறையைச் சேர்ந்தவன். எங்கள் பரம்பரை யைச் சேர்ந்தவர்கள்தான் அந்த சிலையை, சிவலிங்கத்தைச் செய்தார்கள். நாங்கள் கோயிலுக்குள் போவதற்கு, இன்னமும் அனுமதிப்பதில்லை" என்றார்.


யோசனை பண்ணுங்க, யோசனை பண்ணுங்க. இன்னும் தீண்டாமை கோயிலுக்குள் இருக்கிறது. திருப்பதி - உலகத்தி லேயே பெரிய சாமி, கோடிகளைக் கொட்டக்கூடிய சாமி என்று சொல்றீங்க. காட்பாடியில் இறங்கினான் ஒரு பக்தன். 48 நாள் விரதம் இருந்து காட்பாடியில் இருந்து நடந்துபோனான். வெறும் பச்சைத் தண்ணி குடிச்சிட்டு, நடந்துபோனான். உற்சவம் நடு உற்சவம் டைம்.


அங்கே பிளேக், காலரா வரும்னு சொல்லிட்டு தடுப்பூசி போடுகிறார்கள். அவன் போகிற வழியில் தடுப்பூசி போடு கிறார்கள். அதை சாவு ஊசின்னு பயந்துகிட்டு, காட்டுக்குள்ளே புகுந்து பாம்பு, தேள் கடிச்சா பரவாயில்லைன்னு காட்டுக்குள்ளே புதருக்குள்ளே புகுந்து புகுந்து போகிறான்.


மேலே போனால், கோயிலைச் சுற்றி விசேஷ நாளில் பாம்பு கூடைக்குள் சுற்றிக்கொண்டிருக்கிற மாதிரி எட்டு சுற்று க்யூ நிற்கிறது. இந்த எட்டு சுற்றில் இன்னைக்கு காலைல நின்னு, கெரோசின் அடுப்பில் சப்பாத்தி சூடுபண்ணிச் சாப்பிட்டால், நாலாவது நாள் காலையில்தான் கோயிலுக்குள்ளே போக முடியும், இந்த ஏழை, உண்மையான பக்தன்.


உள்ளே போனால், இந்த சைசில் மூங்கில் குச்சி வச்சிருக் கிறான், ஜரி கண்டி, ஜரி கண்டின்னு அடிச்சி அனுப்புறானுங்க.


ஆனால், ஒரு கோடீசுவரன், பொண்டாட்டிக்குத் தெரியா மல், கொஞ்சும் குமரியைக் கூட்டிகிட்டுப் போய், கெஸ்ட் ஹவுசில் தங்கிவிட்டு, விடிய விடிய தண்ணி அடிச்சுட்டு, சந்தோஷமாய் இருந்துட்டு, குளிக்காமல் காலை நாலரை மணிக்குப் போனால் கும்பம் வைத்து மரியாதை செய்கிறார்கள். (கைதட்டல்)  நான் கண்ணால பார்த்ததைச் சொல்றேன். சும்மா புருடா எல்லாம் விட மாட்டேன்."


நடிகர் சிவக்குமார் பேசியுள்ளதில் காணப்படும் குற்றம், தவறு என்ன என்பதை முதலில் தெரிவிக்க வேண்டும்.


உண்மை சுடத்தான் செய்யும் என்ற சூழலுக்கு ஏற்ப இந்த உண்மைகளைப் போட்டு உடைத்த நடிகர் சிவக்குமார் மீது திருப்பதி தேவஸ்தானம் வழக்குத் தொடர்ந்துள்ளது.


இந்தத் தகவல் வெளியானது முதல் பொது மக்களின் பேராதரவு சிவக்குமார் பக்கம் பெருகி ஓடுகிறது. திருப்பதி தேவஸ்தானத்தின் மீது கண்டனக் கணைகள் பறக்கின்றன.


ஏற்கெனவே திருப்பதி கோயிலில் நடைபெற்ற ஊழல்கள் நீதிமன்றம் வரை சிரிக்கவில்லையா? ஏழுமலையான் உருவம் பொறித்த தங்க டாலர் விற்பனையில் மோசடி நடைபெறவில் லையா? இதுகுறித்து தேவஸ்தான கமிட்டி கூறியது என்ன?


“ஒவ்வொரு வருஷமும், ஏழுமலையானுக்குக் காணிக்கை யாக வந்து குவியும் தங்க நகைகளை உருக்கி, இரண்டு, அய்ந்து, பத்து கிராமில் ஏழுமலையான் உருவம் பொறித்த தங்க டாலர்களும் விற்பனை செய்யப்படுவது வழக்கம். 2006 ஆம் ஆண்டு 300 தங்க டாலர்களை உரிய ரசீது இல்லாமல் மோசடி செய்ததாக விற்பனைப் பிரிவில் கே.வெங்கடாசலபதி மீது புகார் எழுந்தது (பெயரும் பொருத்தமானதே!) 2001-லிருந்து 2006 வரை இந்த மோசடி நடந்துள்ளதாக" தெரிவிக் கப்பட்டதே!


மன்னன் கிருஷ்ணதேவராயர் அளித்த நகைகளைக் காண வில்லை என்று ஏடுகளில் செய்திகள் வெளிவரவில்லையா?


நடிகர் சிவக்குமார் ஒன்றும் நாத்திகர் அல்லர். நம்பிக்கையா ளர்தான். அவர் சொல்லுவதைக் கவனித்துத் தவறுகளைத் திருத்திக் கொள்ள வேண்டுமே தவிர வழக்கு - நீதிமன்றம் என்று சென்றால் மேலும் மேலும் ஏழுமலையான் கோயிலைப் பற்றிய விவகாரங்கள் சந்திக்கு வரும் - எச்சரிக்கை!


No comments:

Post a Comment