விவசாயத்தை சீர்திருத்தவா? சீர்குலைக்கவா?
அண்மையில் மத்திய அரசு வெளியிட்ட விவசாயம் சார்ந்த அறிவிப்புகள் நிவாரண திட்டமிடல் ஏது மின்றி நடைமுறை பற்றிய புரிதல் இல்லாமல் அறி விக்கப்பட்டுள்ளது வெளிப்படையாகவே தெரிகிறது.
விவசாயம் என்பது பிற துறைகளைப் போன்று அனைத்து நிலப்பரப்புகளுக்குமான பொதுத் தன்மை உடையது அல்ல. விவசாயச் செயல் பாடுகள் என்பது பருவ கால அடிப்படையில் நடைபெற்று வருவது. பருவ காலம், மழைப் பொழிவு என்பது நாடு முழுவதும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. நாட்டின் ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொருவிதமான பருவநிலை நிலவி வருகிறது. எனவே பருவ நிலையின் பாதிப்பில் நடைபெற்று வரும் விவசாயத் தொழிலானது நாடு முழுவதும் ஒரே மாதிரியாக இருப்பதற்கு வாய்ப்பே இல்லை. இந்த அடிப்படை உண்மையினைப் புரிந்து கொண்டு வெளிவந்தவையாக மத்திய அரசின் அறிவிப்புகள் அமையவில்லை.
விவசாய வளர்ச்சிக்கான திட்டமிடலும், செயல்பாடு களும் அரசு அதிகாரம் பரவலாக்கப்படும் (decentralisation) நிலையில்தான் உறுதிப்படும்; உண்மையாகும். மத்தி யில் ஆர்.எஸ்.எஸ்.-இந்துத் துவ சித்தாந்த கருத்தியலுடனும் அமைப்பின் பின்புலத்துடனும் ஆடசிக்கு வந்த பா.ஜ.க.வின் அணுகுமுறை என்பது ஆரம்பத்திலிருந்தே அதிகாரக் குவியல்தான். மாநிலங்களின் அதிகார வரம்பில் உள்ள துறைகளையும், மத்திய மாநில அரசுகள் இணக்கம் கண்டு ஆளுமை செய்திடும் ஒத்திசைவுப் பட்டியலில் உள்ள துறைகளையும், இன்றைய மத்திய பா.ஜ.க. அரசானது அனைத்தும் மத்திய அரசின் அதிகார வரம்புப் பட்டியலில் உள்ளது போல கருதி அதிகாரம் செய்து வருகிறது. அதைப் போலவே கரோனா கால நிவாரண அறி விப்புகளும், முடுக்கிவிடும் (stimulus) அறிவிப் புகளும் உள்ளன.
விவசாயத் துறை சார்ந்த மத்திய அரசின் அறிவிப்பு களும் அந்த போக்கில், அதிகாரக் குவியலை ஊக்குவிக்கும் நோக்கில் அமைந்துள்ளன. ‘அடிப்படைக் கோணல் அனைத் திலும் கோணல்’ என்ற நடைமுறைக்குப் பிரதிபலிப்பாக விவசாயத் துறை சார்ந்த சீர்திருத்த அறிவிப்புகள் வெளி வந்துள்ளன. முதலில் விவசாய வளர்ச்சி என்பது, விவசாயப் பொருள்களை உற்பத்தி செய்திடும் விவசாயிகளின் மேம்பாடு, விவசாயத் தொழிலுக்கு அடிப்படையான விவசாயத் தொழிலாளர்களின் மேம்பாடு என்ற இரு நிலைப்பட்டதாகும். இப் பொழுது வெளிவந்துள்ள சீர்திருத்த நடவடிக் கைகளில் விவசாயத் தொழிலாளர்களின் மேம் பாட்டிற்கு தனிப்பட்ட நடவடிக்கைகள் ஏதும் இல்லை. விவசாயப் பொருள்களை உற்பத்தி செய்திடும் விவசாயிகளுக்கான சீர்திருத்தமாக அறிவிக்கப்பட்டவைகள் எவை? இரண்டு அவசரச் சட்டங்கள் என விவசாய சீர்திருத்த நடவடிக்கைகளாக மத்திய அரசு அறிவித்துள்ளது.’
மாநிலங்களுக்கிடையே தடையில்லாமல் விவசாய விளைபொருளை விற்பனைக்கு கொண்டு செல்ல புதிய அவசர சட்டம்
விவசாயிகளின் இன்னல்களை மேலும் அதிகப்படுத்தும் விதமாக பிற மாநிலங்களுக்கு விளை பொருள்களை விற்பனை செய்வதில் உள்ள தடங்கல் நீக்கப்பட்ட வேளாண் உற்பத்திப் பொருட்கள் வணிக ஊக்குவிப்பு அவசரச் சட்டம் 2020 (Farming Produce Trade and Commerce (Promotion and Facilitation) Ordinance, 2020) ஏதோ விவசாயிகளின் விளை பொருளை போட்டி போட்டு வாங்குவதற்கு வியாபாரிகள் காத்திருப்பதுபோதிலும், வெளி மாநிலத்திற்கு கொண்டு செல்லும் தடை நீக்கப்பட்டால் மேலும் போட்டி அதிகப்படும்; விவசாயிக்கு கூடுதல் விலை கிடைக்கும் என கற்பிக்கப்படுகிறது. எதார்த்தம் என்பது அதுவாக இல்லை. விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த பொருள்களுக்கு கட்டுப்படியாகும் விலையினை பேரம் பேசி விற்கும் நிலையில் இல்லை. வியாபார நுணுக்கங்கள் தெரிந்த வியாபாரிகள் நிர்ணயிக்கும் விலைக்குதான் தங்களது விலை பொருள்களை - விலை குறைவாகவே இருக்கும் நிலையி லும் விவசாயிகள் விற்கும் கட்டாயம் தற்பொழுது நிலவுகிறது. அருகில் இருக்கும் நகரங்களில் பொருள்களைக் கொண்டு சென்று விற்க முடியாத நிலையில் உள்ள விவசாயிகள் வெளி மாநிலங்களுக்குக் கொண்டு சென்று விற்க முடியுமா? மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய அவசரச் சட்டம் விவசாயி களுக்கு லாபம் தருமா - வியாபாரிகளுக்கு லாபம் தருமா - ஒன்று மட்டும் உறுதி. உள்ளூர் வியாபாரிகளின் பிடியில் சிக்கித் தவிக்கும் விவசாயிகள் வெளி மாநில வியாபாரிகளின் பிடியிலும் சிக்கித் தவிக்கும் சூழ்நிலையே உருவாகும். கொள் முதல் செய்ய வரும் வெளி மாநில வியாபாரிகள் நிர்ண யிக்கும் ‘அடி மாட்டு விலைக்கே’ விவசாயிகள் தங்களது விளைபொருளை விற்கும் சூழல் ஏற்படும். குறைந்தபட்ச ஆதரவு விலையினை முழுவதும் அளிக்க முன்வராத மத்திய அரசு, பெரிய வியாபாரிகளின் பிடியில் விவசாய விளைபொருள்களை விற்பனைச் சந்தைக்குக் கொண்டு செல்வதால் விவசாயிகளுக்கு கூடுதலாக என்ன பலன் வரப் போகிறது? நட்டம் ஏற்படும் சூழலைத்தான் மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய அவசரச் சட்டம் உருவாக்கும்.
மேலும் மாநிலங்களிடையே விவசாய விளை பொரு ளைக் கொண்டு செல்வதில் உள்ள தடை நீக்கப்படுவதால் சில நபர்கள் வாங்கிய விளைபொருளை அதிக விலைக்கு விற்பனை செய்திட பதுக்கிடவும், கள்ளச் சந்தையில் விற்கும் நிலையும் ஏற்படும். விவசாய விளைபொருள்களை வாங்கும் நுகர்வாளர்களும் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டி வரும். மத்திய அரசானது விவசாயிகளுக்கு உரிய விலை யினை அளிக்க முடியாத நிலையுடன், நுகர்வாளர்களான பொது மக்களும் அதிக விலை கொடுத்து அல்லல்படும் சூழலையும் நேர் கொள்ள வேண்டும். உற்பத்தியாளர்களான விவசாயிகளுக்கும், நுகர்வோர்களான பொது மக்களுக்கும் பயன் தராத புதிய அவசரச் சட்டத்தால் யாருக்குப் பலன் கொண்டு வரப் பார்க்கிறது. மத்திய அரசு, இதுவரை விவசாயிகளின் விளைபொருள்களை விற்பனை செய்வதில் ஓரளவிற்கு உறுதுணையாக இருக்கும் விவசாய விளை பொருள் விற்பனைக் கூடங்களின் (தமிழ்நாட்டில் மற்ற மாநிலங்களை விட விற்பனைக் கூடங்களின் (regulated markets) கட்டமைப்பும் செயல்பாடும் சிறப்பாகவே உள் ளது) பங்கினை மட்டுப்படுத்தி பலவீனமாக்கிடும் போக்கை மத்திய அரசின் புதிய அவசர சட்டம் உருவாக்கிடும் வாய்ப்பு உள்ளது.
ஒப்பந்த விவசாயத் தொழிலுக்கு புதிய அவசர சட்டம்:
சாகுபடிநில உடைமையும், தொழிலுக்கான உழைப்பும் விவசாயிகளிடம் உள்ளது. நிலத்தில் பயிர் விதைப்புக்கு முன்பே சில நிறுவனங்களும், தனியார்களும் சாகுபடி செய்திடும் விவசாயிகளுடன் ஒப்பந்தம் போட்டு, என்ன பயிர், எவ்வளவு உற்பத்தி, என்ன விலையில் விளை பொருள்களை கொள்முதல் செய்வது என அனைத்தையும் உள்ளடக்கும் வகையில் புதிய அவசரச் சட்டத்தினை விவசாயிகளுக்கான விலை உத்தரவாதம் மற்றும் சேவைகள் மீதான ஒப்பந்த பாதுகாப்பு அவசர சட்டம் 2020 The Farmers (Empowerment and Protection) Agreement on Price Assurance and Farm Services Ordinance 2020 மத்திய அரசு இயற்றி உள்ளது. மேலோட்டமாக பார்த்தால் விவசாயிகளுக்கு கட்டுப்படியாகக் கூடிய விலையில் ஒப்பந்தம் போட வாய்ப்பு உள்ளதாம். மேலும் ஒப்பந்தப்படி இன்ன பயிர் சாகுபடி செய்திட விதை, உரம், பூச்சி மருந்து ஆகிய இடு பொருள்களையும், ஒப்பந்ததாரர்களே அளித் திட வகை செய்ய வாய்ப்புள்ளது. இதன் முழுப் பயனானது அவசர சட்டத்தின் விதிகள் நடைமுறையில் யாருக்கு பயனளிக்கும் வகையில் இருக்கும் என்பதைப் பொருத்தே ஒப்பந்த அடிப்படையிலான விவசாயத்தின் வெற்றி அமையும். ஆனால் ஒரு அச்சம் கலந்த அய்யப்பாடு. ஒப்பந்ததாரர் ஒரு பக்கம் - தனி நபரான விவசாயிகள் ஒரு பக்கம் என ஒப்பந்தம் போடவுள்ள நிறுவனம் அல்லது தனியார் ஒப்பந்தம் மீறப்படும் பொழுது தனிநபரான விவசாயிகளால் சட்ட ரீதியாகப் போராட முடியாது. ஆனால் சட்ட ரீதியாக பிரச்சினைகளைக் கையாளுவது நிறுவனங்களுக்கும், தனியார்களுக்கும் ஒரு வழக்கம். ஒப்பந்த அடிப்படையில் விவசாயத் தொழில் ‘தனி நபர்’ நிலையிலிருந்து ‘நிறுவனம் அல்லது மற்றும் தனியார்மயம் என்ற நிலைக்குச் சென்று விடக் கூடாது. ஏற்றுமதி விவசாயம் என்பதாக உருவான நிறுவனங்களின் செயல்பாட்டால் விவசாயிகளுக்கு கசப்பான அனுபவங்கள் ஏராளம். சட்ட விதிகள் என்பது வலு குறைந்தவர்களுக்கு வலு சேர்க்கின்ற வகையில் வடிவமைக்க வேண்டியது மக்கள் நலம் காணும் அரசின் கடமையாகும்.
அத்தியாவசியப் பொருள்கள்
சட்டத் திருத்தம்
நிதி அமைச்சர் வெளியிட்ட அறிவிப்புகளில் ஒன்று - 1955ஆம் ஆண்டு அத்தியாவசியப் பொருள்கள் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படும் என்பதாகும். சட்டத்திருத்தம் பற்றி நிதி அமைச்சர் கூறும் காரணம் என்ன? சட்டத் திருத்தத்தின் மூலம் விவசாயிகள் தங்களது விளை பொருள்களை எந்தவித நிர்பந்தமும் இல்லாமல் விற்கலாம். இன்னாருக்குத்தான் விற்க முடியும் என்ற கட்டாயம் இல்லாமல் யாருக்கும் விற்கலா மாம், விளைபொருளுக்குக் கூடுதல் விலையும் கிடைக்கக் கூடிய வாய்ப்பும் உள்ளதாம்.
விடுதலை பெற்ற குடியரசு நாட்டில் 70 ஆண்டுகள் கடந்தும் விவசாய விளைபொருளுக்கு உரிய விலையினை வழங்கிடும் வகையில் திட்டம் எதுவும் நடைமுறைப்படுத்த வில்லை. இது ‘விவசாயமே நாட்டின் முதுகெலும்பு’ எனப் பறை சாற்றும் பாரத நாட்டுப் பெருமைக்குள் (?) ஒன்றாக நீடிக்கிறது. 2014ஆம் ஆண்டில் பா.ஜ.க. அரசு மத்திய ஆட்சிப் பொறுப்பினை ஏற்று விவசாயிகளின் வருமானத்தை 2020க்குள் இரட்டிப் பாக்கிவிடுவோம் என அறிவித்தார்கள். பின்னர் 2022 ஆண்டு என தள்ளிப் போட்டார்கள். பா,ஜ.க. அரசின் பெரிய சாதனையாக விளையும் விளை பொருளுக்கு குறைந்த பட்ச ஆதரவு விலை (minimum support price) என அறிவித்தார்கள். ஆனால் இறுதி வரை அறிவித்த குறைந்தபட்ச ஆதரவு விலை அனைவருக்கும் கிடைக்க வில்லை. ஆங்காங்கே, மாநில அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் விளைபொருள் விற்பனையகத்தில் ஒரு சில பருவங்களில் மட்டுமே அடையாளமாக அந்த விலை அளிக்கப்படுகிறது. விவசாய விளை பொருள்களில் பெரும் பகுதியினை வெளிச் சந்தையில் மண்டியில், தனியார்களிடம் (லைசன்ஸ் பெற்றவர்கள்) குறைந்தபட்ச ஆதரவு விலையினை விட குறைவாகவே விவசாயிகள் விற்கும் சூழ்நிலைதான் இப்பொழுது நீடிக்கிறது.
உணவு தானியங்கள், உணவுப் பயன்பாட்டு எண்ணெய் வித்துகள், பருப்பு வகைகள், வெங் காயம் மற்றும் உருளைக் கிழங்கு ஆகிய விவசாய விளைபொருள்கள் அத்தியாவசியப் பொருள்கள் சட்டம் 1955இன் கட்டுப்பாட்டில் .தற்சமயம் உள்ளன. இந்த சட்டத்தின்படி எந்த ஒரு வியாபாரி யும் உரிய லைசன்ஸ் இல்லாமல் விவசாயிகளி டமிருந்து விளை பொருள்களை வாங்கிவிட முடியாது. இவ்வாறு கட்டுப்பாடு உள்ள சட்ட விதி கள் இருந்தும் அண்மைக் காலத்தில் வெங்காயத் தின் விலை அபரிமிதமாக உயர்வடைந்தது. இந்த உயர்வுக்குக் காரணமாக வியாபாரிகள் பலர் மீது வழக்குகள் போடப்பட்டும் அவர்களுள் அதிகமாக யாரும் தண்டிக்கப்படவில்லை. அதிகாரம் இல்லாத சட்டத்தால் பலன் ஏதுமில்லை.
இப்பொழுது மத்திய அரசு விவசாய விளை பொருள் களை அத்தியாவசியப் பொருள்கள் சட்டத்திலிருந்து நீக்கிட திருத்தம் கொண்டு வர அமைச்சரவை முடிவு எடுத்துள்ளது. இதனால் கட்டுப்பாடு இல்லாமல் யாருக்கும் விளை பொருள்களை விவசாயிகள் விற்கலாம். இதனால் விவசாயிகளுக்குக் கூடுதல் விலை கிடைக்குமாம். விவசாய விளைபொருள்களின் விலைகளை கட்டுப்படுத்திட வல்ல சட்டம், நடைமுறையில் பலன் அளிக்காத நிலையில், சட்டத்தின் கட்டுப்பாட்டிலிருந்து விவசாய விளை பொருள்களை அரசாங்கம் விடுவித்திட முன்வந்துள்ளது. சண்டை போட விருப்பமும், தைரியமும் இல்லாதவன் சண்டை போடுவதைத் தவிர்த்திட, தான் தனது தாயிடம் சண்டை போட மாட்டேன் என சத்தியம் செய்து கொடுத்து விட்டதாகக் கூறும் வசனத்தை நினைவுபடுத்துவது போல உள்ளது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள அவசரச் சட்டம்.
விவசாய விளைபொருள்களின் கொள்முதலில் சட்டத்தை மீறிடும் வியாபாரிகளை தண்டிக்க முடியாத கையறு நிலைதான் நிலவுகிறது.
முடங்கிப் போன பொருளாதாரத்தை முடுக்கிவிட ஓட்டு மொத்தத்தில் மத்திய அரசு முடிவெடுத்துள்ள 1955ஆம் ஆண்டு அத்தியாவசியப் பொருள்கள் சட்டத் திருத்தமும், மாநிலங்களிடையிலான விவசாய விளைபொருள் விற் பனைக்கு தடை நீக்கும் புதிய அவசரச் சட்ட உருவாக்கமும் விவசாயிகளுக்கு பலன் தருவதைவிட, பளுவினை அதிகப் படுத்துவதாகவே அமையும்; விவசாயத்தை முடக்கிப் போட்டு விடும். ஒப்பந்த அடிப்படையிலான விவசாயத் தொழில் சட்ட உருவாக்கத்தில் விவசாயிகளின் நலன் காப்பாற்றப்படும் வகையில் மிகுந்த எச்சரிக்கையுடன் மத்திய அரசு செயல்படவேண்டும். மாதிரிச் சட்டத்தை உருவாக்கி, மாநில அரசிடம் வழங்கிடும் வகையில் மத்திய அரசு அறி வித்துள்ளது. நடைமுறையாக வேண்டும். மாநிலச் சூழல், மாநிலத்தில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு ஏற்ற வகையில் அந்தச் சட்டம் மாநிலங்களால் இயற்றப்பட வேண்டும்.
விவசாய வளர்ச்சிக்கான சட்டமும், திட்டமும் மய்யத்திலிருந்து மாநிலத்திற்கு என்றில்லாமல், மாநிலத்தில் உருவாகி மய்ய அரசு ஒத்துழைப்பு தருகின்ற வகையில் அமைந்திட வேண்டும். சட்ட உருவாக்கமும், திட்டமிடலும் பரவலாக்கப்படுவது (decentralisation) விவசாய வளர்ச் சிக்கு அடிப்படை என்பதை மத்திய அரசும், மாநிலங்களும் புரிந்து செயல்பட்டால் மட்டுமே விவசாயத்திலும், விவசாயி களிடமும் விடியலை ஏற்படுத்திட முடியும்!
No comments:
Post a Comment