ஆதிக்கம்
தலைவிரிக்கும்
இடமெங்கும்
ஈரோட்டுக் கதிரே, நீ
உதித்திட வேண்டும்!
எந்நாடும் உன் நாடே!
எக்குடியும் உன் குடியே !
நீங்கா
துயர் துலங்கிடவே,
அய்யா! நீ
கால் பதிக்க வேண்டும்!
சமவுரிமை நம்
உயிர்த் துடிப்பு!
அதை ஏந்த
உன்
தீப்பந்தம் வேண்டும்!
மதவெறி, ஜாதிவெறி,
இனவெறி, நிறவெறி
ஓங்கும் இடமெல்லாம்
உன்
உரைவீச்சு
அனல் பறக்க வேண்டும்!
கொடும் வெறிகள்
எரிந்து பொசுங்கிட வேண்டும்!
அறிவின் கூர்மையே!
உன்
உளியது இரவல் வேண்டும்!
எமை நசுக்கும்
ஒடுக்குமுறை, அடக்குமுறை
இரண்டையும்
பிளந்து கூறுபோட வேண்டும்!
கருப்பென்ன? சிவப்பென்ன?
உயர்வென்ன? தாழ்வென்ன?
அமைதி
வாழ்வு வேண்டும்!
அறங் கெடா
ஆட்சி வேண்டும்!
பிற குடியோடு
கூட வேண்டும்!
யாவரும் மனிதரெனும்
உணர்வு வேண்டும்!
நம்மில் நல்லுறவு வேண்டும்!
நாம்
மானுடம் போற்ற வேண்டும்!
பெரியாரே!
உன் கொள்கை
உரிமைப் போரை
வழிநடத்த வேண்டும்!
களத்தில் சாயும் மறவரை,
உன் கைத்தடி
தாங்கிட வேண்டும்!
உலகில்
எல்லைக்கோடுகள் உனக்குண்டோ?
நீ
மலைகளைப் புரட்டிய
புயலன்றோ!
வா சிங்கமே!
உன் நரம்பில்
உலகை
இறுக்கிக் கட்ட வேண்டும்!
கலகம் விழைக்கும் தீயோர்,
மூச்சுத் திணறவேண்டும்!
அவர்,
பகை முறியவேண்டும்!
நாம்
விடுதலைக் காற்றில்
உயிரைக் கலக்க வேண்டும்!
வெண்தாடி வேந்தே,
நின் தத்துவம்
எம்மை
மீட்க வேண்டும்!
- சே.குணவேந்தன்
பெங்களூர்
No comments:
Post a Comment