உள்ளிருப்பில் உலகிருக்கு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, June 13, 2020

உள்ளிருப்பில் உலகிருக்கு!


விரைந்து விரைந்து


பறந்து பறந்தோடினோம்


வலிதரும் வேகத்தடை


வைரஸ் வடிவில் வரக்கண்டோம்!


அண்டை நாடு என்கையில்


அலட்சியமே கொண்டோம்


அருகில் வந்தபோதே


அச்சம் சூழப் பெற்றோம்!


கண்களறியா நுண்மி பெருகி


கண்மூடித்தனமாய் தாக்கி


கண்ணெதிரில் மக்கள் மடிய,


ஆண்டவரை அணுகாமல் விலகி


ஆள்பவரை தொழுது வேண்டி


அடக்கமானோம் அவரவரிடத்திலே!


அலைபேசியும் தொலைக்காட்சியுமே அநாதையாகாமல் நம்மை


அருள்பாலிக்கக் கண்டோம்!


நாளது அறியவில்லை


நல்லது கெட்டது நினைப்பில்லை


நேரமென்ன கவலையில்லை


அடுக்கி வைத்த துணிமணிகள்


உடுத்திப் பார்க்கத் தோன்றவில்லை...


ஊர் பயணம் மறந்தோம்


உறவுகள் பிரிந்தோம்


கைகளே கரைய


கழுவிக் களைத்தோம்...


அடுப்பங்கரையே அன்றாட தரிசனம்


உருட்டிப் புரட்டி ஒருவாறு சமைத்தோம்


‘போதாத காலமும்' இனி காண்போம்


எதையெதையோ நினைத்தோம்...


இதை மட்டுமே பேசுகின்றோம்...


ஆசைப்பட்டு வாங்கிக் குவித்தோம்


ஆசைப்படுகிறோம் இருந்து அனுபவிக்க!


எப்படி இருந்த நாம்


இப்படி ஆகிவிட்டோம்...


உயிர் பிரிந்தாலும்


ஒப்பாரியும் இல்லை


உடனிருக்க யாருமில்லை...


எங்கே செல்லும் இப்பாதையென்று


ஏக்கப் பெருமூச்செடுக்கிறோம்!


பணக்காரன் ஏழை பாகுபாடு எங்கே...?


'பெண்' என்ற ஆணின் அகந்தை எங்கே...?


அதிகாரமும் அடக்குமுறையும் போனதெங்கே...?


உயர்ந்தவன் தாழ்ந்தவன் ஒன்றாச்சு இங்கே!


உலகமே வீடானது


கொரோனாவுக்கு முன்


(கொ. மு)


வீடே உலகமானது


கொரோனாவுக்குப் பின்


(கொ.பி)


உள்ளிருப்பில் உலகிருக்கு


உயிரினருமை உணர்ந்திருக்கு!


சத்தமில்லாமல் கொத்த வருவதை


ஒத்துழைத்து ஒழிப்பதிலே


ஒன்றுபட்டு நிற்போம்


ஒதுங்கி உள் இருப்போம்!


ஒட்டுமொத்த நாட்டையும்


கட்டுக்குள் வைத்த நோயை


வெட்டி வீழ்த்தி மானுடம்


விடுதலையாகட்டும்!


அந்நாளை எதிர்நோக்கி


அறிவியலையே நம்பி


மன அமைதி காப்போம்!


ஊரடங்கு தளர்ந்த பின்னும்,


கடைப்பிடித்த ஒழுக்க நெறிகளை


தவறாது பின்பற்றுவோம் -


மானுட சமூகம்


நலமுடன் வாழ்வே!


 


 - கவிதா,


திருப்பத்தூர் மாவட்ட மகளிரணித் தலைவர்


No comments:

Post a Comment