1. பிற்படுத்தப்பட்டோர் நல ஆய்வுக் குழுவினரிடம், ஆதி திராவிடர்களுக்கு அக்ரஹாரத்தில் சொந்த வீடு கட்டித் தந்து குடியமர்த்த வேண்டும், சட்டமன்றத்தில் 25 சதவீத இடங்களை தேர்தலின் மூலம் நிரப்பாமல், போட்டியிட்டு வரமுடியாத ஜாதிகளில் இருந்து அரசே நாமினேஷன் செய்யவேண்டும். எந்தப் பதவியிலும், எவரும் இரு முறைக்கு மேல் இருக்கக்கூடாது என்ற கருத்துகளை வெளியிட்டார். (விடுதலை 23.1.1970)
- மத்திய அமைச்சர் வி கே ஆர் வி ராவ், தான் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலுக்குச் சென்ற பொழுது, தமிழக முதல்வர் அண்ணா அவர்களை உடன் வருமாறு அழைக்க, அண்ணா மறுத்துவிட்டார் என்னும் செய்தியை வெளியிட்டு, அண்ணாவின் உறுதியைப் பாராட்டினார். (விடுதலை 20.9.1967)
- அறநிலையத்துறை பொறுப்பிலிருந்த நாவலர் நெடுஞ்செழியன், சிதம்பரம் நடராஜர் கோயிலை பார்வையிடச் சென்றபோது, தன்னிடம் வழங்கப்பட்ட திருநீற்றை எடுத்துக் கொள்ளாது தவிர்த்து விட்ட செய்தியை அறிந்த பெரியார், பலே நெடுஞ்செழியன்! பலே பலே நெடுஞ்செழியன்! எனப் பாராட்டி செய்தி வெளியிட்டார். (விடுதலை 16.4.1967)
- செக்யூலர் என்ற வார்த்தை இங்கிலீஷ் வார்த்தை! அதற்கு இங்கிலீஷ்காரன் சொல்லுகின்ற அர்த்தம் தானே சரியானது? மதச்சார்பற்ற என்றால் எல்லா மதத்தையும் அனுமதிப்பது என்றா பொருள்? ஒரு பெண் கன்னி என்றால் ஆண் சம்பந்தமே இல்லாதவள் என்பதல்ல; எல்லா ஆண்களையும் சமமாய் பார்க்கிறவள் தான் என்று அர்த்தம் சொல்வதுபோல செக்யூலர் ஸ்டேட்டுக்கு அர்த்தம் சொல்கிறார்களே! (விடுதலை 29.7.1968)
- ஒரு முறை கரந்தை இடுகாட்டிற்கு அய்யா சென்றபோது, அங்கு 'சூத்திரர்கள் இடம்' என்பதாக கல்லொன்று நட்டு வைக்கப்பட்டிருந்ததைக் கண்ணுற்று, முறையான நடவடிக்கை மேற்கொண்டு, அதனை அகற்றினார். (விடுதலை 28.3.1955)
- திருக்குறள் நூலில் 82 மூடநம்பிக்கைச் சொற்கள் இருப்பதாகப் பட்டியலிட்டுக் காட்டினார். (விடுதலை 4.10.1967)
- ஒரே நாளில் 28 நிகழ்ச்சிகளில் பங்கேற்று, கடமையாற்றினார் பெரியார். (விடுதலை 29.8. 1958)
- காரைக்குடியில் 19. 3.1972 அன்றிரவு முனைவர் பெ.ஜெகதீசன் அவர்களின் படைப்பாகிய, 'தீ பரவட்டும்' என்னும் கொள்கை விளக்க நாடகம், கழக முன்னோடிகளால் நடிக்கப்பட்ட போது, திறந்தவெளியில் பொதுமக்களிடையே மூன்று மணிநேரம் அமர்ந்து, அதைக் கண்டு சுவைத்தார் பெரியார் (விடுதலை 24.4.1972)
- காஞ்சிபுரத்தில் தந்தை பெரியாரின் மேற்பார்வையில், மூன்று மணி நேரத்திற்கும் அதிகமாக நீடித்த பேரறிஞர் அண்ணாவின் படைப்பாகிய ‘சந்திரோதயம்’ நாடக ஒத்திகையில் அண்ணா, ஈழத்தடிகள் முதலியோர் பங்குபெற்றனர். (விடுதலை 27.4.1943)
No comments:
Post a Comment