வங்கிக் கடன் பெற பரிசீலனைக் கமிட்டியா, ஆளும் கட்சி என்பதால் பா.ஜ.க.வை அனுமதிப்பதா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, June 25, 2020

வங்கிக் கடன் பெற பரிசீலனைக் கமிட்டியா, ஆளும் கட்சி என்பதால் பா.ஜ.க.வை அனுமதிப்பதா

வங்கிக் கடன் பெற பரிசீலனைக் கமிட்டியா?


ஆளும் கட்சி என்பதால் பா.ஜ.க.வை அனுமதிப்பதா?


வங்கி நெறிமுறைக்குப் புறம்பல்லவா? 


தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை (25/06/2020)



பொதுத்துறை வங்கிகளில் மத்திய அரசு அறிவித்துள்ள பல்வேறு கடனுதவித் திட்டங்களில் பயன்பெற விண்ணப்பங்களைப் பெற்று, பரிசீலனை செய்து அனுப்பிட தமிழக பா.ஜ.க. அமைத்துள்ள கமிட்டியைக் கண்டித்தும், வங்கி நெறிமுறைக்கு எதிராக ஒரு அரசியல் கட்சியின் செயலை ரிசர்வ் வங்கி அனுமதிப்பது முறையா என வினா எழுப்பியும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அறிக்கை விடுத்துள்ளார்.


அறிக்கை வருமாறு:


22.06.2020 அன்று ‘இந்து’ ஆங்கில நாளேட்டில் ஒரு செய்தி வெளி வந்துள்ளது. மத்திய அரசு அறிவித்துள்ள, வங்கிகள் வழங்க வேண்டிய கடன் திட்டங்களுக்கு, விண்ணப்பங்கள் பெறப்பட்டு அதனை பரிசீலனை செய்து வங்கிகளுக்கு மொத்த மாக அனுப்பிட தமிழக பா.ஜ.க. ஒரு கமிட்டியை அமைத்துள்ளதாகவும் அதில் தமிழக பா.ஜ.க.வின் மாநிலத் தலைவரும், மாநிலப் பொருளாளரும் அங்கம் வகிப்பார்கள் என்றும் இதற்காக பா.ஜ.க. வலைத்தளம் ஒன்றை உருவாக்கியுள்ளதாகவும் இதுவரை 20,000 விண்ணப்பங்கள் வந்து சேர்ந்துள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.


ரிசர்வ் வங்கி நெறிமுறை -


நடைமுறை என்ன?


பொதுத்துறை வங்கிகள், மத்திய அரசின் நிதிச்சேவைத் துறையின் நேரடிக் கட்டுப்பாட்டிலும், ரிசர்வ் வங்கி வகுத்துள்ள நெறிமுறைகளின் படியும் செயல்பட்டு வருகின்றவையாகும். அரசு அளித்திடும் மானியத்துடன் கூடிய கடன் உதவித் திட்டங்களில், விண்ணப்பதாரர்களின் மானியம் பெறுகின்ற தகுதியை மட்டும் உறுதி செய்து கொண்டு, அந்தந்த துறைகள் தங்களால் பெறப்பட்ட விண்ணப்பங்களை வங்கிகளுக்கு அனுப்புவது நடைமுறை வாடிக்கை.


மானியம் தவிர்த்த பிற வகை கடன் உதவி பெறுவதற்கு அரசுத் துறைகளே கூட விண்ணப்பங் களைப் பெற்று வங்கிகளுக்கு அனுப்ப முடியாது. உரிய விண்ணப்பதாரர்களிடமிருந்து நேரடி யாகக் கடன் விண்ணப்பங்களைப் பெற்று வங்கி விதிமுறைகளுக்கு உட்பட்டு கடன் வழங்கி டுவதுதான் வங்கிகளின் பணியாகும்.


இடைத்தரகர்களை அனுமதிப்பது சட்டவிரோதமல்லவா?


இடைத்தரகர்களிடமிருந்து கடன் விண்ணப் பங்கள் பெறக் கூடாது என கடுமையான விதிமுறைகள் வங்கிகளில் நடைமுறையில் இருக்கின்றன. தங்களது கட்சி மத்தியில் ஆட்சியில் இருப்பதாலேயே தங்களது கட்சிக்கும் நேரடியாகவே ஆட்சி அதிகாரம் வந்துவிட்டதாகக் கருதி தமிழக பா.ஜ.க. ‘இடைத்தரகர்’ வேலையை செய்வதற்கு கட்சியில் கமிட்டி போட்டு செயல்படுவது சட்ட விரோதமல்லவா?


அரசுத்துறைகூட செய்ய முடியாத செயலை தங்களது கட்சி மத்தியில் ஆட்சி செய்கிறது என்ற ஒரே தகுதியின் அடிப்படையில் வங்கிக் கடன் பெறுவதற்கான ‘இடைத்தரகர்’ வேலை செய்ய முயலலாமா?


வங்கிகளின் செயல்பாட்டை நெறிப்படுத்தி வரும் ரிசர்வ் வங்கி, தமிழக பா.ஜ.க.வின் கடன் விண்ணப் பத்தை சேகரித்து (பரிசீலனையும் செய்யுமாம்) வங்கிகளுக்கு அனுப்பிடும் ‘இடைத்தரகர்’ வேலையை அனுமதிக்கப் போகிறதா? மத்திய அரசின் நிதிச் சேவைத்துறையும் இதை வேடிக்கை பார்க்கப் போகிறதா? இப்படி தமிழக பா.ஜ.க. சேகரித்து அனுப்பிடும் விண்ணப்பங்களை வங்கிகள் பெற்றுக் கொள்வது சரியாகுமா? பெற்றுக் கொண்டால், ஒவ்வொரு அரசியல் கட்சியும், ஒவ்வொரு சமூக அமைப்பும் மக்களுக்கு சேவை செய்கிறோம் என்பதன் பெயரால் கடன் விண்ணப்பங்களைப் பொதுமக்களிடமிருந்து பெற்று வங்கிகளுக்கு அனுப்பினால் அப்படி சேகரித்த விண்ணப்பங்களை வங்கிகள் பெற்றுக் கொண்டு கடன் வழங்கிட முன்வருமா?


வங்கிகள் வழங்கி வரும் நிதி சார்ந்த சேவைகள் சட்ட ரீதியான ஆய்வுக்கு உட்பட்டவை. ரிசர்வ் வங்கிச் சட்டத்திலும் (Reserve Bank of India Act,1934), வங்கி நெறிமுறைச் சட்டத்திலும் (Banking Regulation Act, 1949) இப்படிப்பட்ட வழிமுறைகள் ஏதுமில்லை.


'இந்துத்துவா' பிரச்சார


மூக்கை நுழைக்கலாமா?


தமிழக பா.ஜ.க. தங்களது ‘இந்துத்துவா’ பிரச்சாரம் என்பது போலக் கருதி வங்கிகளின் செயல்பாட்டில் மூக்கை நுழைக்கலாமா?


கட்சி ரீதியாக கமிட்டி அமைத்துள்ள தமிழக பா.ஜ.க. தாங்கள் சேகரிக்கும் கடன் விண்ணப்பங்கள் பரிசீலனை செய்திட - வங்கிப் பணியில் ஓய்வு பெற்றவர்கள், நிதி ஆலோசகர்கள், ஆடிட்டர்களை நியமித்துள்ளதாகவும் அவர்கள் வங்கிகளின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ப கடன் விண்ணப்பதாரர்களை தயார் செய்து அனுப்புவார்களாம்.


பாஜக நடத்திடும் கூத்து!


கடனைத் திருப்பிச் செலுத்துவது, விண்ணப்ப தாரர்களின் நம்பகத்தன்மை, நாணயம் பற்றி அறிந்த பின்பு வங்கிகளுக்கு விண்ணப்பங்கள் அனுப்பப்படுமாம். தமிழ்நாட்டில் மாவட்டங்கள் தோறும் இந்த வங்கிக் கடன் விண்ணப்பங்களை சேகரித்து, பரிசீலனை செய்திட ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அய்ந்து கட்சிக்காரர்களை அனுப்பியுள்ளார்களாம், எப்படி இருக்கிறது தமிழக பா.ஜ.க.வினர் நடத்திடும் கூத்து!


கடன் தேவைப்படும் பொதுமக்கள் நேரடி யாக வங்கிக்குச் சென்று கேட்டறிந்து உரிய ஆவ ணங்களை அளித்து வங்கியின் விதி முறைகளுக்கு உட்பட்டு நிதி உதவி பெறுவதுதான் நிலைத்த, நீடித்த பயனை அளிக்கவல்லதாகும். இடைத்தரகர்கள் கூடவே கூடாது. வங்கிகளும் இடைத்தரகர்களாக (Intermediaries) தங்களுடைய பணிகளுக்கு யாரையும் பயன்படுத்துவது சட்டத்திற்குப் புறம் பானது.


இடைத்தரகர்கள் மூலம் சேவை அளித்திடும் வங்கியாளர்கள் ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளானார்கள் என்பது அன்றாடம் பத்திரிகைச் செய்திகளில் காணக்கூடியது. இந்த நிலையில் - கடன் வழங்குவது, வங்கி கடன் பெறுவது பொது மக்கள் - இடையில் நாங்கள் உதவி (?) செய்கிறோம் என்பது அப்பட்டமான ‘இடைத்தரகர்’ வேலையில்லாமல் வேறென்ன? நரியை நாட்டாமை செய்யவிடுவதே தவறு; அப்படியும் நரியை நாட்டாமை செய்ய விட்டால் கிடைக்கு (அறுவடை செய்த சாகுபடி நிலங்களில் ஆட்டு மந்தை போடுவது) இரண்டு ஆடு கேட்காதா?


எல்லா விளக்கமும் அளிக்கும் தமிழக பா.ஜ.க. ‘இடைத்தரகர்களை ஒழித்திடவே இப்படிப்பட்ட கமிட்டிகள் அமைத்துள்ளதாக, கூறுவதுதான் வேடிக்கை. இடைத்தரகர் இருந்தால் அவர்களை ஒழிப்பது சட்ட ஒழுங்குப் பிரச்சினை, அரசு பார்த்துக் கொள்ளும்; அது அரசியல் கட்சியின் பணி அல்ல.


ரிசர்வ் வங்கி நடவடிக்கை


எடுக்க வேண்டாமா?


தமிழக பா.ஜ.க.வின் இந்த வலைத்தள பரிசீலனைக் கமிட்டியை தடுத்திட அதன்மீது நடவடிக்கை எடுத்திட மத்திய அரசோ, ரிசர்வ் வங்கியோ முன் வரவேண்டும்! தமிழக பா.ஜ.க.வின் செயல் கண்டு கொள்ளாமல் விடப்படுமானால் பிற அரசியல் கட்சிகளும், சமூக அமைப்புகளும் தமிழக பா.ஜ.க.வைப் போல செயல்படுவதையும் அனுமதித்து, நிலவி வரும் வங்கிச் சேவை வழங்கிடும் சூழலைப் பாழாக்கிட வேண்டுமா?


கரோனா ஊரடங்கு காலத்திலும், குறைந்த எண்ணிக்கையுடன் பணியாளர்களை வைத்துச் செயல்பட வங்கிக் கிளைகளைப் பணித்து விட்டு இப்படி தமிழக பா.ஜ.க. மூலம் கடன் விண்ணப்பங் களைச் சேகரித்து மொத்தமாக வங்கிக்கு அனுப்பி, தேவையில்லாத குறுக்கீடுகளை உருவாக்குவது நல்லதா என்பதை மத்திய நிதிச் சேவைத்துறை நினைத்துப் பார்க்க வேண்டும். தமிழக பா.ஜ.க.வின் வங்கிக் கடன் விண்ணப்பச் சேகரிப்பு தொடர்பான நடவடிக்கைகள் களையப்படாவிட்டால், எதிர் நடவடிக்கை தோன்றுவது தவிர்க்க இயலாது. உரிய தடுப்பு நடவடிக்கையினை மத்திய அரசு எடுத்திட வேண்டுகிறோம்.


 


- கி. வீரமணி


தலைவர்


திராவிடர் கழகம்


சென்னை


25.6.2020


No comments:

Post a Comment