தமிழனுக்குச் சுயமரியாதை உணர்வு வேண்டும் ஏன்?
சென்னை, ஜூன் 17 மனிதனுக்கு எது இருந்தாலும், இல்லாவிட்டாலும், மான உணர்ச்சி ஒன்று இருந்தால் போதும். மானம் உள்ளவன் அடிமை வாழ்வை விரும்பமாட்டான். தன்னை மற்றவன் அவமானப் படுத்துவதை சகித்துக் கொண்டிருக்கமாட்டான். மாற்றான் தன் தலைமீது உட்கார்ந்துகொண்டு எழும்ப முடியாமல் அழுத்துவதைப் பொறுத்துக் கொண்டி ருக்கமாட்டான். ஆதலால், தமிழனுக்குச் சுய மரியாதை உணர்வு வேண்டும் என்று சொல்லுகிறோம் என்று தந்தை பெரியார் அவர்கள் 1.5.1941 அன்று எழுதிய தலையங்கத்தை சுட்டிக்காட்டி திராவிடர் கழ கத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விளக்கவுரையாற்றினார்.
‘விடுதலை'யின் வீர வரலாறு!
கடந்த 13.6.2020 அன்று மாலை திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ‘‘‘விடுதலை'யின் வீர வரலாறு'' எனும் தலைப்பில் காணொலிமூலம் கழகத் தோழர்களி டையே சிறப்புரையாற்றினார்.
அவரது உரையின் நேற்றைய தொடர்ச்சி வரு மாறு:
பனகால் அரசர் அவர்கள் மறைந்தவுடன், அந்தக் காலகட்டம் எப்படி என்பதைச் சொல்லுகின்ற நேரத்தில்தான்,, ஏடுகள் நடத்துவதில் எவ்வளவு சிக்கல் என்பதைச் சொல்ல வருகிறார்.
இந்தப் பகுதி மிக முக்கியமானதாகும்.
‘‘சாதாரணமாக, அவ்வியக்கம் அதிகாரத்திலும் செல்வாக்கிலும் இருந்ததான 1927 ஆம் வருஷம் வரையில் ‘ஜஸ்டிஸ்' பத்திரிகை 1200-ம், ‘திராவிடன்' பத்திரிகை 700-ம் தயாராகி அச்சாகிக் கொண்டு வந்தன. இதற்கும் மந்திரிகள் மாதம் 2000 ரூபாய் போல் கொடுத்து வந்தார்கள்! மற்றபடி சில ஜமீன்தார்களும், பெரிய பணக்காரர்களும் உதவி வந்தார்கள். ஆனால், இயக்கத்தால் உத்தியோகம் பெற்றவர்களில் பணங்கொடுப்பதையோ, பத்தி ரிகை படிப்பதையோ தங்கள் கடமை என்று நினைத்தவர்கள் யார் என்று சொல்ல முடியாமலே இருந்தது. இன்றைய தினமும் 3000-க்கு மேல்பட்ட ஜஸ்டீசும், 6000-க்கு மேல்பட்ட திராவிடனும் வெளியாகின்றதானாலும் ‘ஜஸ்டீசு'க்கு மாதம் 1-க்கு 1500 ரூபாய் நஷ்டமும், ‘ஜஸ்டிஸ்', ‘திராவிடனுக்கு' மாதம் 1-க்கு 500 ரூ நஷ்டமும் ஏற்பட்டு வருவதன் மூலம் ‘ஜஸ்டிஸ்', ‘திராவிடன்' பத்திரிகைகள் 25,000 ரூபாய் கடனிலும், அது இன்னமும் பெருகும்படி யான நிலையிலும் இருக்கின்றது. தியாகராய மெமோரியல் கட்டிடத்திற்கும் 40,000 ரூபாய் கடனும், வட்டி ஏறிக் கொண்டும் வருகின்றது.
எனவே, பார்ப்பனரல்லாதார் இயக்கத்தால் நன்மை அடைந்தவர்களின் யோக்கியதைக்கும், ஒப்பற்ற அருமையான 3 தலைவர்களால் அவ் வளவு தியாகபுத்தியுடனும், சமர்த்துடனும் நடத்தப் பட்ட மக்களின் நன்றியறிதலற்ற தன்மைக்கும் வேறு என்ன உதாரணம் வேண்டும் என்று கேட்கின்றோம்.''
‘‘நமது தலைவரின் தொண்டில் அவருக்கு உற்ற துணையாகவாவது, உதவியாகவாவது யாராவது இருந்தார்களா என்று பார்ப்போமானால், ஒருவ ரைக்கூட உறுதியாய்ச் சொல்லமுடியாது. இவருக்கு முன்னைய தலைவர்களான டாக்டர். நாயர், சர்.பிட்டி தியாகராயர் ஆகியவர்களுக்கு நமது ராஜா போன்ற உள்ளன்போடு மனப்பூர்வமாய் பின்பற்றுகின்றவர்கள் அநேகர்கள் இருந்தார்கள். ஆனால் நமது ராஜாவுக்கு யார் இருந்தார்கள்? ஒருவரும் இல்லையே என்று சொல்லுவதுடன் மாத்திரம் நில்லாமல் உள்ளுக்குள்ளாகவே எதிரி கள் சதா குற்றம் சொல்லிக் கொண்டும் பழி சுமத்திக் கொண்டும் அவரது தலைமையைக் கவிழ்க்க சூழ்ச்சி செய்து கொண்டும் அவரைச் சுற்றிலும் அவரது சொக்காய்ப் பையிலும் இருந்தார்கள். பின்னை எப்படி ராஜாவுக்கு கட்சியும் ஆள்பலமும் இருந்தது என்று யாராவது கேட்பீர்களானால், அதற்கு பதில், அவருடைய தனி சாமர்த்தியத்தால், புத்திசாலித் தனத்தால், இராஜதந்திரத்தால், சிலரை தான் சொல்லுகின்றபடி கேட்டுத் தீரவேண்டிய நிலையில், வைத்துக் கொண்டிருந்தார் என்றுதான் கொல்ல வேண்டும். அன்றியும் பார்ப்பனரல்லாத படித்தவர்கள் எனினும் கூட்டத்தாரில் பனகால் அரசரால் அதிருப்தி அடையாதவர்களோ ஏமாற்ற மடையாதவர்களோ அவர் மீது வெறுப்புக் கொள்ளாதவர்களோ ஒருவர் இருவராவது உண்டு என்று சுலபத்தில் சொல்லிவிட முடியாது! ஏனெனில் அவர் ஒரு அருமையான சாதனத்துக்கு பாடுபட்டதினால் அது ஏதாவது கடுகளவாவது பயன் அளிப்பதானாலும் அந்தப் பலன் அனுப விப்பதில் ஏற்படும் சண்டைகளும் போட்டிகளும், அபிப்பிராய பேதங்களும் ராஜா சாஹேபை அநேகருக்கு விரோதியாகவும் அதிருப்தி கொள்ள வேண்டியவராகவும் செய்து விடுகிறது. இந்த நிலையில் அவர் மேல் கண்ட தொண்டில் ஒரு தனி வீரராய் நின்று போர் புரிந்தார் என்றுதான் சொல்லியாக வேண்டும்.''
‘‘இதுவரையில் பாமர மக்களைவிட முக்கிய மாய் படித்தவர்கள் என்பவர்களும் சிறிது பணக் காரர்கள் என்பவர்களுமே பயன்பெற்று வந்திருக் கின்றார்கள். அதற்கு உதாரணமாக அநேக படித்தவர்கள் பெற்றிருக்கும் உத்தியோகங்களையும் பணக்காரர்கள் பெற்றிருக்கும் பதவிகளையும் கவனித்துப் பார்த்தால் விளங்காமல் போகாது. ஆனால் இப்படித்தவர்களினுடையவும், பணக் காரர்களினுடையவும் உணர்ச்சி எப்படி இருக் கின்றது என்று பார்ப்போமானால், வெளியில் சொல்ல வெட்கப்பட வேண்டியவர்களாகவே இருக்கின்றோம்.
உதாரணம் வேண்டுமானாலும் சொல்லுகின் றோம் ஆனால், கோபிப்பதில் பயன் இல்லை. ஒரு சாதாரணமான இரண்டரை அடி உயரமுள்ள பையன், அதுவும் அரை டிக்கட்டுக்கு அருகதையில்லாதவன் என்று சொல்லக் கூடியவன் முதற்கொண்டு பெரிய ஆசாமி என்கின்றவர்கள் வரையில் இரண்டு கோணை எழுத்து அறிவோ அல்லது ஏதாவது ஒரு சர்வகலாசாலைப் பட்டமோ பெற்று விட்டால் உடனே தன்னை ஒரு பெரிய முக்கியமான பார்ப்பனரல்லாதார் என்று நினைத் துக் கொள்வதும், பார்ப்பனரல்லாதாரியக்கம் என்ன செய்துவிட்டது? யாருக்கு சாதித்துவிட்டது, எனக்கு இன்னமும் யாதொரு உத்தியோகமும் கொடுக்கவில்லை. அவனுக்குக் கொடுத்தார்கள். இவனுக்குக் கொடுத்தார்கள், எல்லாம் அவரவர்கள் சுயநலத்திற்காக போடும் வேஷமே ஒழிய இது பார்ப்பனரல்லாதார் இயக்கமல்ல என சவடால் அடிப்பதும், பனகாலைத் தெரியாதா, நாயரைத் தெரியாதா, (தியாகராயர்) செட்டியாரைத் தெரி யாதா, எல்லாம் கூட்டுக் கொள்ளை என்று சொல்லு வதும் பார்க்கப்போனால் பார்ப்பனர்களே நல்லவர் கள், என்ன இருந்தாலும் காங்கிரசைக் குற்றம் சொல்லலாமா? ஆதலால்தான் இவர்களோடு இருக்கமுடியவில்லை என்பதும், எல்லாம் சரி, எனக்கு அந்தப் பெயர்தான் பிடிக்கவில்லை என்பதும், ஆயிரத்தெட்டு அசந்தர்ப்பமும், அசம் பாவிதமான வார்த்தைகளை உளறிக் கொண்டு திரிவதும், இவ்வளவையும் சகித்துக் கொண்டும் தலைவர்கள் ஏதாவது உத்தியோகமோ, பதவியோ கொடுத்தாலும் அதைப் பெற்றுக்கொண்டவுடன் நேர் விரோதிகளாகவும், அலட்சியப் புத்தியுடை யவர்களாகவும் இருந்து கொண்டு, பனகால் இப்படி நடக்க வேண்டும். அப்படி நடக்க வேண்டும் என்று அவருக்கே புத்தி சொல்லுவதும், பார்ப்பனர்களுக்கு உள்ஆளாயிருப்பதும், இயக்கத்தைக் குறை கூறுவதுமான வேலையிலேயே காலங்கழிப்பது மாய் இருக்கின்றார்கள். பணக்காரர்களும் தங்க ளுக்கு பதவி கேட்பதும், கிடைத்துவிட்டால் இயக் கத்தை மறந்து விடுவதும், கிடைக்காவிட்டால் இயக்கத்தையும், தலைவர்களையும் குற்றம் சொல்லிக் கொண்டு, எப்படியாவது இந்த இயக் கத்தை ஒழித்தாலொழிய நாட்டுக்கு மோட்சமில்லை என்று பிதற்றித் திரிவதுமான வேலையில் ஈடுபடுவதைத் தவிர வேறு ஒரு நன்மையுமே செய்யாமல் இருந்து வருகின்றார்கள்.
இதற்கு வெளிப்படையான சாட்சி பார்ப் பனரல்லாதார் பெயர் சொல்லிக் கொண்டு பெரிய பெரிய உத்தியோகம் பெற்றவர்கள், ஜில்லா ஜட்ஜு, கலெக்டர் முதல் சாதாரண பெரிய உத்தியோகம் வரை பெற்றவர்கள் இயக்க பத்திரிகை வாங்கமாட்டார்கள். வாங்கச் சொன்னால் அதில் குற்றம் சொல்லுவார்கள். மீறி வாங்கினாலும் பணம் கொடுக்கமாட்டார்கள். கேட்கப் போனால் அந்தப் பணம் என்ன ஆச்சுது. இந்தப்பணம் என்ன ஆச்சுது என்று கேட்பதின்மூலம், பழிசுமத்த வருவார்கள். அதோடு எதிரிகளின் பத்திரிகைகளை முன்பணம் கொடுத்து வாங்கிப் படிப்பார்கள். அன்றியும் இவர்கள் தங்களை பார்ப்பனரல்லாத இயக்கத் தலைவர்கள் என்றும், அவ்வியக்கத்திற் குள்ளாகவே எதிர்க்கட்சித்தலைவர்கள் என்றும் சொல்லிக் கொள்ளுவார்கள்.''
இன்றைக்கு இருந்தால் என்ன பொருத்தமோ - அவை அத்தனையும், 80 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த சூழலை எண்ணிப்பாருங்கள். இன்றைக்கும் அந்த நிலைமை எந்த அளவிற்கு மாறியிருக்கிறது? இந்தக் கேள்விக்காகத்தான், நான் இவ்வளவு நேரம் இதைப் படித்துக் காட்டினேன்.
‘திராவிடன்' பத்திரிகையை ஆரம்பித்து, பொறுப் பேற்று, அதற்காகத் தன்னுடைய பணத்தையும் செலவழித்து, அந்தப் பொறுப்பேற்றமைக்காக சிறைச் சாலைக்குப் போகவேண்டிய கட்டத்திற்கு வந்து, பிறகு அபராதம் கட்டி, அதிலிருந்து மீளுகிறார்.
இந்த நிலையில்தான் நண்பர்களே, மிக முக்கிய மான பகுதி.
1941, மே 1 அன்று
தந்தை பெரியார் எழுதிய தலையங்கம்!
1941 இல் சென்னையில் இன்றுமுதல் ‘விடுதலை' என்று அய்யா அவர்கள் சென்னைக்கு ‘விடுதலை' வருகின்ற பொழுது எழுதுகிறார்கள்.
இந்தத் தலையங்கம் 1.5.1941 மே தினத்தன்று எழுதினார்.
‘‘நமது ‘விடுதலை'ப் பத்திரிகை இன்று (1.5.1941) முதல் சென்னையிலிருந்து வெளிவருகிறது. செட்டி நாட்டு குமாரராஜா அவர்கள், நமது பத்திரிகையின் ஆரம்ப விழாவை இன்று நடத்தி வைத்தார். நாளை உள்ளூரிலும், வெளியூரிலும், நம் தோழர்கள் பலர், பல நாட்களாக ஆவலுடன் எதிர்பார்த்து நின்றனர். அவர்களுடைய ஆவலும் இன்றைக்கு நிறைவேறுகிறது.
தமிழ்நாட்டில் இப்பொழுது நமது பத்திரிகை யைத் தவிர, இன்னும் நான்கு தினசரிகள் நடை பெறுகின்றன. அவற்றுள் மூன்று பத்திரிகைகள், ஆரிய ஆதிக்கத்தை நிலை நிறுத்துவதற்காகவே நடைபெறுகின்றன என்று தெளிவாக சொல்லு கிறார்கள்.
எனவே, தமிழ்நாட்டில், 2 கோடிக்கும் மேற்பட்ட தமிழர்கள் வாழ்கின்றனர். இவர்களுடைய சமுதாய முன்னேற்றத்திற்காக நடைபெறும் தினப் பத்திரிகை ‘விடுதலை' ஒன்றேயாகும்.
இத்தகைய நிலையில், ‘விடுதலை'யினுடைய பணி எப்படிப்பட்டது என்று சொன்னால்,
தமிழர் சமுதாயம் 100-க்கு 90 பேராய் இருந்தும், 10 பேர்கூட கல்வி கற்கவில்லை. நூற்றுக்கு 90 பேர் இழிவாக மதிக்கப்படும் தொழில்களையே செய் கின்றனர். உடம்பில் உள்ள ரத்தத்தை வேர்வை யாகச் சிந்தும் கடினமான வேலைகளையே செய் கின்றனர்.
இவ்வாறு வேலை செய்யும் மக்களிலும், 100-க்கு 90 பேருக்கு இடமேயில்லை. இருக்க இடமில்லை, உடுத்த உடையில்லை, வயிறாற உண்ண உணவில்லை.
இந்த நாட்டிலேயே பிறந்த மக்கள், இந்த நிலையில் இருக்கின்றனர். ஆனால், வெளிநாட்டி லிருந்து இந்த நாட்டிற்கு வந்த அந்நியர்கள் இந்த நாட்டில் எந்த வகையிலும் உரிமை கொண்டாடத் தகுதியற்ற ஆரியர்கள் மற்றும் பல வகுப்பார்கள் உயர்ந்த நிலையில் வாழ்கின்றனர். மாட மாளிகை களைக் கட்டிக்கொண்டு, பசி என்றால் என்ன வென்று தெரியாமலும், உழைப்பு என்றால் என்ன வென்று தெரியாமலும், நிலத்தில் கால்படாமலும், நகத்தில் அழுக்குப் படாமலும் வாழுகிறார்கள்.
தமிழர் இம்மாதிரி இழிந்த நிலையில் வாழவும், அந்நியர்கள் உயர்ந்த நிலையில் வாழவும் காரணம் என்னவென்பதை ஒவ்வொரு தமிழனும் சிந்திக்க வேண்டும்.
மனிதனுக்கு எது இருந்தாலும், இல்லாவிட்டா லும், மான உணர்ச்சி ஒன்று இருந்தால் போதும். மானம் உள்ளவன் அடிமை வாழ்வை விரும்ப மாட்டான். தன்னை மற்றவன் அவமானப்படுத்து வதை சகித்துக் கொண்டிருக்கமாட்டான். மாற்றான் தன் தலைமீது உட்கார்ந்துகொண்டு எழும்ப முடி யாமல் அழுத்துவதைப் பொறுத்துக் கொண்டிருக்க மாட்டான். ஆதலால், தமிழனுக்குச் சுய மரியாதையே உயிர் என்று சொல்லுகின்றோம்.
இந்த சுயமரியாதையற்ற தன்மையை முதலில் விலக்கிக் கொள்ளவேண்டியதுதான் இன்று தமிழ னுடைய வேலையாகும். இந்த நிலை ஒழிந்தால், அரசியலில் முன்னேற்றம் அடைவது என்பது அரிதான காரியமல்ல.
ஏனென்றால், நம்முடைய அரசியல் உரிமை பெறவேண்டுமானால், நாம் ஒரே எதிரியுடன்தான் போராடவேண்டும். ஆனால், சமுதாய உரிமை யைப் பெறவேண்டுமானால், நாம் பல எதிரிகளு டன் போராட வேண்டியிருக்கிறது.''
(தொடரும்)
No comments:
Post a Comment