கலி.பூங்குன்றன்
மதுரை ‘மக்கள் கண்காணிப்பகம்‘ (People’s Watch) என்ற அமைப்பின் சார்பில் நேற்று மாலை காணொலி மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் கருத்துரை புகன்றார்.
21ஆம் நூற்றாண்டில்கூட மனித உரிமை களுக்காகவும், மனித நேயத்துக்காகவும் போராட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்பது வெட்கப்படத்தக்கது.
வளர்ந்த நாடு! வல்லரசு நாடு! என்று போற் றப்படும் அமெரிக்காவில் நடந்த ஓர் அநாகரிக செயல் உலகம் முழுவதும் பெரும் அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் மினியாப் பொலிஸ் என்ற ஒரு நகரத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்வு மனித குலத்தின் நெஞ்சை குலுக்கி விட்டது.
ஜார்ஜ் ஃபளாயிட் என்ற கருப்பினத்தவர் ஒரு கடையில் சிகரெட் வாங்கினார். அதற்காக 20 டாலர் நோட்டைத் தந்தார். அதுபோலி நோட்டு என்று கூறி கடைக்காரர் போலீசுக்கு தகவல் கொடுத்தார்.
உடனடியாக அந்த இடத்திற்கு வந்த வெள் ளைக்காரர்களான காவல்துறை அதிகாரிகள் எந்தவிதமான விசாரணையுமின்றி கறுப்பினத்த வரான ஜார்ஜ் ஃபிளாயிட்டை கீழே தள்ளி ஒரு காருக்கடியில் படுக்க வைத்து அவர் கழுத்தில் தனது முழங்காலை வைத்து அழுத்திட, ‘என்னால் மூச்சு விட முடியவில்லை!’ என்னை விட்டு விடுங்கள்’ என்று மன்றாடியும் அதனைப் பொருட்படுத்தாமல் அந்த வெள்ளைக்கார டெரக்சவு என்ற காவல்துறை அதிகாரி மேலும் முழங்காலால் அழுத்திட, அந்தக் கறுப்பு நிற மனிதன் கொல்லப்பட்டார் என்பது மனிதநேயம், மனித உரிமை உணர்வு கொண்ட ஒவ்வொரு மனிதனின் உள்ளங்களிலும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி விட்டது. அதன் விளைவு அமெரிக் காவையே நிலை குலைய வைத்து விட்டது. கருப்பு நிற மக்கள் மட்டுமல்ல, மனித உள்ளம் கொண்ட வெள்ளையர்கள் கூட வீதிக்கு வந்து போராட ஆரம்பித்தனர். அதன் விளைவு அமெரிக்காவையே புரட்டிப் போட்டு விட்டது.
கரோனா தொற்று ஒரு பக்கம் மனித குலத்தை அச்சுறுத்திக் கொண்டு இருந்தாலும், அந்தப் பிரச்சினையை சின்னக் கோடாக்கி, இந்தப் பிரச்சினையைப் பெரிய கோடாக்கி விட்டது.
உலகத்தின் பார்வையில் இந்த மனித நேயப் பிரச்சினை முன் வகையில் முதலிடத்தில் இருக்கிறது.
அதை முன் வைத்து இங்கே இப்படியொரு காணொலி கருத்தரங்கை உருவாக்கியிருப்பது வரவேற்கத்தக்கது - பாராட்டத்தக்கது.
மனிதநேய உணர்வு என்பது ஒரு நாட் டுக்கோ ஓர் இனத்துக்கோ ஒரு மதத்துக்கோ சொந்தமானதல்ல - அது ஒட்டு மொத்த மனித குலத்துக்கும் சம்பந்தப்பட்டது.
யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற மிகப் பெரிய பண் பாட்டுக்குச் சொந்த மண் நம்முடையது.
இதற்கு மாறாக எப்படி வந்தது பிளவுகள் மனித குலத்தில்?
ஜாதிவெறி, மதவெறி, இனவெறி என்பவை மானு டத்தைச் சீரழிக்கக் கூடியவையே - வெறுப்பை உமிழ்ந்து அமைதியை ஆழக் குழி தோண்டி புதைக்கக் கூடியவை.
இவை வெறும் சட்ட ஒழுங்குப் பிரச்சினையல்ல - ஒட்டு மொத்த மனித குலத்தையே அச்சுறுத்தும், தலை குனிய வைக்கும் அநாகரிகத்தின் வெளிப்பாடாகும்.
அமெரிக்காவில் மட்டும்தான் ஏதோ நடந்து விட்டது என்று கருதி ஒதுக்கிவிட முடியாது. கடந்த நான்கு நாள் களுக்கு முன் இந்தியாவில் உத்தரப்பிரதேசத்தில் என்ன நடந்திருக்கிறது?
17 வயதுடைய தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த விகாஸ் குமார் ஜாதவ் என்ற இளைஞன் ஒருவன், ஒரு சிவன் கோயிலுக்குச் சென்று சாமி கும்பிட்டான் என்ப தற்காக உயர் ஜாதிக்காரர்களால் கடுமையாகத் தாக்கப்பட வில்லையா?
காவல்துறையில் புகார் கொடுக்கப்பட்டபோது, அதன் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், அவன் வீட்டுக்கே சென்று ஜாதிவெறியர்கள் அந்த இளைஞனை வெளியில் இழுத்து வந்து சுட்டுக் கொன்று இருக்கிறார்களே, இந்தக் கொடுமைபற்றி இந்தியா வாய் திறந்ததா? எந்த அசைவாவது இங்கு நடந்திருக்கிறதா? ஊடகங்கள்தான் பெரிது படுத்தினவா? ஏதோ ஒரு சாதாரண நிகழ்வு போல் மக்கள் கடந்து சென்றுள்ளனரே!
நியாயமாக, அமெரிக்காவில் நடந்தது போல மக்கள் இங்கே கிளர்ந்து எழுந்திருக்க வேண்டாமா? மனித உரிமைக் காக, நேயத்துக்காக குரல் கொடுத்திருக்க வேண்டாமா?
ஜாதி வெறிக் கொடுமையில் இந்த உச்சக்கட்ட நடவடிக்கைக்கு எதிராகக் கண்டனங்கள் வெடித்துக் கிளம்பியிருக்கவேண்டாமா? யாருக்கோ வந்த விருந்து என்று ஒதுங்கிடுவது மனிதத் தர்மமாகுமா? என்ற வினாக்களை திராவிடர் கழகத் தலைவர் எழுப்பினார்.
இந்தியாவில் உள்ள ஜாதி - மதவெறியைவிடக் கொடூரமானது பிறப்பின் அடிப்படையில் பேதப் படுத்துவது- பிளவுபடுத்துவது ஆகும்.
நமது நாட்டில் ஜாதி சாஸ்திர ரீதியாக மட்டுமல்ல - அரசமைப்புச் சட்ட ரீதியாகவும் பாதுகாக்கப்படுகிறதே! (1949 ஆம் ஆண்டிலேயே இது குறித்து அரசியல் நிர்ணய சபைக்குத் தந்தை பெரியார் கடிதம் அனுப்பினார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்)
கல்வி கற்றிருந்தாலும், பெரும் பதவியில் அமர்ந் திருந்தாலும் ஒருவர் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந் தவராக இருந்தால் - அவர் எந்தப் பார்வையோடு பார்க்கப்படுகிறார் - என்பதுபற்றியும் திராவிடர் கழகத் தலைவர் மதுரைக் காணொலியில் எடுத்துக் கூறினார்.
குறிப்பாக பாபு ஜெகஜீவன்ராம் - இந்தியாவின் பாதுகாப்புத் துறை அமைச்சராகவும், துணைப் பிரதம ராகவும்கூட இருந்தவர்தான். அவர் வாரணாசியில் சம்பூர் னானந்து என்ற உயர் ஜாதிக்காரரின் சிலையைத் திறந்தார் என்பதற்காக ஒரு தாழ்ந்த ஜாதிக்காரன் உயர்ஜாதிக்காரர் சிலையை எப்படி திறக்கலாம் என்று கூறி, சிலை தீட்டுப்பட்டு விட்டதாகக் கூக்குரல் எழுப்பி, காசி பல்கலைக் கழக மாணவர்கள் கங்கையிலிருந்து நீரைக் கொண்டு வந்து அந்த சிலைமீது அதைக் கொட்டி தீட்டுக் கழித்ததை பொருத்தமாகக் கழகத் தலைவர் எடுத்துக் காட்டினார்.
ஜாதி என்பது இந்த நாட்டில் அடிக்கட்டுமானமாக இருக்கிறது. ஏணிப்படி முறையில் ஜாதி அமைந்துள்ளது. அதனால்தான் தந்தை பெரியார் ஜாதி ஒழிக்கப்பட்டே தீர வேண்டும். அதனைக் கட்டிக் காக்கும் அமைப்பு முறைகளை நிர்மூலப்படுத்த வேண்டும் என்று தனது கடைசி மூச்சு அடங்கும் வரை பாடுபட்டார் - என்றும் எடுத்துக் கூறினார்.
ஜாதி இருக்கும் நாட்டில் உண்மையான சுதந்திரம் இருக்க முடியுமா - என்ற கேள்வியைத் தந்தை பெரியாரும் கேட்டார், அண்ணல் அம்பேத்கரும் கேட்டாரே!
இந்தியாவில் சில மாதங்களுக்குமுன் மிகப் பெரிய அவமானகரமான நிகழ்ச்சி அரங்கேறியது. இந்தியாவின் குடியரசுத் தலைவர் பதவி என்றால், முப்படைகளின் தலைவர் - இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பாதுகாவலர் என்று பொருள்.
அந்தக் குடியரசு தலைவர் மாண்பமை ராம்நாத் கோவிந்த் அவர்கள் ஒரிசாவில் பூரி ஜெகந்நாத் கோயிலிலும், ராஜஸ்தான் அஜ்மீரில் பிர்மா கோயிலிலும் உள்ளே செல்வதற்கு தடை செய்யவில்லையா?
குடியரசு தலைவருக்கே இந்த நிலை - இந்திய நாட்டில் என்பதை எடுத்துக்காட்டுடன் விளக்கினார் 'விடுதலை' ஆசிரியர் அவர்கள்.
மீசை வைத்ததற்காகவும், குதிரையில் வந்ததற்காகவும் கோயில் விழாவைப் பார்த்ததற்காகவும்கூட குஜராத் போன்ற மாநிலங்களில் தாழ்த்தப்பட்டோர் தாக்கப்பட் டார்களே - படுகொலைகள் நடந்துள்ளனவே (எடுத்துக் காட்டுக்கு ஒரு பட்டியல் - பெட்டி செய்தி காண்க).
ஜாதி ஒழியாமல் உண்மையான சுதந்திரம் வரப் போவதில்லை. மத பேதம், ஜாதி பேதம் மற்றும் எந்த வகையில் பேதங்கள் காட்டப்பட்டாலும் அவற்றின் அடிப்படை வெறுப்பு, - எதிர்ப்பு, அவமதிப்பு நடத்தப்பட் டாலும் நாம் எல்லோரும் ஒன்றுபட்டு எழ வேண்டும், ஓரணியாக திரள வேண்டும்.
ஊடகங்களும், நீதித்துறையும் ஒத்துழைப்புக் கொடுக்க வேண்டும்.
மக்கள் கருத்தை நாம் ஒருமுகப்படுத்தினால், சட்டம் நொண்டி அடித்துக் கொண்டாவது பின்னால் ஓடி வரும் என்ற நிலையை நாம் உருவாக்குவோம்.
உயிரைக் கொடுத்தாவது மனித உரிமைகளையும், மனித நேயத்தையும் பாதுகாப்போம். சம நிலை, சம நிறை சமத்துவத்தை உருவாக்குவோம் - சரியான தருணத்தில் இப்படியொரு நிகழ்வினை ஒழுங்குபடுத்திய இந்த அமைப் பினரை பாராட்டுகிறோம். நன்றி வணக்கம் என்று கருத்துரைகளை மணி மணியாக ஒலித்தார் தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள்.
கலந்து கொண்டவர்கள்
நிகழ்ச்சியின் தொடக்கவுரையினை மக்கள் கண்காணிப்பகத்தின் நிறுவனத் தலைவர் ஹென்றி தியன் வழங்கிட நிகழ்ச்சியின் பிரிட்டோ மற்றும் சி.சே. இராசன் ஆகியோர் நெறியாள்கை செய்தனர். ஒருங்கிணைப்பை மதுரையிலிருந்து தமிழ்த் தேச மக்கள் முன்னணி மற்றும் தோழமை சக்திகளின் தலைவர் மீ.த. பாண்டியன், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் தலைவர் தியாகு மற்றும் கோவையி லிருந்து தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் தலைவர் கோவை. இராமகிருஷ்ணன், ஆதித் தமிழர் பேரவையின் தலைவர் அதியமான் ஆகியோர் மேற் கொண்டனர். இனவெறிக்கு எதிராகக் காணொலி மூலம் கண்டனக் குரல் எழப்பினார்கள்.
மக்கள் இயக்கத் தலைவர்கள்:
ஆசிரியர் கி. வீரமணி, திராவிடர் கழகம்.
பிரசாந்த் பூசன், மூத்த வழக்குரைஞர், உச்சநீதி மன்றம், டில்லி.
பேராயர் அந்தோணி பாப்புசாமி, தமிழக கத்தோ லிக்க ஆயர் பேரவை
ஜெரால்டு ஸ்டெபெராஜ், உலகளாவிய சித்ர வதைக்கு எதிரான அமைப்பு (OMCT) ஜெனிவா சுவிட்சர்லாந்து
கண. குறிஞ்சி, தமிழ்நாடு மக்கள் மன்றம்
பேரா. பாத்திமா பாபு, ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம்.
பூ. சந்திரபோஸ், தியாகி, இமானுவேல் பேரவை
ஷீலு பிரான்சிஸ், தமிழ்நாடு பெண்கள் இணைப் புக் குழு
க. முருகவேல் ராஜன், மக்கள் விடுதலைக் கட்சி
சேக் முகமது அன்சாரி, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா
இரமேஷ்நாதன், தேசிய தலித் விடுதலைக்கான இயக்கம்
திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்
நாகை திருவள்ளுவன், தமிழ்ப் புலிகள் கட்சி
கருப்பையா, தலித் விடுதலை இயக்கம்
கே.எம். சரீப், தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சி.
மு. களஞ்சியம், தமிழர் நல பேரியக்கம்.
கொளத்தூர் தா.செ. மணி, திராவிடர் விடுதலைக் கழகம்.
அரசியல் கட்சித் தலைவர்கள்
முனைவர் தொல். திருமாவளவன், விடுதலை சிறுத்தைகள் கட்சி
வைகோ, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்
பாலகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
டி.கே.எஸ். இளங்கோவன், திராவிட முன்னேற்றக் கழகம்.
நெல்லை முப்ராக், எஸ்.டி.பி. அய்.
திவாகர், அமெரிக்கா
கே. மெக்டோஷஸ், சிறுபான்மை பிரச்சினைகளுக் கான அய்.நா. சிறப்பு நிபுணர் அமெரிக்கா
வேல்முருகன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி.
பாலமுருகன், மனித உரிமைக் காப்பாளர்.
தனியரசு, தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை.
ஜவாஹிருல்லாஹ், மனிதநேய மக்கள் கட்சி.
மற்றும் பல தலைவர்கள் உரையாற்றினர்.
கடைசிச் செய்தி:
மருத்துவக் கல்லூரி சேர்க்கையில் (மத்திய தொகுப்பில்) பிற்படுத்தப்பட்டோருக்கு 50 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பல்வேறு கட்சிகள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் அனைத்தையும் சென்னை உயர்நீதிமன்றம் விசாரிக்கும் என்றும், மனுதாரர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகுமாறும் உச்சநீதிமன்ற நீதிபதி நாகேஸ்வரராவ் இன்று (11.6.2020) உச்சநீதிமன்றத்தில் கூறினார்.
திராவிடர் கழகத்தின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏற்கெனவே இது தொடர்பாக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment