இதுதான் இந்தியா! ஜாதி, மத வெறியால் படுகொலைகள்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, June 11, 2020

இதுதான் இந்தியா! ஜாதி, மத வெறியால் படுகொலைகள்!

* உத்தரப் பிரதேச மாநிலத்தின் ஹார்தோய் மாவட்டத்தின் பாதேசா பகுதியைச் சேர்ந்தவர் மோனு என்ற அபிஷேக்.அப்பகுதியில் கல்லூரிவரை படித்த இவரும், அவரது அதே ஊரைச் சேர்ந்த இவருடன் படித்த வேறு   சமூகத்தைச் சேர்ந்த பெண்ணும் நண்பர்களாக பழகியுள்ளனர்.


இந்நிலையில் அபிஷேக் அப்பெண்ணுடன் பேசிக்கொண்டு இருந்த போது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அவரை பிடித்து அடித்துத் துன்புறுத்தியுள்ளனர். மேலும் அவர் மீது பெட்ரோல் ஊற்றி எரித்து விட்டனர். இதனால் அபிஷேக் கதறியுள்ளார். அவரின் அலறல் சத்தத்தைக்  கேட்டு அங்கு வந்த அப்பகுதி மக்கள் அபிஷேக்கை மீட்டு லக்னோ மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். மகனின் மரணத்தை  கேள்விப்பட்டு அபிஷேக்கின் தாய் மாரடைப்பு ஏற்பட்டு  உயிரிழந்துள்ளார்.


* குஜராத் மாநிலம், அனந்த் மாவட்டத்தில் உள்ளது பத்ரனியா கிராமம். இங்குள்ள கோயிலில் நவராத்திரியை முன்னிட்டு நடைபெறும் 'கர்பா’ நடன நிகழ்ச்சி மிகவும் புகழ்பெற்றது.  இந்த நிகழ்ச்சியை காண பத்ரனியா கிராமத்தின், ஒடுக்கப்பட்ட மக்கள் வசிக்கும் வன்கர்வாஸ் பகுதியைச் சேர்ந்த ’ஜயேஷ் சோலங்கி’ என்ற 21 வயது தாழ்த்தப்பட்ட இளைஞர் சென்றுள்ளார். அவரை நவராத்திரியில் நடனத்தை எல்லாம் பார்க்க கூடாது என்று கூறி உயர்ஜாதி சமூகத்தைச் சேர்ந்த சஞ்சய் என்பவர் தனது நண்பர்கள் சிலருடன் இணைந்து ஜயேஷை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே ஜயேஷ் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டு, ஜயேஷை தாக்கிய 8 இளைஞர்களும் கைது செய்யப்பட்டனர்.


* குஜராத் மாநிலம் காந்திநகர் பகுதியைச் சேர்ந்த குர்ணால் மகோரியா என்பவர் பணி முடிந்து வீட்டிற்குச் சென்றுகொண்டு இருந்த போது அங்கு வந்த சில உயர்ஜாதியினர் 'நீ மீசை வைக்க கூடாது' என்று கூறி கடுமையாக தாக்கியுள்ளனர். இதே காரணத்திற்காக பியேஸ் பர்மேர் என்பவரும் இதற்கு சில நாட்களுக்கு முன்பு கடுமையாக தாக்கப்பட்டார்.


* குஜராத்தில் குதிரை சவாரி செய்ததற்காக தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டார்.   குஜராத் மாநிலத்தின் பாவ்நகர் மாவட்டத்திலுள்ள டிம்பி கிராமத்தைச் சேர்ந்தவர் பிரதீப் ரத்தோட், இவர் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவர். இவர் பத்தாம் வகுப்பை முடித்துவிட்டுத் தன் தந்தைக்கு உதவியாக வயலில் வேலை பார்த்துவந்துள்ளார். இவருக்குச் சொந்தமான வயலைப் பார்வையிட குதிரையில் சென்றுவந்துள்ளார். தாழ்த்தப்பட்ட மக்கள் குதிரையில் செல்வது பிடிக்காத அந்தப் பகுதியின் ஆதிக்கச் ஜாதி இளைஞர்கள், இனிமேல் நீ குதிரையில் செல்லக் கூடாது; இதுவே கடைசி முறை என்று மிரட்டியுள்ளனர்.


இதை பெரும்பொருட்டாக எடுத்துக்கொள்ளாத பிரதீப் வழக்கம்போல் குதிரையில் சென்றுள்ளார். ஆனால் வயலுக்குச் சென்று வீடு திரும்பாத பிரதீப், கடந்த மார்ச் 31-ஆம் தேதி பிணமாக மீட்கப்பட்டார். பிரதீப்பையும்  குதிரையையும், கூர்மையான ஆயுதங்களைக் கொண்டு சிலர் கொலை செய்தது தெரியவந்தது.


* குஜராத்தின் உனா நகர் அருகே மோட்டோ சமதியாலா என்ற கிராமத்தில் நகராட்சி ஒப்புதலோடு இறந்த மாடுகளின் தோலை உரித்த நான்கு தாழ்த்தப்பட்ட இளைஞர்களை பசுக்காவலர்கள் என்ற குண்டர்கள் 11.7.2018 அன்று  வாகனத்தின் பின்னால் அரை நிர்வாணமாக கட்டிவைத்து அவர்களை அடித்து இழுத்துச் சென்றனர். சாலையில் காவலர்கள் மற்றும் பல மக்கள் வேடிக்கைப் பார்க்குமாறு சுமார் அரை கிலோமீட்டர் தூரம் வரை ரப்பர் பைப்புகளாலும், கழிகளாலும், இரும்பு கம்பிகளாலும் தொடர்ந்து தாக்கிகொண்டே வந்தனர். இதில் 4 வரும் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் நீண்ட நாள் சிகிச்சை பெற்றனர்.


இவ்வளவு கொடுமைகள் இந்தியாவில் நடைபெற்றும், அதனுடைய எதிர்விளைவுகள் என்ன?...தலைகுனியத்தக்கது!


No comments:

Post a Comment