அகில இந்திய அளவில் மருத்துவக் கல்வி ஒதுக்கீட்டில்
இட ஒதுக்கீடு வழங்கப்பட ஏற்கெனவே நீதிமன்றத் தீர்ப்புகள் உள்ளன
‘கெசட்' அறிவிப்பின்மூலம் அகில இந்திய மருத்துவக் கழகம் ஏற்றுக்கொண்ட ஒன்றே!
இந்த நிலையில் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு வழங்குவதில் மத்திய அரசு ‘கண்ணாமூச்சி' விளையாடுவது ஏன்?
மாநிலங்களிலிருந்து மத்திய அரசு பெற்றுக் கொண்ட மருத்துவக் கல்விக் கான இடங்களில், இட ஒதுக்கீட்டை, அந்தந்த மாநிலங்களில் பின்பற்றப்படும் விகிதாச்சாரப்படி பிற்படுத்தப்பட்டோ ருக்கு அளிக்கவேண்டும் என்று நீதி மன்றமும், மத்திய அரசும், அகில இந்திய மருத்துவக் கழகமும் ஏற்கெனவே ஒப்புக்கொண்ட நிலையில், பிற்படுத்தப் பட்டோருக்கு மத்திய அரசின் தொகுப்பில் உள்ள மருத்துவக் கல்விக்கான இடங்களில் மத்திய அரசு ‘கண்ணா மூச்சி' விளையாடுவது சரியல்ல! எதுவாக இருந்தாலும் இறுதித் தீர்ப்பு மக்கள் மன்றத்தில்தான் இருக்கிறது என்று நினைவூட்டுகிறோம் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.
அவரது முக்கிய அறிக்கை வருமாறு:
தமிழ்நாடு அரசால் - மாநில அரசு என்ற முறையில் - மருத்துவப் படிப்பிற்காக வழங்கப்பட்ட அகில இந்திய தொகுப்பு இடங்களில்,பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாண வர்களுக்கு இட ஒதுக்கீட்டைத் தராமலேயே தொடர்ந்து மத்திய அரசு ஏமாற்றி வஞ்சித்து வருவதை எதிர்த்து, தமிழ்நாட்டில் திராவிடர் கழகம் (உயர்நீதிமன்றத்திலும்), தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ், இரு கம்யூனிஸ்ட் கட்சிகள், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி, பா.ம.க. ஆகிய கட்சிகள் உச்சநீதிமன்றத்திலும் வழக்குகளைத் தாக் கல் செய்தன. அவ்வழக்குகளின் கோரிக்கை யில், மாநிலங்களால் மத்திய தொகுப்பிற்கு வழங்கப்பட்ட இடங்களில், மாநிலத்தில் நடைமுறையில் உள்ள பிற்படுத்தப்பட்டவர் களுக்குரிய இட ஒதுக்கீட்டுக்கான இடங் களை (தமிழ்நாட்டில் 50 விழுக்காடு) தர வேண்டும் என்பதாகும். மத்திய அரசே ஒப்புக்கொண்டுள்ளபடி (கெசட் அறிவிப் பின்மூலம்) இடங்களை ஒதுக்காமல், கடந்த பல ஆண்டுகளாக மறுத்து வருவது சட்டப் படி உள்ள உரிமைகளை மறுப்பதாகும்.
இதைவிட மிகப்பெரிய
அநீதி வேறு உண்டா?
சமூகநீதியைத் தர மறுப்பது, அவர்கள் போட்ட ஆணையை அவர்களே மீறு வதாகும் என்பதைச் சுட்டிக்காட்டி, இவ்வாண்டு இப்போது மருத்துவப் பட்டப் (எம்.பி.பி.எஸ்.) படிப்பிலும் (‘நீட்’ தேர்வு அடிப்படையிலேயேகூட), மருத்துவ மேற் பட்டப் படிப்பிலும் பிற்படுத்தப்பட்டவர் களுக்குரிய இடஒதுக்கீடு தர நீதிமன்றம் உத்தரவிடவேண்டும்; காரணம், அவர்கள் ஆணையை அவர்களே அமல்படுத்தாதது மட்டுமல்ல; அதைத் தங்களது விளக் கங்களில் திட்டமிட்டே மறைக்கவும் செய் கின்றனர்! இதைவிட மிகப்பெரிய அநீதி வேறு உண்டா?
பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரி பட்டப் படிப்பு, மேற் பட்டப் படிப்புக்குரிய இடங்களில் அவர் களுக்குரிய ஒதுக்கீடு கேட்பது, பிச்சையோ, சலுகையோ அல்ல.
பிற்படுத்தப்பட்டோருக்கு உரிய உரிமையாகும்
மத்திய அரசின் சுகாதாரத் துறை, முன்பே ஒப்புக்கொண்டதை நடைமுறைப் படுத்த வேண்டியது பிற்படுத்தப்பட்டோ ருக்கு உரிய உரிமையாகும்.
21.12.2010 தேதியிட்ட மத்திய கெசட் அறி விக்கைபடி, ஏற்கெனவே இருந்த விதிகள் திருத்தப்பட்டு, மிகவும் தெளிவாகவே,
‘‘The reservation of seats in Medical Colleges/institutions for respective categories shall be as per applicable laws prevailing in States/Union Territories.
இதன் தமிழாக்கம்:
‘மருத்துவக் கல்லூரிகளில்/நிறுவனங் களில் இடங்களை ஒதுக்கீடு செய்வது- மாநிலங்கள் /யூனியன் பிரதேசங்களில் நடைமுறையில் உள்ள சட்டங்களின்படி கடைப்பிடிக்கப்படவேண்டும்”
2006 ஆம் ஆண்டில் எஸ்.சி.,/ எஸ்.டி., பிரிவினர் அரசியல் சட்டப்பிரிவு 32 இன்கீழ் ரிட் மனு ஒன்றில், உச்சநீதிமன்றம் 31.1.2007-இல் அளித்த தீர்ப்பில் - அகில இந்திய மருத்துவக் கல்வி ஒதுக்கீட்டில் அவர்கள் கோரியதை ஏற்று தாழ்த்தப்பட்டவர்களுக்கு 15 விழுக்காடும், பழங்குடியினருக்கு 7.50 விழுக்காடும் இடஒதுக்கீடு வழங்குமாறு தீர்ப்பளித்தது - இது வரவேற்கத்தக்க ஒன்று. (அந்த உச்சநீதிமன்றத்தின் அமர்வுக்கு தலைமை வகித்தவர் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் ஆவார் என்பதும் நினைவுகொள்ளவேண்டிய ஒன்று).
அதே நடைமுறைதானே பிற்படுத்தப் பட்டவர்களுக்கும் பின்பற்றப்பட்டிருக்க வேண்டும்?
பிரதமர் நேரு, சட்ட அமைச்சர் டாக்டர் அம்பேத்கர் போன்றவர்களால்....
இட ஒதுக்கீடு சம்பந்தமான 15(4) பிரிவு - தந்தை பெரியார் அவர்களின் போராட் டத்தால் - முதலாவது அரசியல் சட்டத் திருத்தத்தினால், பிரதமர் நேரு, சட்ட அமைச்சர் டாக்டர் அம்பேத்கர் போன்ற வர்களால் 1951 இல் புகுத்தப்பட்டது.
‘‘Nothing in this article or in clause 2 of article 29 shall prevent the State from making any special provision for the advancement of any socially and educationally backward classes of citizens or for the Scheduled Caste and the Scheduled Tribes.’’ (முதல் திருத்தம் 18.6.1951).
இவ்விதியின்படி இட ஒதுக்கீடு மூன்று சாராருக்கும் இணைந்த ஒன்றே ஆகும்.
இதன்படி பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் உரிய இட ஒதுக்கீட்டை அளிக்க மத்திய அரசு முன்வந்திருக்க வேண்டாமா? இப் போது அதைக் கேட்டுத்தானே அத்துணைக் கட்சிகளும் பொது நல வழக்கு தொடுத் துள்ளன?
அரசியல் சட்டம் அளித்துள்ள உரிமை களை மத்திய அரசு தனது கெசட்டில் அறிவித்தபடி நடைமுறைப்படுத்தி இருந் தால், இப்படி ஒரு போராட்டம் - சட்ட ரீதியாக - நியாயமாகப் பார்த்தால் - தேவைப்பட்டிருக்குமா? - சட்டத்தின் ஆட்சியில் இது விசித்திரம், வேடிக்கை!
அடுத்து உச்சநீதிமன்றம் - உயர்நீதிமன் றத்திலுள்ள இந்த வழக்குகளில் ‘‘கண்ணா மூச்சி’’ விளையாட்டு மிகவும் வேதனை யானது.
தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் - ஆளுங்கட்சி உள்பட தொடுத்த வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, மாண்புமிகு நீதிபதி ஜஸ்டீஸ் நாகேஸ்வரராவ் அவர்கள் தலைமையில் விசாரித்த அமர்வு, ‘‘நீங்கள் உயர்நீதிமன்றத் திற்குச் செல்லுங்கள்'' என்று கூறி, மனுக் களை வாபஸ் பெற அனுமதித்தார்.
பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு ஆதரவாக மும்பை நீதிமன்றம் உத்தரவு
மும்பை நீதிமன்றம் (நாக்பூர் அமர்வு), 2018 இல் அகில பாரதீய ஓ.பி.சி. (OBC) மகாசங்கம் என்ற அமைப்பு ஒரு வழக்கைத் தொடுத்தது. அந்த வழக்கில் மருத்துவக் கல்வி பயிலும் பிற்படுத்தப்பட்ட மாணவர் களுக்கு இட ஒதுக்கீடு கோரப்பட்டது. OBC பிரிவினருக்கு ஆதரவாக 16.7.2018 அன்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
அந்த இடைக்கால உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்றது மத்திய அரசு (பி.ஜே.பி. ஆட்சியில்தான்). நாக்பூர் உயர்நீதி மன்ற உத்தரவுக்கு தடையும் வாங்கியது!
இந்த இடத்தில் முக்கியமாக நினை வூட்டப்பட வேண்டிய ஒன்று உள்ளது.
1.8.2018 இல் மேற்சொன்ன நாக்பூர் வழக்கில் மருத்துவக் கல்வி அகில இந்திய இடஒதுக்கீட்டில், இட ஒதுக்கீடு கோரும் வழக்கை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யக்கூடாது என்றும், உச்சநீதிமன்றத் தில்தான் அரசமைப்புச் சட்டம் 32 இன்படி தாக்கல் செய்ய வேண்டும் என்று தீர்ப்பளித்தது.
அந்த வழக்கினை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வில், ஒரு நீதிபதி மாண் புமிகு நீதிபதி நாகஸ்வரராவ் அவர்கள்தான்!
அப்போது ஒரு நிலைப்பாடு - இப்போது தமிழ்நாட்டின் மனுதாரர்களுக்கு நேர் எதிரான நிலைப்பாடு - முரண்பாடாக உள்ளதே!
அதேபோல், மற்றொரு இரட்டை அளவு கோலை மத்திய அரசு - பிற்படுத்தப்பட்ட வர்களுக்கு உள்ள இட ஒதுக்கீட்டு உரி மையைத் தராமல் தவிர்க்க, விதவிதமான கருத்துகளை, முரணான நடைமுறைகளைக் கையாளுவது எவ்வகையில் நியாயமானது என்பதை சென்னை உயர்நீதிமன்றத்தில் தி.மு.க.வின் சார்பில் வாதாடிய மூத்த வழக் குரைஞரும், நாடாளுமன்ற உறுப்பினரு மான திரு.வில்சன் அவர்கள் எழுத்து வாதத்தின்மூலம் மத்திய அரசின் வஞ்சகத்தை அம்பலப்படுத்தியுள்ளார்.
‘‘உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சலோனி குமாரி வழக்கு தற்போது பலனற்றது. அந்த வழக்கிற்கும், தமிழ் நாட்டில் திமுக உள்ளிட்ட கட்சிகள் தொடுத்த வழக்கிற்கும் மத்திய அரசின் சுகாதாரத்துறை முடிச்சுப் போட்டு காட்டு வது தேவையற்றது'' என்பதை விளக்கி யுள்ளார். ஏனெனில், 2010 ஆம் ஆண்டு ‘நீட்’ தேர்வு விதிமுறைகளை 2013 ஆம் ஆண்டு நீதிமன்றம் ரத்து செய்து உத்தர விட்ட பிறகு, பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு கேட்டு, 2015 ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஆகும்; பின்னர் 2016 இல் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பினை திரும்பப் பெற்றுக் கொண்டது; அதனைத் தொடர்ந்து, 2016 ஆம் ஆண்டு முதல் அகில இந்திய மருத்துவக் கழகத்தின் நெறிமுறைகள் (Regulations) செயல்பாட்டில் உள்ளன. ஆகவே, சலோனி வழக்குத் தானாகவே ‘‘பலனற்றதாக’’ (Infructuous) ஆகிவிட்டது.
‘மில்லியன் டாலர்’ கேள்வி!
முன்னேறிய ஜாதியினரில் உள்ள பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரி வினருக்கு 10 சதவிகிதம் இட ஒதுக்கீட்டை அமல்படுத்துமுன்பு - உச்சநீதிமன்றத்தையா அணுகினார்கள்? இல்லையே! இப்போது சலோனி குமாரி வழக்கு நிலுவையைக் காட்டி, உச்சநீதிமன்றத்தை அணுகச் சொல் லும் மத்திய அரசின் நிலைப்பாடு நியாயமா? முரண்பாடு அல்லவா என்ற கேள்வி ‘மில்லியன் டாலர்’ கேள்வியாகும்!
இல்லாத ஊருக்கு, போகாத பாதையில், தெரியாத மனிதரிடம், புரியாத மொழியில் வழிகேட்ட கதைபோல, நாட்டின் 75 விழுக்காடு மக்களை ஏமாற்றச் செய்வதை முறியடிக்க, இறுதியாக மக்கள் மன்றத் தால்தான் முடியும் என்ற முடிவையே ‘தற்போதைய கண்ணாமூச்சி விளையாட்டு' மக்களுக்கு உணர்த்துகிறது!
வெற்றி பெறுகிறவரை
நாம் ஓயமாட்டோம்; ஒதுங்கமாட்டோம்!
இந்திய அளவில் மக்களைத் திரட்டி போராட வேண்டிய மாபெரும் நெருக்க டியும், தேவையும் வரலாற்றுக் கட்டாயமாகி விட்டது!
தமிழ்நாடு தலைமை தாங்கும் - வெற்றி பெறுகிறவரை நாம் ஓயமாட்டோம்; ஒதுங்கமாட்டோம்!
கி. வீரமணி,
தலைவர்
திராவிடர் கழகம்
சென்னை
23.6.2020
No comments:
Post a Comment