தமிழ்நாட்டின் தொன்மை வரலாறு வெளியில் வந்து விடக் கூடாது - எப்படியும் இருட்டடிப்புச் செய்யப்பட வேண்டும் என்பதில் பார்ப்பனர் எப்பொழுதும் கண்ணும் கருத்துமாகவே இருந்து வருகிறார்கள்.
கீழடி ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, அதில் மிகப் பழங்கால தமிழர் நாகரிக அடையாளங்கள் கிடைத்தன என்றவுடன் அந்த ஆய்வை முடக்க என்னென்னவெல்லாம் செய்தார்கள் என்பதை நாடறியும்.
திராவிடர் கழகம் உட்பட பல்வேறு கட்சிகளும் வீதிக்கு வந்து போராடிய நிலையில்தான் மீண்டும் அதற்கு புத்துயிர் வந்தது. ஆனாலும் அதற்குப் போதிய நிதி ஒதுக்கப்படவில்லை.
கீழடி ஆய்வில் மும்முரமாக இருந்த தமிழர்களின் தொன்மையை வெளிச்சத்துக்கு கொண்டு வருவதில் ஓர் ஆய்வாளர், நிபுணர், ஓர் அதிகாரி என்ற முறையில் அமர்நாத் இராமகிருஷ்ணன் நேர்மையாக நடந்து கொண்டார் என்பதற்காக அவர் வெளிமாநிலத்திற்குத் தூக்கி அடிக்கப்பட்டதும், அமெரிக்காவில் ஆய்வுரை நிகழ்த்திட அவருக்கு அழைப்பு வந்த நிலையில் அதற்கும் அனுமதி மறுக்கப்பட்டதெல்லாம் நமக்கு நன்றாகவே தெரியும்.
'கேரள கேசரி' என்னும் ஆர்.எஸ்.எஸ் மலையாள இதழ் ஒன்றில் முன்னாள் அகழ்வாராய்ச்சித்துறை ஆணையர் பி.எஸ் அரிசங்கர் மிக நீண்ட கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். ஆர்.எஸ்.எஸின் இணைய இதழான 'விஜயவாணி'யும் வெளியிட்டுள்ள அந்தக் கட்டுரையில் அவர் துவங்கும் போதே திமுக தலைவர் களில் ஒருவரான கனிமொழி. தமிழ்மய்யம் ஜகத்கஸ்பர் மற்றும் சில தமிழார்வலர்களை அழைத்துக் கொண்டு அன்றைய அகழ்வாராய்ச்சித்துறை அதிகாரியாக இருந்த அமர்நாத் இராமகிருஷ்ணன் அவர்களுடன் மதுரைக்கு அருகில் உள்ள கீழடி என்னும் அகழாய்வுத் தளத்தில் பார்வையிட வந்தார்களாம். இது எவ்வகையில் குற்றம்? ஆனால் பி.எஸ். அரிசங்கரோ ஆவேசப்படுகிறார்.
அதாவது, 'விடுதலைப்புலிகளின் ஆதரவாளரான ஜகத்கஸ்பர் போன்றவர்கள் அங்கு பார்வையிடச் சென்ற பிறகுதான் கீழடியில் கண்டெடுக்கப்பட்ட கலைப்பொருட்கள் அனைத்தும் கருநாடகாவில் உள்ள உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகத்திற்குச் செல்லவிடாமல் நீதிமன்றத்தில் தடை வாங்கப்பட்டது, இதில் சூழ்ச்சி உள்ளது' என்றும் கூறியுள்ளார்.
இவர் இப்படி வெறுமனே கூறவில்லை. கீழடியில் உள்ள அடையாளங்களை கிறிஸ்தவ மத அடையாளமாக மாற்ற முயற்சி செய்து வருகின்றனர், இதன் காரணமாகத்தான் அங்குள்ள எந்த பொருட்களையும் தமிழகத்தை விட்டு வெளியே கொண்டுசெல்ல தடை கோருகின்றனர் என்று போகிற போக்கில் கதைவிட்டுள்ளார். இதற்கு திமுக ஆதரவளித்து வருகிறது என்றும் அபாண்டமாக எழுதியுள்ளார்.
அமர்நாத் இராமகிருஷ்ணன் ஏன் இவர்களைக் கீழடிக்கு அழைத்து வந்தார், இதற்கு பின்னால் இருக்கும் சதித்திட்டம் என்ன என்பதை வெளியில் சொல்லவேண்டும் என்றும், இது குறித்து மத்திய அரசு விசாரணை நடத்தவேண்டும் என்றும் ஆவேசப்படுகிறார்.
கூடவே திமுக எம்.பி. கனிமொழி குறித்தும் புளித்துப்போன 2 ஜி ஊழல் போன்றவற்றை அவிழ்த்துக் கொட்டி இருக்கிறார்.
இந்தக் குற்றச்சாட்டின் பின்னணி என்ன? கீழடி சென்று தமி ழர்களின் வரலாற்றைச் சிலர் பார்த்து விட்டார்களாம், இவர்கள் சென்று பார்த்ததன் மூலம் கீழடி தமிழர்களிடையே பிரபலமாகிவிட்டது என்று பி.எஸ். அரிசங்கர் ஆத்திரப்படுவது - ஏன்?
அரிசங்கர் அகழ்வாராய்ச்சித்துறையில் இருந்தவர்தானே, கிறிஸ்தவ சகாப்தம் முதலாம் நூற்றாண்டு முதல் துவங்குகிறது, இந்தியாவிலும் அதே நூற்றாண்டிலேயே தோமையர் வந்து சேர்ந்துவிட்டார்.
ஆனால் கீழடி பவுத்த காலத்திற்கு முந்தையது. அப்படி இருக்க கீழடியை எப்படி கிறித்துவ அடையாளங்களில் ஒன்றாக மாற்றமுடியும்?
கீழடி சங்க காலத்திற்கும் முந்தைய நமது பெருமை மிகு வரலாற்றை சான்றுகளோடு அறுதியிட்டிருக்கிறது.
தமிழர்களின் நாகரீகம் வெளிச்சத்திற்கு வந்துவிட்டதே என்ற பொறாமையில் இவர் கனிமொழி, அமர்நாத் இராமகிருஷ்ணன் போன்றவர்களை பொரிந்து தள்ளியுள்ளார்.
இந்த கட்டுரையில் சத்தியமூர்த்தி என்பவர் ஊளையிட்டிருக் கிறார். அவர் வேறு யாருமல்ல, ஆதிச்சநல்லூர் ஆய்வறிக்கையை 16 ஆண்டுகளாக இழுத்தடித்துக் கொண்டிருப்பவர். இவர்கள் இல்லாமலேயே தமிழ்நாட்டிலும், கேரளாவிலும் அகழாய்வு நடக் கிறது. அதுதான் இந்த பிதற்றலுக்குக் காரணம்.
கேரள மாநிலம் பட்டளம் என்ற ஊரிலும் அகழாய்வுகள் நடந்துகொண்டு வருகின்றன. அங்கும் தமிழர்களின் வரலாறு வெளிப்படுகிறது, ஆகையால்தான் இவர்கள் கோபமாக இப்படி பிதற்றிக்கொண்டு இருக்கிறார்கள்.
சரி இவ்வளவு அக்கறை கொண்டு எழுதியவர் யார் தெரியுமா? சுமார் 6 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சுட்ட பானைகளை எழுத்துக்களோடு பயன்படுத்திய ஆதிச்சநல்லூர் குறித்து அகழாய்வு நடத்தி 16 ஆண்டுகள் ஆகியும் பலமுறை நீதிமன்றமே கண்டித்தும் இன்றுவரை ஆய்வறிக்கை கொடுக்காதவர்தான் இந்த பி.எஸ்.அரிசங்கர். இப்போது இவர்களின் நோக்கம் என்னவென்று புரிந்திருக்குமே! இவர்களுக்கு கனிமொழி, உள்ளிட்டோர்மீது பிரச்சினை இல்லை. கீழடி குறித்த உண்மைகள் வெளிவருகிறதே என்ற அச்சம்தான் இவர்களை வதைக்கிறது.
வரலாற்றைத் தங்கள் வசதிக்கேற்ப வளைத்து எழுதுவதில் நிபுணர்களான பார்ப்பனர்கள், கீழடி விடயத்திலும் தங்கள் பூணூல்தனத்தைக் காட்டாது இருப்பார்களா?
சிந்து சமவெளி நாகரிகம், திராவிடர் நாகரிகம் என்று திட்டவட்டமாகத் தெளிவான பிறகு, வாஜ்பேயி பிரதமராக இருந்தபோது மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சராக இருந்த முரளிமனோகர் ஜோஷி காளையை குதிரையாக கிராபிக் முறையில் மாற்றி, ஆரிய நாகரிகம் என்று தகிடுத்தத்தம் செய்தவர்களின் பரம்பரையாயிற்றே! தமிழ்நாடு அரசு எச்சரிக்கையாகக் கீழடியை கையாள வேண்டும்.
No comments:
Post a Comment