தலைவரென்போர் யாரெனக் கேட்டால்...! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, June 20, 2020

தலைவரென்போர் யாரெனக் கேட்டால்...!

ஊன்றிப் படித்து உண்மையை உணருங்கள்!


கடலூர் வீரமணி


65 ஆண்டுகளுக்கு முன்னால், டார்பிடோ ஏ.பி.ஜனார்த் தனம் நடத்திய ‘தோழன்’ இதழில், அன்றைய திராவிட மாணவர் கழகப் பொறுப்பாளராக இருந்த 22 வயது நிரம் பாத இளைஞர்-மாணவர் “கடலூர் வீரமணி” (இன்றைய திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர் கள்) எழுதிய கட்டுரை.


ஆந்துரு மராய் (Andre Mourois என்ற பிரெஞ்சுப் பெயரை அப்படித் தான் உச்சரிக்க வேண்டும்) என்ற புகழ்பெற்ற பிரெஞ்சு எழுத்தாளரின் “The Art of Living" என்ற நூலின் 9 அத்தியாயங்களில், தலைமைப் பண்புக் கான இலக்கணத்தைப் படித்துவிட்டு, அந்த இலக்கணத் திற்கு ‘வாழும் இலக்கியமாக’த் தாம் ஏற்றுக்கொண்ட தலைவர் திகழ்வதைக் கண்டு, தந்தை பெரியாரின் தலைமைத்துவத்தின் பொருத்தப்பாட்டை வியந்து எழுதி யுள்ளார் அன்றும்-இன்றும் பெரியாரின் மாணவரான நம் ஆசிரியர் அவர்கள்.


‘ஒப்பற்ற தலைமை’யைத்


தப்பாமல் கரம்பிடித்ததோடு,


அதைத் தக்கவகையில் எடுத்துக்காட்டும்


பாதை மாறாத நடை...


தெளிவான கருத்தோட்டம்...


இளமை முதலே சிந்தனைப் பாய்ச்சல்...


அய்யாவின் அடிச்சுவட்டில்


தொடரும் பயணம்..!’ எப்படிப்பட்டது என்பதைத் தெரிந்து,


படிக்கப் படிக்க வியப்பூட்டுகிறது இக் கட்டுரை!


இன்றைய இளைஞர்கள் அவசியம் படித்துணர வேண்டிய பாடம்!


ஊன்றிப் படித்து உண்மையை உணருங்கள்!


- தேடிப் பிடித்தவன்


(ஆந்துரு மராய் (Andre Mourois)) என்பவர் இந்தக்காலத்து பிரபல பிரெஞ்சு எழுத்தாளர். அவரு டைய எழுத்து நடையையும் கருத்துச் செறிவையும் பெரும்பாலோர் பாராட்டுகின்றனர். அவர் எழுதியுள்ள "வாழ்க்கைக்கலை" என்ற நூலில் உள்ள "தலைவரிலக் கணம்" என்பதைப் பற்றி தீட்டப்பட்டுள்ள கட்டுரை மிக வும் உயர்ந்ததாகயிருக்கிறது. அம்மாபெரும் எழுத்தாளர் வரையறுத்த தலைவரிலக்கணம் திராவிடத் தந்தை பெரியார் அவர்கட்கு எப்படி பெரிதும் பொருந்துகின்றது என்று எடுத்துரைப்பதே இக்கட்டுரையின் நோக்கம். படியுங்கள்)


உலக அறிஞர் பெர்னாட்ஷா ஒரு முறை இந்தியத் துணைக் கண்டத்தைப் பற்றி கருத்து தெரிவித்தபோது சொன்னாராம், "எங்கள் நாட்டில் சிறந்த அரசியல் இருப்பதற்கும், உங்கள் நாட்டில் திருந்தாத அரசியல் காணப்படுவதற்கும் காரணம் என்ன தெரியுமா? எங்கள் நாட்டில் (பிரிட்டனில்) தலைவர்கள் குறைவு; பின்பற்றுபவர்கள் ஏராளம்; ஆனால் உங்கள் நாட்டிலோ தலைவர்கள் அதிகம்; - பின்பற்றுபவர் மிகமிகக் குறைவு" என்று.


இது தமிழ்நாட்டின் பொதுவாழ்வின் சரியான படப் பிடிப்பு என்று கூறலாம். ஒரு நாட்டில் அளவற்ற கட்சிகள் இருந்தால், மக்களின் சிந்தனையிலே தெளி வில்லை என்று தானே பொருள்? நாட்டிலுள்ள பல் வேறு கட்சிகளின் நிலைமைக்கு அதன் தொண்டர்கள் பொறுப்பாளர்கள் அல்ல! அதன் தலைவர்களே! சுய நலம், சூது, சூழ்ச்சி, முன்னுக்குப்பின் முரணான செய்கை, தெளிவற்ற எண்ணங்கள், மாறாத மன உறுதியின்மை; இவை தமிழ் நாட்டுத் "தலைவர்களின்" பண்புகளாகத் தற்போது காட்சியளிக்கின்றன. இந்தச் சூழ்நிலையில் நல்ல பண்புகள் வாய்ந்த, தேர்தல் போதை ஏறாத, புகழ் விளம்பரம் - இவை பற்றி சற்றும் கவலைப்படாத ஒரே ஒரு தலைவர் பெரியார் அவர் களாவர். வயதில், அறிவில் முதியராம், வாய்மைப் போருக்கென்றும் இளையராம், பெரியார் இராமசாமி. தமிழ்நாட்டுப் பொது வாழ்க்கைச் சேற்றிலே முளைத்த செந்தாமரை! ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு "A leader is born and not made" என்று. தலைமை வகித்து நடத்தும் ஆற்றல் என்பது இயற்கையிலேயே அமைதல் வேண்டும். அது செயற்கையால் வருவ தன்று என்று அப் பழமொழிக்கு விளக்கம் கூறலாம்.


தலைவருக்குரிய முதல்பண்பு அவரைத் தலைவர் என்று மற்றவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். மரியாதைக் காட்ட வேண்டும். மதிப்பளிக்க வேண்டும். ஆனால் இன்று தமிழ்நாட்டிலோ மற்றவர்கள் பார்த்து தலைவர்களாக மதிப்பதற்கு முன்னால், தானே சென்று தலைமைப்பீடம் ஏறும் நிலை மிக மிகச் சாதாரணம். கட்டுப்பாட்டுடன் - ராணுவக் காட்டுப் பாட்டுடன் - தலைவருக்குப் பெருமையும் மதிப்பும் தந்து ஆணையைச் செயலாக்கிக் காட்டும் செம்மல் களைக் கொண்ட சிந்தனைக்கூடம் திராவிடர் கழகம் என்பதை மறைப்பவர்கள், உண்மைக்குத் திரை போடுபவர்கள். திராவிடர் கழகத்தில் தலைவர்கள் கிடையாது. தலைவர் உண்டு, சலியாத உழைப்பு, நிறைந்த ஊக்கம், சிறந்த சிந்தனை, பரந்த அனுபவம், எதிர்ப்புக்கஞ்சாப்பண்பு, இவை படைத்தவர் என்று தொண்டர்கள் பெருமையோடு சொல்லிக் கொள்ளும் தலைவர் பெரியார் இராமசாமி அவர்கள். 1944இல் சேலத்தில் கூடிய ஜஸ்டிஸ் கட்சி மாநாட்டில் தலைமைப் பீடத்தைக் கைப்பற்ற ஒரு கூட்டம் சதி செய்த நேரத்தில், "எங்கள் தலைவர் பெரியாரே" என்று விண்ணதிர, மண் அதிர எழுந்த முழுக்கம் ஒன்றே பெரியாரின் செல்வாக்கைக் காட்ட போதுமான சான்றாகும். அத்தகைய ஆதரவு, வளர்பிறையாகதான் இன்றும் காட்சியளிக்கிறது. இன்றுமட்டுமல்ல, என்றும்! அவர் தம் கட்டளை, அதைத் தலைமேற்தாங்கி களம் செல்லக் காத்துக் கிடக்கும் காளையர்கள் - இவையில்லாவிட்டால் வீழ்ந்த தமிழகத்தில் எழுச்சி ஏற்பட்டிருக்க முடியுமா?


இரண்டாவது, ஒரு தலைவனுக்கு நாட்டு நிலை மையை உணர்ந்து செயலாற்றக் கூடிய வினைத் திட்டம் இருக்கவேண்டும். நாம் எவ்வளவு பொறுப் பான முறையில் செயலாக்கிக்காட்ட வேண்டும் என்ற கணக்குத் தெரிய வேண்டும். எண்ணித் துணிய வேண்டும் என்ற தத்துவம் தலைவரிலக்கணத்தின் மிக முக்கிய அம்சம், எனலாம். யாரிடத்தில் எதை ஒப் படைக்க வேண்டும்; எப்போது வெளியிட வேண்டும், என்பதை அறியும் திறனாய்வு சக்தி தலைவனுக்கு மிக மிகத்தேவை. வள்ளுவர் கூறியது போல், "இதனை, இதனால், இவன் முடிப்பன் என்றாய்ந்து, அதனை அவன் கண் விடவேண்டிய" அந்த அறிவின் கூர்மை தலைவருக்குரிய இன்றியமையாத பண்பாகும். இத்தகைய பண்புகளில் ஒன்றுதிரண்ட சக்திதான் பெரியார் இராமசாமி. பெரியாருக்கு இருக்கும் வைர நெஞ்சம், எஃகு உள்ளம், வினைத்திட்பம் - இவைக ளைக் கண்டு மாற்றாரும் மதிப்பர்; மரியாதை காட்டுவர்.


மூன்றாவதாக, தலைவர் அடிக்கடி கடுமையாக நடந்து கொள்ள வேண்டும் என்கிறார் ஆந்துருமராய்.


வெட்டிப் பேச்சு பேசுவதை வெறுத்து ஒதுக்கித் தள்ள வேண்டும் தலைவர்கள் என்பவர்கள். நாட்டின் முன்னேற்றம், கொண்ட கொள்கைகளை செயலாக மலரச் செய்வது எப்படி என்பது பற்றி சிந்தனை - இவை தாம் அத்தலைவரின் நேரத்தை எடுத்துக் கொள்ளக் கூடியவைகளாக அமைய வேண்டும். ஆனால் இன்றைக்குத் "தலைவர்கள்" என்று தங் களை அழைத்துக் கொள்ளுபவர்கள், கொள்ள விரும் புபவர்கள் நம்நாட்டில் பல தீமைக்கு அடிமைகளாகயிருக்கின்றனர். அந்தோ பரிதாபம்! சீட்டாட்டம், வெட்டிப் பேச்சு, சில்லறைப் பிரச்சினைகள், சுயபுராணம் - இவைதாம் அவர் தம் இனிய பொழுது போக்குகள்! அய்யா அவர்கள் எப்போது தாம் பொன்னினும் பெரிதாக போற்றும் காலத்தை வீணாக்கியிருக்கிறார்? விரல் விட முடியுமா? முடியாதே? சோம்பல் அவர்தம் தீராப் பகைவன்; சுறுசுறுப்பு - எறும்பின் சுறுசுறுப்பு - அவர் தம் சோர்விலா நண்பன்.


"A great leader is a great personage, he is unbiased and without self - interest" ஒரு பெருந்தலைவர் என்பவர் மிகப் பெருஞ் சக்தியுள்ள ஒரு பேரறிஞர். அவர் விருப்பு வெறுப்பற்றவர்; சுயநலமில்லாதவர். பெரியாரின் சுயநலமெல்லாம் தாழ்த்தப்பட்ட தன் இனத்தை உயர்த்துவது எவ்வாறு என்பதில் தானே தவிர வேறில்லை. அவர் சொந்த வாழ்வை - உல்லாச வாழ்வை இளைமையிலே துறந்து, இன்று பொது வாழ்க்கைப் புழுதியில் உழலு கின்றார். அது சுயநலத்திற்காகவா? அவரிடத்தில் பெட்டி தூக்கியவர்களெல் லாம் மந்திரிகளாய் பவனி வருகின்ற இந்நேரத்தில் அவர் நினைத்தால், பெரும் பதவி அவருடைய கால் களை முத்தமிடாதா? நேர்முகமாகவும் மறை முகமாகவும், பெரியாரைத் தூற்றும் பெரியவர்கட்கு நாம் இடும் காணிக் கைகள் இவைகள். பெரியாரைப்பற்றி நாம் நன்றாக மனத்திலிறுத்த வேண்டியது ஒன்று! பெரியார் ஒரு தனி மனிதர் அல்ல; ஒரு இயக்கமே அவர், [He is not an individual, but an institution] அவர் யாருக்கும் சொந்த மானவரல்ல; தனிப்பட்ட முறை யில்! திராவிடத்தின் பொதுச் சொத்து என்பதே.



அடுத்தபடி உழைப்பு, சக்தி, சொல்வன்மை, பொறுமை - இந்நான்கும் மிக்க இன்றியமையாத பண்புகளாம்; ஒரு தலைவருக்கு. பெரியாரின் உழைப்பு இத் தள்ளாடிய வயதிலும் சளைத்ததா? நம் போன்ற இளைஞர்கள் கண்டு வெட்கித் தலைகுனிவ தாகவல்லவோ அமைந்துள்ளது? எடுத்த காரியம் எதுவாயினும், ஏற்கக் கூடா இன்னல்கள் எத்துணை ஆயி ரம் வந்தாலும், விடாப்பிடியாக, அதைச் சாதித்து வெற்றிகாணும் வீரத்தின் விளைநிலம் பெரியார் என்பது தெளிவான உண்மை. அந்த சக்தியில் அவருக்கு நிகர் அவரே. சொல்வன்மை, பெரியாரின் பிறப்புரிமை, சொலல்வல்லர் சோர்விலார் பெரியார் இராமசாமி; எனவே அவரை இகல் வெல்லல் யார்க்கும் அரிது! அரிது!! பாமரனிலிருந்து, பட்டதாரி வரை பரவசத்துடன் உட்கார்ந்து இவர் மணிக்கணக் காகப் பேசும் பேச்சை சிறிதும் சலிப்பின்றி - இவர் சிந்தனைக்குத் தரும் உணவை உண்ணும் காட்சி உயர்ந்ததன்றோ!


தலைவருக்கிருக்க வேண்டிய மிக முக்கிய பண்பு, தான் ஆற்றப் போகும் முக்கிய செயல்களை முன்னா லேயே தெரிவித்து, அதைச் செயலுருவில் செய்ய இயலாது அழித்து விடக்கூடாது. தேவையான நேரத் தில், தேவையானவர்களிடம் மாத்திரமே, சில திட்டங் களை வெளியிட வேண்டும். பலவற்றை முன்னால் சொல்வதின் மூலம், அவை கருவிலேயே அழிக்கப் பட்டுவிடும். ஆகவே உரிய காலத்தில், உரியவர்களி டம், உரிய முறையில் சொல்ல வேண்டும் என்கிறார் அப்பிரெஞ்சு எழுத்தாளர். பெரியார் அவர்கள் "இக் கலையில்" மிகவும் தேர்ந்தவர் என்பதை நாடு நன்கு அறியும்; ஏன் அவருடைய எதிரிகளே நன்றாக உணர்ந்து வைத்துள்ளார்கள். சமீபத்தில் கொடி எரிப்பு போராட்ட திட்டத்தை வெளியிட்டாரே, அது ஒன்றே - அந்த முறையே - சிறந்த எடுத்துக்காட்டு. கோழை களை விலகச் செய்தார்; வீரர்களை களங் காணச் செய்தார்; போரில்லாமல் வெற்றி கண்டார்.


சிறந்த உடல் நலமும், நிறைந்த தைரியமும், தலைவருக்கு மிகமிகத் தேவை. நல்ல உடல் நிலை விரும்பத்தக்கது மாத்திரம் அல்ல, தேவையான தும்கூட. பெரியார் அவர்கள் 77ஆவது வயதிலும், 27 வயது இளைஞனைப்போல் ஏறு நடை போடுவதின் ரகசியம் இதுதானே! அய்யா அவர்கட்குள்ள அஞ்சாமை வேறு எவரிடத்தும் காணாத ஏற்புடைப் பண்பாகும்.


எதிர் நீச்சலில் சளைக்காமல் நீந்தி, வெற்றிக்கரைச் சேரும் விவேகி; மலை குலைந்தாலும் மனங் குலையா மாவீரரல்லவா நம் திராவிடத் தந்தை! தன்னுடைய லட்சியங்கள், உழைப்பு இவைகளில் மட்டுமே நம் பிக்கை வைத்து, வருவோரைப் பற்றியும், போவோ ரைப்பற்றியும், கவலைப்படாமல், இயந்திர உழைப் புடன் இருக்கும் தலைவர் தென்னாட்டிலேயே யார் பெரியாரைத் தவிர்த்து?



மேலும், தலைவர் மிகவும் எளிய முறையில் வாழவேண்டும். எளிமையை சிறந்த பழக்கமாகவே ஆக்கிக் கொள்ளவேண்டும். தலைவர் எங்கே என்றால், பார்க்க முடியாத இடத்தில் உள்ளார் என்ற பதில் ஆவலோடு சென்று பார்க்க விரும்பும் தொண் டனுக்குக் கிடைக்குமானால் அவரை பொதுவாழ் விலே பயன் காணும் பக்குவம் வாய்ந்தவர் என்பதைத் தவிர, சுயநலத்தின் பிம்பம் என்று சொல்வதைத் தவிர, வேறு என்ன கூற முடியும்? பெரியார் எப்போதும் எளிய வாழ்வு வாழும் எளிய தலைவர். தனக்கென வாழா பிறர்குரியாளர். தனக்குத் தகுதியி ருந்தும் அதை இத் தள்ளாடிய வயதிலும் புறக்கணித்து. எளிய வாழ்வு வாழ்ந்து, உழைக்கும் தொண்டர்களைக் கண்டு, உள்ள உரம் ஊட்டி, உலவி வருகின்ற தலை வர் நம் தலைவர் என்று ஒவ்வொரு திராவிடனும் (அவன் நன்றியறிவு உள்ளவனாகயிருந்தால்!) பெரு மைப் படவேண்டும். தந்தை பெரியார், நல்ல கோடையிலும்கூட மூன்றாம் வகுப்பில் தான் ரயிலில் பிரயா ணம் செய்வார். யாரும் கேட்டால், "நான்காம் வகுப்பில் லையே, என்ன செய்வது?" என்பார். பயன் கருதாது, தன் நம்பிக்கையுடன் வாழும் நம் தலைவரி டம் உள்ள முனை மழுங்காத ஆயுதங்களில் அஞ்சாமை முதல் தரமானது.


அடுத்த முக்கிய பண்பு, தலைவர் எப்போதும் அமைதியை இழக்காமல், அனாயாசத்தோடு, அதிர்ச்சி தரும் செய்தியைக்கூட கேட்டு முடிவு செய்ய வேண்டும். பெரியாரிடம் சிற்சில நேரங்களில் பரபரப்பான செய்திகளைக் கொண்டு வந்து பரிமாறுவார்கள். அது நமக்கெல்லாம் அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும், தரக்கூடியதாக இருக்கும். ஆனால் அய்யாவோ, "ஓ! அப்படியா! அதில் ஆச்சரி யப்படுவதற் கொன்று மில்லையே, இது முன்னாலேயே நடந்திருக்க வேண்டியதாயிற்றே; எதிர்பார்த்தது தானே" என்பார் அனாயாசமாக.


தலைவருக்குள்ள மிக முக்கிய பண்புகளில், ஆந்துரு மராய் அதிகம் வலியுறுத்துவது ஒழுக்கத் தைப் பற்றி; சிறந்த நடத்தையைப் பற்றி; அவர் எந்தத் தலைவராயிருப்பினும் அவர் ஒழுக்கத்தின் உயர் சின்னமாக விளங்க வேண்டும். தலைவனை பின்பற்று வதென்றால் ஒழுக்கமும் அதனுடன் சேர்ந்ததே. ஒழுக்கத்திற்கே பொது வாழ்விலிருக்கின்ற எல்லோ ரும் முதலிடம் தரவேண்டும். ஒழுக்கமில்லாத தலை வனை விட ஒழுக்கத்துடன் வாழும் சாதாரணத் தொண்டன் எத்தனையோ மடங்கு உயர்ந்தவன் என்பதை பொதுவாழ்வில் உள்ளவர்கள் உணர்ந்தே தீரவேண்டும். "நான் வீட்டில் எப்படியிருந்தால் தான் என்ன, உங்களுக்கு வேண்டியது என் கொள்கை அறிவுரை தானே" என்று கூறுபவர்கள் பொது வாழ்வின் மின்மினிகளே தவிர, ஒளி விளக்குகள் ஆக மாட்டார் என்பதை உணர வேண்டும். சில "தலைவர்களுடைய" ஒழுக்க ஈனத்திற்கு பதில் கூறுவார்கள் "அவர்களும் மனிதர்கள் தானே" என்று! வேடிக்கையான, வினோதமான பதில்! அவர்கள் மனிதர்கள் (மிருக உணர்ச்சிகள் மங்கி, மறையாமல், தலைவிரித்தாடும் மனிதர்கள் என்பது இன்னும் பொருந்தும்) என்பதை நாம் மறுக்கவில்லை. அவர்கள் சாதாரண மனிதர்கள் என்ற தகுதியிலேயே இருக்க வேண்டியவர்களே தவிர, தலைவர்கள் என்ற தகுதிக் குச் சிறிதும் லாயக்கற்றவர்கள் என்பது நம் தாழ்ந்த கருத்து. "ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்" என்ற குறளை தனி மனிதன் மறந்தாலும் - தலைவர்கள் மறக்கக் கூடாது. அறிவு, ஒழுக்கம் இவை இரண்டும் தேவைதான். ஆனால் இந்த இரண்டில் எது தேவை என்றால், ஒழுக்கத்திற்கே நாம் தரும் முதலிடம் செல்லும் என்பது உறுதி. ஒழுக்கம் என்ற ஒரே சொல்லில் எல்லாம் அடங்கி விடும். நாணயம், நேர்மை, உண்மை, சொன்ன சொல் தவறாமை இவைகளின் கூட்டுத்தொகைதானே ஒழுக்கம்!


இத்தகைய பண்புகள் ஒருங்கே சேர்ந்த ஓர் உருவம் தென்னாட்டின் பொதுவாழ்வில் உலவுகிறது என்றால் அவர் நம் தலைவர் பெரியார், பெரியார் ஒருவரே! காண்டேகர் சொன்னார், "தலைவன் என்றால் தன் காலத்திற்குப் பிறகு 50 வருடங்களுக்கு குறையாமல் பார்க்கக் கூடிய தன்மை உள்ளவனே", என்றார். இந்த உரைகல்லில் உரைத்துப் பார்த்தாலும் மாற்றுக்குறையாத தங்கமாகக் காட்சியளிக்கின்றார் நம் தந்தை பெரியார். இந்த உரை கல்லில் உரைத்தால் இன்றுள்ள பலர் செல்லாத உலோகங்கள் எனக் கண்டுபிடிக்கப்படுவார்கள் என்பது உறுதி. புயல் வரினும் அதைப் புன்னகையோடு சமாளிக்கும் பண்பு நம் பொன்னிற மேனியரைத் தவிர வேறு யாருக்கு இருக்கிறது? சுமார் 2000 ஆண்டுகளாக சுய உணர் விழந்து, சுயமரியாதையற்றுக் கிடந்த ஒரு மாபெரும் இனத்தை 30 ஆண்டுகளில் தட்டியெழுப்பி, சுயமரி யாதை உணர்வைப் பெறச் செய்ய யாரால் முடியும் பெரியாரை தவிர?


கடைசியாக ஆந்துருமராய் கூறும் வார்த்தைகள் நினைவில் நிறுத்த வேண்டியவை, "சிறந்த தலை வனுக்குக் கீழ்ப்படியா எந்த சமூகமும் - நாடும் - உருப்படவே முடியாது, அதன் அழிவு நிச்சயம்."


ஏ! தமிழகமே! திராவிடமே!! நீ என்று தான் தகுதியுள்ள தலைவனைப் போற்றப் போகின்றாயோ! தகுதியுள்ள தலைவனுக்கு கீழ்ப்படிந்து பணியாற்றப் போகின்றாயோ!


- 'தோழன்', 20.11.1955


No comments:

Post a Comment