சங்கராச்சாரியாரின் பார்வையில் ரீஃபார்மர்கள்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, June 26, 2020

சங்கராச்சாரியாரின் பார்வையில் ரீஃபார்மர்கள்!

'துக்ளக்' பதில் சொல்லட்டும்


*மின்சாரம்


‘ஸ்ரீராமகிருஷ்ணவிஜயம்‘ ஆற்றி வரும் தொண்டு குறித்து ‘துக்ளக்‘ (17.6.2020) என்ன கூறுகிறது?


ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் காட்டும் ஆன்மிகப் பாதையை அழிக்கும் திராவிட மாயையிலிருந்து விடுபட்டால் வெளிவரும் தூயதமிழகம் அந்தப் பாதையைக் கண்டுபிடித்து, பாரத நாட்டுக்கே, ஏன் உலகுக்கே வழிகாட்டும் தகுதி பெறும் என்று கூறுகிறார் திருவாளர் சாமிநாதன் குருமூர்த்தி அய்யர்வாள்.


அந்த ஆன்மிகம் ஒழுக்கம் சார்ந்ததா - பக்தி சார்ந்ததா என்பதுதான்முக்கியம்.


ஒழுக்கத்தைப்பற்றி கடவுள் மறுப்பாளரான தந்தை பெரியார் இவ்வாறு கூறுகிறார்.


“கடவுளாகட்டும், பக்தியாகட்டும், மோட்சமா கட்டும் வைத்துக் கொள், எதுவானாலும் அது தனிப்பட்ட மனிதனுடைய தனிச் சொத்து, உலகத் துக்குப் பொதுச் சொத்தல்ல. ஒழுக்கம், நாணயம் பொதுச்சொத்து; நான் பக்தியில்லாமல் நரகத்திற்குப் போகிறேன் என்றால் உங்களுக்கு என்ன?


நான் போய் விட்டுப் போகிறேன். நான் கடவுளை நம்பவில்லை, அதைக் கொழுக்கட்டை என்று சொல்லுகிறேன்; நான் போய் விட்டுப் போகிறேன் உங்களுக்கொன்றும் நஷ்டமில்லை. பாருங்கள்! அதனாலே எனக்குப் பக்தியில்லை என்பதாலே உங்களுக்குகென்ன நஷ்டம்?


ஆனால், ஒழுக்கம் இல்லையென்றால் என்ன வாகும் பாருங்கள்? நாணயமில்லை என்றால் என்னவாகும்? உண்மை உணர்வு இல்லை என்றால் என்னவாகும்? இது மூன்றும் இல்லாதது இன்னொரு மனிதனுக்குச் செய்கிற கெடுதிக்குப் பெயர்தானே?


ஆகவே, ஒழுக்கம், நாணயம், உண்மை என்ற உயர்ந்த குணங்களெல்லாம் பொதுச் சொத்து.


மனித சமுதாயத்திலே இது கேடாக இருந்தால் சமுதாயத்துக்கும் கேடு. ஒரு மனிதன் இந்தக் காரி யங்களில் குற்றவாளியாக இருந்தானானால் கண்டிப் பாக இன்னொரு மனிதனுக்குக் கேடு விளைந் திருக்கும். இது முக்கியமில்லை. பக்தி, கடவுள், நம்பிக்கை மதக் கோட்பாட்டின்படி நடக்கிறது. இவைதான் முக்கியமென்றால் மக்களுக்கு என்ன பிரயோஜனம் அதனாலே?”


(சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தந்தை பெரியார் ஆற்றிய உரை 24.11.1964).


“கடவுளாகட்டும், மதமாகட்டும், பக்தியாகட்டும், மோட்சமாகட்டும் வைத்துக் கொள். எதுவானாலும் அது தனிப்பட்ட மனிதனுடைய தனிச் சொத்து -உலகத்துக்கும் பொதுச்சொத்தன்று. ஒழுக்கம், நாணயம் பொதுச்சொத்து (‘விடுதலை’ 16.12.1964).


ஒழுக்கத்தைப்பற்றி தந்தை பெரியார் அவர்களின் கருத்து. ‘துக்ளக்‘ மொழியில் சொல்ல வேண்டுமென்றால் - திராவிட மாயை கருத்து!


சரி. ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் கூறும், ‘துக்ளக்‘ வழிமொழியும் கருத்தென்ன? அவாளின் ஜெகத் குருதானே அவாளுக்கு அத்தாரிட்டி?


காஞ்சி பெரியவாள், திருவாளர் குருமூர்த்தி அய்யர்வாளால் அடிக்கு ஒரு தடவை உச்சரிக்கப் படும் மூத்த சங்கராச்சாரியாராக இருந்த சந்திர சேகரேந்திர சரஸ்வதியின் வாயாலே கேட்டு விடுவோமே!


“நல்ல ஒழுக்கம் இருந்தால் போதுமென்றும், கடவுள் அவசியம் இல்லை என்றும் சிலர்  கூறுகின்றனர். இது தவறான கருத்து - கடவுள் அருள் இல்லையானால் ஒரு தனி நபருக்கோ, நாட்டுக்கோ விமோசனம் ஏற்பட முடியாது”


 (‘கல்கி’ 8.4.1958)


பெரியார் சொல்லுவதையும், பெரியாவாள் சொல்லுவதையும் ஒப்பிட்டு யார் வேண்டுமானாலும் பார்க்கட்டும் - நிதானமாகவே சிந்திக்கட்டும்.


நல்ல ஒழுக்கம் இருந்தால் போதுமென்றும், கடவுள் அவசியம் இல்லை என்றும் சிலர் கூறுகின்றனர் - என்று சங்கராச்சாரியார் கூறுவது மேலே கூறப்பட்ட தந்தை பெரியாரின் எழுத்து மாறாத அந்தக் கருத்தை மறுத்துத்தானே.


நல்லொழுக்கம் தேவையில்லை கடவுள் அருள் தான் முக்கியம் என்று சங்கராச்சாரியார் கூறி யிருப்பது சரிதான்! அதுதானே அவர்களின் ஆன் மிகத்துக்கானது- மதத்துக்கானது -வைதிகத்துக்கு ஆனது - அதைத்தானே சொல்லியிருக்கிறார்.


அதைப் பின்பற்றிதானே அந்த மூத்த பெரியவாள் சந்திரசேகரேந்திர சரஸ்வதியாரின் அடுத்த சீடர் ஜெயேந்திர சரஸ்வதி வாழ்ந்து காட்டினார்.


பக்திப் பரவசமாகக் காட்சி அளிக்கக் கூடிய வர்தான் ஜெயேந்திரர்; அனுதினமும் காஞ்சி காமாட்சியைத் தரிசிப்பவர்தான் - அதே நேரத்தில் அவர் ஒழுக்கமானவர் அல்லவே - அது ஊரறிந்த ரகசிய- உண்மையாயிற்றே - உலகத்துக்கே வெளிச்சமான சங்கதியாயிற்றே.


அக்கிரகார பெண்மணியும் எழுத்தாளருமான திருமதி அனுராதா ரமணன், ஜெயேந்திரரின் ஒழுக்கத்தை நடு வீதியில் போட்டு செதில் செதிலாக உடைத்துக் காட்டிவிடவில்லையா!


“என் கையைப் பிடித்து இழுத்தார்” என்று தொலைக்காட்சியில் கண்ணீரும், கம்பலையுமாகக் கதறவில்லையா?


இந்த விடயத்தில் சங்கராச்சாரியாரைக் காப் பாற்றிட அனுராதா ரமணன்மீது பழி தூற்றிய குருமூர்த்தியின் மூக்கை உடைத்தாரே அனுராதா ரமணன்.


'ஒழுக்கம் பொதுச் சொத்து' என்ற தந்தை பெரியாரின் திராவிடப் பாதையிலிருந்து தமிழ கத்தை மீட்க வேண்டுமாம்! ஜெயேந்திரர் போன்ற ஆன்மிக சிகாமணிகள் நடத்திக் காட்டிய பாதை தான் பாரத நாட்டுக்கே, ஏன் உலகுக்கே தேவையாம்!


எந்தப் பாவங்களையும் செய்யலாம் - அவற் றிற்கும் பிராயச்சித்தம் உண்டு என்று சொல்லுவது எந்த மதமானாலும், ஒழுக்கத்தைப் பாதுகாக்கக் கூடியதுதானா?


சின்ன வயதில் வெண்ணெய்யைத் திருடினான், வாலிப வயதில் பெண்ணைத் திருடினான். அவன்தான் எங்கள் பகவான் கிருஷ்ணன் என்ற சொல்லும் பாதைதான் பாரதத்துக்கு,  ஏன் உலகத் துக்கும் தேவை என்று சொல்வார்களேயானால் அப்படிச் சொல்லுகிறவர்களின் ஒழுக்கமும், யோக்கியதையும் தான் வீதியிலே சந்தி சிரிக்கும்.


சீரங்கத்து யானைக்கு வடகலை நாமம் போடுவதா - தென் கலை நாமம் போடுவதா என்ற சர்ச்சை வீதியிலே அடிதடியாக நடந்ததுபோதாது என்று இலண்டன் ‘பிரிவி கவுன்சில்’   (Privy Council of United Kingdom) வரை கொண்டு சென்றவர்களின் ஆன்மிகத்தை ஆகா எப்படி சிலாகிப்பதோ!


வேஸ்யா தரிசனம் புண்ணியம்


ஸ்பர்ஸனம் பாபநாஸம்


சம்பனம் சர்வ தீர்த்தானாம்


மைதுனம் மோக்ஷ சாதனம்


வேசிகளைப் பார்த்தால் புண்ணியம், அவர் களைத் தொட்டால் பாவம் நாசம், முத்தம் கொடுத்தால் சகல புண்ணிய தீர்த்தங்களிலும் நீராடியதற்குச் சமமான புண்ணியம், உடலுறவு கொண்டால் மோட்சத்தை அடையும் வழி என்று சொல்லிக் கொடுத்த ஆன்மிகம்தான் உலகத்தை உய்விக்கும் என்கிறார்கள், அப்படித்தானா?


'மதச் சண்டைகளும் ஜாதி வேற்றுமைக் கலகங் களும் பல்குவதற்கு ஒரு பெருங்கருவியாய் இருந்ததும் - இருப்பதும் - சமஸ்கிருத மொழியே யாகும். சமஸ்கிருத மொழி நூல்கள் தொலைந்து போகுமானால் இப்போராட்டங்களும் தொலைந்து போகுமென்று வருந்திக் கூறினார் விவேகானந்தர்' (ஆதாரம்: மறைமலை அடிகளார் “தமிழர் மதம்“ பக்கம் 24).


ஸ்ரீஇராமகிருஷ்ண விஜயத்தைத் தூக்கிப் பிடிக்கும் துக்ளக் இப்பொழுது என்ன கூறப் போகிறது? ஸ்ரீ ராமகிருஷ்ண சீடர் சொல்லும் இந்தக் கருத்து, இவர்கள் கூறும் ஆன்மிகத்தை மட்டை இரண்டு கீற்றாகக் கிழிக்கவில்லையா?


கடைசியாக ஒன்று: ‘துக்ளக்‘ கூட்டம் தூக்கிச் சுமக்கும் மறைந்த காஞ்சி சங்கராச்சாரியார் சந்திர சேகரேந்திர சரஸ்வதியார் சமூக சீர்திருத்தவாதிகள் பற்றி என்ன கூறுகிறார்! யாரை மனதில் வைத்துக் கூறுகிறார்?


இதோ அவரே பேசுகிறார்:


“ரீஃபார்ம்களை ஆரம்பித்து விடுகிற லீடர் களையும் ஒழுங்கு தப்பினவர்கள் என்று சொல்லுவதற்கில்லைதான். சாஸ்த்ர, ஸம்பிரதாய விதிகளாகிய ஒழுங்குகளை இவர்களும் விட்ட வர்கள்தான் என்பதால், இவர்களை ஸனாதன தர்ம பீடங்களான மட ஸ்தாபனங்களிலிருக்கிற நாங்கள் ஒப்புக் கொள்ளத்தான் இல்லை என்றாலும், இவர்கள் Personal Life  -இல் (தனி வாழ்க்கையில்) ஸத்யம், ஒழுக்கம்,  தியாகம், அன்பு போன்ற பலவற்றைக் கடைப்பிடித்தவர்கள் என்பதை ஆசேஷபிப்பதற்கில்லை. ஓரளவிற்குப் படிப்பு, விஷய ஞானம் எல்லாம் உள்ளவர்களாகவும் - ஜனங்களை நல்லதில் கொண்டு போக வேண்டும் என்பதில் நிஜமான அக்கறை கொண்டவர் களாகவுமே இந்தச் சீர்திருத்தத் தலைவர்களில் பலர் இருக்கிறார்கள் என்றும் சொல்லலாம்“


(தெய்வத்தின் குரல் மூன்றாம் பகுதி - பக்கம் எண் 35).


மீண்டும் ஒருமுறை பார்ப்போம். இப்படி சொல்பவர் யார்? சாட்சாத் சங்கராச்சாரியார், யாருக்கு நற்சான்று பத்திரம் படித்துக் கொடுக்கிறார்?


சமூக சீர்திருத்தவாதிகளுக்கு (அவர் மொழியில் ரீஃபார்மர்களுக்கு)  என்று சொல்லும் வகையில் யாரை மனதிற் கொண்டு சொல்லியிருக்கிறார்? அவரின் சமகாலத்தில் வாழ்ந்த தந்தை பெரியாரை மனதில் கொண்டுதானே!


இப்பொழுது துக்ளக்கோ, குருமூர்த்திகளோ சொல்லட்டும்!


எந்தப் பாதை தேவையானது? ஆன்மிகப் பாதையா? தந்தை பெரியாரின் திராவிட சுய மரியாதை இயக்கக் கொள்கை வழிப்பாதையா? அவர்களால் சொல்ல முடியாது. நாட்டோர் சிந்திக்கட்டும் - செழுமை பெறட்டும்.


No comments:

Post a Comment