தமிழ்நாட்டில் உள்ள ஆங்கிலப் பெயர்களில் இருந்த ஊர்ப் பெயர்கள் தமிழ் ஒலியில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
தமிழ்த் தெரிந்தவர்களுக்குத் தமிழ் ஒலியும் தமிழ் தெரியாத ஆங்கிலம் தெரிந்தவர்களுக்கு ஆங்கில ஒலியும் நடைமுறையில் இருந்து வந்தது. தமிழில் மாற்றினாலும் ஆங்கிலம் மட்டும் அறிந்தவர்கள் நாம் எதிர்பார்க்கும் வகை யில் ஒலிப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது.
அதுபற்றிய விவாதங்கள் ஒரு பக்கத்தில் நடந்து கொண்டுள்ளன. இந்த நேரத்தில் மிக முக்கியமான நீண்டக் கால கோரிக்கை தமிழ்நாட்டில் இருந்து வருகிறது.
ஆரிய சமஸ்கிருதப் பண்பாட்டுப் படையெடுப்பின் காரணமாகத் தமிழ்நாட்டின் அருந்தமிழ் ஊர்ப் பெயர்கள் சமஸ்கிருதத்தில் மாற்றப்பட்டுள்ளன. அதற்கு என்ன தீர்வு என்பது மிகவும் முக்கியமானது.
மயிலாடுதுறை என்ற பெயர் இடையில் மாயவரம் என்றும், மாயூரம் என்றும் சமஸ்கிருத மயமாக்கப்பட்டது. நீண்டநாள் கோரிக்கையின் அடிப்படையிலும் மறைந்த சட்டப்பேரவை உறுப்பினர் மானமிகு ந.கிட்டப்பா அவர்களின் இடையறாத முயற்சியாலும் மீண்டும் மயிலாடுதுறை என்று நிலை நிறுத்தப்பட்டது. (மயில் என்ற தமிழ்ச்சொல்லுக்கு சமஸ்கிருதத்தில் மயூர் என்று பொருளாகையால் அவ்வாறு ஆரியம் தன் வயப்படுத்தி விட்டது)
இன்னும் எத்தனை எத்தனையோ ஊர்கள் சமஸ்கிருதமய மாக்கப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டுக்காக - திருமரைக்காடு (அழகிய மான்கள் நிறைந்த காடு) என்ற ஊர் இப்பொழுது வேதாரண்யம் என்று நடைமுறைப்படுத்தப்பட்டு விட்டது.
மரை (மான்கள்) என்பதை மறையாக்கி மறை - வேதம் என்றும், காடு என்ற தமிழ்ச்சொல்லை ஆரண்யம் என்றும் வடமொழியாக்கி - திருமரைக்காடு என்ற பெயர் வேதாரண்யம் ஆக்கப்பட்டு விட்டது.
திருமுதுகுன்றம் என்ற அருமையான தமிழில் உள்ள ஊர் விருத்தாசலமாக மாற்றப்பட்டது. குடமூக்கு கும்பகோண மாகவும், குரங்காடுதுறை கபிஸ்தலமாகவும், புளியந்தோப்பு திண்டிவனமாகவும், சிற்றம்பலம் சிதம்பரமாகவும் - இதுபோல எத்தனையோ ஊர்கள். ஆரிய சமஸ்கிருதமயமாக்கப்பட்டு விட்டன. ஆங்கில ஒலியில் உள்ள ஊர்களின் பெயர்களை தமிழ் ஒலிப்படுத்திய தமிழ்நாடு அரசு - சமஸ்கிருதமயமாக்கப்பட்ட தமிழ்நாட்டின் ஊர்கள் பெயர்களைத் தமிழில் மாற்றுவதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும் என்பது தமிழ்நாட்டு மக்களின் நெடுங்கால விருப்பமாகும். இதில் தமிழ்நாடு அரசு அக்கறை செலுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
அதுபோலவே எளிதாக இயல்பாக தமிழில் கூறக் கூடிய சொற்களைக்கூட பயன்படுத்தாமல் வேற்று மொழிகளைப் பயன்படுத்தும் போக்கு நாட்டில் நடைமுறையில் இருக்கிறது.
ஒரு காலத்தில் பஸ் ஸ்டாண்டு என்று ஒலிப்பது வழக்கம். பேருந்து, பேருந்து நிலையம், நகராட்சி ஊராட்சி ஒன்றியம் என்ற சொற்கள் எல்லாம் இயல்பாகவே மக்கள் மத்தியில் உலா வருகின்றன. (ஆட்சி மொழிக் காவலர் கீ. இராமலிங்கனாரை இந்த நேரத்தில் மிகுந்த மதிப்போடு - போற்றுவோம் - நினைவும் கூர்வோம்)
தமிழ்நாட்டின் கடைவீதிகளில் பெயர் பலகைகள் தமிழில் முதலிடத்தில் அமைய வேண்டும் என்று திமுக ஆட்சிக் காலத்தில் குறிப்பாக சென்னை மாநகர தலைவராக (மேயராக) மானமிகு மா. சுப்பிரமணியன் அவர்கள் இருந்தபோது முழு முயற்சி செய்தார்.
பார்ப்பன ஏடுகளோ அந்த முயற்சியைக் கேலி செய்ததுண்டு. பார்ப்பன 'துக்ளக்கோ' மொழி நக்சலைட்டுகள் என்று பட்டம் சூட்டியது.
தமிழை செம்மொழியாக்கினால், காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும்- ஏழை நெசவாளர் வீட்டுத் தறி நிற்காமல் இயங்கும் - ஒரு வேளை கஞ்சிக்கே வழி இல்லாதவருக்கு மூன்று வேளையும் மட்டன் பிரியாணி கிடைக்கும் என்று தினமலர் (13.6.2004) எழுதிற்றே.
அதே நேரத்தில் பிஜேபி ஆட்சியில் ஊர்ப் பெயர்களும், சாலைகளின் பெயர்களும் மதவாதக் கண்ணோட்டத்தோடு மாற்றப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது.
உ.பி.யில் முகல்சராய் சந்திப்பு தீனதயாள் உபாத்தியாயா என்றும் ராஜஸ்தான் மாநிலத்தில் இஸ்லாமியப் பெயரான மியோன் காபாரா என்ற பெயர் மகேஷ்நகர் என்றும், நீண்ட காலமாக அழைக்கப்பட்ட அலகாபாத் மாநகரம் ப்ரக்யாக்ராஜ் என்றும் பைசாபாத் மாவட்டம் 'அயோத்யா' என்று இந்துத்துவா கண்ணோட்டத்தில் மாற்றப்பட்டு இருப்பதைக் கணக்கில் கொண்டு, தமிழ்நாட்டில் சமஸ்கிருதம் ஆகிவிட்ட பெயர்களை மீண்டும் தமிழில் கொண்டு வர முயற்சிக்குமாறு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறோம்.
No comments:
Post a Comment