ஒரே நாடா - ஒரே கல்வியா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, June 24, 2020

ஒரே நாடா - ஒரே கல்வியா

 நாடு முழுவதும் ஒரே மாதிரியாக கல்வியை வழங்க, ஒரே நாடு ஒரே கல்வி வாரியம் என்கிற அமைப்பை நிறுவ மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக்கோரி வழக்குரைஞரும், பா.ஜ.க.வின் முக்கியத் தலைவருமான அசுவினிகுமார் உபாத் யாய் உச்சநீதிமன்றத்தில் பொது நல மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.


இந்திய நாடு என்பது 1947-க்கு முன்பு பல்வேறு சிறிய நாடுகளாக சமஸ்தானங்களாக சிதறிக்கிடந்தது. மவுரியர் மற்றும் அவர்களுக்குப் பின் வந்த குஷாணர்  காலத்தில் நாடு முழுவதும் ஒரே அரசின்கீழ் பெரும்பாலும் வந்தது, அப்படி வந்தாலும் குறுநில மன்னர்கள் மற்றும் இதர மன்னர்களின் ஆளுமைகள் இருந்தன, அவர்கள் வரிசெலுத்தி வந்தனர். மவுரிய மற்றும் குஷாண அரசுகள் பவுத்தத்தை ஆதரித்தன. இவர்கள் காலத்தில் இன்றைய ஆப்கான் முதல் குமரிவரை பவுத்தம் செழித்தது. அசோகரின் மகன் மதுரை வந்து பவுத்த சமயத்தைப் பரப்பியுள்ளார். அதேபோல் கனிஷ்கர் காலத்தில் பவுத்தம் மற்றும் சமணம் இரண்டுமே செழித்து இருந்தன. தமிழகத்தில் இந்த காலகட்டத்தில் அய்ம்பெருங்காப்பியம் மற்றும் திருக்குறள் போன்றவை இயற்றப்பட்டன.


இந்த நிலையில் இரண்டு பேரரசுகளும் முடிவிற்கு வந்த பிறகு வேதசமயம் தழைத்தோங்கியது. இதனால் ஒற்றைப் பேரரசு இந்தியாவில் உருவாக முடியவில்லை. ஆங்கிலேயர் வருகைக்குப்பிறகு நிர்வாக வசதிக்காக துப்பாக்கி முனையில் இந்தியா உருவாக்கப்பட்டது.


சுதந்திரத்திற்குப் பிறகு அவரவர் மொழிக்கெனத் தனித்தனி யாய் மாநிங்களும், அவற்றிற்கென தனித்தனியே மாநில மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிகளும் உள்ளன. இன்று மொத்த இந்திய ஒன்றியத்தையும் தன் ஆளுமைக்குள் கொண்டுவரத் துடிக்கும் அந்த இந்தி எனும் ஒற்றை மொழியைவிட மிகமிகத் தொன்மை வாய்ந்த பல மொழிகளும், அவற்றிற்கெனத் தனித்தனிப் பண்பாடுகளும்  உள்ளன.


அந்த அந்த மாநிலத்தின் கல்வி முறையில், இவை வலுவாய் எதிரொலிக்கின்றன. இந்திய ஒன்றியத்தின் மாநிலங்கள், அவற்றின் மொழி, மொழி சார்ந்த இனம் போன்றவற்றின் வரலாறு தனித்துவம் வாய்ந்ததாகவும் உள்ளது.    இந்தி மொழி பேசும் மாநிலங்களைவிட  இந்தி பேசாத மாநில மக்களின் வரலாறு மிகமிகத் தொன்மை வாய்ந்தது. இவற்றின் கல்வி நிலை, இந்தி பேசும் மாநிலங்களைவிட மிகவும் மேம்பட்ட தாகவே இன்றளவும் இருக்கிறது.


உண்மையில், இந்தி பேசும் மாநிலங்களின் கல்வியில், ஏனைய மாநிலங்களின் பண்பாடு, கலாச்சாரம், வாழ்வியல், போராட்ட வரலாறு போன்றவை அடியோடு விலக்கப்பட்டு, வட இந்தியாவில் தன் தாய்மொழியைத் தொலைத்து, இந் தியைத் தாய்மொழியாய்த் தழுவியோரது வரலாறு மட்டுமே இந்திய வரலாறாகவும் பண்பாடாகவும் கற்பிக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம், இந்தி அன்றி வேற்றுமொழி பேசும் இனங்களை இவர்கள் மாற்றான்தாய் மனப்பான்மையுடன் பார்க்கும் நிலை அதிகரித்து வருகிறது.


தமிழின் தொன்மை இலக்கியம் இலக்கணம் பண்பட்ட வரலாறு போன்றவை மறைக்கப்பட்டு, இந்தியத் துணைக் கண்டம் முழுவதுமே இந்தி பேசுவோரால் மட்டுமே கட்டி யெழுப்பப்பட்டது என்பது போன்ற  பொய்த் தோற்றம் மட் டுமே வடக்கின் கல்விமுறையாக உள்ளது.


மேலும் விடுதலைப் போராட்டத்தின் பின்னரான இந்திய வரலாற்றில், ஏனைய மொழியினத்தாரின் அரசியல் ஆளுமை வரலாறும் அங்கே சொல்லப்படவில்லை.


தமிழகத்தில் சொல்லிக் கொடுக்கும் சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தில்கூட தமிழக வரலாறு குறித்து மேம்போக்காக மட்டுமே உள்ளது. அதே நேரத்தில் வட இந்தியாவில் இந்திய வரலாற்றிற்குத் தொடர்பே இல்லாதவர்கள் அனைவரின் வரலாறும் அதிக அளவில் அழுத்தம் திருத்தமாக கற்றுக் கொடுக்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக சாவர்க்கர் ஒன்றே போதும்; மத்தியப்பிரதேசம், குஜராத் மாநிலப் பாடத்திட்டத்தில் நேருவின் வாழ்க்கை வரலாறுகூட நீக்கப்பட்டுவிட்டது, அங்கு தீனதயாள் உபாத்யாயா, சாவர்க்கர், மூஞ்சே போன்றவர்களின் வரலாறு இந்தியாவின் சுதந்திரப் போராட்ட வீரர்களின் வரலாறாகக் கற்பிக்கப்பட்டு வருகிறது.


ஒற்றைக் கல்விமுறையின் மூலம், ஒற்றை மொழியாய் இந்தியை மட்டுமே வைத்து, வேலைவாய்ப்புகளிலும் முன்னுரி மையை அவர்களுக்கு வழங்கி வருகின்றனர். 


இந்த ஒற்றைக் கல்விமுறை இல்லாத இன்றைய நிலையிலேயே இவர்கள் ரயில்வே, வங்கி, அஞ்சல்துறை, போன்ற ஏனைய மத்திய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள நிறுவனங்கள், அமைப்புகள் போன்றவற்றில் இந்திக்காரர்களை பணியில் நிரப்புவது மட்டுமன்றி, பிற மாநிலங்களிலும் சம்பந்தப்பட்ட  மாநில அரசின் கட்டுப்பாட்டிலுள்ள மின்சாரத்துறை போன்ற இன்னும் பற்பலத் துறைகளிலும் முழுக்கமுழுக்க அந்த மாநில மொழியறியாத வடவரை மட்டுமே திணிக்கும் போக்கு  அதிகரித்து வருகிறது.


இந்த ஒற்றைக் கல்விமுறையின் மூலம் என்ன நடத்தப்படும் என்பதை இதன்மூலம் புரிந்து கொள்ளலாம்.


ஏனைய இனங்களின், மொழிகளின் சிறப்பியல்பையும் தனித்துவத்தையும் இல்லாதொழிக்க முனையும்  இத்தகையவர் கையில்தான் ஆட்சி லகான் இருக்கிறது.   ஒரே கல்விமுறை என்பதைக் கொண்டுவந்து இந்தியாவின் பன்முகத் தன்மை யைச் சிதைக்கத் திட்டமிடுகிறார்கள். இந்தி பேசாத மாநிலங்கள் முழு மூச்சில் இதனை எதிர்க்கக் கடமைப்பட்டுள்ளன - இதில் தமிழ்நாடு முன்வரிசையில் முதல் மாநிலமாக எழுந்து நிற்கும் என்பதில் அய்யமில்லை.  


No comments:

Post a Comment