கேள்வி 1: இடஒதுக்கீடு அடிப்படை உரிமை ஆகாது என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்திருப்பது சரியா? - சீ.இலட்சுமிபதி, தாம்பரம்.
பதில்: இக்கேள்விக்கு உரிய சரியான பதிலை நீண்ட காலம் முன்பே, கர்நாடக அரசு நியமித்த ஹாவனூர் கமிஷன் என்ற பிற்படுத்தப்பட்டோர் நலக் கமிஷன் தலைவரும், பிரபல சட்ட நிபுணருமான எல்.ஜி.ஹாவனூர் (L.G.Havanur) தனது அறிக்கையின் முன்னுரையில் எழுதினார் (1975).
“பிற்படுத்தப்பட்டவர்களின் விருப்பங்களைப் பொறுத்து இந்திய அரசியல் சட்ட வாசகங்கள் சரியாகத்தான் எழுதப்பட்டுள்ளன. வியாக்யானம் செய்யும் நீதிமன்ற நீதிபதிகளால் பலவித அர்த்தங்களும் சிக்கல்களும் ஏற்படுகின்றன.”
“Language of the Constitution in so far as it relates to backward Classes, is simple
and unambiguous. But the language of the Judiciary in interpreting the Constitutional
provisions is highly ambiguous and complicated.”
இதைவிடச் சிறந்த பதில் தேவையா?
கேள்வி 2: மருத்துவப் படிப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கான 27% இட ஒதுக்கீட்டை நீக்கியதற்கு எதிராக நீதி கேட்டு, தமிழகத்திலுள்ள அரசியல் கட்சிகளான தி.மு.க, அ.தி.மு.க, ம.தி.மு.க, காங்கிரஸ், சி.பி.அய், சி.பி.எம் உட்பட அனைத்தும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கும் வேளையில், திராவிடர் கழகம் ஏன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறது?
- சோ. சுரேஷ், மதுரை
பதில்: உச்சநீதிமன்றத்தின் இது பற்றிய முடிவு 11.06.2020-ல் தரப்பட்டதே உங்களுக்கு சரியான விளக்கம் ஆகுமே! புரிந்து கொள்ளுங்கள்.
கேள்வி 3: இந்தியாவின் பெரிய மாநிலமும் அதிக பிரதமர்களை தேர்ந்தெடுத்த மாநிலமுமான உத்தரப்பிரதேசத்தில், அடிக்கடி ஜாதி-மத மோதல்கள், வன்முறை வெறியாட்டங்கள் நடந்தவண்ணம் இருப்பது எதனால்? - சீதாலட்சுமி, திண்டிவனம்.
பதில்: திராவிடர் கழகம் போன்ற அரசியலுக்கு அப்பாற்பட்ட ஒரு சுயமரியாதை இயக்கம் இல்லாததால்!
கேள்வி 4: திராவிடர் இயக்கக் குடும்பங்களில் ‘அன்பழகன்’, அறிவழகன்’ என்ற அழகிய தமிழில் பெயர்கள் வைத்த காலம் போய், இன்றைய மூன்றாம் தலைமுறையினருக்கு ‘இஷ்’, ‘புஷ்’ என்று வடமொழியில் பெயரிடும் இழிநிலை மீண்டும் தொடர்வதைத் தடுத்திட, கழகம் நடவடிக்கை எடுக்குமா? -சீர்காழி கு.நா.இராமண்ணா, சென்னை
பதில்: ஏற்கெனவே பலமுறை கூறியபடி - பெயர்கள் மாற்ற இயக்கம் (campaign) ஒன்றைத் துவக்க வேண்டும்! செய்வோம்.
கேள்வி 5: தன் மரணத்திற்குப் பிறகு, தன் உடலுக்கு எந்த விதமான மதச் சடங்குகளும் செய்திடக் கூடாது என ‘உயில்’எழுதி வைத்த முன்னாள் பிரதமர் நேருவைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? - நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக் கருப்பூர்.
பதில்: நேரு ஒரு சிறந்த பகுத்தறிவுவாதி. விஞ்ஞான மனப்பான்மையாளர் - என்பதால் அவர் எழுதினார். ஆனால் அதையும் மீறினார்களே என்பதுதான் வேதனை!
கேள்வி 6: Reservation (ரிஸர்வேஷன்) என்ற ஆங்கிலச் சொல்லிற்கு அகராதியில் ஒதுக்கி வைத்தல், ஒளிவு, நிபந்தனை, இடம் ஒதுக்குதல் என்று தான் தமிழ்ப் படுத்தப்பட்டுள்ளது. ஆனால், நாடாளுமன்றம், சட்டப்பேரவை, உள்ளாட்சியில் தாழ்த்தப்பட்டோருக்கான தொகுதியை குறிப்பிடும் போது ‘தனி’த் தொகுதி என அடையாளப்படுத்துவது சரியா? நெருடலாக உள்ளதே? - மன்னை சித்து , மன்னார்குடி - 1.
பதில்: உங்கள் கேள்வி நியாயமானது, ‘ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தொகுதி’ (Reserved Constituency) என்பதாகத்தான் இருக்க வேண்டும். தனித் தொகுதி என்ற சொல்லாக்கமும் சரியல்ல!
கேள்வி 7: மருத்துவக் கல்லூரி இட ஒதுக்கீடு பிரச்சினைக்கான முதல் குரல் தமிழ்நாட்டிலிருந்து, பெரியார் திடலிலிருந்து தங்கள் அறிக்கை மூலம் வெளிச்சத்துக்கு வருகிறது. ஆனால் வேறு பகுதியிலிருந்து இது போன்ற உரிமைக்குரல் ஒலிக்கவேயில்லையே அய்யா? இந்த நிலை என்று மாறும்? இதை மாற்ற இந்திய அளவில்தான் ஒருங்கிணைத்துதான் போராட வேண்டும் என்ற நிலையில் இதற்கு தீர்வுதான் என்ன?
- ச.செல்வம், பஹ்ரைன்
பதில்: நம்மால் முடிந்தவரை அனைத்து இந்திய ஒடுக்கப்பட்ட மக்கள் (தாழ்த்தப்பட்ட, பழங்குடி, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையினர்) அனைவரது உரிமைக்கும் குரல் கொடுக்கிறோம். மண்டல் காலத்து பழைய வடபுல சமூக நீதிப் போராளிகள் பாபு ஜெகஜீவன்ராம், கன்ஷிராம், சந்திரஜித் யாதவ், பிரம்பிரகாஷ், கர்ப்பூரிதாகூர், சீத்தாராம் கேசரி போன்றவர்கள் இல்லை. இராம் விலாஸ் பஸ்வான் மத்திய அமைச்சராகிவிட்டார். லாலு பிரசாத் போன்ற போராளிகள் உடல் நலம், பொய் வழக்கு பாதிப்பு போன்றவற்றால், முன்பு போல போராட்ட களத்தை வேகப்படுத்த முடியவில்லை. என்றாலும் தொடர்புகளை ஏற்படுத்தியே வருகிறோம் - முடிந்த அளவுக்கு.
கழகம் ஒரு பனைமரம். தானே வளரும். பலன், பலரையும் அழைத்துவரும் என்பது உறுதி!
கேள்வி 8: திராவிடர் கழகமும், இட ஒதுக்கீட்டு முழு வரலாறும் என்ற நூல் இருக்கிறதா அய்யா? - சந்தோஷ் குமார், காரைக்குடி.
பதில்: எல்லா போராட்டங்களைப் பற்றியும், அதனால் அடைந்த மாற்றங்கள் பற்றியும் முழுமையாகத் தொகுக்கப்பட்ட நூல் - ஒரே நூல் இல்லை - தொகுத்து அளிப்போம்! நல்ல யோசனை!
கேள்வி 9: தமிழகத்தில் கோவில்களைத் திறக்க வலியுறுத்தி இந்து முன்னணியினர் ஒற்றைக்காலில் நின்று போராட்டம் நடத்துவது பற்றி தங்கள் கருத்து என்ன? - எஸ்.பத்ரா, வந்தவாசி.
பதில்: கொரானா - அர்ச்சகர்களுக்கே வந்துவிட்டதே! அவர்களின் பாதுகாப்பு பற்றியாவது இவர்கள் கவலைப்பட வேண்டாமா?
கேள்வி 10: நடிகர் சிவகுமார் திருப்பதி தேவஸ்தானம் பற்றி எப்போதோ பேசிய பேச்சுக்காக, இப்போது புகார் அளித்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதே! காசுள்ளவர்களுக்கு சலுகை காட்டப்படுகிறது என்று பேசியது கூட குற்றமா?
- முகிலா, குரோம்பேட்டை
பதில்: நடிகர் சிவகுமார் அவர்களின் புகழ் மேலும் பரவ, அவருக்கு ஹிந்துத்துவாதிகள் செய்கின்ற உதவிக்கு நமது நன்றி.
No comments:
Post a Comment