‘‘ஒப்பற்ற தலைமை''  என்ற தலைப்பில் நடைபெற்ற காணொலி நிகழ்வில் தமிழர் தலைவரின் சிறப்புரை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, June 24, 2020

‘‘ஒப்பற்ற தலைமை''  என்ற தலைப்பில் நடைபெற்ற காணொலி நிகழ்வில் தமிழர் தலைவரின் சிறப்புரை

தந்தை பெரியாரின் போர் என்பது லட்சியப் போர் என்பதுடன் புரட்சிக்கவிஞர் சொன்ன வாய்மைப் போர்!


உண்மையைத் தவிர - நேர்மையைத் தவிர


வேறு வகையில் அந்தப் போர் நடந்தது கிடையாது!


அன்றுமுதல் இன்றுவரை - ஏன் நாளைக்கும்கூட!



சென்னை, ஜூன் 24 'தந்தை பெரியாருடைய போர் என்பது இருக்கிறதே, அது லட்சியப் போர் என்பதுடன், புரட்சிக்கவிஞர் அவர்கள் சொன்ன அந்த சொல்லாக்கத்தில், ‘‘வாய்மைப் போர்.'' உண் மையைத் தவிர, நேர்மையைத் தவிர, வேறு வகையில் அந்தப் போர் நடந்ததே கிடையாது. அன்றுமுதல் இன்றுவரை ஏன் நாளைக்கும்கூட' என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விளக்கவுரை யாற்றினார்.


‘ஒப்பற்ற தலைமை'


கடந்த 20.6.2020 அன்று மாலை 5.30 மணியள வில்  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ‘‘ஒப்பற்ற தலைமை'' எனும் தலைப்பில் காணொலிமூலம் கழகத் தோழர் களிடையே ஆற்றிய சிறப்புரை வருமாறு:


இந்த சிறப்பான சந்திப்பில் கரோனா தொற்று நோய் நம்மைக் கொடுமையாக அச்சுறுத்திக் கொண்டிருந்தாலும், அச்சமில்லை என்ற உணர் வோடு, நம்முடைய கடமைகளை நாம் தொடர்ந்து செய்து கொண்டிருக்கின்றோம். ஒருவருக்கொருவர் சந்திப்பின்மூலம், கருத்துகள் பரிமாற்றத்தின்மூலம், எந்தத் தலைவர் நம்மை மானமுள்ள மனிதர்களாக ஆக்கினாரோ, அந்தத் தலைவருடைய சிறப்புகள் என்ன என்பதைப்பற்றி நாம் ஆராயவேண்டும்.


தலைமை என்பது மிகமிக முக்கியமானது


ஒரு தத்துவம், அந்தக் கொள்கை இவையெல் லாம் நிலைக்கவேண்டுமானால், தலைமை என்பது மிகமிக முக்கியமானது என்பது சொல்லித் தெரிய வேண்டிய அவசியமில்லை.


ஒரு தலைமையைப்பற்றி சிந்திக்கின்ற நேரத்தில், அந்தத் தலைமை என்பது, வெறும் அரசியல் தலைமையாகவோ அல்லது சாதாரணமான நிகழ்வுகள் தலைமையாகவோ இருக்க முடியாது.


இனத்தின் மானத்தை மீட்கவேண்டும்;


உரிமையை மீட்கவேண்டும்!


ஒரு இனத்தின் மானத்தை மீட்கவேண்டும்; உரிமையை மீட்கவேண்டும்; போராட்டக் களத் திலே நிற்கவேண்டும் என்றெல்லாம் நினைத்து, பல்வேறு காலகட்டங்களில் சிறப்பாக செய்யக்கூடிய அந்தத் தலைமையைப் பற்றிய உரையில், இந்தக் காணொலி கலந்துரையாடலில் மிகச் சிறப்பான வகையில் பங்கேற்கக் கூடிய அனைத்துப் பெருமக்கள், தோழர்கள், இயக்கக் குடும்பத்தவர்கள் அத்துனை பேருக்கும் என்னுடைய பணிவன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்


இந்நிகழ்வில் தொடக்கவுரையை ஆற்றிய நம்முடைய கழகப் பிரச்சாரச் செயலாளரும், சிறந்த வழக்குரைஞருமான தோழர் அருள்மொழி அவர்கள் சிறப்பாகத் தொடங்கி வைத்திருக்கிறார்.


ஒப்பற்ற தலைமை என்பதே, தந்தை பெரியாரு டைய தலைமைதான் என்று நான் என்றென்றைக்கும் சொல்லக் கூடியவன். ஒரு அடையாளத்திற்காக அதனைக் கொள்ளவேண்டும்; இயக்கத்தை நடத்து கிறவன் என்ற முறையில்.


வாய்மைப் போருக்கு என்றும் இளையார்!


நான் உங்கள் தோழன். உங்கள் தொண்டன். இதனைக் கடமையாகக் கருதிக் கொண்டு, உயிர் மூச்சாகக் கருதிக் கொண்டு நடக்கின்ற இராணுவ சிப்பாய்களில் கடைசி சிப்பாயாக நான் இருந்தாலும்,  என்னை நீங்கள் திரும்பிப் பார்க்கின்ற நேரத்தில், நிச்சயமாக அந்த உணர்வோடு உங்களை வழிநடத் தக் கூடிய ஒரு மகத்தான பொறுப்பை, எங்கிருந்து நான் பெறுகின்றேனோ, அதுதான் அந்த ஒப்பற்றத் தலைமை.


‘‘உயர் எண்ணங்கள் மலரும் சோலை


வாய்மைப் போருக்கு என்றும் இளையார்'' என்று புரட்சிக்கவிஞர் அவர்கள் சொன்னதுபோல, வாய்மைப் போரை என்றைக்கும் நடத்துகிறார்.


தந்தை பெரியாருடைய போர் என்பது இருக் கிறதே, அது லட்சியப் போர் என்பதைவிட, புரட்சிக் கவிஞர் அவர்கள் சொன்ன அந்த சொல்லாக்கத்தில், ‘‘வாய்மைப் போர்''.


அது உண்மையைத் தவிர, நேர்மையைத் தவிர, வேறு வகையில் அந்தப் போர் நடந்ததே கிடையாது. அன்றுமுதல் இன்றுவரை ஏன் நாளைக்கும்கூட.


அப்படிப்பட்ட அந்தத் தலைமையைப்பற்றி ஏன் நான் கலந்துரையாட வேண்டும் இந்த நேரத் தில், அதிலும் குறிப்பாக இயக்கத் தோழர்கள் மட்டுமல்ல, பொதுவாக இருக்கக்கூடியவர்கள் மத்தியிலும்.


மிகப்பெரிய பாடமாக,


அது ‘ஞானத்தை' ஊட்டியது!


ஏனென்றால், அய்யா அவர்களைப்பற்றி இது வரையில் தெரிந்துகொள்ளக்கூடிய வாய்ப்புகளைப் பலர் பெற்றிருக்கிறார்கள் என்று சொன்னாலும்கூட, அவருடைய தலைமை - தலைமைப் பண்புகள் - எப்படிப்பட்ட தலைமையை நாம் பெற்றிருக் கிறோம் என்று சொல்லுகிறபொழுது, மற்றவர்க ளுக்கு என்ன தலைமைப் பண்பு இருக்கவேண்டும்? தலைவர்கள் என்பவர்கள் இந்த நாட்டில் எப்படி உருவாக்கப்படுகிறார்கள்? எப்படி பெரியவர்களாகக் காட்டப்படுகிறார்கள்? என்பதைப் பற்றியெல்லாம் அந்தத் தலைவர் இலக்கணம் வகுத்துச் சொன் னதை, நான் படித்தபொழுது, எனக்கு மிகப்பெரிய பாடமாக, அது ‘ஞானத்தை' ஊட்டியது.


அதிலே ஒன்றுதான், நான் ஏற்கெனவே ஒரு முறை பகிர்ந்து கொண்டதைப்போல, நம்முடைய திராவிட இயக்கத்தினுடைய சாதனைகளுக்கெல் லாம் அடித்தளமாக, அன்றைக்கு மிகப்பெரிய அளவிற்கு, நூறாண்டுகளுக்கு முன்பாக மிகப்பெரிய சாதனை செய்து, வரலாற்றைப் படைத்த, நீதிக்கட்சி என்று எளிய மக்களால் அழைக்கப்பட்ட, ‘‘தென்னிந் திய நல உரிமைச் சங்கம்'' - பார்ப்பனரல்லாதார் இயக்கம் என்று, சர்.பிட்டி. தியாகராயர், டாக்டர் நாயர், நடேசனார் போன்ற தலைவர்களால் உருவாக்கப்பட்டு, அவர்களால் உருவாக்கப்பட்ட உணர்வுகளால் ஆட்சியைப் பிடித்து, அந்த ஆட்சி வந்ததும், கவர்னர் அவர்கள் பொறுப்பேற்குமாறு அழைத்த நேரத்தில், சர்.பிட்டி தியாகராயர் அவர்கள், தான் முதல்வராக பொறுப்பேற்கத் தயாராக இல்லை என்று சொல்லி, மற்றவர்கள் ஏற்பார்கள் என்று சொன்னார்.  உடல்நலக் குறை வாக இருந்த கடலூரைச் சேர்ந்த சுப்பராயலு ரெட்டியார் அவர்கள் முதல்வராகப் பொறுப்பேற்றுச் சில மாதங்கள் இருந்தார். அதன் பிறகு, அந்தப் பொறுப்பை ஏற்றவர் பனகால் அரசர் என்று அழைக்கக்கூடிய இராமராய நிங்கார் அவர்களா வார்கள்.


அந்தப் பனகால் அரசர் அவர்கள் எவ்வளவு பெரிய தலைவராக இருந்தார் என்பதெல்லாம், நூறாண்டுகளுக்கு முன்பு இருந்த சூழல், நம்மிலே பலர் பிறந்திருக்காத காலம்.


நம்முடைய இன எதிரிகளும்கூட புரிந்துகொள்ளவேண்டும்


அந்தக் காலத்தில், அப்படிப்பட்ட ஒரு தலைமை, எவ்வளவு பெரிய சாதனைகளை, எவ்வளவு பெரிய எதிர்ப்புகளுக்கிடையில் செய்திருக்கிறது என்பதை யெல்லாம் புரிந்துகொண்டால்தான், இந்த இயக்கம் எவ்வளவு பலமான ஓர் அஸ்திவாரத்தின்மீது - பலமான அடிக்கட்டுமானத்தின்மீது உருவாக்கப் பட்டு இருக்கிறது என்பதை நாம் மட்டுமல்ல, நம்முடைய இன எதிரிகளும்கூட புரிந்துகொள்ள வேண்டும். நம்மைப் பற்றி நாம் தெளிவடைவதோடு, மற்றவர்களும் அதைப் புரிந்துகொள்ளவேண்டும். நம்முடைய தோழர்கள் அறிந்துகொள்ளவேண்டும் என்பதற்காகத்தான், நான் அந்த இரங்கல் இலக்கி யத்தைப் படித்த நேரத்தில், இதையும் உங்களோடு பகிர்ந்துகொள்ளவேண்டும் என்று நான் நினைக் கிறேன்.


இன்றைக்கு இணைப்புரை வழங்கிக் கொண்டி ருக்கின்ற பிரின்சு அவர்கள் ஒன்றை இங்கே சொன்னார்கள்.


65 ஆண்டுகளுக்கு முன்பு, டார்பிடோ ஏ.பி.ஜனார்த்தனம் அவர்கள் நடத்திய ‘‘தோழன்'' என்ற வார ஏட்டில், ஓர் ஆங்கிலப் புத்தகத்தில் படித்த தலைமைப் பண்பு பற்றிய செய்திகளை மய்யமாக வைத்து, ‘‘தலைவரென்போர் யாரெனக் கேட்டால்'' என்ற தலைப்பில் வெளிவந்த கட்டு ரையை இன்றைய ‘விடுதலை'யில் எடுத்துப் போட்டிருக்கிறார்கள்.


அதை நான் மறுபடியும் படிக்கும்பொழுது எனக்கே வியப்பாக இருந்தது.


அந்தக் காலகட்டத்தில், மாணவர்கள், இளைஞர் கள், படித்தவர்கள் அய்யா அவர்கள் பின்னால் இல்லை, வயதானவர்கள்தான் இருக்கிறார்கள் என்றார்கள்.


ஏனென்றால், இயக்கம் பிரிந்து ஆறு ஆண்டுகள் ஆன காலம். திராவிட முன்னேற்றக் கழகம் - அரசியல் ரீதியாகப் பிரிந்த நேரத்தில், திராவிடர் கழகம் இருக்குமா? என்று சொன்ன அந்தக் காலகட்டத்தில், எப்படிப்பட்ட சூழல் ஏற்பட்டது என்பதைப்பற்றியெல்லாம் எழுதியிருக்கிறோம்.


தலைமை என்பதும், தலைவர்கள் என்பவர்களும் எப்படி உருவாக்கப்படுகிறார்கள்?


அவருடைய தலைமையைப் பற்றி நாம் சொல்லு வதற்கு முன்பு, தலைமை என்பதும், தலைவர்கள் என்பவர்களும் எப்படி உருவாக்கப்படுகிறார்கள்? எப்படிப்பட்டவர்களாக இருக்கவேண்டும்? என்ப தற்கு இலக்கணம் வகுத்திருக்கிறார் தந்தை பெரியார் அவர்கள்.


எதிலிருந்து அவர்கள் அதைக் காட்ட முடியும்? என்று சொல்லுகின்ற நேரத்தில், பனகால் அரசர் மறைந்த நேரத்தில், ‘குடிஅரசு' ஏட்டில் தந்தை பெரியார் அவர்கள் தெளிவாக எழுதியிருக்கிறார்.


பனகால் அரசர் அவர்கள் 62 வயதுவரைதான் வாழ்ந்திருக்கிறார். அந்த 62 ஆண்டுகள் வாழ்ந்த வாழ்க்கையில், அவர் நீதிக்கட்சிக்குத் தலைவராக இருந்திருக்கிறார்.


16.12.1928 இல் அவர்கள் மறைந்தார். அப்படிப் பட்ட காலகட்டத்தில், அதற்கு முன்பு, நேரிடையாக நீதிக்கட்சியில் தந்தை பெரியார் அவர்கள் உறுப்பினர் அல்ல. ஆனால், பெரிய ஆதரவாளர்.


நீதிக்கட்சியில் சேராமல், வெளியில் இருந்து ஆதரவு கொடுத்து, வேலை வாங்கி, பல காரியங் களை சாதிப்பதற்கு மூலகாரணமாக இருந்தவர்.


சத்தியமூர்த்தி போன்றவர்களுடைய தாக்குதலுக்கு தந்தை பெரியார் ஆளானார்


நீதிக்கட்சி ஆட்சியில் கொண்டு வரப்பட்ட இந்து அறநிலையத்துறை பாதுகாப்புச் சட்டம், பார்ப்பனர்களின் கடுமையான எதிர்ப்புக்கிடையில் நிறைவேற்றப்பட்ட நேரத்தில், அப்போது காங்கிர சில் இருந்த தந்தை பெரியார் அவர்கள் பாராட்டு கிறார். அதனால், சத்தியமூர்த்தி போன்றவர்களு டைய தாக்குதலுக்கு தந்தை பெரியார் ஆளானார் என்பதெல்லாம் பழைய வரலாறு.


தந்தை பெரியார் அவர்கள், காங்கிரசிலிருந்து வெளியே வந்த நேரத்தில்கூட, நீதிக்கட்சியினுடைய மேடைகளில் உடனடியாக அவர் ஏறவில்லை. ஒருமுறை கோவையில் நடைபெற்ற தேர்தல் கூட் டத்தில் பங்கேற்கச் செல்கிறார். பனகால் அரசருக் கும், பெரியாருக்கும் நட்பு ஏற்படுகிறது. பெரியாரு டைய தலைமை, ஆற்றல் எப்படிப்பட்டது என் பதை உணர்ந்த பனகால் அரசர் ஒரு வேண்டுகோள் வைக்கிறார்.


தியாகராயருக்குப் பிறகு நீதிக்கட்சிக்குத் தலைவ ராக வருகிறார் பனகால் அரசர். ஆட்சிப் பொறுப்பும் இருக்கிறது, கட்சியின் தலைமைப் பொறுப்பும் இருக்கிறது அவரிடம்.


பனகால் அரசரின் கோரிக்கை!


அந்தக் கட்சித் தலைவர் என்ற முறையில் நான் உங்களிடம் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன், ‘‘எங்களுக்கு வழிகாட்டக் கூடிய அனுபவம் பெற்ற வர்கள்; ஆகவே, எங்கள் இயக்கத்திற்கு நீங்கள் காப்பாளராக இருக்கவேண்டும் என்று எங்கள் கட்சி செயற்குழுவில் முடிவு செய்திருக்கிறார்கள். நீங்கள் அவசியம் அந்தப் பொறுப்பை ஏற்று, எங்களை வழிநடத்தவேண்டும்” என்று சொல்கிறார்.


ஆனாலும், தந்தை பெரியார் அவர்கள், காங்கிரசிலிருந்து வெளியே வந்து, இனிமேல் எந்தப் பொறுப்பும் ஏற்கப் போவதில்லை என்று - சுயமரி யாதை இயக்கத்தைத் தீவிரமாக நடத்திக் கொண்டி ருக்கின்ற நேரத்தில், அவரின் கோரிக்கைக்கு ஒப்புதல் கொடுக்கவில்லை.


பிறகு, 1938 இல் தந்தை பெரியார் சிறையில் இருந்தபோது நீதிக்கட்சியினுடைய தேர்ந்தெடுக்கப் பட்ட தலைவராகிறார்; அதைப்பற்றி பின்பு பேசு வோம்.


பனகால் அரசரின் வேண்டுகோளுக்குப் பதில் அளித்த தந்தை பெரியார், ‘‘பார்க்கலாம், பிறகு சொல்கிறேன்'' என்றார்.


(தொடரும்)


No comments:

Post a Comment