கருப்பின மக்களின் போராட்டமும், திராவிட இயக்கத்தின் முன்னோடியான வரலாற்றுச் சாதனைகளும்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, June 13, 2020

கருப்பின மக்களின் போராட்டமும், திராவிட இயக்கத்தின் முன்னோடியான வரலாற்றுச் சாதனைகளும்!

இன்றைய இளைய தலைமுறையினர் அறிந்துகொள்ள வேண்டிய அறிய செய்திகள்


கி.வீரமணி



அமெரிக்காவின் மினியாபொலீஸ் நகரில் காவல்துறையினால் நிகழ்த்தப்பட்ட ஜார்ஜ் ப்ளாய்ட் படுகொலையின் தொடர்ச்சியாக நிறவெறிக்கு எதிராகவும், மனித உரிமைகளை வலியுறுத்தியும் அமெரிக்கா மட்டுமல்லாது உலகெங்கிலும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. நிற வெறி, மத வெறி, ஜாதி வெறிக் கொடுமைகளுக்கு எதிராக நடைபெற்றுவரும் நெடுங்காலப் போராட்டங்ளே, இன்று சட்டங்களின் வாயிலாக மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டிய அவசியத்தை உருவாக்கியுள்ளன.


சுமார் 65 ஆண்டுகளுக்கு முன், ஏற்பட்ட கருப்பின மனித உரிமை எழுச்சியை இதற்கு முன் அமெரிக்கா கண்டது. அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் உள்ள மாண்ட்கோமரி நகரில், 1955-ஆம் ஆண்டு இறுதியில் நடைபெற்ற நிகழ்வு, அடிமை முறை ஒழிக்கப்பட்ட பிறகும் (1866), அமெரிக்காவில் நிலவிவந்த நிற வேற்றுமைக் கொடுமைகளை உலகிற்குக் காட்டியது. சட்டமாற்றங்கள் ஏற்பட்டனவே தவிர, மனமாற்றம் ஏற்படவில்லை என்பதையே இப்போதைய நிகழ்வு  உணர்த்துகிறது.


பொதுப் போக்குவரத்துக்கான பேருந்துகளில் முன்பகுதி இருக்கைகள் வெள்ளையர்களுக் கானதாகவும், பின் பகுதி இருக்கைகள் கருப்பர்களுக்காகவும் (ஆப்ரோ அமெரிக்கர்கள்(Afro-Americans) என்று இன்று அழைக்கப்படுகிறார்கள்) ஒதுக்கப்பட்டிருந்தது. பேருந்தின் முன் வாசல் வெள்ளையர்களுக்கும், பின் வாசல் கருப்பர்களுக்கும் என்று இந்தப் பிரிவினை முறை மாண்ட்கோமரி நகர ஒழுங்குச் சட்டத்தின் படி (City Ordinance) ஆணையிடப்பட்டிருந்தது.


பேருந்தின் முன் பகுதியிலுள்ள வெள்ளைக்காரர்களின் இருக்கைகள் நிரம்பிவிட்டால், பின் பகுதியில் அமர்ந்திருக்கும் கருப்பர்கள் எழுந்து, வெள்ளையர்களுக்கு உடனே இடமளிக்க வேண்டும் என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது.


1955ஆம் ஆண்டு டிசம்பர் 1ஆம் நாளன்று, வணிக வளாகம் ஒன்றில் இருக்கும் தன் பணியிடத்திலிருந்து வீட்டிற்குச் செல்வதற்காக  மாண்ட் கோமரி கிளீவ்லேண்ட் அவென்யூ பேருந்தில் பயணித்தார் தையல் கலைஞரான ரோசா பார்க்ஸ் என்ற ஓர் அம்மையார். முன் பகுதியில் வெள்ளையர்களுக்கான இடங்கள் நிரம்பிவிடவே, கருப்பர்களுக்கான பகுதியில் முதல் இருக்கையில் அமர்ந்திருந்த ரோசா பார்க்ஸ் மற்றும் மூவரை, தங்கள் இருக்கைகளை விட்டு எழுந்து, வெள்ளைக்காரர்களுக்கு இடம் அளிக்குமாறு கூறினார் அப் பேருந்தின் ஓட்டுநர் ஜெ.ஃபிரட் பிளேக். உடனே கருப்பினத்தைச் சேர்ந்த  மற்ற மூவரும் எழுந்துவிட்டார்கள். ஆனால் ரோசா பார்க்ஸ் அம்மையார் மட்டும் எழ மறுத்தார்.


இதனால் அவர் உடனடியாகக் கைது செய்யப்பட்டதோடு, 10 டாலர் அபராதமும், 4 டாலர் நீதிமன்றக் கட்டணமும் செலுத்துமாறு தண்டனையும் விதிக்கப்பட்டது. உடனடியாக அவர், அந்நகரின்  கருப்பரின மக்களுக்கான முன்னணித் தலைவர்களுள் ஒருவரான நிக்சனுக்குத் தகவல் தந்தார். அவர் வந்து ரோசா பார்க்ஸை பிணையில் எடுத்ததோடு, சட்ட ரீதியாக செயல்படுத்தப்பட்டுவரும் இந்த நிறப் பிரிவினைக்கு எதிராகப் போராடவும் ஆயத்தமானார்கள்.


கருப்பினத்தவரான ரோசா பார்க்ஸ், இதற்கு முன்பே நிற பேதங்களுக்கு எதிரான உணர்வு படைத்தவர் தான். கருப்பின மக்களின் முன்னேற்றத்திற்கான தேசிய அமைப்பில் (NAACP) அப்பகுதியின் செயலாளராகச் செயல்பட்டு வந்தார் பார்க்ஸ். அவரது கணவர் ரேமண்டும் இத்தகைய அமைப்புகளில் செயலாற்றக் கூடியவர் தான்.


நிறத்தின் அடிப்படையிலான  இத்தகையப் பிரிவினையை நீக்கக் கோரி, பெண்கள் அரசியல் கவுன்சில் (WPC) என்ற அமைப்பு, பேருந்துகளைப் புறக்கணிக்குமாறு அழைப்பு விடுத்தது. டிசம்பர் 5-ஆம் தேதி முதல் பேருந்து புறக்கணிப்புப் போராட்டம் மாண்ட்கோமரியில் தொடங்கியது. அந் நகரின் பெரும்பான்மை பேருந்து பயணிகளான (75%) ஏறத்தாழ 40000 கருப்பின மக்கள் இப் பேருந்து புறக்கணிப்புப் போராட்டத்தில் பங்கேற்றனர். இதற்கான போராட்டக் குழுவுக்குத் தலைமையேற்க, 26 வயது இளைஞரான பாதிரியார் மார்டின் லூதர் கிங் ஜூனியர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.


அறப் போராட்டம் தொடங்கியது. பேருந்தைப் புறக்கணித்து, கருப்பின மக்கள் நடந்து பயணிக்கத் தொடங் கினர். கருப்பின வாடகை மகிழுந்து ஓட்டுநர்கள், பேருந்து கட்டணத்திற்கு இணையாக 10 செண்ட் கட்டணத்தில் வாடகை மகிழுந்துகளை (நம் ஊரில் உள்ள பங்கு தானி - Share Auto போல Taxi Pool) இயக்க ஏற்பாடு செய்தனர் போராட்டக் குழுவினர்.



தொடக்கத்தில், பேருந்துகளில் இருக்கும் பிரிவினையை நீக்குமாறு கூட கோரிக்கைகள் எழுப்பப்படவில்லை. கருப்பின ஓட்டுநர்களைப் பணியமர்த்த வும், முன் கதவு வழியாக வரும் வெள்ளையர்களும், பின் வாசல் வழியாக கருப்பர்களும் பேருந்தினுள் நுழையும் போது, முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் இருக்கைகளில் அமர்ந்துகொள்ளுமாறு நடைமுறை மாற்றப்படவேண்டும் என்று தான் தொடக்கத்தில் போராட்டத்தின் கோரிக்கை இருந்தது.


ஆனால், பின்னர் அய்ந்து பெண்களும், கருப்பின மக்களின் முன்னேற்றத்திற்கான தேசிய அமைப்பும் தொடர்ந்த வழக்கு, பேருந்தில் உள்ள இப் பிரிவினையை எதிர்த்தது. அமெரிக்க அரசியலமைப்பின் 14-ஆவது திருத்தத்திற்கெதிரானதாக இந்தப் பிரிவினை இருப்பதாக அவ் வழக்கில் எடுத்துக்காட்டப்பட்டது. 1956 ஜூன் 5-ஆம் நாள், நிறவெறிக்கு ஏற்பளிக்கும் மாண்ட்கோமரி நகர் ஒழுங்குச் சட்டத்தின் இப் பிரிவை ரத்து செய்து உத்தரவிட்டது மாண்ட்கோமரி மாகாண நீதிமன்றம். ஆனால், மாண்ட்கோமரி நகர நிர்வாகம், அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அவ்வாண்டு டிசம்பர் 20 அன்று, மாண்ட்கோமரி மாகாண நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதிசெய்து தீர்ப்பளிக்கப்பட்டது. இதனால் டிசம்பர் 21, 1956 முதல் பேருந்துகளில் இருந்த பிரிவினை நீக்கப்பட்டது. தொடர்ந்து 381 நாட்கள் நடைபெற்ற இப் போராட்டம் மகத்தான வெற்றி பெற்று, வாகை சூடியது. இந்த வெற்றி, சில நிறவெறியர்களுக்கு எரிச்சலைக் கிளப்பி, அதனால் மிகச் சில வன்முறைகளும் நடைபெற்றன.



இதன் நீட்சியாகத் தான் மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் தலைமையில், ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் மிகப் பெரும் எழுச்சியைப் பெற்றனர்; வாஷிங்டனின் லிங்கன் மெமோரியலில், சுமார் 2,50,000 பேர் பங்கேற்ற ‘மார்ச் ஆன் வாஷிங்டன்’ என்ற போராட்டமும், மனித உரிமைகளுக்கான இயக்கமும், மார்ட்டின் லூதர் கிங்கின் புகழ்பெற்ற “எனக்கு ஒரு கனவு இருக்கிறது” ((I have a dream) என்ற உரையும், அது தந்த எழுச்சியும் வரலாற்றில் பதிவாயின. அதனைத் தொடர்ந்து மார்ட்டின் லூதர் கிங் சுட்டுக் கொலை செய்யப்பட்ட கொடுமையும் நிகழ்ந்தது!


நான் அமெரிக்கா சென்றிருந்தபோது அட்லாண்டாவிலுள்ள அவருடைய நினைவகம், காட்சியகம் இவற்றைச் சுற்றிப் பார்க்கச் சென்றிருந்தேன். பல்வேறு ஆதாரங்களையும், அவர் பேசிய ஒலிப்பதிவு நாடாவையும், அவரது போராட்டங்கள், வாழ்க்கை வரலாறு குறித்த 30 நிமிட காட்சிப் படத்தையும் (நான் சென்றிருந்தது திரையிடல் நேரம் இல்லை எனினும்) எனக்குத் தனிப்பட்ட முறையில் திரையிட்டுக் காட்டினார்கள். அங்கே அவருடைய வாழ்விணையரைச் சந்திக்கக் கூடிய வாய்ப்பும் எனக்குக் கிடைத்தது.



உலகின் நவீன நாகரிகமும், வளர்ச்சியும், முன்னேற்றமும் பெற்ற ஜனநாயக மண்ணாகக் கருதப்படும் அமெரிக்காவில்கூட, நிறத்தின் அடிப்படையில் பேருந்துகளில் நிலவிய இந்த பேதம் ஒழிக்கப்பட்டது 1956 ஆம் ஆண்டில் தான் என்பது வரலாறு!


ஆனால், தமிழ்நாட்டில் தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தின் தாக்கத்தினால், இதற்கு 26 ஆண்டுகளுக்கு முன்பே அத்தகைய பேதம் ஒழித்துக் கட்டப்பட்டிருக்கிறது என்பது தான் நம் திராவிடர் இயக்கத்தின் சாதனை! நீதிக் கட்சியும், சுயமரியாதை இயக்கமும் இணைந்த திராவிடர் இயக்கம், சமூகநீதிச் சிந்தனையில், மனித உரிமைப் பாதையில் நிகழ்த்தியிருக்கும் பல அளப்பரிய சாதனைகள் உலக வரலாற்றில் பதிவு செய்யப்படவேண்டிய முன்னோடியானவை.


அமெரிக்காவில் நிலவிய நிறவெறிக் கொடுமைகளை விட மோசமானது, நம் நாட்டில் நிலவிய ஜாதி-தீண்டாமைக் கொடுமை! அங்காவது பேருந்தில் இடம் இருந்தது. இங்கோ பேருந்திலேயே ஏற்றுவதில்லை என்ற கொடுமையான நிலை! அதை மாற்றியது சுயமரியாதை-திராவிட இயக்கம் தானே!


இதோ, 1930 ஆம் ஆண்டு, மே 4 - குடிஅரசு இதழ் தரும் செய்தி!


“உயர்திரு, சௌந்தரபாண்டியரின் உத்திரவு


ராமநாதபுரம் ஜில்லா போர்டு


சர்வீஸ் பஸ் முதலாளிகளுக்கு சவுக்கடி


ராமநாதபுரம் ஜில்லா போர்டு தலைவர், சர்வீஸ் பஸ் முதலாளிகளுக்குப் பின்வருமாறு ஒரு சுற்றுக் கடிதம் அனுப்பியிருக்கிறார்கள். அது வருமாறு:-


"இந்த ஜில்லாவிலுள்ள சில மோட்டார் கம்பெனி முதலாளிகள், ஆதி திராவிடர்களைத் தமது ‘பஸ்’களில் ஏற்றிக் கொண்டு போவதில்லை யென்றும், டிக்கட்டில் ஆதி திராவிடர்களுக்கு டிக்கட்டு கொடுக்கப்பட மாட்டாது என்று நிபந்தனை ஏற்படுத்தியிருப்பதாயும் அறிகின்றோம். இவ்வழக்கம், பிரயாணிகளுக்கு இடைஞ்சல் உண்டு பண்ணத்தக்கதாகவும், மிக அக்கிரமமானதாகவும் இருக்கின்றது. ஆகவே, மோட்டார் கம்பெனி முதலாளிகள், ஏதேனும் ஒரு சமூகத்தாரை பஸ்ஸில் ஏற்றிச் செல்ல மறுக்கவோ, டிக்கட்டுகளில் மறுப்பு விதிகள் அச்சிடவோ செய்தால், அவர்களுடைய லைசன்சு, முன்னறிக்கை கொடாமலே ரத்து செய்யப்படுமென இதனால் எச்சரிக்கை செய்கின்றோம். இந்த சுற்றுக் கடிதம் கிடைத்த ஒரு வாரத்திற்குள் அந்தத் தடை விதி நீக்கப்பட்டதா அல்லவா என்று சாம்பிள் டிக்கட்டுடன் ரிப்போர்ட் செய்துகொள்ள வேண்டும்.”


எப்படிப்பட்ட காலத்தில் இந்தச் சாதனை? இந்தியா சுதந்திரம் அடைந்ததாகச் சொல்லப்படும் காலத்திற்கு முன்பு! ஆங்கிலேயர்களின் ஆட்சிக் காலத்தில்! அப்போது கிடைத்த சொற்ப அதிகாரத்தில்! அந்தச் சிறிய வாய்ப்பையும் வைத்துக் கொண்டு திராவிட இயக்கம் நிகழ்த்தியிருக்கும் இந்தச் சாதனை அமெரிக்காவிற்கே முன்னோடி அல்லவா?


ஜில்லா போர்டு தலைவருக்கு மட்டுமே அந்த நாளில் பேருந்துகளுக்கு ரூட் - வழித்தடம் வழங்கும் உரிமை இருந்தது. அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு சுயமரியாதை இயக்கத் தலைவர் ஊ.பு.அ.சௌந்தரபாண்டியனார் நிகழ்த்தியிருக்கும் இந்தச் சாதனைக்கு பின்புலம் - மூலகாரணம் யார்? சுயமரியாதை இயக்கத்தின் நிறுவனர் தந்தை பெரியார் அல்லவா? திராவிடர் இயக்கம் உருவாக்கித் தந்த சமூகநீதிப் பாட்டை அல்லவா?


இது மட்டுமா தோழர்களே! இதோ மற்றொரு வரலாற்றுச் சுவடு!


1924 ஆம் ஆண்டு வைக்கம் போராட்டம் தொடங்குகிறது. எதற்காக? வைக்கம் நகரத்தின் கோவிலைச் சுற்றியுள்ள தெருக்களில் புலையர், ஈழவர் உள்பட தீண்டத்தகாதோர் என்று அழைக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் அனைவரும் நடப்பதற்கு உரிமை வேண்டும் என்பதற்காக! றிuதீறீவீநீ கிநீநீமீss  என்பது அடிப்படை மனித உரிமை. அந்த உரிமை மறுக்கப்பட்டிருந்த கொடுமைக்கு மாற்றாக எழுந்த போராட்டமே வைக்கம் சத்தியாகிரகம் என்றழைக்கப்பட்ட வைக்கம் மனித உரிமைப் போர். இந்தியாவின் முன்னோடி மனித உரிமைப் போர் என்ற பெருமைக்குரியது. இதனை பாபாசாகேப் அம்பேத்கர் அவர்களின் வரலாற்றிலிருந்தும் நாம் எடுத்துக் காட்டியிருக்கிறோம்.


இது குறித்து எழுதும் சில அரைகுறைகள், பெரியார் தமிழ்நாட்டில் போராடாமல், கேரளாவுக்குச் சென்று போராடியது ஏன் என்று கேட்பதுண்டு. அவர்களுக்குத் தெரியாத, அல்லது தெரிந்தாலும் மறைக்க விரும்பும் செய்தி என்னவென்றால், இத்தகையப் போராட்டங்கள் எதுவுமே இல்லாமல், தொடர்ந்து அரசியல் ரீதியான முன்னெடுப்புகளின் மூலமே, அனைவருக்கும் அனைத்து பொது இடங்களைப் பயன்படுத்தும் உரிமையும் உண்டு என்னும் உரிமை அன்றைய சென்னை ராஜதானியில் ஏற்படுத்தப்பட்டுவிட்டது என்பது தான்.


இவ்வளவுக்கும் அப்போது இருந்தது முழுமையான அதிகாரம் இல்லாத இரட்டை ஆட்சி முறை மட்டுமே!


அதாவது, ஆளுநரின் கீழ் அதிகாரமிக்க கவர்னர் கவுன்சிலும், பரிந்துரை செய்ய மட்டுமே வாய்ப்புள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களும், அமைச்சரவையும் என இரு பிரிவுகளாக ஆட்சி இருந்தது. கவர்னர் கவுன்சிலில் உள்துறை, நிதி, சட்டம், வருவாய் ஆகிய துறைகளுக்கு ஆய்வுரை நல்கவும், பொறுப்புகளைக் கவனிக்கவும் இருந்த நான்கு உறுப்பினர்களையும், அத் துறைகளுக்கான அமைச்சர்கள் என்று குறிப்பிடும் மரபு இருந்தது. சட்டமன்றமும், அமைச்சரவையும் நிறைவேற்றி அனுப்பும் தீர்மானங்களை முழுமையாக ஏற்கவோ, பகுதியை மட்டும் ஏற்கவோ, ஏற்க மறுக்கவோ, முற்றாக நிராகரிக்கவோ உரிமை படைத்தவர்கள் தான் கவர்னரும், அவரது கவுன்சிலும்! இப்படி இருந்த நிலையில், நீதிக்கட்சி நிகழ்த்திய சமூகநீதிச் சாதனைகள் என்பவை வரலாற்று மகுடங்கள்!


பொது இடங்களில் அனைவருக்கும் உரிமை வழங்க வேண்டும் என்று 1919ஆம் ஆண்டு நீதிக்கட்சியாளர் பீதாபுரம் மகாராஜா ஒரு தீர்மானத்தை அரசுக்குக் கொடுத்தார்.


‘நமது சட்டமன்றக் குழு, தாழ்த்தப்பட்டவர் களுக்கும், சமுதாயத்தில் வஞ்சிக்கப்பட்டவர்களுக்கும் தண்ணீர் எடுக்கும் கிணறு, பொதுச் சாலைகள், நீதிமன்றங்கள், சத்திரங்கள், தங்கும் விடுதிகள், மருத்துவமனைகள் மற்றும் அரசாங்கத்தால் நடத்தப்படும் அல்லது அரசு உதவி பெற்று இயங்கி வரும் ஸ்தாபனங்களில் முழு உரிமைகள் கிடைக்க வேண்டி ஆளுநர் அவர்கள் சரியான நடவடிக்கைகளை உடனே மேற்கொள்ள வேண்டும்”



அப்போதிருந்த உள்துறை உறுப்பினர் (அமைச்சர்) சர் சார்லஸ் டாட் ஹண்டர் (TodHunter) எழுதியது, பக்கம் 4-7 அரசு உத்தரவு 23லும் (தேதி 8.1.1920) காணப்படுகிறது.


அப்போது அவர் எழுதியது வருமாறு:


“ஜாதியை உடனே ஒழித்துவிட முடியாது. மக்களின் அபிப்ராயத்துக்கு எதிராக நாம் முயற்சி செய்தால், நல்லதை விட கெடுதலே அதிகம் விளையும். சமுதாயத்தின் மொத்த நன்மைக்காக நாம் சிந்தித்துச் செயல்பட வேண்டும்.


ஜாதியில் உயர்வு, தாழ்வுகளைக் கடைப்பிடித்துவரும் கல்வி நிலையங்களுக்கு, அரசாங்கம் செய்துவரும் உதவிகளை நிறுத்த வேண்டும் என்று அபிப்பிராயம் சொல்லப்பட்டு வருவதை அரசு கடைப்பிடித்தால், எல்லா பள்ளிக் கூடங்களும் அதை நடத்துபவர்களால் இழுத்து மூடப் பட்டுவிடும். இதனால் சமுதாயத்தில், பெரும்பான்மையானவர்களுக்கு உள்ள கல்வி வாய்ப்பும் வீணாக்கப்பட்டு விடும் என்பதால், அரசாங்கம் இதிலெல்லாம் நன்றாகச் சிந்தித்துதான் செயல்பட முடியும். சமுதாயத்தில் உள்ள ஒரு பிரிவினருக்கு நன்மை செய்யப் போக, அது இன்னொரு பிரிவினருக்கு கெடுதலாக முடிந்துவிடக் கூடாது என்பதில் அரசாங்கம் கண்ணுங் கருத்துமாய் இருக்க வேண்டும் என்பது முக்கியம். நாம் செய்யும் நன்மைகள் பெருவாரியான மக்களுக்கு நன்மை பயக்கக் கூடியதாக இருக்க வேண்டும்." என்று எழுதியிருந்தார். அந்தத் தீர்மானம் நிறைவேறவில்லை.


சென்னை மாகாணத்தில் உள்ள அனைத்துத் தண்ணீர் எடுக்கும் கிணறுகளிலும், பொதுச் சத்திரங்களிலும் தாழ்த்தப்பட்டவர்களுக்கும், பஞ்சமர்களுக்கும் உள்ள தடையை நீக்க வேண்டும் என்றும் நகராட்சிகளும், பஞ்சாயத்துகளும் வலுக்கட்டாயமாக இதை அமல்படுத்த வேண்டும் என்றும் ஒரு தீர்மானத்தை எம்.சி. ராஜா அவர்கள் அதே ஆண்டு சட்டமன்றத்தில் கொண்டு வந்தார்.


இந்த தீர்மானத்தைப்பற்றி சட்ட மன்றக் குழுவில் விவாதிக்கப்பட்டது என்பது சட்டமன்றக் குழுவின் நடவடிக்கைப் புத்தகத்தின் 152-161ஆம் பக்கங்களில் இன்றைக்கும் காணப்படுகிறது. இந்த தீர்மானத்தைப் பற்றிப் பேசும்போது, சர் சார்லஸ் டாட் ஹண்டர் குறிப்பிட்டதாவது: "கிணறுகளையும், சத்திரங்களையும், பொதுச் சாலைகளையும் உபயோகப்  படுத்தக் கூடாது என்று சமுதாயத்தில் ஒதுக்கப்பட்டுள்ளவர்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் தடைகள் எதுவும், சட்டத்தால் ஏற்பட்டதல்ல. மேலும், இந்தத் தடைகளை நீக்குவது என்பது சமுதாயச் சீர்திருத்தவாதிகளால்தான் முடியுமேயொழிய, அரசாங்கம் அதில் தலையிட்டுத் தடைகளை நீக்கச் செய்ய முடியும் என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை"


தீர்மான விவாதம் முடிவடையும் நேரத்தில் லார்டு வெல்லிங்டன் குறிப்பிட்டதாவது:


ஜாதிகள் அதன் தீமைகள் ஒழிக்கப்பட்டா லொழிய, ஒடுக்கப்பட்டவர்களுக்கு இழைக்கப் பட்டு வரும் அநீதிகள் குறைவதற்கு வழியே இல்லை. அரசாங்கம் சமதர்ம சமுதாயம் ஏற்பட உதவி செய்யலாமேயொழிய, மத விஷயங்களில் தலையிட முடியாது” என்றார்.


இந்தப் பின்னணியில், மீண்டும் 1921-ஆம் ஆண்டு, பொது இடங்களில் ஒடுக்கப்பட்டோரைத் தடுப் போருக்குத் தண்டனை கொடுக்க வேண்டும் என்ற தீர்மானத்தை ஊ.பு.அ.சௌந்தரபாண்டியனார் கொண்டு வருகிறார். அதன் மீதான விவாதம் குறித்த குறிப்பு 29.1.1923, அன்றைய உள்ளூர் மற்றும் நகராட்சி புத்தகத்தின் 333-339 பக்கங்களில் உள்ளது. இந்த விவாதத்தில் பேசிய அன்றைய முதலமைச்சர்,  பனகால் அவர்கள், "பொது இடங் களைத்  தாழ்த்தப்பட்ட, வஞ்சிக்கப்பட்ட மக்கள் உபயோகப்படுத்தக் கூடாது என்று தடுப்போரைத் தண்டிக்க, சட்டத்திலேயே இடம் இருக்கிறது என்றும், சமுக சீர்திருத்தவாதிகள், ஜாதி ரீதியான தடைகளை உடைத்தெறிய முயலவேண்டும் என்றும், அதற்குத் தேவையான சட்டங்களைச் செய்ய அரசு உறுதி கூறுவதாகவும், சமுக சீர்திருத்தத்திற்கான எந்த மசோதாவையும் உறுப்பினர்கள் கொண்டுவரலாம் என்றும் அறிவிக்கிறார்.


மேலும், டாட்ஹண்டர் போன்ற ஆங்கிலேய அதிகாரிகளின் முந்தைய கருத்தினால் இத்தகைய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட முடியாமையை மனதிற் கொண்டு, “தனிப்பட்டோரின் சொத்துகளாக இருக்கும் அக்கிரகாரத் தெருக்கள், ஜாதி இந்துக்களின் தெருக்களில் தலையிட்டு ஆவன செய்யும் நிலையில் அரசாங்கம் இல்லை” என்றும் வருந்துகிறார்.


எனினும் அரசியல் ரீதியான முன்னெடுப்புகள் தொடர்கின்றன. இத்தகைய தொடர் முயற்சிகளின் நீட்சியாக, அடுத்த ஆண்டு சட்டமன்ற உறுப்பினர் ரெட்டமலை சீனிவாசன் (ஆர்.சீனிவாசன்) கொண்டு வந்த தீர்மானம் 1924, செப்டம்பர் 24 ஆம் தேதி நிறைவேற்றப்பட்டு, மறு நாள் செப்டம்பர் 25 அன்று, பி.எல்.மூர் என்ற அரசாங்கச் செயலாளர் கையொப்பமிட்டு உத்தரவாக வெளியிடப்படுகிறது. மேலும், அதனை அனைத்து பஞ்சாயத்துகளிலும் உள்ள அக்கிரகாரங்கள், ஜாதி இந்துக்களின் தெருக்கள், தாழ்த்தப்பட்டோர் குடியிருக்கும் சேரிப் பகுதிகள் அனைத்திலும் கிராமத் தலையாரி மூலமாக தண்டோரா போட்டு அறிவிக்க வேண்டும் என்றும், விளம்பரங்கள் வெளியிடப்படவேண்டும் என்றும் சட்டமன்றக் குழு அரசுக்குச் சிபாரிசு செய்தது.


அது குறித்த ஆவணங்கள் இதோ:


சென்னை அரசாங்கம்


உள்ளூர் அரசாங்க இலாகா


உள்ளூர் மற்றும் மாநகராட்சி


அரசாங்க உத்தரவு நெ. 2660 உள்ளூர் மற்றும் மாநகராட்சி, 25 செப்டம்பர், 1924.


ஒடுக்கப்பட்ட மக்கள் உபயோகப்படுத்தும் சாலைகள், தண்ணீர் எடுக்கும் கிணறுகள் மற்றும் உள்ளவைகள் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மாநிலத்திலுள்ள உள்ளூர் நிர்வாகங்கள் மற்றும் தலைமை இலாக்காக்களுக்கு அனுப்பப்பட்டது.


உத்தரவு நெ.2660, 1924ஆம் ஆண்டு செப்டம்பர் 25ஆம் தேதி.


1924ஆம் ஆண்டு, செப்டம்பர் 24ஆம் தேதி நடந்த சட்டமன்றக் கூட்டத் தில் கீழ்க்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் உபயோகப்படுத்தும் பொது சாலைகள், கிணறுகள் பற்றியது.


திரு. ஆர். சீனிவாசன் (இரட்டை மலை)


1 (9) இந்தச் சட்டமன்றம் கீழ்க் கண்டவைகளை நிறைவேற்றம்  செய்து, அவை அரசாங்கத்தின் கொள்கையாக அறிவிக்கப்பட்டது.


(a) எந்தப் பொதுச் சாலையிலோ, தெருவிலோ அது எந்த கிராமத்திலோ அல்லது நகரத்திலோ இருந்தாலும், அதில் எந்த இனத்தைச் சேர்ந்த மனிதனாய் இருந்தாலும், நடப்பதற்கு உள்ள உரிமையை யாரும் தடுக்க முடியாது என்பதையும்,


(b) எந்த அரசாங்க அலுவலகமாக இருந்தாலும் அல்லது கிணறு, குளம் போன்றவைகளாய் இருந்தாலும், அல்லது பொது வர்த்தகம் நடைபெறும் இடமாய் இருந்தாலும், இவைகளிலெல்லாம் ஜாதி இந்துக்களுக்கு என்னென்ன உரிமைகள் இருக்கின்றனவோ, அவ்வளவு உரிமைகளும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் உண்டு என்பதையும்,


சென்னை அரசாங்கம் ஒப்புக் கொண்டு அதைத் தீர்மானமாகநிறைவேற்றி எல்லா மாநகராட்சி, நகராட்சி, பஞ்சாயத்து மற்றும் அரசாங்கத்தில் உள்ள எல்லா இலாக்காக்களுக்கும் அனுப்பப்பட்டது.


(இது அரசாங்க உத்தரவு, மாநில அரசு)


P.L. மூர்,


அரசாங்கச் செயலாளர்.


ஜில்லா போர்டு, தாலுக்கா போர்டு, நகராட்சிகள், கார்ப்பரேஷன்,


சென்னை பஞ்சாயத்து, நகராட்சி அதிகாரிகள், தொழில் கமிஷனர்,


சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள எல்லா இலாக்காக்கள்,


அரசாங்க செய்தி ஸ்தாபனம். இவைகளுக்கெல்லாம் மேற்கண்ட


உத்தரவுகள் அனுப்பப்பட்டது.


சட்டக்குழு அலுவலகம்


25.9.24


தீர்மானம்


திரு. ஆர். சீனிவாசன்


(இரட்டைமலை சீனிவாசன்)


உள்துறை அரசாங்க அலுவலகம்.



  1. சென்னை மாகாணத்திலுள்ள ஒவ்வொரு அக்கிரகாரத் தெருக்களிலும், ஜாதி இந்துக்கள் உள்ள ஒவ்வொரு தெருக்களிலும், தாழ்த்தப்பட்டவர்கள் குடியிருக்கும் சேரிகளிலும், வஞ்சிக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்கள் குடியிருக்கும் தெருக்களிலும் கிராம தலையாரி மூலமாக மேற்கண்ட இந்த தீர்மானத்தின் விவரங்களை தண்டோரா போட்டு அறிவிக்க வேண்டும் என்றும், மாகாண அரசின் செய்தித் தாள்களிலும், மாவட்ட செய்தித்தாள்களிலும், அந்தந்த வட்டார மொழிகளிலும் இந்தத் தீர்மானத்தின் விவரங்களை அச்சிட்டு வெளியிட வேண்டும் என்றும் சட்டமன்றக் குழு அரசாங்கத்திற்கு சிபாரிசு செய்கிறது.


a) தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் அக்ரகாரத் தெருக்களிலும், ஜாதி இந்துக்கள் குடியிருக்கும் தெருக்களிலும் நடந்து போய்வருவதிலும் அரசுக்கு எந்த ஆட்சேபணையும் கிடையாது.


b) கிணறு, குளம், பொது அலுவலகங்கள், வர்த்தகம் செய்யும் இடங்கள் போன்றவைகளிலும் மற்றும் எல்லாப் பொது இடங்களிலும், ஜாதி இந்துக்களுக்கு உள்ள உரிமைகள் தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் உண்டு.”


இது நடந்தது நீதிக் கட்சியின் பனகால் அரசர் முதலமைச்சராக இருந்த நேரம்!


1923-இல் நாம் மேற்குறிப்பிட்ட இந்த விவாதத்தின் இடையில் தான், பொது இடங்களில் தாழ்த்தப்பட்டோருக்கு சட்டரீதியாக எந்தத் தடையும் இங்கு இல்லை என்பதையும், அதே நேரத்தில் மலபார் பகுதியில் சில தெருக்களில் தாழ்த்தப்பட்டவர்கள் நடந்துபோக அனுமதியில்லை என்பதையும் அவர் சுட்டிக் காட்டுகிறார்.


இந்தப் பின்னணியில் இப்போது வைக்கத்தைப் பாருங்கள்.


வைக்கத்தில் தடையை மீறி கோவில் உள்ள தெருக்களில் ஈழவரையும், புலையரையும், அழைத்துப் போகவிருப்பதாக டி.கே.மாதவனும், காங்கிரஸ் தலைவர் கே.பி.கேசவமேனனும் அறிவித்தது அதே ஆண்டு மார்ச் 1ஆம் தேதி. பின்னர் உள்ளூர்காரர்களின் வேண்டுகோளுக்கிணங்க தள்ளிவைக்கப்பட்டு மார்ச் இறுதியில் போராட்டம் வேகமெடுக்கிறது. போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட, அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க ஏப்ரல் தொடக்கத்திலேயே, பெரியார் வைக்கம் போராட்டக் களத்திற்கு வந்துவிடுகிறார்.


ஓன்றரை ஆண்டுகளுக்கும் மேல் நடைபெற்ற போராட்டத்தில் தந்தை பெரியார் ஏற்படுத்திய எழுச்சி, அவர் கைது செய்யப்பட்டதற்குப் பிறகும் போராட்டத்தை தீவிரமாக முன்னெடுத்துச் சென்ற அன்னை நாகம்மையாரின் பங்களிப்பு போன்றவற்றை நாம் அறிவோம்.


போராட்டத்தின் வெற்றிவிழா 1925 நவம்பர் 29 அன்று பெரியார் தலைமையில் நடைபெற்றது. அதில் அன்னை நாகம்மையாரும் அழைத்துச் சிறப்பிக்கப்பட்டார். கேளப்பன் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ்விழாவில் மன்னத்து பத்மநாப பிள்ளை, டி.கே.மாதவன் ஆகியோர் பங்கேற்றனர் என்பது வரலாறு.


இப்படி படிப்படியான போராட்டங்கள், சட்ட முன்னெடுப்புகள் என்று சகல வழிகளிலும் திராவிட இயக்கம் செய்த பணிகள் மனித உரிமைக்கான முன்னோடிச் செயல்பாடுகள் அல்லவா?


அமைதிப் புரட்சியினால் மனித உரிமைகளை வென்றது திராவிட இயக்கம் என்பதற்கு இப்படி எண்ணற்ற சான்றுகள் உண்டே!


இளைய தலைமுறை இந்த வரலாற்றுச் சுவடுகளை தெரிந்துகொள்வதும், புரிந்து கொள்வதும் மட்டும் முக்கியமல்ல...


அந்த அடிச்சுவட்டில்  தொடர்ந்து நடந்து, ஜாதியற்ற, தீண்டாமை ஒழிந்த, பேதமற்ற ஒரு  புதிய சமுதாயத்தை- புதிய உலகத்தை உருவாக்க முன்வரவேண்டும்!


No comments:

Post a Comment