சமஸ்தான ஆட்சியிலேயே சமூக நீதிக்கான  இட ஒதுக்கீடு (26.07.1902) முதல்முறை உத்தரவிட்ட புரட்சியாளர் சாகு மகராஜ் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, July 28, 2020

சமஸ்தான ஆட்சியிலேயே சமூக நீதிக்கான  இட ஒதுக்கீடு (26.07.1902) முதல்முறை உத்தரவிட்ட புரட்சியாளர் சாகு மகராஜ்

'பார்ப்பனியம் ஒழிந்தால்தான் இந்திய நாடு முழுமையான அதிகாரம் பெறும்' என பிரகடனம் செய்தவர் சாகு மகராஜ்!


தமிழர் தலைவர் போற்றுதல் உரை


*வீ. குமரேசன்


பிரிட்டிஷாரின் ஆட்சியின் கீழ் இருந்த இந்நாடு அந்தக் காலத்திலும், விடுதலை பெற்றுத் தனக்கென அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கி நடை முறைப்படுத்தி வரும் இந்தக் காலத்திலும் ஒடுக்கப் பட்ட மக்களுக்கான கல்வி, வேலைவாய்ப்பில் சமத் துவம் ஏற்படுவதற்கு ஏற்படுத்தப்பட்ட வழிமுறையே இட ஒதுக்கீடு.  சமூக நீதித் தத்துவத்தின் நடை முறைவடிவமான இட ஒதுக்கீடானது பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில், தற்பொழுது மராட்டிய மாநிலம் (அன்றைய மத்திய மாகாணம்) கோலாப்பூர் சமஸ் தானத்தில்தான் 1902-ஆம் ஆண்டில் முதன்முதலாக நடைமுறைக்கு வந்தது. இட ஒதுக்கீடு உத்தரவு வெளிவந்த நான் ஜூலை 26.  இட ஒதுக்கீடு உத்த ரவைப் பிறப்பித்தவர் கோலாப்பூர் அரசர் சத்ரபதி சாகு மகராஜ் (1874-1922) ஆவார்.  ஏறக்குறைய 120 ஆண்டுகளுக்கு முன்பு இட ஒதுக்கீடு நடைமுறைக்கு வந்தது சமூக நீதி வரலாற்றில் முக்கியமான நாளாகும்.


இட ஒதுக்கீடு ஆணையிடப்பட்ட நாளில் இன்று (26.07.2020) சமூக நீதிக்குத் தொடர்ந்து குரல் கொடுத் தும், போராட்டக் களமிறங்கியும் ஒடுக்கப்பட்ட மக் களுக்கான உரிமையினை பெற்றுத் தந்து கொண்டி ருக்கும் திராவிடர் கழகத்தின் தலைவர், தமிழர் தலைவர் சத்ரபதி சாகு மகராஜ் அவர்கள் பற்றிய உரையினை காணொலி நிகழ்ச்சியின் மூலம் வழங்கினார்.


தமிழர் தலைவரது உரையின் சுருக்கம்:


சமூகப் புரட்சியாளர்கள் அய்வர்


பகுஜன் சமாஜ் கட்சியின் நிறுவனர் சமூக நீதிப் போராளி கன்சிராம் இந்தியச் சமூகப் புரட்சியாளர் களாக அய்ந்து தலைவர்களைக் குறிப்பிடுவார், மராட்டியத்தில் பிறந்த ஜோதிபா புலே, சாகு மகராஜ், டாக்டர் பி.ஆர். அம்பேத்கர், கேரளத்தின் நாராயண குரு, தமிழ்நாட்டில் தந்தை பெரியார் ஆகியோரைப் போற்றிக் கூறுவார். சமூகப் புரட்சியாளர் ஜோதிபா புலே காலத்தால் மூத்த தலைவர் சத்யசோதக் சமாஜம் எனும் அமைப்பின் மூலம் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காகப் பாடுபட்டார். அவரை அடுத்து வந்த சாகு மகராஜ் அரசராக இருந்தவர் என்றாலும் சத்ரபதி சிவாஜி வழி வந்தவர். வர்ணாஸ்ரம (அ)தர்மப்படி சத்திரிய வகுப்பைச் சார்ந்தவர் அல்லர்.  சூத்திரப் பட்டம் சூட்டப்பட்டவர். அந்த வகையில் வர்ணாஸ்ரமப் பாதுகாவலர்களான பார்ப்பனர்களால் மன்னராக மதிக்கப்படாதவர். மதிக்கப்படுவதற்கு, பரிகார மாக நிறைய பொருள்கள் வழங்கிய சத்ரபதி சிவாஜி வழியில் வந்தவர்; என்றாலும் பார்ப்பனர் களின் ஆதிக்கத்தைத் தனது ஆட்சி அதிகாரத்தால் ஒடுக்கியவர். பார்ப்பன ஆதிக்கத்தால் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உரிமை வழங்கி - அன்றைய மராட்டிய அரசில் ராணுவத்தில் பணிப்புரிந்த மகர் எனும் வகுப்பினர் ஒட்டு மொத்தமாக இராணுவப் பணியிலிருந்து நீக்கப்பட்ட பொழுது அவர்களுக்குத் தனது சமஸ்தானத்தில் பணி வழங்கிப் பாதுகாத்தவர். அண்ணல் அம்பேத்கர் அமெரிக்காவில் மேற் படிப்பை முடித்துவிட்டு, திரும்ப லண்டன் சென்று படிப்பதற்கு அவ்வப்போது தேவைப்பட்ட நிதி உதவியை தனது சமஸ்தானத்திலிருந்து வழங் கியவர் சாகு மகராஜ். பின்னாளில் அம்பேத்கர் தொடங்கிய மூக்நாயக் ஏட்டினைத் தொடங்குவதற்கும் பொரு ளுதவி அளித்தவர் சாகு மகராஜ் ஆவார்.



பார்ப்பனர் ஆதிக்கத்தை முழுமையாக உணர்ந்த சமூக நீதித் தலைவர்


தனது சமஸ்தானத்தில் பார்ப்பனர் அல்லாத மக்களுக்கு 50 விழுக்காடு இட ஒதுக்கீடு அளித்து பெரும் புரட்சியைப் படைத்தார் சாகு மகராஜ் அவர்கள். இந்த மண்ணில் நிலவிய ஏற்றத் தாழ்வுகள், பெரும்பான்மையான மக்களது இழிவு நிலை ஆகியவற்றுக்கு அடிப்படைக் காரணம் பார்ப்பனர் கள்தான்; பார்ப்பனர்களது ஆதிக்கம் தான். ஆண் டாண்டு காலமாக ஒடுக்கப்பட்ட மக்கள் உயர் நிலைக்கு, தங்களுக்குச் சமமாக வந்து விடக் கூடாது எனும் ஆதிக்க மனப்பான்மையுடன் பார்ப்பனர்கள் இருந்தார்கள் என்பதை நன்றாகப் புரிந்ததால்தான் சமூகப் புரட்சி படைக்க முடிந்தது. இட ஒதுக்கீட்டுத் தளத்தில் மட்டுமின்றி பார்ப்பனர் ஆதிக்கம் செலுத்தி வந்த பல துறை களிலும் களம் இறங்கி அதனைத் தகர்த்து எறிந்தவர் சாகு மகராஜ்.


மந்திரம் ஓதுவதில் பாகுபாடு


சாகு மகராஜ், பார்ப்பனர்கள் - பார்ப்பனப் புரோகிதர்கள் தங்களது மந்திரம் ஓதுவதில் காட்டிய பாகுபாட்டைப் புரிந்து, பார்ப்பனர்களின் மீது நடவடிக்கை எடுத்தார். பொதுவாக ஆற்றுக்குச் சென்று மன்னர் குளிக்கும் பொழுது பார்ப்பனப் புரோகிதர்கள் மந்திரம் ஓதுவதை வாடிக்கையாகக் கொண்டிருந்தனர். பார்ப்பனர் ஓதிய மந்திரத்தைக் கேட்டு, இது வேத மந்திரம் போல இல்லையே! என வினவிய பொழுது புரோகிதர்கள் வேறு வழியின்றி, "ஆம் இது வேத மந்திரமல்ல; புராண மந்திரமே" என்றார்களாம்.  ஏன் வேத மந்திரம் ஓதவில்லை? என மறுபடியும் கேட்ட சாகு மகராஜுக்கு, பார்ப்பனர்கள் சொன்ன பதில் "வேத மந்திரம் சத்ரிய அரசர்களுக்கு மட்டும் உரியது; தாங்கள் சத்ரியர் அல்லர்; சூத்திரரே.  எனவேதான் புராண மந்திரம் ஓதினோம்!"  இதைக் கேட்டுச் சினந்து வெடித்த சாகு மகராஜ் பார்ப்ப னர்களுக்கு சமஸ்தானம் வழங்கிய தான நிலங்கள் அனைத்தையும் பறிமுதல் செய்திட ஆணையிட்டா ராம். சங்கராச்சாரியருக்கு அளிக்கப்பட்ட நில தான மும் சாகு மகராஜின் சமஸ்தான உத்தரவிலிருந்து தப்பிக்க முடியவில்லை.


திலகரிடம் வாதிட்டு வென்றவர்


இந்திய மக்களின் சுதந்திரத்திற்காகப் பாடுபடுவ தாக - சுதந்திரம் எனது பிறப்புரிமை என முழங்கிய பால கங்காதர திலகர் சரியான வர்ணாஸ்ரமவாதி. சாகு மகராஜின் உத்தரவால் பார்ப்பனர் பெற்ற நில உடமைகளைப் பறிமுதல் செய்த பொழுது, சமா தானம் பேச வந்தார் திலகர். மிகவும் தந்திரமாக, "புரோகிதர்களை தங்களுக்கு மட்டும் வேதமந்திரம் ஓதிட விலக்கு அளிக்கின்றோம்" என்றாராம்.  எனக்கு மட்டும் விலக்கா, எனது சந்ததியினருக்கு, சமூகத்த வருக்கு வேத மந்திரத்தைத் தவிர்த்து பாகுபாடு காட்டலாமா? ஏற்க முடியாது; என்னுடைய இடத்தில் ஒரு முஸ்லிம் அரசர் இருந்தால் நீங்கள் இப்படி பேச முடியுமா? என சாகு மகராஜ் திருப்பிக் கேட்டபொழுது வாயடைத்துப் போனாராம் பால கங்காதர திலகர்.


கோயில்களில் சமஸ்தான நிர்வாகக் கட்டுப்பாடு


தனது சமஸ்தானத்தில் இருந்த இந்துக் கோயில் களை சமஸ்தானத்தின் நிர்வாகக் கட்டுப்பாட்டில் கொண்டுவர தேவஸ்தான போர்டு என்ற நிர்வாக அமைப்பைச் சாகு மகராஜ் ஏற்படுத்தினார். இந்த ஏற் பாட்டால் கோயில் வருமானத்தைக் கொள்ளைய டித்துக் கொழுத்த பார்ப்பனப் புரோகிதர்களின் கொட்டம் அடங்கியது. இது குறித்துப் பார்ப்பனர்கள் அன்றைய பிரிட்டிஷாரிடம் சென்று முறையிட்ட பொழுது, தாங்கள் சமஸ்தான அதிகாரத்தில் குறுக்கிட முடியாது என்று சொன்ன நிகழ்வுகளும் சாகு மகராஜ் ஆட்சிக் காலத்தில் நடந்தன.


நீதிக் கட்சித் தலைவர்களுடன்


தோழமையுடன் இருந்த சாகு மகராஜ் 


1916இல் அன்றைய சென்னை ராஜதானியில் பார்ப்பனர் அல்லாதார் அமைப்பாகத் தொடங்கப் பட்ட தென்னிந்திய நல உரிமைச் சங்கம், பின்னாளில் நீதிக் கட்சி என பரவலாக அறியப்பட்டது. 1920இன் இறுதியில் இரட்டை ஆட்சிமுறை எனும் அதிகாரப் பகுப்பு முறையால் ஆட்சிக்கு வந்த நீதிக் கட்சித் தலைவர்களுடன் கொள்கை அடிப்படையிலான தொடர்பு, தோழமை உறவு கொண்டிருந்தார் சாகு மகராஜ். கோலாப்பூர் சமஸ்தானத்தில் கொண்டுவரப் பட்ட கோயில்களை நிர்வகிக்க ஏற்படுத்தப்பட்ட தேவஸ்தான போர்டு முறைதான், நீதிக்கட்சி ஆட்சியில் இந்து அற நிலையத் துறை அமைக்கப்பட முன்னோடியாக இருந்தது. சாகு மகராஜ் கொண்டு வந்த வேத ஆரம்பப் பள்ளியில் பார்ப்பனர் அல்லாத வர்களுக்கும் வேதம் கற்பிக்க ஏற்பாடு செய்தது பின்னாளில் திராவிடர் இயக்கம் வளர்ந்து அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகச் சட்டம் இயற்றப்பட்டு அது நடைமுறைக்கு வரும் சூழலெல்லாம் ஏற்பட்டது.


சாகு மறைவின் பொழுது


நீதிக்கட்சி இரங்கல் மரியாதை


1922இல் சாகு மகராஜ் மறைந்த பொழுது அன்றைய சென்னை ராஜதானியின் பிரதமராக இருந்த பனகல் அரசர், சாகு மகராஜ் அவர்களின் மறைவிற்கு மரியாதை செலுத்திட சென்னையில் கூட்டம் நடத்தினார். அந்தக் கூட்டத்தில் உரையாற்றும் பொழுது சாகு மகராஜ், நீதிக்கட்சியின் நிறுவனர்களில் ஒருவரான, திராவிட லெனின் டாக்டர் டி.எம்.நாயர் (1868-1919) ஆகிய இருவருக்கும் உள்ள நட்பு, தொடர்பு பற்றி குறிப்பிட்டு இரண்டு தலைவர் களும் குறைந்த வயதிலேயே - வாழ்ந்து மறைந்தது பார்ப்பனர் அல்லாதார் இயக்கத்திற்கு, ஈடு செய்திட முடியாத இழப்புகளே என மிகவும் உருக்கமாகப் பேசினார். அந்த வகையில் தக்காணப் பீடபூமியின் இரண்டு பகுதிகளில் பார்ப்பனர் ஆதிக்கத்தைத் தகர்த்திட இயக்கம் கண்டு, கொள்கை அடிப்படையில் பாடுபட்ட தலைவர்கள் இருந்ததால்தான் இந்தப் பகுதிகளில் பார்ப்பனர் ஆதிக்கம் கட்டுப்பாட்டில் உள்ளது. நாட்டின் பிற பகுதிகளில் நிலவுவது போல பார்ப்பனர்கள் இந்தப் பகுதிகளில் கொட்டம் அடிக்க முடியவில்லை.


தமிழ்நாட்டில் நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்கம் வழி வந்த திராவிடர் இயக்கத்தில் தந்தை பெரியார் சமுதாயத்தில் ஏற்றத் தாழ்வு, இழிநிலை இருப்ப தற்கு முதற் காரணம் பார்ப்பனர் ஆதிக்கம் தான் என்பதைப் புரிந்து இயக்கம் கண்ட தைப் போல, தான் சமஸ்தான மன்னராக இருந்தாலும், பார்ப்பனர் ஆதிக்கத்தின் அடிவேர் வரை முழுமையாக உண்ர்ந்திருந்த படியால் தான் ராஜ புரட்சியாளராகப் ((Royal Revolutionary) சாகு மகராஜ் திகழ்ந்திட முடிந்தது.


சாகு மகராஜ் அவர்கள் தனது வாழ்நாளிலேயே பிரகடனம் ஒன்றை வெளியிட்டார்.


" To enthrone Indian Nation, dethrone Brahminism"  இந்திய நாடு முழுமையான அரசு அதிகா ரம் பெற பார்ப்பனீயம் தகர்க்கப்பட வேண்டும் என மிகப் பொருத்தமாகக் கூறிய சாகு மகராஜ், சமூகப் பிரச்சினைகளைப் புரிந்து கொள்வதிலும், அதற்கு தீர்வு காண்பதிலும் எவ்வளவு தொலைநோக்குடன் ஆட்சி புரிந்தார் என்பது போற்றுதலுக்குரியது; பின்பற்றத் தகுந்தது. சாகு மகராஜ் பாடுபட்ட சமூக நீதித் தத்துவத்திற்கு ஒடுக்கப்பட்ட மக்களில் பெரும் பான்மையினராக உள்ள பிற்படுத்தப்பட்ட மக்கள் இட ஒதுக்கீடு பெறுவதில், பார்ப்பன ஆதிக்கம் இன்றும் முட்டுக் கட்டை போட்டு வருகிறது. தந்தை பெரியார், சாகு மகராஜ் காட்டிய பாதையில் களம் இறங்கிப் போராடுவோம். சில களங்களில் எதிர் பார்த்தது நடைபெறாமல் போய்விடலாம். ஆனால் இறுதி வெற்றி ஒடுக்கப்பட்ட மக்களுக்கே.


வாழ்க சாகு மகராஜ் புகழ்!


வளர்க சமூக நீதித் தத்துவம்!


இவ்வாறு தமிழர் தலைவர் உரையாற்றினார்.


காணொலிக் காட்சியின் அறிமுக உரையாகத் திராவிடர் கழகத்தின் பொருளாளர் வீ. குமரேசன் பேசினார். தமிழர் தலைவர் தமிழில் பேசிய பின்னர், ஆங்கிலத்தில் சாகு மகராஜ் அவர்களைப் பற்றி சற்று விரிவாகப் பேசினார். தமிழர் தலைவரது ஆங்கில உரைக்கு முன்னர் திராவிடர் கழகத்தின் வெளியுறவுச் செயலாளர் கோ. கருணாநிதி தொடக்கவுரை ஆற்றினார்.


தமிழர் தலைவர், ஆசிரியர் அவர்களின் உரையினை தமிழ்நாடு, வெளிமாநிலங்கள், குறிப்பாக பீகார், கருநாடகா, மும்பை (மராட்டியம்), குஜராத் மாநில சமூக நீதி ஆர்வலர்கள் மற்றும் வெளிநாட்டு வாழ் தமிழர்கள் பலரும் கேட்டனர்.


தனது உரைக்குப் பின்னர் நடந்த வினா-விடை, விளக்க நிகழ்ச்சியில் தோழர்கள் கேட்ட கேள்விக்கு தமிழர் தலைவர் சுருக்கமாகவும், கருத்துச் செறிவுடனும் பதிலளித்தார். காணொலி நிகழ்ச்சியினை திராவிட மாணவர் கழகச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் ஒருங்கிணைந்து நடத்தி, நன்றி கூறி நிறைவு செய்தார்.


 


சத்திரபதி சாகு மகராஜ் - டாக்டர் டி.எம். நாயர் நட்பு



கோலாப்பூர் சமஸ்தான அரசர் சத்ரபதி சாகு மகராஜ் சென்னையில் இருந்த தலைவர் களுடன், குறிப்பாக பார்ப்பனர் அல்லாத பல தலைவர்களுடன் கொள்கை சார்ந்த தொடர் பில் இருந்தார். நீதிக் கட்சி நிறுவனர்களுள் ஒருவ ரான டாக்டர் டி.எம். நாயரை 1919-ஆம் ஆண்டில் பம்பாய் (இன்றைய மும்பை) நகரில் சந்தித்தார் சாகு மகராஜ். இருவரும் தனிப்பட்ட முறையிலும், கொள்கை சார்ந்த வகையிலும் நட்பு பாராட்டி மிக நெருக்கமாக இருந்து வந்தனர். 1919-ஆண்டு ஜூலை 17-ஆம் நாள் லண்டனில் டி.எம். நாயர் மறைந்த செய்தி அறிந்து சாகு மகராஜ் பெருந்துயர் கொண்டார். தனக்கு ஆலோசனை வழங்கக் கூடிய கொள்கை சார்ந்த தோழமையை இழந்து விட்டதை அவரால் நம்ப முடியவில்லை. தனது தோழர் டாக்டர். டி.எம். நாயரின் நினைவினைப் போற்றும் வகையில் தனது சமஸ்தானத்தில் 'டி.எம். நாயர் நினைவு கல்விநிதி' ஒன்றை ஏற்படுத்தி, பார்ப்பனர் அல்லாத மாணவர்கள் கல்வி பயிலுவதற்கு அதன் மூலம் உதவி அளித்து வந்தார். டாக்டர் டி.எம். நாயர் இறந்த மூன்று ஆண்டுகளிலேயே சாகு மகராஜும் மறைய நேரிட்டது, பார்ப்பன ர்அல்லாதார் இயக்கத்தில் ஒரு பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிட்டது. இருப் பினும் அந்த மாபெரும் சமூக நீதித் தலைவர்கள் தங்களது கொள்கையால் ஒடுக்கப்பட்டோருக்கான மேம் பாட்டு பணிகளில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் கள். சமூக நீதிப் போராட்டங்களுக்கு உந்து சக்தி யாக விளங்கிக் கொண்டு இருக்கிறார்கள்.


No comments:

Post a Comment