சென்னை, ஜூலை 24- தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கே.சண்முகம் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப் பட்டு இருப்பதாவது:-
கரோனா நோய்த் தொற்றைத் தவிர்க்க, அரசுத் துறைகளில் பணியாற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அலுவலகப் பணியை மேற்கொள்வதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநர் பலமுறை அரசை கேட்டுக் கொண்டு வருகிறார். அவரது கோரிக்கையை ஏற்று, அவர்கள் தங்கள் அலுவலகத்தில் பணி மேற்கொள்வதிலிருந்து கடந்த மார்ச் 24ஆம் தேதி முதல் இம்மாதம் 15ஆம் தேதிவரை விலக்களித்து அரசு ஆணையிட்டுள்ளது.
இந்த நிலையில், 31ஆம் தேதிவரை தனியார் மற்றும் அரசு பொதுப் பேருந்துப் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதால் மாற்றுத்திறனாளி அரசு பணியாளர் களின் உடல் குறைபாட்டையும், பாது காப்பையும் கருத்தில் கொண்டு அலு வலகப் பணி மேற்கொள்ள 31ஆம் தேதி வரை விலக்கு அளிக்க வேண்டும் என்று மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநர் கோரியுள்ளார்.
அவரது கோரிக்கையைப் பரிசீலித்த அரசு, 31ஆம் தேதிவரை மட்டும் அலுவ லகப் பணி மேற்கொள்வதில் இருந்து அவர்களுக்கு விலக்கு அளித்து உத்தர விடுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.1 லட்சம் நிதி
புதுச்சேரி, ஜூலை 24- புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் இதுவரை 2,421 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 34 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளனர். புதுச்சேரியில் கரோனா நோய்த் தொற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஒரு லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என புதுச்சேரி சட்டப் பேரவையில் முதலமைச்சர் நாராயண சாமி அறிவித்துள்ளார்.
மேலும் கரோனா நிவாரண நிதியாக பொதுநிவாரண நிதிக்கு ரூ.9.16 கோடி வந்துள்ளதாகவும் அம்மாநில முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார்.
மேலும் கரோனா தொற்றால் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள இல்லங்கள் அனைத்துக்கும் 700 ரூபாய் மதிப்புள்ள அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படும் என்றும் முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment