பெல்லாரி சிறையில் நடந்தது என்ன - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 23, 2020

பெல்லாரி சிறையில் நடந்தது என்ன

பெல்லாரி சிறையில் நடந்தது என்ன?


‘‘ஒப்பற்ற தலைமை-3'' என்ற தலைப்பில் நடைபெற்ற காணொலி நிகழ்வில் தமிழர் தலைவரின் சிறப்புரை



சென்னை, ஜூலை 23- பெரியார் ஒரு தனி மனிதரல்ல; அநாதையல்ல; இரண்டரைக் கோடி தமிழர்களின் பிரதிநிதி: இரண்டரைக்கோடி தமிழர்களின் விடுதலைக்காகவே அவர் சிறையில் தவம் கிடக்கிறார். அவருடைய சுக துக்கங் களில் இரண்டரைக் கோடி தமிழர் களுக்கும் பங்குண்டு என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.


‘ஒப்பற்ற தலைமை'


கடந்த 4.7.2020 மாலை 5.30 மணியளவில்  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ‘‘ஒப்பற்ற தலைமை'' (பொழிவு-3) எனும் தலைப்பில் காணொலிமூலம் கழகத் தோழர்களிடையே சிறப்புரையாற்றினார்.


அவரது உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:


‘‘இரண்டாவது கருப்புச் சட்டைப் படை மாநாடு''


அதே மதுரையில், அய்யா அவர்கள் மறைவதற்கு முன்பு  தந்தை பெரியார் சிலை. சிலை திறப்பு விழா நடைபெற்ற தமுக்கம் மைதானத்தில் காலை மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டிற்குப் பெயர் ‘‘இரண்டாவது கருப்புச் சட்டைப் படை மாநாடு'' என்ற தலைப்பில் நடத்தினோம். அந்த மாநாட்டில் நாவலர் நெடுஞ்செழியன், அன்றைக்கு மேயராக இருந்த மதுரை முத்து அவர்கள் எல்லாம் சேர்ந்துதான், இன்றைக்கு கம்பீரமாக மதுரை மாநகராட்சிக்குப் பக்கத்தில்  தந்தை பெரியார் சிலையை அன்றைக்குத் திறந்து வைத்தார்கள்.


கடலூரில் செருப்பொன்று போட்டால் சிலை ஒன்று முளைக்கும். புதுகையில் காலித்தனம் செய்தால், அங்கே முதலமைச்சரே சிலை திறந்து வைத்தார்.


அதுபோலவே, மதுரையில் நாவலர் நெடுஞ்செழியன் அவர்கள், மேயர் மதுரை முத்து அவர்கள், தந்தை பெரியார் அவர்களின் முன்னிலையிலேயே சிலை திறப்பு விழா நடைபெற்றது. இன்றைக்கு இளைஞர்கள் ஏராளமாக மதுரை மாநகரில் நம்முடைய போராட்டங்கள் என்றாலும், பொதுக்கூட்டம் என்றாலும் திரளுகிறார்கள் என்றால், அது எதைக் காட்டுகிறது?


ஆகவே நண்பர்களே, மதுரை கருப்புச் சட்டை மாநாட் டில் பந்தலை எரித்தார்கள்; பெண்களுக்குத் தொல்லை கொடுத்தார்கள்; அடிவாங்கியிருக்கிறார்கள்; என்னுடைய ஆசான் திராவிடமணி அவர்கள் எந்த அளவிற்குத் தாக்கப் பட்டார் என்பதை அய்யா அவர்களே பதிவு செய்திருக்கிறார்.


‘திராவிட நாடு‘ ஏட்டில்


‘மரண சாசனம்' தலையங்கம்!


திராவிடர் கழகத்தின் இன்னொரு பொதுக் காரியதரிசி அண்ணா அவர்கள். ‘திராவிட நாடு' ஏட்டில், ‘மரண சாசனம்' என்ற தலைப்பில் ஒரு தலையங்கம் எழுதினார். அது சாதாரணமான தலையங்கம் அல்ல, மிகப்பெரிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.


எனவே, இயக்கம் இதுபோன்ற எதிர்ப்புகளை ஏராள மாக இன்றுவரை சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறது. அதைப்பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. நாளைக்கும் எதிர்ப்புகளைச் சந்திப்போம். எதிர்ப்பு என்ற உரம் போட் டால்தான், கொள்கை என்ற பயிர் செழிக்கும் என்பது நமக்கு நன்றாகத் தெரியும். ஆகவே, அதைப்பற்றி கவலைப் படாமல், எதிர்நீச்சல் அடித்து, பெரியார் வென்றார்.


அவர் காலத்திலேயே, அவர் முன்னிலையிலேயே மதுரையில் சிலை திறக்கப்பட்டது என்பதுதான் மிக முக் கியமாகும். அவர் முன்னிலையிலேயே கடலூரில் சிலை திறக்கப்பட்டது என்பதுதான் வரலாறு.


உலக வரலாற்றிலே எந்த ஒரு தலைவரும், இப்படிப் பட்ட ஒரு பெருமையை, அவருடைய கொள்கையினு டைய விளைச்சலை, அவரே அறுவடை செய்து, அவரே பார்த்துப் பயன்படக் கூடிய அளவிற்கு அந்த வாய்ப்புகள், வேறு எந்த ஒரு தலைவருக்குமே கிட்டியிருக்காது என் பதை இந்த நேரத்தில் நீங்கள் எல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும்.


இந்தி எதிர்ப்புப் போராட்டம்!


அடுத்தபடியான செய்திக்கு நாம் வருவோம்.


இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் தந்தை பெரியார் அவர்கள் தண்டிக்கப்பட்டு சிறைச்சாலைக்குச் செல்கிறார்.


1938 ஆம் ஆண்டு சிறைச்சாலையில் அய்யா அவர் களுடைய உடல்நலம் குன்றியது.


சென்ற பொழிவில் நான் சுட்டிக்காட்டினேன். 1933 ஆம் ஆண்டு நாகம்மையார் மறைந்துவிட்டார். அதற்குப் பிறகு அய்யா அவர்களைக் கவனிப்பதற்கு ஆளில்லை. 1943 ஆம் ஆண்டிலேதான் அன்னை மணியம்மையார் அவர்கள் வருகிறார்.


1933 ஆம் ஆண்டிலிருந்து 1943 ஆம் ஆண்டுவரை தந்தை பெரியார் அவர்களின் உடல்நலம், பசி, பிணி போக்குவதற்கும், அவரை கவனிப்பதற்கும் வாய்ப்புகள் மிகவும் குறைவு. அதைப்பற்றி அய்யா அவர்கள் கவலைப் படவில்லை. ‘குடிசெய்வார்க்கில்லை பருவம்' என்பது போல, உடல்நலம் கருதாது, மானம் கருதாது அவர்கள் பாடுபட்டுக் கொண்டே இருந்தார்.


அய்யா அவர்கள் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் தண்டிக்கப்பட்டு, சிறைச்சாலைக்குச் சென்ற சூழலைப்பற்றி திரு.வி.க. அவர்கள் எழுதுகிறார். அதைப்பற்றி இன்றைய இளைஞர்கள் தெரிந்துகொள்ளவேண்டும்.


‘நவசக்தி' இதழில்


திரு.வி.க. எழுதிய தலையங்கம்!


9.12.1938 இல் ‘நவசக்தி' இதழில் தீட்டிய தலையங்கம் பல அருமையான உண்மைகளை எடுத்துக்காட்டுவதாக இருக்கிறது. திரு.வி.க. தன்னுடைய அழகுத் தமிழில், அந்தக் காட்சியை உருவகப்படுத்துகிறார்.


திரு.வி.க. அவர்களின் நடையிலும் பார்க்கவேண்டும்; இன்னொன்று ‘நகரத்தூதன்' என்று மணவை திருமலைசாமி அவர்கள் எழுதியிருப்பார்கள். அதில் அவர் வருணித்து எழுதியிருப்பார்.


அந்த இரண்டும் இதுவரையில் காண முடியாத எழுத்து கள்; கற்பனை செய்ய முடியாத அளவிற்கு அவர்களுடைய சிந்தனை ஓட்டங்கள், வளங்கள் இருக்கும்.


திரு.வி.க. அவர்கள் எழுதுகிறார்,


‘‘6.12.1938 இல், திரு.ஈ.வெ.இராமசாமி நாயக்கர் கடுங் காவல் தண்டனை ஏற்றுச் சிறைக்கோட்டம் நண்ணினர். வெள்ளிய தாடி அசைய, மெலிந்த தோல் திரங்க, இரங்கிய கண்கள் ஒளிர, பரந்த முகம் மலர, கனிந்த முதுமை ஒழுக ஒழுகத் தாங்கிய தடியுடன் திரு.நாயக்கர் சிறைபுகுந்த காட்சி, அவர்தம் பகைவர், நொதுமலர், நண்பர் எல்லாருள் ளத்தையும் குழையச் செய்திருக்கும் என்பதில் அய்யமில்லை.


முதுமைப் பருவம்! காவல்! கடுங்காவல்! என்னே! இந்நிலையை உன்ன உன்ன உள்ளம் உருகுகிறது. திரு.நாயக்கருடன் மிக நெருங்கிப் பழகிய சிலர் மந்திரிப் பதவியில் வீற்றிருக்கின்றனர். அவர்தம் மனமும் கசிந்தே யிருக்கும். வயதின் முதிர்ச்சி எவரையும் அலமரச் செய்யும்.


நண்பர் நாயக்கருக்கு சிறைவாசம் பழையது, மிகப் பழையது. புதியதன்று. முன்னே அவர் ஒரு ஒத்துழையா மையில் ஈடுபட்டும், தீண்டாமையை முன்னிட்டும், சமதர் மத்தைக் குறிக்கொண்டும் பலமுறை சிறை சென்றுள்ளார். இம்முறை அவர் இந்தி எதிர்ப்புக் காரணமாக சிறை சென் றிருக்கின்றார். சிறையில் நுழைந்திருக்கின்றார். சிறைக் கோட்டம் நாயக்கருக்கு ஒருவித தவக்கோட்டம் ஆவது போலும், சிறைப் பறவையாகிய இராமசாமி நாயக்கர் வரலாற்றை விரித்துக் கூறவேண்டியதில்லை. அவர்தம் வரலாற்றில் அறிய கிடக்கும் நுட்பங்கள்.''


இந்த உன்னத தலைமை, ஒப்பற்ற தலைமை எப்படிப் பட்டது என்பதை மேற்கண்ட ஒரு பத்தியில் அளந்து காட்டலாம். திரு.வி.க. அவர்கள், தந்தை பெரியாரோடு வாழ்நாள் முழுவதும் சண்டையிட்டுக் கொண்டிருந்த நண்பர். இறுதிவரையில் பிரிக்க முடியாத நண்பர்களாக இருந்தவர்கள். தமிழ்த்தென்றல் திரு.வி.க. அவர்கள் மேலும் எழுதுகிறார்,


‘‘அவர்தம் வரலாற்றில் அறியக் கிடக்கும் நுட்பங்கள்பல. சிறப்பாக குறிக்கத் தக்கன. இடையறா சேவை. சமத்துவ நோக்கம், சுதந்திர உணர்ச்சி. நட்புரிமை, தாட்சண்யமின்மை, உள்ளொன்று வைத்து, புறமொன்று பேசாமை, அஞ்சாமை, ஊக்கம், சோர்வின்மை, சலிப்பின்மை, எடுத்த வினையை முடிக்கும் திறன், கரவு, சூழ்ச்சியின்மை முதலியன இவை அவர்தம் வாழ்வாக அறிந்து, மலர்ந்து, காய்த்து, கனிந்து நிற்கின்றன. இத்தகைய நேர்மைகள் திரு.நாயக்கரை அடிக்கடி சிறைபுகச் செய்கின்றன போலும்.


முதுமைப் பருவத்திலும் திரு.நாயக்கர் தலைசாய்ந்து படுக்கையில் கிடந்து, காலம் கழிந்தாரில்லை. அவர் தமிழ்நாட்டின் நாலாப்பக்கமும் சுழன்று சுழன்று, இரவு - பகல் ஓயாது கர்ச்சனை செய்து வந்தார். ஓய்வு என்பதை அறியாது வீர கர்ச்சனை புரிந்த கிழச்சிங்கம் இப்பொழுது ஓய்வு பெற்றிருக்கிறது; சிறையில் தலைநிமிர்ந்து கிடக்கிறது.


திரு.நாயக்கர் சிறையில் வதிவதால் அவர்தம் செல் வாக்குக் குறையுமென்று மந்திரிசபை நினைக்குமாயின், அவர் நினைவு நாளடைவில் கனவாகவே முடியும். திரு.நாயக்கருக்கு செல்வாக்கு ஓங்கியே நிற்கிறது.


நண்பரே, நாயக்கரே, தள்ளாத வயதில் சிறைபுகுந்திருக் கிறீர்கள். உம் வயது, உடல்நிலை முதலியவற்றை நினைந்து, முதலமைச்சர் உம்மை விடுதலை செய்வார் என்று எதிர் பார்க்கிறோம்.''


என்று பெருந்தன்மையோடு திரு.வி.க. அவர்கள் எழுதினார்.


தந்தை பெரியார் அவர்களுக்கு அப்போது 61 வயது.


நான் சொன்னபடியே, 10 ஆண்டுகள் கவனிப்பாரற்று ஓய்வறியாது உழைக்கிறார் தந்தை பெரியார். அதற்கு திரு.வி.க. அவர்களே சாட்சியம் அளித்திருக்கிறார்.


அப்படிப்பட்ட சூழ்நிலையில், பெரியார் அவர்களின் விஷயத்தில் நடந்தது என்ன என்பதைப்பற்றி நீங்கள் நினைத்துப் பார்க்கவேண்டும். பெரியார் அவர்கள் தண்டிக்கப்பட்டு, சென்னையிலுள்ள சிறைச்சாலைக்குக் கொண்டுவரப்பட்டபொழுது அடுத்து ஒரு செய்தி.


பெல்லாரி சிறையில் தந்தை பெரியார்!


இது பதிவு செய்யப்பட்டு இருக்கிற ஒரு செய்தி, ‘குடிஅரசு' இதழில் வந்த செய்தி.


‘‘பெரியார் விஷயத்தில் காங்கிரஸ் சர்க்கார் நடந்து வரும் முறை நாகரிக மக்களால் ஆதரிக்கக்கூடியதாக இருக்கவில்லை. 61ஆம் வயதிலே கடுந்தண்டனைக்கு ஆளாகிச் சென்னைச் சிறையிலிருந்து வந்த பெரியார், சிறைவாழ்வும், சிறை உணவும் பிடியாமல் நோய்வாய்ப் பட்டார். ஆகவே, அவரிடம் சொந்த ஜாமீன் வாங்கிக் கொண்டு காங்கிரஸ் சர்க்கார் தற்காலிகமாக விடுதலை செய்து சென்னை ஜெனரல் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பினார்கள். தற்காலிகமாக விடுதலை செய்வோரை ஆஸ்பத்திரியிலிருக்கும் போதாவது சுதந்திரராக விடுவதே முறை. ஆனால், அந்தப்பெருந்தன்மை ஆச்சாரியார் சர்க்காருக்கு இல்லாமல் போய்விட்டது ஆஸ்பத்திரியிலும் பெரியாருக்குப் போலீஸ் காவல் போடப்பட்டது அவரைப் பார்க்கச் செல்வோருக்கு அனுமதியளிக்கப்படவில்லை. அவருக்குத் தேவையான உதவிகள் செய்ய சொந்த ஆள் பக்கத்திலிருக்கவும் சர்க்கார் சம்மதிக்கவில்லை. இந்த நிலையில் பெரியார் 10 முறை எக்ஸ்ரே பரிசோதனை செய்யப்பட்டார். அப்பரிசோதனைகளின் பயனாய் “வயிற் றில் கட்டி, புண் முதலிய கோளாறுகள் இல்லையென்றும், வயிறு பெருத்திருப்பதால் குடல் தளர்ச்சியடைந்து ஜீரணக் கருவிகள் சரிவர வேலை செய்யாததினாலேயே உணவு ஜீரணிக்கும்பொழுது வயிற்றில் வலியேற்படுகிறதென்றும்" டாக்டர்கள் அபிப்பிராயப்பட்டதாகத் தெரிய வருகிறது. அஞ்சத்தக்க கோளாறுகள் பெரியாருக்கு இல்லாவிட்டாலும் ஒரே ஒருவேளை உணவுண்டு வருவதாலும், அதுவும் சரியாக ஜீரணியாமலிருப்பதாலும் பெரியார் எடையில் 10 பவுண்டு குறைந்திருப்பதாயும் சொல்லப்படுகிறது. இந் நிலையில் அவரை ஜாக்கிரதையாகக் கவனிக்க வேண்டி யது காங்கிரஸ் சர்க்கார் கடமையல்லவா? அவரது தள்ளாத பருவத்துக்கேற்ற வசதிகள் அளிக்கவேண்டியது தர்மமல் லவா? இவ்வளவு வருந்தத்தக்க, இரங்கத்தக்க நிலைமையிலிருக்கும் பெரியாரை ஒரு காரணமுமின்றிப் பெல்லாரிச் சிறைக்குத் திடீரென மாற்றுவதென்றால் இதை யாரால்தான் சகித்துக் கொண்டிருக்க முடியும்?


பெல்லாரி வெப்பம் பொருந்திய பிரதேசம், சுத்தமான குடி தண்ணீர் கிடையாதாம். ஆந்திரநாடு. ஆகையினா லேயே ஆந்திரர்களின் உணவு முறையும் பெரியாருக்கு ஒத்துக்கொள்ளாது. சென்னைச் சிறையிலிருந்தால் அவ ருக்கு வேண்டியவர்கள் அடிக்கடி அவரைப் பார்த்துக் கொள்ள வசதியுண்டு. அவரது உடல் நிலையை அவ்வப் போது பொது ஜனங்கள் தெரிந்துகொள்ளவும் சவுகரிய மிருக்கும்.


பெல்லாரிச் சிறையிலிருக்கும் பெரியார் உடல் நிலை யைத் தென்னாட்டார் எப்படி அறிவது? பெரியார் ஒரு தனி மனிதரல்ல; அநாதையல்ல; இரண்டரைக் கோடி தமிழர்களின் பிரதிநிதி: இரண்டரைக்கோடி தமிழர்களின் விடுதலைக்காகவே அவர் சிறையில் தவம் கிடக்கிறார். அவருடைய சுக துக்கங்களில் இரண்டரைக் கோடி தமிழர் களுக்கும் பங்குண்டு. பெரியார் காலில் முள் தைத்தால் இரண்டரைக் கோடி தமிழர்களும் தம் கண்களில் முள் தைத்தது போல் வருந்துவார்கள். பெரியார் சிறையில் படும் கஷ்டங்களை எண்ணி இரண்டரைக் கோடி தமிழர்களும் சதா இரத்தக்கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறார்கள். பெரியார் பெல்லாரிச் சிறைக்கு மாற்றப்பட்டதையறிந்தால் இந்த இரண்டரைக் கோடி தமிழர்களும் புழுவாய்த் துடிப்பார்கள் என்பது நிச்சயம். “நானும் ஒரு தமிழனே" என மார்தட்டிக் கூறும் கனம் ஆச்சாரியார் இரண்டரைக் கோடி தமிழர் மனமும் புண்படும்படிச் செய்வது நேர்மை யாகுமா? நீதியாகுமா? தர்மமாகுமா? மனிதத் தன்மையா குமா? பெரியாரை வசதியான இடத்தில் வைத்திருப்பதினால் யாருக்கு என்ன நஷ்டம்? காசு, பணம் செலவில்லாத உதவியாவது பெரியாருக்கு காங்கிரஸ் சர்க்கார் செய்ய வேண்டாமா? காங்கிரஸ் சர்க்கார் புத்தி இவ்வாறு கெட்டுப்போகக் காரணம் என்ன? பழிக்குப் பழி வாங்கும் முறையில் பெரியாரை நடத்துவதினால் தமிழர் இயக்கத்தை வெகு சுளுவில் ஒடுக்கி விடலாமென்பது காங்கிரஸ் சர்க்கார் எண்ணமா? பெரியாரைக் கஷ்டப்படுத்துவதினால் இரண்டரைக் கோடி தமிழர்களையும் வலிய சண்டைக்கு அழைப்பதை கனம் ஆச்சாரியார் உணரவில்லையா? வீர நடராஜன் சிறுவயதிலே அகால மரணமடைந்ததை எண்ணி மனம் புண்பட்டுக் கொதித்துக் கொண்டிருக்கும் இரண்டரைக் கோடி தமிழர் மனம் ஆறும் முன்பு பெரியாரைச் சிறை மாற்றி, புண்பட்ட தமிழர் உள்ளத்தைக் கோலிட்டுக் கிண்டுவது கருணையாகுமா? வாஸ்தவத்தில் ஆச்சாரியார் போக்கு மிகவும் மோசமான போக்காகவே இருக்கிறது. இதனால் என்ன பயன் விளையப் போகிறதோ யார் கண்டார்கள்? (‘குடிஅரசு', தலையங்கம், 26.02.1939).


ஆனால், பெல்லாரி சிறையில் நடந்தது என்ன? அருள்கூர்ந்து எண்ணிப் பார்க்கவேண்டும் நண்பர்களே!


அந்த பெல்லாரி சிறையில் நடந்தது சாதாரணமானதல்ல நண்பர்களே!


அய்யா கைப்பட எழுதிய


டைரிக் குறிப்பிலிருந்து....


இதோ என் கைகளில் இருப்பது அய்யாவின் டைரி. அய்யா அவர்கள் 1939 ஆம் ஆண்டு டைரிக் குறிப்பில் எழுதியதை இரண்டை மட்டும் உங்களுக்குச் சொல்கிறேன்.


"3.3.1939:


கைதி நெம்பர் 5544


இன்று பட்டினி


4.3.1939


எடை: 184 பவுண்டு


7.3.1939 தேதிதான் சாப்பிட்டோம்.


11.3.1939


எடை 171 ஆகக் குறைகிறது."


மார்ச் 6 ஆம் தேதி அவர் எழுதிய டைரிக் குறிப்பைப் படிக்கும்பொழுது நண்பர்களே, நம் நெஞ்சமெல்லாம் பதைக்கிறது; கண்கள் எல்லாம் குளமாகின்றன.


"டாக்டர் குருசாமி முதலியாருக்கு எழுதவேண்டும்."


டாக்டர் குருசாமி முதலியார் என்பவர் சென்னையில் தந்தை பெரியாரின் உடல்நலத்தைப் பார்க்கின்றவர். மிகப்பெரிய டாக்டர். அவருடைய சிலை சென்னை பொது மருத்துவமனைக்கு முன் வைக்கப்பட்டு இருக்கிறது.


பெரியார் டைரிக் குறிப்பில் எழுதுகிறார்,


"இரவு பெல்லாரி ஜெயிலில், கடினமான வயிற்று வலி. இரவு 10 மணி சுமாருக்கு சூப்பிரெண்ட் துரை வந்து பார்த்தார். டாக்டரை அனுப்பினார், மருந்து கொடுத்தார். சுடு தண்ணீர் ஒத்தடம் 11 மணிக்குக் கொடுத்தார்கள். வலி இரவு ஒரு மணிவரை இருந்தது.


மறுநாள், பெல்லாரி ஜெயிலில் போலீஸ் அமைச்சராக இருந்த டாக்டர் சுப்பராயன் வந்து பார்த்தார்.


அடுத்து,


21.3.1939


பேரீச்சம் பழத்தை டாக்டர் நிறுத்திவிட்டார். டாக்ட ரைக் கோபித்துக் கொண்டவுடன், பால் கூட கொடுப்பதை நிறுத்திவிட்டார்கள். ஒரு பிண்ட் பால் எழுதினார், மாவு நிறுத்தவில்லை, கிழங்கை நிறுத்தவில்லை. பேரீச்சம் பழத்தைக் கொடுத்தார்கள். இரவு ரொட்டி மட்டும் கொடுத்தார்கள். வயிற்று வலி அதிகமானது.


ஏப்ரல் 5 ஆம் தேதி,



  1. உடம்பு வலி,

  2. உடல் இளைத்துவிட்டது

  3. மயக்கம்

  4. களைப்பு

  5. வாய்க் கசப்பு, ஆகாரம் செல்வதில்லை

  6. ருசி இல்லை

  7. சரியாக வெளிக்குப் போவதில்லை

  8. வயிற்று வலி அடிக்கடி

  9. சாப்பிட்டவுடன் ஒருவகையான வலி, சங்கடம்

  10. சாப்பாடு கொள்வதில்லை

  11. வாந்தி எடுக்கும் உணர்ச்சி அடிக்கடி

  12. வாயில் பல் தொந்தரவு

  13. மார்பு அடிக்கடி படபடவென்று அடித்துக் கொள்கிறது.

  14. வாய்க் காய்ந்து போகிறது, வாந்தி, பேதி ஆயிற்று

  15. தூக்கம் வருவதில்லை

  16. கண் சுற்றி எரிச்சல்"


இதுபோன்று அய்யா அவர்களுடைய உடல்நிலை இருந்தபொழுதுதான், குருசாமி முதலியார் சென்னையிலி ருந்து போய் பார்க்கிறார். அய்யா அவர்களை பெல்லாரி சிறையிலிருந்து கோவை சிறைக்கு மாற்றுகிறார்கள்.


கோவை சிறைச்சாலையில், அய்யா அவர்களுக்கு மருந்துகள் கொடுக்கப்படுகிறது. அப்பொழுதும் அய்யா அவர்களுக்கு உடல்நலக் குறைவு ஏற்படுகிறது. வயிற்று வலியும், சங்கடமும் ஏற்படுகிறது. 164 பவுண்டாக அவர் உடல் எடை குறைகிறது.


நண்பர்களே, இதைப் படிக்கின்றபொழுது நம் நெஞ்சம் பதைபதைக்கிறது; இதைப் படிக்கும்பொழுது என்னுடைய உணர்வுகள் எப்படி இருந்திருக்கும் என்பதை நினைத்துப் பாருங்கள். அந்தக் காலகட்டத்தில், தந்தை பெரியார் அவர் களுக்கு ஓர் உதவியாளர்கள்கூட கிடையாது.


இப்பொழுது போராட்டத்தில் பங்கேற்றுச் சிறைச் சாலைக்குப் போனால், தோழர்கள் உதவிக்கு இருக்கிறார் கள். ஆனால், அப்போது அப்படிப்பட்ட நிலை இல்லை.


பெரியாரின் உடல்நிலையைப் பார்த்து, பயந்து போய் திடீரென்று ஆச்சாரியார் அய்யா அவர்களை சிறையிலி ருந்து விடுவித்தார். ஆச்சாரியார், எப்படிப்பட்ட ஆச்சாரி யார்? பார்ப்பனர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை நீங் கள் புரிந்துகொள் வதற்கு இது ஒரு நல்ல சந்தர்ப்பம்.


ஆள்வது நானா? இராமசாமி நாயக்கரா? என்று கேட்டார், சட்டமன்றத்திலேயே - வெளியிலும் பத்திரிகைக் காரர்களுக்கு அளித்த பேட்டியிலும் கேட்டார்.


வைக்கம் போராட்டத்தில் தந்தை பெரியார் அவர்கள் சிறையேகிய போது, அங்கே பெரியாரை கடுமையாக நடத்தியபொழுது, இதே ஆச்சாரியார் ‘இந்து' பத்திரிகையில் அறிக்கை கொடுத்தார். திருவிதாங்கூர் அரசாங்கத்திற்குக் கடிதம் எழுதுகிறார்.


அப்பொழுது தந்தை பெரியாருக்கு வயது என்ன?


வைக்கம் போராட்டம் நடந்தது 1924 ஆம் ஆண்டு.


இந்திப் போராட்டம் நடந்தது 1939 ஆம் ஆண்டு.


- தொடரும்


No comments:

Post a Comment