இன்றைய தலைமுறையினர் நாவலர் அவர்களை பகுத்தறிவுச் சுடராகப் பாருங்கள்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 29, 2020

இன்றைய தலைமுறையினர் நாவலர் அவர்களை பகுத்தறிவுச் சுடராகப் பாருங்கள்!

நாவலர் நெடுஞ்செழியன் நூற்றாண்டு விழா காணொலியில் தமிழர் தலைவர் சிறப்புரை



சென்னை, ஜூலை 29- இன்றைய தலைமுறையினர் நாவலர் அவர்களை பகுத்தறிவுச் சுடராகப் பாருங்கள்! என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் காணொலி மூலம் உரையாற்றினார்.


நாவலர் நெடுஞ்செழியன் நூற்றாண்டு விழா


கடந்த 11.7.2020 மாலை 6 மணியளவில்  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ‘‘நாவலர் நெடுஞ்செழியன் நூற்றாண்டு'  விழா"வில் காணொலி மூலம் கழகத் தோழர்களிடையே சிறப்புரையாற்றினார். அவரது சிறப்புரையின் நேற்றைய  தொடர்ச்சி வருமாறு:


புரட்சிக்கவிஞர் அவர்களுடைய கருத்துகளை வீரத் தோடும், துடிப்போடும், செருக்கோடும், மிடுக்கோடும் கேட்கவேண்டுமானால், நாவலர் அவர்களுடைய உரை யில் கேட்கவேண்டும்.


நயத்தோடு அதை அனுபவிக்கவேண்டுமானால்,  முதுபெரும் புலவர் பேராசிரியர் ந.இராமநாதன் அவர்களி டத்திலிருந்து அதைக் கேட்கவேண்டும்.


புரட்சிக்கவிஞர் அவர்கள்கூட சொன்னார், ‘‘என் னப்பா, எனக்கே தெரியாத விஷயத்தை நம்முடைய இராமநாதன் சொல்றான்பா'' என்று உரிமை எடுத்துக் கொண்டு சொல்வார்.


இந்த நேரத்தில் ஒரு செய்தியைச் சொல்லவேண்டும். புரட்சிக்கவிஞர் அவர்களுடைய பாடலில் ஒரு சம்ப வத்தை அழகாகச் சொல்கிறார். அந்தச் செய்தியை நாவலர் அவர்கள் மேடையில் பேசும்போது, மிகவும் உணர்ச்சி பூர்வமாக மிக அழகாகச் சொல்வார்.


புரட்சிக்கவிஞரின் கவிதை வரிகளும் -


கவர்னரின் ஆவலும்!


அது என்னவென்றால்,


புரட்சிக்கவிஞர் அவர்கள் பணியாற்றுகிறார்; அவர் சுயமரியாதை இயக்கத்தைத் தழுவியவர். ஆசிரியராகப் பணியாற்றியவர். சுயமரியாதை இயக்கத்தில் இருப்பவரை எப்படியாவது பணியிலிருந்து விரட்டவேண்டும் என்று சில நரிகள், விபீடணர்கள் முயற்சி செய்கிறார்கள்.


பிரெஞ்சுப் புரட்சியில் ஏற்பட்ட மாற்றங்கள் என்ற நிகழ்ச்சியில், புரட்சிக்கவிஞர் பணியாற்றிய பள்ளியின் நூற்றாண்டு விழாவில் அந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. அவ்விழாவிற்குக் கவர்னர் வருகிறார்.


மாலையில் கவர்னரைப்பற்றி புரட்சிக்கவிஞர் அவர் கள் கவிதை சொல்லவேண்டும் என்பதாக நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார்கள்.


புரட்சிக்கவிஞர் தன்னுடைய சுயமரியாதைக் கருத்தை உள்ளே வைத்திருப்பார் என்று தெரிந்துகொண்டே, கூட இருந்த விபீடணர்கள் சிலர், அந்தக் கவிதையை பிரெஞ்சு மொழியில் மொழி பெயர்த்துச் சொன்னால், கவர்னருக்குப் புரியும்படி இருக்கும் என்று ஒரு தந்திரமான ஏற்பாட்டினைக் செய்கிறார்கள்.


ஏனென்றால், புரட்சிக்கவிஞரை எப்படியாவது மாட்டி விடவேண்டும்; புரட்சிக் கருத்துகளைச் சொல்வதைக் கண்டு கவர்னர் வெறுப்படைவார். புரட்சிக்கவிஞர் மத விரோதி - அவருடைய கருத்துகளைக் கண்டித்து இவரை வெளியே அனுப்புவார்கள் என்று விபீடணர்கள் நினைத்தார்கள்.


அந்நிகழ்வில், கவர்னர் உள்பட, பாதிரிமார்கள் உள்பட நிறைய பேர் அமர்ந்திருக்கின்றார்கள்.


அந்நிகழ்வில், புரட்சிக்கவிஞர் அவர்கள் தன்னுடைய கவிதையைப் படிக்கின்றார். அதை நாவலர் அவர்கள் உரையாற்றுகின்ற மேடையில் மிக அழகாகச் சொல்லுவார்.


‘‘வறியவர்க்கெல்லாம் கல்வியின் வாடை''


என்று புரட்சிக்கவிஞர் அவர்கள் கவிதையின் முதல் வரியைப் படித்தவுடன், அனைவரும் கைதட்டி, அடுத்த தாக என்ன சொல்லப் போகிறார் என்று எதிர்பார்த்தார்கள்.


‘‘வரவிடவில்லை, மத குருக்களின் மேடை'' என்று சொன்னவுடன், அனைவரின் முகமும் சுருங்கிப் போயிற்று. புரட்சிக்கவிஞர் சொன்னதை, பிரெஞ்சு மொழியில் மொழி பெயர்த்துச் சொல்கிறார்கள். மேடையில், நிறைய பாதிரிமார்கள் இருக்கிறார்கள், எதிரே இருப்பவர்களிலும் நிறைய பாதிரிமார்கள் இருக்கிறார்கள்.


புரட்சிக்கவிஞர் அவர்கள் நிதானமாகப் படிக்கிறார். உடனே மேடையில் இருந்த கவர்னருக்கு ஆர்வம் ஏற் பட்டு, ‘‘கோந்தினியே, கோந்தினியே'' (மேலே சொல்லுங் கள், மேலே சொல்லுங்கள் என்று பிரெஞ்சு மொழியில் அர்த்தம்) என்றாராம்.


வறியவர்க்கெல்லாம் கல்வியின் வாடை


வரவிடவில்லை மத குருக்களின் மேடை


நறுக்கத் தொலைந்தது அந்தப் பீடை


நாடெலாம் பாய்ந்தது கல்வி நீரோடை


என்று புரட்சிக்கவிஞர் அவர்கள் படித்து முடித்ததும், அரங்கமே அதிரும் அளவிற்கு கைதட்டல் எழுந்ததாம்!


என்றென்றைக்கும்


நம் மனதைவிட்டு அகலாது!


இந்த நான்கு வரியை நாம் எல்லோரும் சாதாரணமாகப் படிப்போம். ஆனால், நாவலர் அவர்கள் சொன்ன முறையும், அந்த நிகழ்வை அவர் வர்ணித்த விதமும், என்றென்றைக்கும் நம் மனதைவிட்டு அகலாதிருக்கும்.


புரட்சிக்கவிஞர் அவர்களின் கவிதையை - கவர்னர் சொன்ன ‘கோந்தினியே கோந்தினியே'' என்று சொன்ன விதத்தை, அந்த அரங்கத்தை - புரட்சிக்கவிஞருடைய சிங்கம் போன்ற தோற்றம் - இவை அத்தனையையும் நாவலர் அவர்கள் நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறாரே, இவர்தான் நாவலர். அதை நன்றாக நீங்கள் எண்ணிப் பார்க்கவேண்டும்.


நாவலர் அவர்களின் திருக்குறள் உரை


அதுபோலவே, நண்பர்களே! நாவலருடைய மிகப்பெரிய ஓர் இலக்கியப் பரிசு - திராவிட இயக்கத்திற்கும், தமிழ்ப் பாரம்பரியத்திற்கும், தமிழ் இன உணர்வாளர் களுக்கும் கிடைக்க முடியாத ஒரு அரிய அறிவுச் செல்வம் எது என்றால், நாவலர் அவர்கள் எழுதிய ‘‘திருக்குறள் உரை'' ஆகும்.


அந்தத் திருக்குறள் உரை, பகுத்தறிவாளர்களை, மனித நேயச் சிந்தனையாளர்களை, திருவள்ளுவர் காலத்திற்கே அழைத்துச் சென்று, அந்தப் பகுத்தறிவுச் சிந்தனையை மிக அழகாக எடுத்துச் சொன்னார்.


நாவலர் அவர்களுடைய அந்தப் புத்தகத்தை நாடு தழுவிய அளவில் 40 கூட்டங்களுக்குமேல் நடத்தி, எல்லா நகரங்களிலும் வெளியீட்டு விழாவை நடத்தினோம். அதனால் நாவலர் அவர்களுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது.


நாவலர் அவர்களின் துணைவியார்


நாவலர் அவர்களுடைய துணைவியார் டாக்டர் விசாலாட்சி அம்மையார் அவர்கள் சொல்வார், ‘‘ஆசிரியர் அவர்கள் அழைத்துக் கொண்டு போனால், எனக்குக் கவலையே இல்லை. அவர் பாதுகாப்பாக அழைத்துக் கொண்டு போய், பாதுகாப்பாக அழைத்து வருவார். திராவிடர் கழக நிகழ்ச்சி என்றாலே, கட்டுப்பாடுடன் நடைபெறும் என்று எனக்குத் தெரியும்'' என்பார்.


நாவலரிடம் வேண்டுகோள் வைத்தேன்!


நாவலர் அவர்கள் கடைசிக் காலத்தில் எங்களிடம் மிக நெருக்கமாக இருந்தார்கள். அப்பொழுது நான் ஒன்றை அவரிடம் சொன்னேன், ‘‘அய்யா, நீங்கள் இவ்வளவு பெரிய புத்தகத்தை எழுதியிருக்கிறீர்கள்; எப்படி மு.வரத ராசனார் அவர்கள் திருக்குறளுக்கு பதவுரை, பொழிப்புரை எழுதி, அது சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தில் பல லட்சக்கணக்கானவர்கள் எளிதாகப் படிப்பதற்கு வாய்ப் பாக வந்ததோ, அதுபோல, நீங்கள் ஒரு பொழிப்புரையை எழுதிக் கொடுங்கள்'' என்று சொன்ன நேரத்தில்,


‘‘நான் செய்கிறேன், நல்ல யோசனைதான்'' என்றார்.


சிறிது காலம் கழித்து, முக்கால்வாசி முடித்துவிட்டேன். இன்னும் கொஞ்சம்தான் இருக்கிறது என்றார்.


சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற புத்தாயிரம் கூட்டத்தில் பங்கேற்க வந்தபொழுது, ‘‘அந்தப் பொழிப் புரையை எழுதி முடித்துவிட்டேன்; அதை நீங்களே வெளியிடலாம்'' என்றார்.


பிறகு, அவருடைய அறக்கட்டளையே சிறப்பாக அந்த நூலை பல பதிப்புகள் வெளியிட்டாலும், நாங்கள் அத னைப் பரப்பிக் கொண்டுதான் இருக்கிறோம்.


நாவலருடைய நூல்கள் என்பதும், அவருடைய சிந்த னைகள் என்பதும் காலத்தைத் தாண்டியது.


அந்தப் பொழிப்புரையில் மிகத் தெளிவாக எழுதி யிருக்கிறார். வேறு எவரும் சொல்லாத அளவிற்கு அழுத்த மாக, திருத்தமாகச் சொல்லியிருக்கிறார்.


மனோன்மணியம் சுந்தரனாருடைய வரிகளைச் சொன்னார் மிகத் தெளிவாக.


‘‘வள்ளுவர் செய் திருக்குறளை


மறுவற நன்குணர்ந்தோர்


உள்ளுவரோ மநுவாதி


ஒரு குலத்துக் கொருநீதி''


இந்த வரிகளை மேடையில் எல்லா பேச்சாளர்களும் சொல்வார்கள். நம் உணர்வாளர்கள் சொல்வார்கள், பகுத்தறிவாளர்கள் சொல்வார்கள்.


ஆனால், அந்தப் பொழிப்புரை நூலின் முன்னுரையில் ஒரு செய்தியை சொல்லுகிறார்.


‘‘வள்ளுவர் செய் திருக்குறளை


மறுவற நன்குணர்ந்தோர்''


மறு என்பது என்னவென்று விளக்கம் சொல்கிறார், ‘மறு' என்பது பரிமேலழகர் உரை போன்ற உரை என்கிறார்.


ஏனென்றால், ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு, வைணவக் கருத்துகளைப் பார்ப்பனப் பரிமேலழகர் உள்ளே நுழைத்தார். அறம் என்று சொல்லுகின்ற நேரத்தில், "மனு முதலிய நூல்களில் விதித்தன செயலும், விலக்கியன ஒழிதலுமாம்" என்று அவர் சொல்வது இருக்கிறதே, அதுவே தவறானது என்று சொல்லி, பல இடங்களில் மாறுபட்ட சூழலைச் சொன்னார் நாவலர்.


அதுமட்டுமல்ல, தன்னுடைய திருக்குறள் பொழிப் புரையில், முன்னுரை என்று வந்தால், மனுதர்மத்தோடு ஒப்பிட்டு ஒப்பிட்டு, ஒப்பிட்டு முன்னுரை எழுதியிருப்பார். இந்த சிறு நூலிலும் அது இடம்பெற்றிருக்கிறது; இந்தப் பெரும் விளக்கம் சொல்லக்கூடிய நூலிலும் இடம்பெற்றி ருக்கிறது.


வெறும் பேச்சுக் கச்சேரி நடத்துவதல்ல!


எனவேதான், நாவலருடைய நூற்றாண்டு விழா என்று சொன்னால், வெறும் பேச்சுக் கச்சேரி நடத்துவதல்ல.


நாவலருடைய நூற்றாண்டு விழா என்று சொன்னால், ஏதோ சில சின்னங்களை உருவாக்குவதல்ல.


நாவலருடைய நூற்றாண்டு விழாவில், அவரைப் போற்றுகிறோம் என்று சொன்னால், அவருடைய பகுத்தறி வுக் கருத்துகள் நம்மை ஆளவேண்டும். புத்துலகத்தை உருவாக்கவேண்டும்.


‘‘சுயமரியாதை கொள் தோழா!'' என்று அவர்கள் சொல் லும்பொழுதும்,


அதேபோன்று, ‘‘பேசு சுயமரியாதை உலகு என பெயர் வைப்போம்'' என அழுத்தம் திருத்தமாகச் சொல்லும் பொழுதும்,


ஜாதி மத பேதங்கள் மூடவழக்கங்கள் தாங்கி நடை பெற்று வரும் சண்டைவுலகுதனை ஊதையினில் துரும்பு போல் அலைக்கழிப்போம் என்று அவர்கள் வேகமாகப் பேசுகின்ற அந்த உணர்வு இருக்கிறதே,


எனவேதான், புதியதோர் உலகு செய்வோம் - என்ற அந்தப் புதிய உலகைக் காட்டுவதற்காக நாவலர் போன்ற வர்களுடைய உழைப்பு நமக்கு என்றென்றைக்கும் சொத்துக்கள்!


இன்றைய தலைமுறையினர் நாவலர் அவர்களை பகுத்தறிவுச் சுடராகப் பாருங்கள்!


இளைஞர் உலகம் அதைப் பற்றிக்கொள்ளவேண்டும். இன்றைய இளைய தலைமுறை - இனி வரக்கூடிய தலைமுறையினர் - நாவலர் அவர்களை, நீங்கள் ஒரு பகுத்தறிவுச் சுடராகப் பாருங்கள்.


பெரியாரிடமிருந்து உருவானவர்கள் யாரும் சொத்தைகள் அல்ல; சோடைகள் அல்ல.


பெரியாரின் புகழின் சிதறல்கள்!


திருச்சியில் ஒருமுறை விழா நடைபெறும்பொழுது பேரறிஞர் அண்ணா அவர்கள்  மிக அழகாகச் சொன்னார், ‘‘தமிழ்நாட்டில் பல கட்சித் தலைவர்கள், பல கட்சிக்குத் தலைவர்கள் ஏராளம் இருக்கிறார்கள்; என்றாலும்கூட, அவர்கள் அத்தனை பேரும் பெரியாரின் புகழின் சிதறல் கள்'' என்று.


எனவே, பெரியார் என்ற புகழின் சிதறல்கள்தான் தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு கட்சித் தலைவர்கள். யாராக இருந்தாலும், இந்தக் கொள்கையில்தான் நிற்கவேண்டும். அதிலிருந்து பயிற்சி பெற்றவர்கள்தான்.


ஒப்பற்ற தலைமையால் உருவாக்கப்பட்ட ஒப்பற்ற பகுத்தறிவாளர் நம்முடைய நாவலர் நெடுஞ்செழியன் அவர்கள்.


அவர் நடமாடும் பல்கலைக் கழகம் என்று அண்ணா அவர்கள் அடையாளம் கண்டார்கள்.


நாவலர் அவர்கள் தன்னுடைய கடமையைச் செய்தார்கள்.


இங்கே சொன்னதைப்போல, எந்தப் பொறுப்பைக் கொடுத்தாலும், அவர் அதனைச் சிறப்பாகச் செய்பவர்.


நாவலர் அவர்களின் பலம் - பலவீனம்!


நாவலரிடத்தில் பலம் எது? பலவீனம் எது? என்று சொன்னால், இரண்டும் ஒன்றுதான். அவருடைய பிடிவாதம். மிகத் தெளிவான பிடிவாதம். அது என்ன பிடிவாதம் என்றால், அவர் என்ன நினைக்கின்றாரோ, அதனை வெளிப்படையாகப் பேசுவார். அப்படி அவர் வெளிப்படையாகப் பேசுகின்ற நேரத்தில், யாரை, எப்படி சங்கடப்படுத்தும் என்பதைப்பற்றி அவர் கவலைப்பட மாட்டார்.


பல நேரங்களில், அவருக்கு இடையூறாகக் கூட அமையும். எனவே, அதுதான் அவருக்குப் பலம்; அதுதான் அவருக்குப் பலகீனம். அதைப்பற்றி அவர் கவலைப்படுவ தில்லை.


அவரைப் பொறுத்தவரையில், ஒரு நேர்மையான பகுத்தறிவுவாதி. தன்னுடைய நேர்மையை, திறத்தை அவர்கள் கடைசிவரையில் பொதுவாழ்வில் எடுத்துக் காட் டினார்கள்.


கடைசிவரை அவருடைய உழைப்பு என்பது, பகுத் தறிவு ஆளவேண்டும்; பகுத்தறிவாளர்களாக இருக்க வேண்டும் என்பதைத்தான் எடுத்துச் சொன்னார்.


அப்படிப்பட்ட நாவலர் அவர்களுடைய நூற்றாண்டு விழாவில், நாவலருடைய புகழ் பரப்புவோம் என்று சொல்லுகின்ற அதே நேரத்தில், நாவலர் அவர்களுடைய கொள்கைகளை ஏற்போம். நாவலருடைய பகுத்தறிவைப் பயன்படுத்தி, எல்லோரும் பகுத்தறிவாளர்களாக மாறுங் கள் என்று சொல்லுவோம்.


கடவுள் நம்பிக்கையைப் பற்றிச் சொல்லும்பொழுதுகூட, நாவலர் அவர்கள் மிக எளிமையான ஓர் உதாரணத்தைச் சொல்லுவார்.


‘‘நம்புகிறேன்'' என்று ஒருவன் சொல்லிவிட்டால், அவனிடத்தில் வாதம் செய்வதற்கு இடமே கிடையாது.


என் நம்பிக்கை என்று சொல்கிறவனிடம், அவனிடம் எப்படி வாதம் செய்ய முடியும்? அறிவுப்பூர்வமாகச் சிந்திக்கலாம் என்று வந்தால்தானே, அவனிடம் வாதம் செய்ய முடியும் என்று சொல்வார்.


பெரியாருடைய பகுத்தறிவுக் கதிரொளி


பல இடங்களில் பறந்தது


எனவேதான், நாவலர், தந்தை பெரியார் அவர் களிடத்தில் சரியாகக் கற்ற ஒரு சிறந்த மாணவர். அந்த வகையில், பெரியாருடைய பகுத்தறிவுக் கதிரொளி பல இடங்களில் பறந்தது.


அண்ணா அவர்கள் பேசும்போது, அண்ணா தனித் தன்மையோடு சொன்னார். பெரியாரின் போர்முறை மற்ற வர்களின் போர் முறையிலிருந்து மாறுபட்டது என்றார்.


கண்ணுக்குத் தெரிந்த எதிரியோடு போராடுவதுதான் மற்றவர்களுடைய போர் முறை. ஆனால், பெரியாருடைய போர் முறை என்பது, மூலபலத்தை முறியடிப்பதுதான். அது கண்ணுக்குத் தெரியாத இடங்களிலும் பாயும் என்று சொன்னார்.


அதைக் கண்டுபிடித்து, பாய்கின்ற போர்த் தளபதிகளில் ஒருவராகத் திகழ்ந்தவர்தான் நாவலர் அவர்கள்.


ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்குவோம்!


எனவே, நூற்றாண்டு விழா நாயகர் நாவலர் புகழ் வாழ்க!


நாவலர் விரும்பிய சமுதாயம் வருக!


ஜாதி ஒழிந்த -


மூடநம்பிக்கை அழிந்த -


பெண்ணடிமை ஒழிந்த -


எல்லோருக்கும் எல்லாமுமான சமூகநீதி உள்ள ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்குவதற்கு,  நாவலரை மிக அற்புதமான ஒரு பாட ஆசிரியராக, ஒரு பேராசிரியராகப் பயன்படுத்தி, வருகின்ற தலைமுறையை நாம் பக்குவப் படுத்துவோம், வாரீர்! வாரீர்!! இணைவீர் எனக் கேட்டு, வாய்ப்பளித்த உங்களுக்கும், இவ்வளவு நேரம் எனது உரையைக் கேட்டுக்கொண்டிருந்த - உலகம் முழுவதும் இருந்து கேட்டுக் கொண்டிருந்த நண்பர்கள் அத்துணை பேருக்கும் என்னுடைய நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்து, விடைபெறுகிறேன். நன்றி, வணக்கம்!


வாழ்க பெரியார்! வாழ்க நாவலர்! வளர்க பகுத்தறிவு!


- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் காணொலிமூலம் உரை யாற்றினார்.


No comments:

Post a Comment