புதுச்சேரியில் எம்.ஜி.ஆர். சிலைக்கு காவித்துணி போர்த்தி அவமதிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 25, 2020

புதுச்சேரியில் எம்.ஜி.ஆர். சிலைக்கு காவித்துணி போர்த்தி அவமதிப்பு

சமூக விரோதிகளை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்


தமிழக முதலமைச்சர் கடும் கண்டனம்


சென்னை, ஜூலை 25 புதுச்சேரியில் எம்.ஜி.ஆர். சிலை அவமதிப்பு செய்யப்பட்ட சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சமூக விரோதிகளை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.


இது தொடர்பாக, தமிழ்நாடு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-


வருடங்கள் கரைந்தாலும், வளர்பிறை சந்திரனாய் நிலைத்த புகழ் கொண்ட நிகரில்லா வள்ளலாகவும், சாதி, மதங்கள் கடந்த சமத்துவத்தின் அடையாளமாகவும், இன்றளவும் ஏழை, எளியோரது இல்லத்திலும், உள்ளத்திலும் நிறையாசனமிட்டு வீற்றிருக்கும் தன்னிகரில்லா தலைவ ராகவும், ஒட்டுமொத்த உலகத் தமிழர் களால் போற்றி வணங்கப்படுகிற பாரத ரத்னா, முன்னாள் முதல்- அமைச்சர் எம்.ஜி.ஆரின் உருவச் சிலைக்கு மர்ம நபர்கள் காவித்துண்டு அணிவித்து, களங்கப்படுத்திய கொடுஞ்செயல் அண்டை மாநிலமான புதுச்சேரியில் நிகழ்ந்திருப்பது மிகுந்த மன வேதனையையும், வருத்தத்தையும் தருகிறது.


இந்த காட்டுமிராண்டித்தனம் கடுமையாக கண்டிக்கத் தக்கது. சமீப காலத்தில் இதுபோன்ற, சமூகத்திற்கு தொண் டாற்றிய தலைவர்களின் சிலைகளை சேதப்படுத்துவது, களங்கப்படுத்துவது போன்ற இழிசெயல்கள் மிகுந்த வருத் தத்தை தருகிறது. உயரிய கொள்கை என்பது நமது லட்சி யங்களை பிறர் ஏற்க பாடுபடுவது மட்டுமல்ல, மாற்று கருத்துகளையும், குறிப்பாக மக்களின் நம்பிக்கைகளையும் மதிப்பதும் ஆகும்.


கருத்து சுதந்திரம் என்ற பெயரில் தரமற்ற விமர்சனங்களால் பிறர் மனங்களை காயப்படுத்துவது, மனித நாகரீகத்திற்கு மாறான செயலாகும். மொழியால், இனத்தால், மதத்தால், சாதியால் வேறுபட்டு இருந்தாலும், இந்தியர் என்கிற ஒற்றைச் சொல்லில் பெருமிதம் கொண்டெழுகிற நமது ஒருமைப் பாட்டுக்கும், ஒற்றுமைக்கும் குந்தகம் விளைவிக்கவும், அதன் மூலம் ஓட்டு அரசியல் பிழைப்பிற்கும் சிலர் திட்டமிடுவதை ஒருபோதும் தமிழினம் ஏற்காது.


ஆன்மிக செம்மல் அரவிந்தரும், உணர்ச்சிக் கவிஞர் பாவேந்தரும் உதித்த புதுச்சேரி மண்ணில், எம்.ஜி.ஆர். சிலைக்கு அவமரியாதையை ஏற்படுத்தி இருக்கும் விஷமிகளை விரைந்து கண்டுபிடித்து, அவர்களை பின்னால் இருந்து இயக்கும் சமூக விரோதிகளையும் இனம் கண்டு, சமூகத்தின் முன்னும், சட்டத்தின் முன்னும் அவர்களை தோலுரித்து காட்டிட, கடுமையான விரைவான நடவடிக்கைகளை மேற் கொள்ள புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமியை கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


No comments:

Post a Comment