குஜராத் மாநிலத்தில் ஒரு வீராங்கனை! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, July 20, 2020

குஜராத் மாநிலத்தில் ஒரு வீராங்கனை!

குஜராத் மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக அமைச்சர் மகனைத் தடுத்து நிறுத்திய கான்ஸ்டபிள்  சுனிதா யாதவ், உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி, காவல்துறை பணியில் இருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். அதைத் தொடர்ந்து அவருக்கு  பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இச்செய்தி வேகமாகப் பரவி வருகிறது.


இது தொடர்பாக அவர் நாளிதழ் ஒன்றுக்கு அளித்த செவ்வியில் பலவித முக்கிய நபர்களின் மிரட்டல் தாங்க முடியாமல் காவல் பணியில் இருந்து விலக முற்பட்டேன் என்று தெரிவித்தார். விருப்பத்தை உயர்அதிகாரிகளுக்குத் தெரிவித்ததாக கூறிய அவர், அய்பிஎஸ் அதிகாரியாகி மீண்டும் மக்களுக்குப் பணி செய்யத்  தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.


சமூக ஊடகங்கள் மூலம் தனது கருத்தை பதிவிட்ட சுனிதா, "இதுவரை ஊடகங்களில் விவாதிக்கப்பட்டவை  வெறும் 10 சதவிகிதம் மட்டும் தான், 90 சதவிகித நிகழ்வுகள் பேசப்படவில்லை. நான் பதவி விலகி, எனக்கு ஏற்பட்ட நெருக்கடிகளை, மிரட்டல்களைப் பொதுமக்கள் முன் வைப்பேன்.  எந்தவொரு விளைவுகளையும் எதிர்கொள்ள நான் தயாராக இருக்கிறேன்.  இந்தப் போரில் நான் மடிந்தாலும், வருத்தமில்லை. எனது சகாக்கள், உயர் அதிகாரிகளின் ஆதரவு  எனக்கு உள்ளது" என்று தெரிவித்தார்.


மேலும், "எனது போராட்டம் சுனிதா யாதவ் என்ற தனிமனி தருக்கானது அல்ல, காக்கிச் சீருடைக்கானது. தொலைப்பேசியில் தொடர்ச்சியாக மிரட்டல்களை எதிர்கொண்டேன். புரட்சி எல்லாம் செய்யவேண்டும் என்று நினைக்கிறாய், ஆனால் அதற்கு உயிர்வாழவேண்டுமே என்று கொலை மிரட்டல் வருகிறது. மற்றோர் அழைப்பில், ரூ.50 லட்சத்தை வாங்கிக் கொண்டு விசயத்தை முடித்து விடுங்கள் என்று கூறப்பட்டது. அதன் பிறகுதான், காவல்துறைப் பாதுகாப்பு கோரி சூரத் காவல்துறை ஆணையரை அணுகினேன். இந்த அழைப்பு குஜராத்திற்கு வெளியில் இருந்து வந்ததாகத் தெரிகிறது" என்றும் தெரிவித்தார்.


கடந்த பல நாட்களாக, அவரது வீட்டில் இரண்டு  ஆயுதமேந்திய பெண் காவலர்களும், குடியிருப்பின் முக்கிய நுழைவுவாயிலில் இரண்டு காவலர்களும்  நிறுத்தப்பட்டுள்ளனர். தான் சாலைகளில் பத்திரிக்கையாளர்களை சந்திக்கும்போது கூட, சிலர் தன்னை நோட்டமிடுகின்றனர் என்று அவர் கூறினார்.


ஜூலை 8ஆம் தேதியன்று, மங்கத் சவுக் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த சுனிதா, ஊரடங்கு விதிமுறைகளைமீறிவந்த காரை வழி மறித்தார். காரில் இருந்த அய்ந்து பேரை விசாரணை நடத்துகையில், அம் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் குமார் கனானியின் மகன் பிரகாஷ் கனானியின் நண்பர்கள் என்றும், அவசர வேலையாகச் செல்வதால் அனுப்பி வைக்குமாறும் நிர்ப்பந்தித்துள்ளனர். ஆனால், சுனிதா அதற்கு மறுப்பு தெரிவித்தார். பிரகாஷ் கனானிக்கு விசயத்தைத் தெரிவிக்க, அவர் சம்பவ இடத்திற்கு வந்தார். நண்பர்களை விட மறுத்ததால் வாக்குவாதம் முற்றியது.


இதனையடுத்து, ஜூலை 11ஆம் தேதி, ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றத்திற்காக பிரகாஷ், அவரது நண்பர்கள் இருவரான தீபக் கோதானி, சஞ்சய் ககாடியா ஆகியோர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டனர்.


இந்தக் கால கட்டத்தில் அதிகாரத்தில், அதுவும் அமைச்சர் என்கிற அளவுக்கு அதிகாரத்தில் இருப்பவர்களை இந்தளவு எதிர்கொள்வதற்கு அசாத்தியாயமான துணிவும், நேர்மையும் இருந்தே ஆக வேண்டும்.


அந்த வகையில் காவலர் சுனிதா அசாதாரணமானவரே. இவ்வளவுக்கும் அவர் அதிகாரி மட்டத்தைச் சேர்ந்தவரும் அல்லர். சாதாரண கான்ஸ்ட்பிள்தான்.


என்ன பதவி வகிக்கிறோம் என்பது முக்கியமல்ல; நாம் ஏற்றுக் கொண்டு இருக்கிற பணியின் தன்மை என்ன? அதனை சரியாகக் கடைப்பிடிக்கும் மனத்திண்மை என்ன என்பதுதான் முக்கியம்.


தன் பணியிலிருந்து விலக வேண்டும் என்று நினைக்கும் இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார். அத்தனை நெருக்கடிகள் - ஏன் உயிருக்கே உலைவைக்கும் முயற்சிதான்.


நம் நாட்டு அரசமைப்பும், அதிகாரச் செருக்கும் எவ்வளவுத் தரம் கெட்டுத் திமிர் முறித்து நிற்கின்றன என்பதற்குச் சுனிதா சந்தித்துள்ள அச்சுறுத்தல்களே அளவுகோல்.


சுனிதாவின் துணிவைப் பாராட்டுவோம். அவர் வெளிச் சத்துக்குக் கொண்டு வந்துள்ள தகவல்கள் மக்கள் மத்தியில் விவாதப் பொருளாக்கப்பட வேண்டும் -அதன் வழியாவது சுனிதாக்களின் எண்ணிக்கை பெருகும் அல்லவா!


கடைசிச் செய்தி: அவர் ராஜினாமா செய்திருக்கிறார். இது தான் பாசிச இந்தியா!


No comments:

Post a Comment