ஆக்கம்: சுப.முருகானந்தம், மதுரை
- ‘அய்யோ முதுமை வந்துவிட்டது' என்று அலறி, உங்களை மேலும் "முடியாதவர்களாக" ஒருபோதும் ஆக்கிக் கொள்ளாதீர்கள். உள்ளத்தால், இளமை கொண்டால், உடல் வலிமை கொள்ளும். மறவாதீர்கள்.
மூப்பின் பயத்தை முழுவதும் தள்ளியே
காப்பீர் இளமை உணர்வு.
- சிக்கலான பிரச்சினை வரும்போது சிங்கம்போல சிலிர்த்து எழுங்கள்.நரிகள் வளைகளைத் தேடுவது போல் ஓடாதீர்கள்.
அரிமாபோல் மோதி யழிப்பாயே சிக்கல்
நரிபோல் பிழைத்தல் நகை.
- அறிவுதான் மூளைக்கு உணவு என்று கூறப்படுவதையும் கூட, நாம் மறுபரிசீலனை செய்து, அதுமட்டுமல்ல, உண்ணும் உணவும் மூளையின் செயல்களுக்கு, அடிப்படை காரணிகளாகும் என்பதை அறிய வேண்டும்
அறிவு முணவுமே ஆக்குங் கரணம்
செறிவுறு மூளைக்குத் தான்.
- "அனைவரும் உறவினர்" என்று கருதி, அன்பொழுகப் பேசி, ஆதரவுப் பெருமையில், அனுதினமும் நனைந்து கொண்டே, வாழ்க்கையை வெற்றிகரமாக, மன உளைச்சல் இன்றி, நடத்தும் நல்வாய்ப்பு பெற்றவர்கள், மாளிகைவாசிகளாக இல்லாமல், மண்குடிசையில் வாழ்பவர்களானாலும், அவர்களைவிட "பேறு" பெற்றவர்கள் வேறு எவரும் இல்லை .
கேளிரொடு பாசங் கிளைத்தெழும் மண்குடிசை
மாளிகையின் மாணப் பெரிது.
- வாழ்க்கை இன்பத்தை நுகர வேண்டுமானாலும், வாழ்க்கை சலிப்பு, சங்கடம் இவைகளை மட்டுமே சந்திக்கும் சமர்களமாக இல்லாது இருக்க வேண்டுமானாலும், ஏராளமான உண்மை நாடும் நாயகர்களான நண்பர்களை பெற வேண்டும்.
உண்மையை நாடும் உயர்குண நாயகர்தம்
நண்பராதல் நாளும் மகிழ்வு.
- நோயைக் குணப்படுத்துவது டாக்டர்கள் கடமை. நோயாளியின் மனதைச் சரிப்படுத்துவது பார்வையாளர்களின் பொறுப்பு என்பதை மறவாதீர்.
வலிநோய் களைவார் மருந்தார்; துயரர்
கிலிநோய் கிளையோர் கடன்.
23.ஒலிபெருக்கிகளில் அலறல் மனிதர்கள் கேட்பதற்காக கூட அல்ல. மனிதர்கள், கடவுளை பிரார்த்தனை செய்வதற்கும், தொழுவதற்கும் தேவைப்படும் வேடிக்கை அல்லவா? இது.
ஆண்டவனை வேண்டவும் ஆசைதனைச் சொல்லவுமே
வேண்டும் ஒலிபெருக்கி ஈண்டு.
24.தவறுகளிலிருந்து பாடம் பெறுவதும், தவறுகளைப் பிறர் சுட்டிக்காட்டும் போது, நாம் சிறிது கூட தன்முனைப்பிற்கு இடந்தராமல், திருத்திக் கொள்வதும், நாம் வெகு விரைவில் மற்றவர்கள், எட்டிப் பிடிக்க இயலாத எல்லைக்குச் செல்ல வழிவகுக்கும்.
தன்முனைப்புத் தான் துறந்து தற்குற்றம் தானேற்றல்
முன்னேற்றப் பாதை யது.
- ஊக்கப்படுத்துவதால் மனிதர்கள் உயர்வடைவது, செயலில் இறங்குவதன் மூலம்
தானே ஒழிய, அதைப்பற்றியே பேசிக் கொண்டிருந்தால், அந்த இலக்கு நமக்கு எட்டா தொலைவே! எட்டாக் கனியே!! எனவே, பேசுவதை நிறுத்தி உடனே செயலில் இறங்குங்கள். அறுவடையை அடுத்த கட்டத்தில் காண்பீர்கள்.
உழைப்பில்லா ஊக்கம் உயர்வைத் தராது
உழுதல் நிறைக்குங் களம்.
No comments:
Post a Comment