பகவத் கீதை தனி நூலுமல்ல; அறிவு நூலுமல்ல; வழிகாட்டுகின்ற நூலுமல்ல! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, July 27, 2020

பகவத் கீதை தனி நூலுமல்ல; அறிவு நூலுமல்ல; வழிகாட்டுகின்ற நூலுமல்ல!

நாவலர் நெடுஞ்செழியன் நூற்றாண்டு விழா காணொலியில் தமிழர் தலைவர் சிறப்புரை



சென்னை, ஜூலை 27- பகவத் கீதை தனி நூலுமல்ல; அறிவு நூலுமல்ல; வழிகாட்டுகின்ற நூலுமல்ல! என்று நாவலரின் உரையைச் சுட்டிக்காட்டி திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் காணொலிமூலம் உரையாற்றினார்.


நாவலர் நெடுஞ்செழியன்


நூற்றாண்டு விழா


கடந்த 11.7.2020 மாலை 6 மணியளவில்  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ‘‘நாவலர் நெடுஞ்செழியன் நூற்றாண்டு'  விழா"வில் காணொலிமூலம் கழகத் தோழர்களிடையே சிறப்புரையாற்றினார். அவரது சிறப்புரையின் நேற்றைய  முன்தினம் (25.7.2019) தொடர்ச்சி வருமாறு:


எதிர்ப்பு என்று வந்தால், அந்த எதிர்ப்பைப்பற்றி அவர் கவலைப்படமாட்டார். திராவிட முன்னேற்றக் கழகமாக அய்யாவைவிட்டுப் பிரிந்த பிறகுகூட ஒரு சம்பவம்.


காங்கிரஸ்காரர்கள் அந்தக் காலத்தில் அரசியலில் மாறுபட்டு இருக்கின்ற காலத்தில், மிகப்பெரிய எதிர்ப்பு. தேனியில் நடைபெற்ற சம்பவம். அந்தத் தொகுதியில் பிற்காலத்தில் அவர் வெற்றி பெற்று இருக்கிறார், அது வேறு செய்தி.


அந்தத் தேனி தொகுதியில் ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டபொழுது, நாவலர் அவர்கள்மீது திராவகம் வீச முயற்சி நடந்தது; பாறாங்கல்லைத் தூக்கிப் போட்டார் கள், அதிலிருந்து  அவர் தப்பித்தார்.


தந்தை பெரியார் அவர்களின் தாய்மை உணர்வு!


திராவிட முன்னேற்றக் கழகமும் - திராவிடர் கழகமும் மாறுபட்டு இருந்த அந்தக் காலகட்டத்தில்கூட, தாய்மை உணர்வு - தந்தை பெரியார் அவர்களுக்கு எப்படிப்பட்ட ஒரு பொறுப்புணர்ச்சி இருந்தது என்பதற்குச் சான்று. நாவலர் மீதான தாக்குதல் செயலைக் கண்டித்து ஒரு பெரிய அறிக்கையை விட்டார்.


கண்டன ஊர்வலம் - பொதுக்கூட்டம்!


தேனியில் நாவலர் அவர்களைத் தாக்குவதற்காக நடந்த நிகழ்ச்சியை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். எங்களைவிட்டு அவர்கள் பிரிந்து போனவர்களாக இருந் தாலும், அவர்களும் எங்கள் பிள்ளைகள்தான். அதற்காக, அந்த வன்முறையை நாங்கள் ஆதரிக்க முடியாது; அதனை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்று சொல்லி, திராவிடர் கழகத்தின் சார்பாக, சென்னை யில் ஒரு மாபெரும் கண்டன கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து, கண்டன ஊர்வலத்தையும் நடத்தி, அந்த ஊர் வலத்திற்குத் தந்தை பெரியார் அவர்கள் தலைமை தாங் கினார் என்பதை இன்றைய திராவிடர் இயக்க இளை ஞர்கள் தெரிந்துகொள்ளவேண்டும்.


கட்சிகளால் மாறுபட்டு இருக்கலாம்; ஆனால், கொள்கையால் ஒன்றுபட்டு இருக்கிறோம். அந்த நேரத்தில், தானாடாவிட்டாலும், தன்னுடைய சதை ஆடும் என்று சொல்லுகின்ற அளவிற்கு, அப்படிப்பட்ட உணர்வு தந்தை பெரியார் அவர்களுக்கு  இருந்தது என்பதை மிகத் தெளி வாகப் புரிந்துகொள்ளக்கூடிய அருமையான சந்தர்ப்பம் நாவலர் நூற்றாண்டு விழாவில்.


அன்றைக்கு நாவலர் அவர்கள் உயிர் தப்பியது மிகப்பெரிய ஒரு வாய்ப்பு என்று சொன்னாலும், அந்த எதிர்ப்புகளைப்பற்றி அவர் கவலைப்படவேயில்லை.


இன்றைக்கு சனிக்கிழமை வழமையாக ஒப்பற்ற தலைமை என்ற தலைப்பில் தொடர் பொழிவு 4 ஆம் பொழிவு நடக்கவேண்டிய இந்த நேரத்தில், அதனை மாற்றி, நாவலர் அவர்களுடைய நூற்றாண்டு விழாவினை நாம் இன்றைக்கு மிகச் சிறப்பாக நடத்திக் கொண்டிருக்கின்ற இந்த நேரத்தில்,


நாவலர் அவர்கள் தந்தை பெரியார் அவர்களுடைய தலைமை எப்படி ஒப்பற்ற தலைமை என்பதை அவரு டைய நூலில் விளக்கியிருக்கிறார் என்பதை நினைவூட்டிக் கொள்வது மிகமிகப் பொருத்தமாக இருக்கும்.


‘‘திராவிட இயக்க வரலாறு''


நாவலர் அவர்கள் எழுதிய நூல்கள் சிறப்பானவை யாகும். இங்கே நாவலரின் நூல்கள் பட்டியலையும் சொன்னார்கள். அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த பட்டியலில், இந்த நூல் மிகமிக முக்கியமான நூலாகும். ‘‘திராவிட இயக்க வரலாறு'' முதல் தொகுதி நூலில், பல்வேறு தகவல் களை ஆழமாக எழுதி, பதிவு செய்திருக்கிறார்.


அதில் ஆக்கியோன் முன்னுரை என்று சொல்லக்கூடிய அந்தப் பகுதியில், இன்றைய விடுதலையில்கூட அது பெட்டிச் செய்தியாக வெளிவந்திருக்கிறது.


முதலில் தந்தை பெரியார் அவர்களுக்கு நன்றி தெரிவித்து ஆரம்பிக்கிறார். ஒவ்வொரு தலைவரிடமும் அவர் பணியாற்றியதைக் குறிப்பிடுகின்ற நேரத்தில், மிகுந்த நன்றி உணர்ச்சியோடும், அதே நேரத்தில், எதையும் மறைக் காமல், தயங்காமல் சொல்லக்கூடியவர் அவர்.


இந்த நூலை அச்சிட்டு, ஏறத்தாழ ஓராண்டுக்கு மேலாக வெளியிடாமல் வைத்திருந்தார். இது வெளியிடப்பட்ட நாள் 11.7.1996 ஆம் ஆண்டு, அவருடைய பிறந்த நாளில், சென்னை பெரியார் திடலில், என்னுடைய தலைமையில் அந்த நூல் வெளியிட்டுவிழா நடைபெற்றது.


தமிழகம் முழுவதும் பகுத்தறிவாளர் கழகம் சார்பாக வெளியீட்டு விழா!


அந்த நூலுக்கு, தமிழகம் முழுவதும் பகுத்தறிவாளர் கழகம் சார்பாக வெளியீட்டு விழாவிற்கு ஏற்பாடு செய் தோம். திராவிட இயக்கத்தினுடைய கொள்கைப் பிரச்சாரம் தமிழ்நாடு முழுவதும் நடப்பதற்கு இந்த நூல் மூலம் ஒரு வாய்ப்பு ஏற்பட்டது - அந்தக் காலகட்டத்தில். இங்கே இருக்கக்கூடிய ஒரு சில நண்பர்கள்  அதனை அறிவார்கள்.


அந்த நிகழ்வுகளில் நூலை நாங்கள் வெளியிடுவோம், அந்த நூலைப்பற்றி நாவலர் அவர்கள் ஒவ்வோர் இடத் திலும் பேசுவார்கள். திராவிட இயக்கக் கொள்கைகளைப் பற்றி மிக அழகாகப் பேசக்கூடிய, நாவலர் அவர்கள், தந்தை பெரியார் அவர்களிடம் பெற்ற பயிற்சியைப்பற்றி சொல்லுகிறார்கள்.


திராவிட இயக்கத்தை அசைத்துவிடலாம், ஆட்டி விடலாம், திராவிட இயக்கத்தைக் கொச்சைப்படுத்தலாம் என்று சில மேதாவிகள் இன்றைக்கு நினைக்கிறார்கள். ஆனால், திராவிட இயக்கம் எவ்வளவு பெரிய அஸ்திவாரத் தோடு இருக்கக்கூடியது - அசைக்க முடியாதது - இதனு டைய வலிமை எப்படிப்பட்டது என்பதை, நாவலர் அவர்கள் சுட்டிக்காட்டுவதிலிருந்து நீங்கள் தெளிவாகத் தெரிந்துகொள்ளவேண்டும்.


‘‘கண்ணீரும், செந்நீரும் வளர்த்த இயக்கம்'' என்று அவர்கள் புத்தகமே எழுதினார்கள் ஒரு காலகட்டத்தில்!


நான் பூரிப்பும், பெருமையும் கொள்கிறேன்


அதையும் தாண்டி, தந்தை பெரியார், நீதிக்கட்சித் தலைவர்கள், சுயமரியாதை இயக்கம், தனித்தமிழ் இயக்கம், எல்லாவற்றையும் இதில் பதிவு செய்திருக்கின்ற அவர், திராவிட இயக்கத்தைப்பற்றி அதில் சொல்லுகிறார்.


‘‘திராவிட இயக்கத்தில் தொடர்ந்து பல்வேறு பொறுப்பு களை ஏற்றுப் பணியாற்றி வரும் நான், பகுத்தறிவு நெறியோ டும், செயலாற்றும் திறனோடும், கடமை உணர்வோடும், கட்டுப்பாட்டு உணர்வோடும், உள்ள ஊக்கத்தோடும், நெஞ்சு உரத்தோடும், தொண்டு உள்ளத்தோடும், தோழ மைப் பண்போடும் இருந்து, அஞ்சாமலும், அயராமலும், நேர்மையாகவும், நாணயமாகவும் பாடுபடுவதற்குப் பெரியாரிடம் கற்ற அறவுரைகளும், அறிவுரைகளும், அவரிடத்தில் கற்றுக்கொண்ட கண்டிப்புத்தன்மையும், கடமையுணர்வும் எனக்கு அடிப்படையாக அமைந்தன என்று கூறிக் கொள்வதில் நான் பூரிப்பும், பெருமையும் கொள்கிறேன்.'' என்று இந்த நூலில் முதலில் நாவலர் அவர்கள் பதிவு செய்திருக்கிறார்.


எனவே, பெரியாருடைய தலைமையினால், எப்படி ஒருவர் பயன்பெற்றார் என்பதற்கு, நூற்றாண்டு விழா நாயகரே ஓர் அருமையான எடுத்துக்காட்டாவார்.


இதில் ஒன்றே ஒன்று விடுபட்டு இருக்கிறது என்று நான் உரிமையோடு சொல்ல விரும்புகிறேன். எது விடுபட்டு இருக்கிறது என்றால், தந்தை பெரியாரே ஒருமுறை சுட்டிக் காட்டினார், நாவலருக்கு நடந்த பாராட்டு விழாக் கூட்டத்தில்.


பெரியாருடைய சிக்கனத்தை,


சிக்கெனப் பிடித்துக்கொண்டவர் நாவலர்


நாவலர் பெரிய சிக்கனவாதி என்று பெரியார் சொன்னார். நாவலரை வைத்துக்கொண்டே சொன்னார். அது ஒரு பெரிய சான்றிதழ் நாவலருக்கு! பெரியாரிடத்திலிருந்து அவர் கற்றுக்கொண்ட பல்வேறு செய்திகளில், சிக்கனம் என்பது மிக முக்கியமானது. கடைசிவரையில் நாவலர் அவர்கள் சிக்கனவாதியாகத்தான் நடந்துகொண் டார். பெரியாருடைய சிக்கனத்தை, சிக்கெனப் பிடித்துக் கொண்டவர் நாவலர் அவர்களாவார்.


நாவலர் அவர்கள் முனைவர் பட்டம் பெற்றமைக்காக பகுத்தறிவாளர் கழகம் சார்பாக, சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற பாராட்டு விழாக் கூட்டத்தில், தந்தை பெரியார் அவர்கள் மனந்திறந்து பாராட்டி பல செய்தி களைச் சொன்னார்கள்.


தந்தை பெரியார் அவர்களின்


 மனந்திறந்த பாராட்டு!


அதில் ஒரு செய்தி,


நாவலர் அவர்களுடைய குடும்பத்தில், பகுத்தறிவு உணர்வு எவ்வளவு ஆழமாக இருந்தது என்பதற்கு அடையாளம்.


நாவலர் அவர்களுடைய தமக்கையார் அவர்களுக்குத் திருமணம். சோழவந்தானில், ஆவுடையப்பன் இல்லத் திருமணம் தந்தை பெரியார் தலைமையில் நடைபெறுகிறது.  அந்த மணவிழாவில், ஆவுடையப்பன் இல்லத்தினர், தாலி கட்டவேண்டும் என்று சொல்கிறார்கள். மணமேடையில் இருக்கிற நாவலர் அவர்களுடைய தமக்கையார், தாலி கட்டிக் கொள்ளமாட்டேன் என்கிறார்; நாவலர் அவர்களும் அதற்குச் சம்மதிக்கவில்லை. மற்றவர்கள் எல்லாம் பதறிப் போய், இந்த மணவிழாவினை எப்படி நடத்துவது என்று யோசித்துக் கொண்டிருந்தபோது, இந்தப் பிரச்சினையை அய்யாவிடம் கொண்டு சென்றார்கள்.


உடனே அய்யா அவர்கள், ‘‘பரவாயில்லை, இன்றைக்கு அவர்களைத் திருப்திபடுத்துவதற்காக தாலி கட்டிக் கொள்வதில் தவறு இல்லை'' என்று நான் தாலி கட்டிக் கொள்ளும்படி வற்புறுத்தினேன் என்று அய்யா அவர்கள் அந்தப் பாராட்டு விழா மேடையில் சொன்னார்.


இது எதைக் காட்டுகிறது என்று சொன்னால், நாவலர் அவர்களுடைய குடும்பம் பகுத்தறிவுக் குடும்பம். அதை மேலும் மேலும் விரிவாக்கிக் கொண்டார் - எழுத்து, சிந்தனை, பேச்சு என்று! இனமானப் பேராசிரியர் அவர்கள், நாவலர் அவர்களுக்கு உற்ற துணையாக அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் கிடைத்தார்கள்.


இன்றைக்குக் காலையில், இந்தப் புத்தகத்தை நான் மறுவாசிப்புச் செய்தபொழுது, இன்னொரு செய்தியை நான் படித்தேன்.


‘‘நான் பச்சையப்பன் கல்லூரியில் படித்தபொழுது'' என்று நாவலர் சொல்லுகிறார்.


பல பேருக்குத் தெரியாத செய்தி இது. பச்சையப்பன் கல்லூரியில் ஓராண்டு காலம் படித்து, பிறகு அண்ணா மலைப் பல்கலைக் கழகத்திற்குச் சென்றிருக்கிறார்.


எனவே, நாவலர் அவர்களைப் பொறுத்தவரையில், ஒப்பற்ற தலைமை, பெரியாருடைய தலைமை என்று, அந்தத் தலைமையினுடைய சிறப்பைப்பற்றி அவர்கள் பல்வேறு வகையில் பேசுவார்.


நாவலர் அவர்களுடைய பகுத்தறிவுக் கருத்துகள், அவர் வேகமாக ஆராய்ந்து, பொது மேடைகளில் சொல் லக்கூடிய கருத்துகள் - வற்றாத ஊற்றுபோல, பீறிட்டுக் கொண்டு எப்படி வருமோ - வெள்ளம்போல் தண்ணீர் வருவதுபோல, பகுத்தறிவுக் கருத்துகள் மிக வேகமாக வந்துகொண்டே இருக்கும். வாதங்கள் மேல் வாதங்களை வைத்துக்கொண்டே அடுக்குவார் என்பதற்கு உதாரண மாக ஒன்றைச் சொல்லவேண்டுமானால்,


‘‘கீதையின் மறுபக்கம்'' நூல் ஆய்வரங்கம்!


‘‘கீதையின் மறுபக்கம்'' நூலை வெளியிட்டு, அந்த நூல் குறித்து ஆய்வரங்கத்தை நடத்தினோம். அந்த நிகழ்வில் நாவலர் அவர்கள் ஆற்றிய உரை, ஒரு சிறிய நூலாகவே பதிவு செய்யப்பட்டு இருப்பது, இன்றைக்கு மிகவும் நமக்குப் பயன்படக் கூடிய ஒன்றாகும்.


சென்னை - ராஜா அண்ணாமலை மன்றத்தில் 16.3.1999  ஆம் ஆண்டு அந்த நூல் வெளியிட்டு விழாவில், ஆய்வ ரங்கத்தில் நாவலர் அவர்கள் பேசுகிறார்.


நாவலர் அவர்கள் உரையாற்றுவதற்குமுன் குறிப்பெ டுத்துக் கொண்டிருப்பார். அந்தக் குறிப்புகளை வரிசைப் படுத்திக் கொண்டிருப்பார். பேசும்பொழுது, கடகடவென்று பேசுவார்.


நாவலர் பேசுகிறார், கேளுங்கள்!


‘‘கீதையின் மறுபக்கம்'' ஆய்வரங்கத்தில் நாவலர் பேசுகிறார் கேளுங்கள்,


‘‘உள்ளபடியே வியாசர் எழுதிய மகாபாரதத்தில் பகவத் கீதையே இல்லை. வியாசர்தான் பாரதத்திற்கு மூலகாரணம். அந்தப் பாரதத்தை ஆரம்பித்தோமென்றால் இரண்டு நாள்கள் வேண்டும். ஆக அந்தப் பாரதக் கதையை முதன் முதலில் வியாசர் எழுதியதில் பகவத் கீதை என்ற பகுதியே கிடையாது. தமிழ் இலக்கியங்கள் எதிலேயும் பகவத் கீதையைப்பற்றிய குறிப்புகளே இல்லை. தொல்காப்பியத் திலோ, திருக்குறளிலோ அல்லது அகநானூற்றிலேயோ, புறநானூற்றிலேயோ அல்லது நற்றிணையிலோ, குறுந் தொகையிலோ, கலித்தொகையிலோ, பரிபாடலிலேயோ, சிலப்பதிகாரத்திலோ, மணிமேகலையிலோ அல்லது தேவா ரத்திலோ அல்லது ஆழ்வார்கள் பாடியிருக்கின்ற நாலாயிரத் திவ்வியப் பிரபந்தங்களிலோ அல்லது திருத்தக்கத் தேவர் எழுதிய சீவகசிந்தாமணியிலோ அல்லது பெரிய புராணத்திலோ வேறு எந்த இடத்திலேயும் இல்லை. கீதை யைப் பற்றிய குறிப்புகள் எந்தத் தமிழ் இலக்கியத்திலும் கிடையாது. பாரதத்தைத் தமிழில் எழுதியவர் வில்லிபுத் தூரார். அதற்கு வில்லி பாரதம் என்று பெயர்.


அந்தப் பாரதத்தில்கூட கீதை இல்லை. வில்லி பாரதம் ஏறத்தாழ பதின்மூன்றாம் நூற்றாண்டுக்கு முன் எழுதப் பட்டது. அதிலேகூட கீதை கிடையாது. அதிலே 6 பாடல் கள் வருகின்றன. போர்க்களத்திற்குச் சென்ற உடனே அர்ச்சுனன் கலங்குகிறான். போர் செய்து என் உற்றார், உறவினர்களை இழக்கவேண்டுமா? என்று அவன் மனம் கலங்குகின்றான். கிருஷ்ணன் ஆறுதல் கூறுகிறான். இது ஆறு பாடல்களில் முடிந்து விடுகின்றது. ஆகவே, எவனோ ஒருவன் வந்து சொருகியிருக்கிறான். அது எந்தக் காலத்தில் சொருகினான் என்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. ஏமாந்த காலத்தில் மட்டும் சொருகியிருக்கிறான் என்பது மட்டும் தெளிவாகத் தெரிகின்றது.


கீதையை உபதேசம், உபதேசம் என்று சொல்லுகின்றார் கள். கீதை என்றால் பாட்டு, அவ்வளவுதான். அவன் போர்க்களத்தில் நின்று பாட்டாகப் பாடியிருக்கின்றான். அவ்வளவு அவகாசம் கிடைத்திருக்கின்றது. கீதம் - பாட்டு; சங்கீதம் - நல்ல பாட்டு. பகவத் கீதை என்றால் பகவான் பாடியது என்று அர்த்தம். உபதேசம், உபதேசம் என்ப தெல்லாம் இல்லை.


சிவகீதையைப்பற்றி யாருக்காவது தெரியுமா?


ஆனால், சிவகீதை என்று ஒன்று இருக்கின்றது. அது யாருக்கும் தெரியாது. சிவகீதையைப் பார்த்துதான் இந்தக் கீதையை எழுதியிருக்கின்றார்கள். சீதையை இராவணன் தூக்கிக்கொண்டு போன பிறகு இராமன் கலங்குகிறான். இராமன் காட்டிலே கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கின்றான். இராமன் சிவனிடம் பாசுவத அஸ்திரம் வேண்டி விரதம் இருக்கின்றான். சிவன் நேராக வருகின்றான். சிவன், இராமன் முன்பு தோன்றி பாசுவத அஸ்திரத்தைத் தருகின்றான். கடைசியில் இராவணனைக் கொல்லுவதற்கு இந்த பாசுபத அஸ்திரம் தான் பயன்பட்டது என்பது கதை.


எல்லா உலகங்களிலும், எல்லாப் பொருளும் நானே என்று இராமன் சொல்லுகின்றான். இராமன், இராவணனு டன் சண்டை போடுவதற்கும், இதற்கும் என்ன சம்பந்தம்? அவன் தன்னுடைய பெண்டாட்டியை விட்டு விட்டுத் தவித்துக் கொண்டிருக்கின்றான். கண்டவனிடம் எல்லாம் சீதையை ‘‘நீ பார்த்தாயா? நீ பார்த்தாயா?'' என்ற கேட்டுக் கொண்டிருக்கின்றான் குரங்கைப் பார்த்து, ஜடாயூவைப் பார்த்து கேட்டுக் கொண்டிருக்கின்றான். மரம், மட்டை களை எல்லாம் பார்த்து சீதை எங்கே? என்று கேட்டுக் கொண்டிருக்கிறான். அதிலேயும் ஏகப்பட்ட முரண்பாடு, அயோத்தியில் இராமன் பட்டாபிஷேகத்தின் பொழுது சீதை ஏராளமான நகைகளை அணிந்து கொண்டிருந்தாள். இராமன் காட்டுக்குப் போகிறேன் என்று சொன்னவுடன், சீதை ‘‘நானும் வருகிறேன்'' என்று சொல்லுகின்றாள். ‘‘நீ இப்படி வரக்கூடாது'' என்று சொல்லுகின்றான் இராமன்.


நீ வருவதாக இருந்தால் எல்லா நகைகளையும் கழற்றி வைத்து விட்டு மரஉரி தரித்து வா என்று சீதையிடம் இராமன் சொல்லுகின்றான். சீதை எல்லா நகைகளையும் சுழற்றி வைத்து விட்டு மர உரியோடு வருகின்றாள்.


வழியில் ஜடாயுவுடன் இராமன் சண்டை போட்ட பொழுது சீதை தன்னுடைய நகைகளை எல்லாம் கழற்றி கழற்றி போட்டாளாம் நான் சொல்லவில்லை, இராமாயணம் சொல்லுகின்றது. சீதையைப் பிரிந்து இராமன் இருக் கின்றான். பிறகு சீதை போட்ட ஒவ்வொரு நகையையும் எடுத்துக் காட்டுகின்றான். இது கழுத்தில் போட்டது. காதில் போட்டது. இடுப்பில் போட்டது என்று இப்படி நினைத்து நினைத்து வருந்துகிறேன்.


சரி, நகை எல்லாம் கழற்றிப் போட்டு விட்ட சீதைக்கு இராவணனுடைய இடத்தில் இருக்கும்பொழுது மீண்டும் அந்த நகைகள் எப்படி வந்தன? அசோகவனத்தில் இந்த நகைகள் எல்லாம் எப்படி வந்தன? அதைத்தான் அறிஞர் அண்ணா மிக அழகாக எழுதினார்.


அசோகவனத்தில் சீதைக்கு நகை இருந்தது என்று சொன்னால், அதை இராவணன் கொடுத்திருக்க வேண் டும். இந்தக் கதையைத் தனியே தான் பேச வேண்டும்.


இப்படி எல்லா உலகங்களிலும் உள்ள எல்லாப் பொரு ளும் நானே. எல்லா இடங்களையும் எல்லாவற்றிலேயும் என்னைத் தரிசிப்பவன் மோட்சம் பெறுவான், தனியே வந்து தனியே போகும் மனிதனுக்கு இவ்வுலகம் ஓர் ஓய்வு எடுக்கும் மரம் போன்றது. இது ஓர் இடைவேளை. கொஞ்சம் நேரம் ஒய்வு எடுத்து விட்டு மறுபடியும் மேல் உலகிற்குப் போகவேண்டும். எனவே பெற்றோர், உற்றார், உறவினர் என்று ஏங்கக்கூடாது. பெற்றோர், உற்றார், உறவினர் என்கிற நட்புரிமை உறவுத் தன்மைகள் கூடாது. கர்மத்திற்கேற்ப மறுபிறவி அமைகிறது. இந்தப் பிறவி நோய்க்கு ஒரே மருந்து நான்தான், யார்? சிவன்! என்னை எந்த வடிவில் வேண்டுமானாலும் வழிபடலாம். சாஸ்திர ஞானத்தைவிட தீவிர பக்தி உயர்ந்தது. முக்தியடைய மாயையிலிருந்து தப்ப வேண்டும். இதற்கு என்ன வேண்டும் என்றால் சிவஞானம் வேண்டும். கடமைகளில் ஒட்டிக் கொள்ளக் கூடாது. எதையும் சிவார்ப்பணம் ஆக்கிவிட வேண்டும். எல்லாவற்றையும் துறந்து என் ஒருவனையே சரணடைய வேண்டும் இதுதான் சிவ கீதையின் கதை.


பகவத் கீதை தனி நூலுமல்ல; அறிவு நூலுமல்ல; வழிகாட்டுகின்ற நூலுமல்ல!


ஆகவே, போட்டியாக இருந்த வைணவன் பார்த்தான் - இப்படி ஒரு கீதை போட்டு எல்லாம் சிவன் என்று சொல்கிறானே, நம்முடைய கடவுள்கள் என்ன ஆவது? திருமால் என்ன ஆவது? கிருஷ்ணன் என்ன ஆவது? என்ற முறையில் வந்து அவன் ஒரு கதை விட்டான். இதில் சொல்லப்பட்டவைகளெல்லாம் இந்த கீதையிலும் வந்திருக்கின்றன. திருப்பாவையை ஆண்டாள் பாடியதன் பிறகே திருவெம்பாவையை மாணிக்கவாசகர் பாடினார் அதற்குப் போட்டியாக. அவன் என்ன என்ன செய் கிறானோ அதை இவன், அப்படியே செய்ய வேண்டியது. அது மாதிரி சிவகதை - சிவகீதையைப் பார்த்து பகவத் கீதை வந்திருக்கிறது. ஆகவே இந்த பகவத்கீதையின் தன்மை என்னவென்று பார்த்தீர்களேயானால் தனி நூலுமல்ல; அறிவு நூலுமல்ல; வழிகாட்டுகின்ற நூலுமல்ல.


(தொடரும்)


No comments:

Post a Comment