ஹிந்து விரோதம் என்று ‘விஜயபாரதம்' கூறுவதெல்லாம் பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார் என்ற பிரச்சினையே! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, July 26, 2020

ஹிந்து விரோதம் என்று ‘விஜயபாரதம்' கூறுவதெல்லாம் பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார் என்ற பிரச்சினையே!

தந்தை பெரியாருக்கு ஆர்.எஸ்.எஸ். - ‘விஜயபாரத'ங்கள்  நற்சான்றுப் பத்திரம் தரத் தகுதி உண்டா?


தமிழர்களே, 1971 தேர்தலை மனதில் வைத்து 2021 தேர்தலை எதிர்கொள்வீர்!



பெரியார் சிலை அவமதிக்கப்பட்டதற்கு நியாயம்  கற்பிக்கும் வகையிலும், 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் ‘ஹிந்து விரோத சக்தி'களுக்கு வாக்களிக்கக் கூடாது என்று வேண்டுகோள் விடுக்கும் தன்மை யிலும்,  ஆர்.எஸ்.எஸ். வார இதழான ‘விஜயபாரதம்' ஏட்டில் எழுதப்பட்டுள்ள தலையங்கத்திற்குத் தக்க பதிலடி கொடுத்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.


அவரது அறிக்கை வருமாறு:


‘‘தமிழகத்தில் ஊருக்கு ஊர் ஈ.வெ.ரா.வுக்கு சிலைகள் வைத்துள்ளனர். இவர் என்ன சுதந்திரப் போராட்ட வீரரா? மகாத்மா காந்திக்குக்கூட சிலை கள் அரிதாகவே உள்ளன.''


‘‘சுதந்திரம் பெற வேண்டி நாம் போராடிய காலகட்டத்தில், சுதந்திரமே வேண்டாம் என்றார். ஒருவேளை சுதந் திரம் கொடுத்தாலும், தமிழ்நாடு நீங்க லாகக் கொடுங்கள் என்றார். அத்தகை யவரின் சிலையை யாராவது அவ மானப்படுத்திவிட்டால், திராவிடர் கழகம் கொதிப்பது சரிதான். ஆனால், ஸ்டாலின், வைகோ, திருமா, சீமான், ராமதாஸ், இடது, வலது, காங்கிரஸ் என அத்தனைப் பேருமா கொதித்தெழுவார் கள்?'' ஆர்.எஸ்.எஸ். வார இதழான ‘விஜயபாரதம்' (31.7.2020).


சுதந்திரம் வேண்டி நாம் போராடிய காலகட்டத்தில் என்று எழுதுகிறீர்களே, எந்தக் கட்டத்தில் நீங்கள் சுதந்திரத்திற் காகப் போராடினீர்கள்? எப்படித்தான் சிரிப்பது என்று தெரியவில்லையே!


‘‘காலித்தனத்திற்கு முறிவு குண்டர் சட்டம்'' எனும் தலைப்பில் இவ்வாறு தலை யங்கத்தில் தன் ஆற்றாமையை, ஆத் திரத்தை அள்ளிக் கொட்டியுள்ளது.


தந்தை பெரியார் உயிரோடு இருந்த போதும் ஒடுங்கி - நடுங்கிக் கிடந்தனர் என்றால்,  அவர் உடலால் மறைந்து 47 ஆண்டுகள் ஓடிய நிலையிலும், அவர்தம் சிலையைக் காணும்போதுகூட வியர்த்து விறுவிறுத்து ரத்தக் கொதிப்புக்கு இந்தக் காவிக் கூட்டம் ஆளாவது பரிதாபமே!


காந்தியாரைச் சுட்டுக்கொன்ற கூட்டத்திற்குக் காந்தியார்மீது கரிசனமா?


காந்தியாரைவிட பெரியாருக்கு அதிக மாக சிலை இருக்கிறதாம்! காந்தியாரைச் சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்சேவுக்குச் சிலை வைக்கும் கூட்டம், காந்தியாருக்குச் சிலை குறைவாக இருப்பதற்குக் கவலைப் படுவதாகக் காட்டிக் கொள்வது கூட கபடத்தனமே!


‘மை நாதுராம் கோட்சே போல்தா' எனும் பெயரில் அடல் பிஹாரி வாஜ்பேயி அவர்கள் பிரதமராக இருந்த காலகட்டத்தில் மும்பையிலும், டில்லியிலும் நாடகம் நடத் தியவர்கள்தான் இவர்கள் - நினை விருக்கட்டும்!


‘காந்தி என்னும் அரக்கனை - நாதுராம் கோட்சே என்னும் விஷ்ணுவின் அவதாரம் எடுத்துக் கொன்றான்' என்பதுதான் அந்த நாடகத்தின் கருப்பொருள்.


மாலேகான் குண்டு வெடிப்பு வழக்குக் குற்றவாளியான பிரக்யா சிங் தாக்கூர் என்ற சாமியாரிணி நாடாளுமன்ற உறுப்பினராகி, நாடாளுமன்றத்தில் கோட்சேவைப் புகழ்ந்து பேசவில்லையா? அதற்குக் கடுமையான எதிர்ப்பினை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தெரிவிக்கவில்லையா? இந்தக் கூட்டம் தமிழ்நாட்டில் காந்தியாருக்கு சிலை அதிகம் இல்லையே என்று மிகவும் கவலைப் படுவதுதான் கடைந்தெடுத்த நகைச்சுவை!


சுதந்திரப் போராட்ட வீரர்களா இவர்கள்?


இதைத் தாண்டிய மற்றொரு நகைச்சுவை என்ன தெரியுமா?


‘சுதந்திரம் பெறவேண்டி நாம் போராடிய காலகட்டத்தில்....' என்று எழுதுகிறதே - இப்படி எழுதுவதற்குக் கூச்சப்பட வேண் டாமா?


சுதந்திரப் போராட்டத்தில் இவர்களின் நிலை என்ன? இவர்களின் மூத்த தலைவ ரான‘ஜென்டில்மேன்' அடல்பிஹாரி தனது சொந்த கிராமத்தில் சுதந்திரப் போராட்ட வீரர்களைக் காட்டிக் கொடுத்தவர்தானே.


சாவர்க்கார் எத்தனை முறை மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்திருப்பார் - வெகு தூரம் போவானேன், உங்களின் சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் யார்? ஆகஸ்டுத் துரோகி என்று பேர் எடுத்தவர்தானே - அதற்குத் தூக்கிக் கொடுத்த பரிசு கவர்னர் ஜெனரல், மத்திய உள்துறை அமைச்சர், ஆளுநர், முதலமைச்சர் பதவிகள்.


அதேநேரத்தில்,  நிகரில்லா அரும்பெரும் தியாகம் செய்த கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.க்கு ஏற்பட்ட பரிதாப நிலையையும் ஒப்பிட்டுப்  பார்த்தால், பார்ப்பனர் - பார்ப் பனரல்லாதார் என்ற பாரபட்சத்தின் ஆழம் என்னவென்று தெரியும்!


தந்தை பெரியார் சுதந்திரப் போராட்ட வீரரே!


தந்தை பெரியார் தமிழகக் காங்கிரசின் தலைவராகவும், செயலாளராகவும் இருந்த நிலையில், சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடவில்லையா? காந்தியார் அறிவித்த கள்ளுக்கடை மறியல் போராட்டத்தில் இந்தி யாவிலேயே குடும்பத்தோடு போராட் டத்தில் குதித்துச் சிறை சென்றது வேறு யார்? மும்பையில் நடைபெற்ற  காங்கிரஸ் மாநாட்டில், மதுவிலக்குப் போராட்டத்தை நிறுத்திவிடலாம் என்று சங்கரன் நாயரும், மாளவியாவும் காந்தியாரிடம் கேட்டுக் கொண்டபோது, ‘‘அது என் கையில் இல்லை - ஈரோட்டில் இருக்கும் இரு பெண்களின் கைகளில் இருக்கிறது'' என்று சொல்ல வில்லையா? அந்த இரு பெண்களில் ஒருவர் பெரியாரின் மனைவி நாகம்மை யாரும், இன்னொருவர் பெரியாரின் தங்கை கண்ணம்மாளும் ஆவார்களே!


காந்தியார் கோர்ட்டு பகிஷ்காரம் என்று அறிவித்த நிலையில், தமக்கு வரவேண்டிய ரூபாய் 50 ஆயிரத்தை இழந்தவர் யார்? 1920-களில் 50 ஆயிரம் ரூபாய் என்பது எவ்வளவுப் பெரிய தொகை! அந்நியத் துணிகள் பகிஷ்காரம் என்ற பெயரால் ஊர் ஊராகக் கதர் மூட்டைகளைச் சுமந்து சென்று கூவிக் கூவி விற்றவர் யார்? தந்தை பெரியார் அல்லவா!


மத்திய அரசு தாமிரப் பட்டயம் அளித்ததே!


சுதந்திரப் போராட்ட வீரர் என்ற காரணத்தால்தான் - மத்திய அரசு, தந்தை பெரியாருக்கு (Freedom Fighter) தாமரப் பட்டயத்தை அளிக்கவில்லையா? மத்திய அரசின் சார்பில் முதலமைச்சர் மாண்புமிகு கலைஞர் அவர்களே, தந்தை பெரியாரின் இருப்பிடத்திற்கே நேரில் வந்து அளித்த மரியாதை எல்லாம் இந்த ‘அண்டர்கிரவுண்ட்' கூட்டத்திற்குத் தெரியுமா? வாய்ப்புளித்ததோ, மாங்காய்ப் புளித்ததோ என்று அதுவும் தலையங்கப் பகுதியில் எழுதுவதற்கு வெட்கப்பட வேண்டாமா?


பெரியார் சிலை அவமதிக்கப்பட்டதை திராவிடர் கழகம் மட்டும்தான் கண்டிக்கவேண்டுமாம். அப்படி என்றால், இதுபோன்ற இழிவு செயல்களைக் கண்டிப்பது குற்றம் என்று சொல்லுவதன்மூலம் ‘விஜயபாரதம்' - ஆர்.எஸ்.எஸ். வகையறாக்கள் எத்தகைய அராஜக - அநாகரிக சிந்தனைவாதிகள் - பொது ஒழுக்கமும், நாணயமும் அற்றவர்கள் என்பது அம்பலமாகவில்லையா?



அதுதான் ‘‘பெரியார் மண்!''


தமிழ்நாட்டில் அத்தனைக் கட்சித் தலைவர்களும் தந்தை பெரியார் பக்கம் நின்று பெரியார் சிலையை அவமதித்தவர்களை சாடுகிறார்கள் என்று ஆத்திரப்படுகிறது ‘விஜயபாரதம்!'


கொஞ்சம் புத்திசாலித்தனம் இருக்குமானால், கட்சி வண்ணம் பாராமல் ஒரு தலைவருக்காக அத்தனைக் கட்சித் தலைவர்களும், பொதுமக்களும் பொங்கி எழுகிறார்கள் என்றால், இதற்குப் பெயர்தான் ‘‘பெரியார் மண்!''


புரிந்துகொள்ளட்டும் காவிக் கூட்டம்!


நாடாளுமன்றத்தில் பெரியார் குரல் -


மாணவர்கள் கைகளில் பெரியார் - அம்பேத்கர்!


தமிழ்நாட்டிலிருந்து நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு சென்ற 38 உறுப்பினர்களும் கட்சிகளை மறந்து நாடாளுமன்றத்தில் பதவிப் பிரமாணம் எடுத்தபோது, ‘‘பெரியார் வாழ்க!'' என்று ஒலிமுழக்கம் செய்தார்களே - அந்த வயிற்றெரிச்சல்தான் ‘விஜயபாரதங்'களுக்கு இரத்தக் கொதிப்பு!


வடபுலத்து மாணவர்கள் போராட்டம் என்று வருகிறபோது ஒரு கையில் தந்தை பெரியார் படத்தையும், இன்னொரு கையில் பாபா சாகேப் அண்ணல் அம்பேத்கர் படத்தையும் ஏந்தி, ‘பெரியாருக்கு ஜிந்தாபாத்', ‘அம்பேத்கருக்கு ஜிந்தாபாத்!' என்று  ஒலி முழக்கக் கர்ச்சனை செய்கிறார்களே - அது இந்த சங் பரிவார்க் கூட்டத்தின் அஸ்திவாரத்தை நொறுக்கும் அணுகுண்டாகத் தெரிகிறது என்று அர்த்தம் - அதனால்தான் இந்தக் கலக்கமும் - அச்சமும்!


சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மாண்பமை நாகமுத்து அவர்கள் ‘‘வடக்கே காந்தியார் தந்தை என்றால், தமிழ்நாட்டுக்குத் தந்தை பெரியார்'' என்று உயர்நீதிமன்றத்திலே ஒலித்தாரே - அதன் பொருள்தான் என்ன? புரிந்துகொள்ளவேண்டாமா?


மத்திய அரசு அஞ்சல் தலை வெளியிட்டதே!


தந்தை பெரியார் நூற்றாண்டையொட்டி (17.9.1978) ஆர்.எஸ்.எஸ்., ஜனசங்கத்தினர் உள்பட பலரும் பங்கு வகித்த மத்திய அரசு (ஜனதா) சிறப்பு அஞ்சல் வெளியிட்டதும், அந்த வெளியீட்டு விழாவில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஏ.வரதராசன், எஸ்.மோகன் (பிற்காலத்தில் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக வந்தவர்கள்) ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்ததை அறியுமா ஆர்.எஸ்.எஸ். வகையறாக்கள்?


வாஜ்பேயி அரசு சிறப்பு அஞ்சல் உறை


வெளியிடவில்லையா?


ஏன்? வாஜ்பேயி பிரதமராக இருந்தபோதுகூட - தந்தை பெரியாரின் 125 ஆம் ஆண்டையொட்டி (17.9.2003) சிறப்பு அஞ்சல் உறை வெளியிடப்பட்டதும்,  அவ்விழாவில் , அப்போது பா.ஜ.க.வில் இருந்த மத்திய இணை அமைச்சர் மாண்புமிகு எஸ்.திருநாவுக்கரசர் கலந்துகொண்டு சிறப்பான உரையை வழங்கியதும் எதைக் காட்டுகிறது?


வைக்கம் போராட்டத்தின்போது, தந்தை பெரியாரை சாகடிக்க சத்ரு சம்ஹாரம் நடத்திய கூட்டம் - தந்தை பெரியார் உடல்நலம் பாதிக்கப்பட்டு ஓய்வெடுத்துக் கொண்டிருந்தபோதும் - அய்ரோப்பா சுற்றுப்பயணத்தின்போதும் அவர் உடல்நலம் கெட்டு, ‘‘வேறு உலகம்'' போகவேண்டும் என்று சிறப்புப் பூஜைகள் நடத்தியவர்கள் (‘குடிஅரசு' 3.1.1933) ஏமாந்தார்கள் - எதிர்விளைவைத்தான் அனுபவித்தார்கள்.


சட்டமன்றத் தேர்தலே குறி!


இப்பொழுது இந்தக் கூட்டத்துக்கு என்ன பிரச்சினை? அடுத்த சில மாதங்களில், தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வருகிறது - அதற்குள் மதவாதத்தைக் கிளப்பி, தமிழ்நாட்டு மக்களின் வாக்கைப் பறித்துவிடலாம் என்று மனப்பால் குடிக்கிறார்கள். ‘விஜயபாரதம்'  தலையங்கத்தில் அவர்களின் ‘அந்தரங்க அபிலாசை' என்னவென்பதை காட்டிக்கொண்டு விட்டார்கள்.


‘இந்து விரோத' கட்சிகளுக்கு, வரும் தேர்தலில் பாடம் புகட்ட வேண்டும் என்று மங்களம் பாடி தலையங்கத்தை முடிக்கிறது ‘விஜயபாரதம்!'


‘பூனைக்குட்டி வெளியில் வந்துவிட்டதல்லவா!


1971 தேர்தலில் கிளப்பப்படாத மதவாதமா? மதவாதம் என்று சொல்லுவது - பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார் உணர்வைத் திசை திருப்பிடக் கொடுக்கும் கோஷம்!


தமிழ்நாடு  மக்கள் இதில் எப்பொழுதுமே தெளிவானவர்கள். எந்த வாதத்தைக் கிளப்பினாலும், அதற்குள் இருப்பது பார்ப்பனர் - பாரப்பனரல்லாதார் எனும் ஆரிய - திராவிடப் போராட்டமே என்பதைத் தெளிவாக உணர்ந்து வாக்களிப்பவர்கள்தான்!


அண்மையில் சமூகநீதியைக் குழிதோண்டிப் புதைக்க இக்கூட்டம்  செய்யும் முயற்சிகளை அவர்கள் கண்டு மிகவும் கொதிப்படைந்துதான் இருக்கிறார்கள் என்பதை இந்தச் சில்லுண்டி செயல்களால் உங்களால் திசை திருப்பமுடியாது!


மீண்டும் 1971 தேர்தல் முடிவுதான் - 2021 இலும் வரும் என்பது உறுதி! உறுதி!! உறுதி!!!


ஒருபோதும் தமிழ் மக்கள் ஏமாந்துவிடமாட்டார்கள்!


 


கி.வீரமணி


தலைவர்


திராவிடர் கழகம்


சென்னை


26.7.2020


 


புராணங்களை விமர்சிக்கக் கூடாதா?


புராணங்களைப் பற்றிப் பேசக்கூடாது என்று புயல் வேகத்தில் சத்தம் போடுப வர்களின் நோக்கமென்ன? புராணங் களில் உள்ள ஆபாசங்கள் வெளியில் தெரிந்துவிடக் கூடாது என்பதால்தானே. இதன்மூலம் புராணங்கள் ஆபாசக் களஞ்சியங்கள் என்பதை ஒப்புக் கொள்கிறார்கள் என்று பொருள்.


இராமாயணம் பற்றியும், புராணம் குறித்தும் தந்தை பெரியார் ஆண்டுக் கணக்கில் பேசியிருக்கிறார். நூல்களை யும் வெளியிட்டுள்ளார். அவற்றுக் கெல்லாம் ஒரே ஒரு வரி மறுப்புக் கூற முடியாதவர்கள், ஆட்சி அதிகாரத்தின் காற்று தங்கள் பக்கம் வீசுகிறது என்கிற காரணத்தால் அதிகம் துள்ளிக் குதிக் கிறார்கள்.


அப்படியென்றால், சக்ரவர்த்தி ராஜ கோபாலாச்சாரியாரே பாகவதம்பற்றி என்ன சொல்லுகிறார்?


‘‘வியாசர் விருந்து'' என்ற தலைப் பிலும், ‘‘சக்ரவர்த்தித் திருமகன்'' என்ற தலைப்பிலும் மகாபாரதத்தையும், இராமா யணத்தையும் ‘கல்கி'யில் தொடராக ராஜாஜி எழுதி வந்தது அன்பர் களுக்குத் தெரியுமா? அதன் பின்னர் பாக வதத்ததை எளிய தமிழில் எழுதலாமே என்று ‘கல்கி'  சதாசிவம் தமது யோச னையை ராஜாஜியிடம் வெளியிட்டார். அதற்கு ராஜாஜி கூறிய பதில் என்ன?


‘சதாசிவம் எனக்குப் பாகவதத்தை எழுதுவதில் நாட்டமில்லை. இதில் பகவானின் லீலைகளும், அற்புதங்களும் மிகுதியாக உள்ளன' என்று ராஜாஜி எழுதியதற்கு என்ன பதில்? (ஆதாரம்: ‘கல்கி', 4.10.2009, பக்கம் 72).


பகவானின் ‘‘லீலைகள்'' என்று ராஜாஜி கூறுவது என்ன? ராஜாஜிக்கே பகவானின் லீலைகள் ஆபாசமாகத் தெரிகிறதே!


புராணங்கள் ஆபாசம் என்று வரும்போது, அவற்றை அழித்துவிட வேண்டியதுதானே! நிஜம் இருக்கலாம், நிழல் இருக்கக் கூடாதா? ஆபாசங்கள் இருக்கலாம் - ஆனால், அவற்றை விமர்சிக்கக் கூடாது என்றால், பக்திப் போதையில் இருக்கும் மக்கள் ஆபாசப் படு குழியில் தள்ளப்படுவதை எதிர்த்து மக்களை நெறிப்படுத்துவது சமூகப் பொறுப்புள்ள பகுத்தறிவாளரின் அடிப்படைக் கடமையும், உரிமையும் அல்லவா! மக்கள் மத்தியில் விஞ்ஞான மனப்பான்மையை வளர்ப்பது ஒவ் வொரு குடிமகனின் அடிப்படைக் கடமை என்று இந்திய அரசமைப்புச் சட்டம் 51-ஏ(எச்) கூறுகிறது. அந்தக் கடமையைச் செய்தால் குற்றமா?


 


 


No comments:

Post a Comment