ஒரு பார்ப்பனராக இருப்பவருக்குக் கிடைக்கும் அனுகூலங்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 18, 2020

ஒரு பார்ப்பனராக இருப்பவருக்குக் கிடைக்கும் அனுகூலங்கள்


(பேரா.பெக்கி மெக்கின்டோஷ், வெள்ளையராக இருப்பதில் கிடைக்கும் அனுகூலங்களைப் பற்றி எழுதி யிருந்த புகழ்பெற்ற வரிகளைப் போலவே, பார்ப்பனராக இருப்பதன் அனுகூலங்களைப் பட்டியலிட்டிருக்கிறார் பேராசிரியர் திலீப் மண்டல். இவரது இந்தப் பதிவுகள் ஏற்படுத்திய அதிர்வலையின் காரணமாக, அவரது டுவிட்டர் கணக்கை முடக்கச் செய்துள்ளனர் பார்ப்பனர் கள். இவர் இந்தியா டுடே இதழில் மேலாண்மை ஆசிரிய ராகவும், ஊடகவியல் பேராசிரியராகவும் பணியாற்றியவர். தற்போது தி பிரிண்ட் இணையதளத்தின் ஆலோசகராக உள்ளார்.)



  1. நான் ஒரு பார்ப்பனராக இருக்கும்போது, சமு தாயத்தில் பெரிதும் மதிக்கப்படுகிறேன். என் பெயரின் பின்னால் 'ஜீ' என்ற பின்னூட்டத்தைச் சேர்ப்பர். நான் எவ்வளவு பெரிய படிப்பறிவில்லாத ஒரு முட்டாளாக இருந்தாலும், என்னைப் பண்டிதர் என்றழைப்பார்கள்.

  2. ஒரு பார்ப்பனராக இருக்கும்போது, எனக்குப் பொது வெளியில் அடைக்கலம் கிடைப்பது சிரமமாகாது. என்னுடைய ஜாதியினர் உட்புக முடியாது என்றோ அல்லது தவறாக நடத்தக்கூடும் என்றோ நான் அஞ்சத் தேவையில்லை.

  3. அனைத்து பொது இடங்களுமே எனக்கு உரியதாகும்.

  4. என்னுடைய கலாச்சார விருப்பங்களுக்கு ஏற்றாற்போல், உணவு பரிமாறும் உணவகங்கள் எனக்குக் கிடைக்கும். எனது விருப்பத்திற்கு ஏற்ற உணவினைக் கேட்பது தவறாகாது. மாறாக, அது என்னுடைய சமூக அந்தஸ்தை அதிகரித்துக் காட்டும்.

  5. என்னுடைய அக்கம்பக்கத்தினருக்கோ, உடன் பயணிக்கும் சக பயணிக்கோ என்னுடைய ஜாதிய அடை யாளத்தை தெரிந்து, என் மேல் வெறுப்போ அல்லது கீழ்த்தரமான எண்ணமோ எழாது.

  6. நான் பார்ப்பனர்களுக்கான வரன் தேடும் வலைத்தளங்களில், என்னுடைய சுயவிவரக் கணக்கைப் பதிவு செய்து, அடுத்தவரின் நன்மதிப்பை எதிர்பார்த்திருக்க வேண்டிய அவசியமில்லை.

  7. நான் பல்கலைக்கழகங்களில் நேர்முகத் தேர்வுகளை எதிர்கொள்ளும் போது, என்னுடைய ஜாதியைச் சேர்ந்த ஒரு நபராவது, அந்தக் கேள்வி கேட்பவர்கள் குழுவில் இருப்பர்.

  8. என்னுடைய பள்ளி மற்றும் கல்லூரிப் பாடத் திட்டத்தில் எங்களுடைய கலாச்சார விருப்பத்திற்கு ஏற்றார் போல பாடங்கள் அமைத்திருக்கும் என்பதில் நான் உறுதியாக இருக்கலாம், மற்றும் அதை எழுதியவர்களும் என்னுடைய ஜாதியைச் சேர்ந்தவர்களாய் இருப்பர்.

  9. நான் எப்போதெல்லாம் இந்தியக் கலாச்சாரத்தைப் பற்றியோ அல்லது ஹிந்து நாகரிக வளர்ச்சியைப் பற்றியோ கேள்விப்படுகிறேனோ, அப்பொழுது நான், எங்களுடைய ஜாதிய பாரம்பரியத்தைப் பற்றி தான் கேள்விப் படுகிறேன் என்பது உறுதி .

  10. நான் எந்தவொரு ஹிந்து மத புனித தளத்துக்குச் சென்றாலும், எனக்கு அங்கே இடம் கிடைப்பதில் சிரமம் ஏற்படாது.

  11. நான் வெளிநாடுகளுக்குச் செல்லும்போது, என்னுடைய ஜாதியினரின் கூட்டு ஆக்கிரமிப்பைக் காண முடியும். அவர்களில் பலரும், தங்கள் நிறுவனங்களின் பன்முகத்தன்மை கொண்ட சட்டங்களால், அங்கே பணியமர்த்தப்பட்டவர்களாய் இருப்பார்கள் .

  12. மேற்கத்திய உலகின் உறுதியான செயல்திட்டங்களினால், வேலைவாய்ப்புகள் எனக்கு கிடைத்தாலும், நான் இடஒதுக்கீட்டினைத் தொடர்ந்து எதிர்த்துக் கொண்டிருப்பேன்.

  13. பன்முகத்தன்மை கொண்ட சட்டங்களால் எனக்கு வேலை வாய்ப்புக் கிடைத்தாலும், நான் என்னைத் தகுதியில் குறைந்தவனாக கருதுவதில்லை.

  14. இந்தியாவின் உறுதியான ஜனநாயக கொள்கைகளை எதிர்த்தபடியே, என்னை ஒரு ஜாதிய பாகுபாடுகளற்றவனாக காட்டிக்கொள்வேன். இடஒதுக்கீட்டை எதிர்ப்பது, என்னை ஒருபோதும் ஜாதியவாதியாக காட்டாது.

  15. நான் ஓர் இசை நிலையத்திற்குச் சென்று பாரம்பரிய இசை என்று கேட்டு வாங்கும்பொழுது, அந்தக் கடைக்காரர் என்னுடைய ஜாதிக்காரர்கள் உருவாக்கியவொன்றைத் தான் எனக்குத் தருவார் என்பதே நிதர்சனம்.

  16. கோவில்களில் அர்ச்சகர் பணியிடங்கள் நூறு சதவிகிதம் என்னுடைய ஜாதியினருக்கு ஒதுக்கப்பட்டிருக்கும். இருந்தாலும், இந்திய அரசியல் சாசனத்தின் இடஒதுக்கீடு என்னுடைய விருப்பத்திற்கு எதிரானவொன்று.

  17. நான் எனக்குச் சம்பந்தமில்லாத அநேகத் தலைப்புகளிலும் பேசுவதற்கு தகுதியுள்ள ஓர் ஆளாக்க் கருதப்படுவேன். என்னுடைய மூன்றாம்தரக் கட்டுரைகள் கூட என்னுடைய ஜாதிப் பெயர் பின்னூட்டத்திற்காகவே ஆய்வறிக்கைகளில் இடம்பெறும்.

  18. என்னுடைய நாட்டின் பெரும்பான்மை பாமர ஏழை மக்களின் வாழ்க்கை நிலையைப் பற்றிய எனது அறியாமை ஒரு குற்றமாக்க் கருதப்படாது. ஆனாலும் நான் என்னுடைய நாட்டின் இறையாண்மையைப்  பற்றி தொடர்ந்து புகழ்ந்து பேசுவேன்.

  19. என்னுடைய தேசபற்று, பொதுவெளியில் விமர்சனத்திற்கு உள்ளாகாத ஒன்றானாலும், என்னுடைய நாட்டின் பாதுகாப்புத் தகவல்கள் பாகிஸ்தானுக்கோ அல்லது சீனாவிற்கோ விற்பனை ஆனாலும், என்னுடைய ஜாதியினர் மீது ஒரு பழியும் விழாது.

  20. என்னுடைய ஜாதி தான் இங்கே முதன்மையானது.

  21. தனியார் துறைகளில் என்னுடைய ஜாதியினரின் சிபாரசினால் எளிதாக வேலைவாய்ப்பு கிடைக்கிறது. ஆனால் அது என்னை ஒரு ஜாதியவாதியாக் காட்டாது.

  22. நான் பிற்படுத்தப்பட்டோருக்காகவும், தாழ்த் தப்பட்டோருக்காகவும் குரல் எழுப்பும் போது, ஒரு மனிதாபிமானம் மிக்க ஜனநாயகவாதியாக பார்க்கப்படுவேன்.

  23. ஆனால் அதையே ஒரு பிற்படுத்தப்பட்டோரோ, தாழ்த்தப்பட்டோரோ தங்களுடைய சமுதாயத்துக்குச் செய்யும்பொழுது அவர் ஜாதியவாதியாக முத்திரை குத்தப்படுவார்.

  24. நான் தொலைக்காட்சிகளில் செய்தி, விவாத நிகழ்ச்சிகள் பார்க்கும்பொழுது என்னுடைய ஜாதியினரே பெரும்பாலும் அறிஞர்களாகவோ , தொகுப்பாளர்களாகவோ இருப்பர்.

  25. என்னுடைய ஜாதியினரே தேசிய அச்சு ஊடகங்களில் மக்களின் பெரும்பான்மை  பார்வை கட்டுரைகளை எழுதுவர். பல்கலைகழக நூலகங்களில் என்னுடைய ஜாதியைச் சார்ந்த அறிஞர்கள் எழுதிய நூல்களே நிரம்பியிருக்கும்.

  26. நான் ஏதாவது முட்டாள்தனமாகவோ, மூர்க்கத்தனமாகவோ செய்யும்பொழுது, அதை யாரும் என்னுடைய ஜாதியுடன் தொடர்பு படுத்தமாட்டார்கள்.

  27. நான் ஒடுக்கப்பட்ட மக்களோடு உண்ணும் போதோ, படிக்கும்போதோ, பணி செய்யும்போதோ அல்லது அவர்களின் வீட்டு விழாக்களில் பங்கெடுக்கும் போதோ ஒரு மிகப்பெரிய மனிதாபிமானமிக்கவராக கருதப்படுவேன் .  என்னை ஒரு ஜாதிய பாகுபாடற்றவனாக காட்டிக்கொள்ள இதுவே போதுமானது.

  28. என்னுடன் விடுதியில் தங்கியிருப்பவர் கீழ் ஜாதியைச் சேர்ந்தவராக இருந்தார் என்றால், நான் அதை என்னை ஒரு ஜாதிய மனநிலை அற்றவனாகக் காட்டிக்கொள்ள பயன்படுத்தலாம் .

  29. நான் ஒரு பார்ப்பனராக இருந்து, என்னுடைய வழக்கு நீதிமன்றத்தில் வழக்காடும்பொழுது, என்னுடைய ஜாதியைச் சார்ந்த நபர் ஒருவர், அதை விசாரிப்பவர்களில் ஒருவராக இருக்கக்கூடிய சாத்தியங்கள் அதிகம் .

  30. நான் ஒரு பார்ப்பனராக இருக்கும்போது, எனது கட்டுரையை என்னுடைய ஜாதியை சார்ந்த நபர்கள் தேர்வுக்குழு உறுப்பினர்களாக இருக்கும் பத்திரிக்கைகளில் பதிப்பிடுவது மிகச் சுலபமான காரியமாகும்.


பெரும்பான்மை பார்ப்பன நண்பர்கள் இந்த அங்கீகாரங்களை அனுபவித்ததில்லை என்று கூறுவர். இவை வெளிப்படையாகத் தெரியப்படுத்தப்பட  வேண்டியவை.  இது ஒருவர் தக்க சமயத்தில் பயன்படுத்திக்கொள்ளும் சமூக மற்றும் கலாச்சார முதலீடாகும். அதே சமயம் அதனை அறியாதவர் போலவும் காட்டிக்கொள்ளலாம்.


தமிழில்: தமிழ் கா.அமுதரசன்


 


No comments:

Post a Comment