சிலிக்கான் வேலி - அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் இருக்கும் இந்தப் பகுதி தான், உலகெங்கும் மென்பொருள் துறையில் சாதிக்கத் துடிக்கும் இளைஞர்களின் உச்ச இலக்கு. உலகளவில் தகவல் தொழில்நுட்பத் துறையில் ஏற்பட்ட மாபெரும் புரட்சி, உலகமயமாக்கல் மற்றும் தாராளமயமாக்கல் ஏற்படுத்திய தாக்கம் ஆகியவற்றினால், இந்தியர்கள், அமெரிக்கா நோக்கிப் படையெடுக்க ஆரம்பித்தனர். அப்படி வளர்ச்சியின் உச்சமாகவும், நவீனத்தின் பிறப்பிடமாகவும் இருக்கும் இந்தப் பகுதியிலேயே சாதி என்ற பழமைவாதச் சிந்தனையைக் கொண்டு வந்து சேர்த்துள்ளனர் இந்தியர்கள். சில தினங்களுக்கு முன்பு, இங்கே ஒரு வரலாற்று நிகழ்வு நடைபெற்றுள்ளது. அமெரிக்க வரலாற்றில் முதல்முறையாக, சாதிய அடக்குமுறைக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இந்திய சாதிய அமைப்பின்படி, ஒடுக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்த ஒரு பொறியாளரைப் பார்ப்பனர்களான அவருடைய மேலாளர்கள் இருவர், தொடர்ந்து இழிவு படுத்தி, அவருக்குக் கிடைக்க வேண்டிய நியாயமான ஊதிய உயர்வு மற்றும் பதவிஉயர்வு ஆகியவற்றை வழங்காமல் கொடுமை செய்துள்ளனர். இப்பொழுது அவர்கள் இருவர் மீதும், அவர்கள் பணிபுரிந்த சிஸ்கோ நிறுவனம் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க வாழ் இந்தியர்கள் மட்டுமல்லாமல், உலகெங்கும் வாழும் இந்தியர்கள் மற்றும் தமிழர்கள் மத்தியில் இந்தச் செய்தி, பேசுபொருளாகி உள்ளது.
கடல் கடந்து பயணம் செல்ல, குறிப்பிட்ட அளவிலேயே பொருட்கள் கொண்டு செல்ல முடியும், தேவையானவற்றைக் கொண்டு செல்லவே வானூர்தி நிலைய அதிகாரிகளிடம் மல்லுக்கட்ட வேண்டிவரும். அப்படி இருக்க, தேவையே இல்லாத அழுக்கு மூட்டையான சாதியை இந்தியர்கள் கொண்டு செல்கிறார்கள் என்ற ஒரு குற்றச்சாட்டு எப்பொழுதும் உண்டு. கிராமங்களில் மட்டும் தான் சாதி இன்னும் இருக்கிறது, நகரங்களிலும், படித்தவர்கள் மத்தியிலும் சாதிய உணர்வு கிடையாது என்று சொல்லப்படும், வெற்றுச் சமாளிப்புகள் எல்லாம் பொய் என்பதனை, இந்த வழக்கு வெளிச்சம் போட்டுக் காட்டி உள்ளது. அமெரிக்காவில் சாதிய பாகுபாடு உண்டென்பதை இந்த வழக்கு பதியப்படுவதற்கு முன்பு சொல்லியிருந்தால், இந்தியாவில் யாரும் நம்பி இருக்க மாட்டார்கள். ஆனால் இங்கு வாழ்பவர்களுக்கு நன்றாகவே தெரியும், சாதியின் தாக்கம் அனைத்து நிலையிலும் பரவிக் கிடக்கிறது, சாதிச் சங்கங்கள் மிகச் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன என்று.
பல்வேறு நாடுகளிலிருந்து குடியேறியவர்கள் மிகுந்து காணப்படும் அமெரிக்காவில், யார் இந்த நாட்டிற்குள் நற்பண்புகளையும், நல்ல பழக்கங்களையும் கொண்டு வந்தாலும் அனைவரும் ஏற்றுக்கொள்வர். அப்படி இருக்கையில், எவருக்குமே பயனளிக்காத, பிரிவினையை ஏற்படுத்தும் சாதியத்தை, ஏன் இந்தியர்கள் பின்பற்றுகிறார்கள் என்பது மிகப்பெரிய புதிர். உலகெங்கும் பாகுபாடு பொதுவான ஒன்று தான்; நிறப் பாகுபாடு, பாலினப் பாகுபாடு, வர்க்கப் பாகுபாடு போன்றவை அனைவரும் அறிந்தது, ஆனால் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சாதியோ, மற்றவர்களால் எளிதில் புரிந்து கொள்ள முடியாதது. இது இந்தியாவின் கலாச்சாரம், பாரதத்தின் பண்பாடு என மிகப் பொய்யான ஒரு கட்டுக்கதையைச் சொல்லி, சாதியச் சாக்கடையை இங்கும் ஓடவிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அந்தப் பொய்க்கு வலுச்சேர்க்கும் விதமாகவே இங்கு நடத்தப்படும் விழாக்களும், சாதியப் பழக்க வழக்கங்களை உள்ளடக்கி நடத்தப்படுகின்றன. இந்தியக் கலாச்சாரம், தமிழ்க் கலாச்சாரம் என்ற பெயரிலே நடக்கும் பல விழாக்கள், பார்ப்பனியத்துக்குப் பல்லக்குத் தூக்கும் வேலையைத் தான் செய்கின்றன. இந்த நாட்டிற்கு இந்தியர்களில் யார் முதலில் வந்து குடியேறினார்களோ, அவர்களின் பழக்க வழக்கமே ஒட்டு மொத்த இந்தியக் கலாச்சாரமாக இங்கே பார்க்கப்படுகிறது.
ஏன் சாதி இங்கேயும் உயிர்ப்போடு இருக்கிறது? என்று ஆராய்ந்து பார்த்தால் சில முக்கியக் காரணங்களைக் கூறிவிட விட முடியும். மிக முக்கியமான முதன்மையான காரணம், சாதி என்ற மனநிலையிலிருந்து பலரால் வெளியில் வரவே முடியவில்லை. சாதிய அடுக்கில், தனக்குக் கீழ் ஒருவன் இருக்கிறான் என்ற எண்ணம் வேரூன்றி இருப்பதால், அவன் எங்கு சென்றாலும், அதே மனநிலையுடன் வாழ்கிறான். புறச்சூழல் ஒவ்வொருவரின் பழக்க வழக்கங்களையும், சிந்தனைகளையும் தீர்மானிக்கும். ஆனால் கெட்ட வாய்ப்பாக, சாதி எல்லாவற்றிக்கும் மேலானதாகப் பார்க்கப்படுகிறது. இன்னொரு முக்கிய காரணம், இங்கேயே குடியேறி பிள்ளைகள் பிறந்து வளர்வதால், திருமணத்தின் மூலம் எந்தச் சாதி கலப்பும் ஏற்பட்டுவிடக் கூடாதென்பதில் மிகவும் கவனமாக இருக்கிறார்கள். ஆண், பெண் என எவராக இருப்பினும், தனக்குப் பிடித்த, தன் குணநலன்களுடன் ஒத்துப் போகும் வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கும் உரிமையும், வாய்ப்பும் உள்ள இந்த நாட்டில் கூட, இவர்கள் சாதியின் பெயரால் வரன் தேடும் அமைப்பை ஏற்படுத்தி வைத்துள்ளனர் என்பது வேதனைக்குரியது. தம் பிள்ளைகள் மீதே இவர்கள் நிகழ்த்தும் மனிதஉரிமை மீறல். அதேபோல் பணியிடத்திலும், தொழிலிலும் தன் சாதிக்காரர் மீதான பரிவும், நெருக்கமும் இயற்கையாகவே ஏற்படுகிறது.
தமிழகத்தில், நூற்றாண்டு கண்ட இயக்கமான திராவிட இயக்கம், சாதி ஒழிப்புத் தளத்தில் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து, பல வியக்கத்தக்க மாற்றங்களை நிகழ்த்தியுள்ளது. திராவிட இயக்கத்தின் தேவை என்றும், எங்கும் இருந்து கொண்டே தான் இருக்கிறது, அது அம்பாசமுத்திரமாக இருந்தாலும்! அமெரிக்காவாக இருந்தாலும்!
- சுதாகர், அமெரிக்காவிலிருந்து...
No comments:
Post a Comment