வாழும் புரட்சி - ரோசா லக்சம்பர்க்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 18, 2020

வாழும் புரட்சி - ரோசா லக்சம்பர்க்!

-அ.சி.கிருபாகரராஜ்



"ஒருவர் தன் சமூகத்தில் உள்ள அனைவரையும் நேசிப்பதற்கு இடமளிக்கக்கூடிய தெளிவான மனச்சான்று கொண்ட மிகச்சிறந்த சமூக அமைப்பை அடைவதே என் இலட்சியம். அவ்வாறான சமூக அமைப்பை அடையவே நான் பாடுபடுகிறேன்; அத்தகைய சீரிய இலட்சியத்தைப் பாதுகாக்கிறேன்; இம்முயற்சியில் ஒருவேளை நான் வெறுப்பதற்கும் கற்றுக்கொள்ளக்கூடும்."


உயர்கல்வி படித்துக்கொண்டிருந்த அவ்வயதிலேயே "ரோசா" என்றழைக்கப்படும் ரோசா லக்சம்பர்க் தன் தோழிக்கு எழுதிய கடிதத்தின் அழுத்தமான வரிகள் இவை.


சோசலிச இயக்கம் எழுச்சியுற்ற தொடக்க காலத்தில் புரட்சிகரப் பெண்ணாக, உலகளாவிய அளவில் புகழ்பெற்று விளங்கிய ரோசா, அன்றைய இரஷ்ய அரசாட்சிக்குட்பட்ட சமோஸ்க் என்ற சிறிய போலந்து நகரில் 1871 மார்ச் 5 ஆம் தேதி  செல்வாக்கு மிகுந்த லக்சம்பர்க் வகுப்பைச் சார்ந்த யூதக் குடும்பத்தில் அய்ந்து குழந்தைகளுள் இளையவராகப் பிறந்தார்.


ரோசாவின் பெற்றோர் எட்வர்ட் - லினா இருவரும் நன்கு படித்தவர்கள். தந்தை எட்வர்ட், பெர்லின் (ஜெர்மனி), வார்சா (போலந்து) இரு நகரங்களிலும் கல்வி பெற்று மர வணிகத்தில் ஈடுபட்டிருந்தார். தாய் லினா, இத்திஷ், போலிஷ், ஜெர்மன் ஆகிய மூன்று மொழிகளில் தேர்ந்தவர். குடும்ப உறவுகளின் பிணைப்பில், சகோதர அன்பு - அரவணைப்பில் வளர்ந்து வந்த ரோசாவின் குடும்பம் அவரது இரண்டாவது வயதில் வார்சா நகருக்கு குடிபெயர்ந்தது.


சிறுவயதிலிருந்தே மிகுந்த அறிவுக்கூர்மையுடன் விளங்கிய ரோசா அய்ந்து வயதிலேயே நன்கு எழுதவும் படிக்கவும் தேர்ந்திருந்தாள்.


குடும்ப அன்பின் பெருக்கத்தில் ஆடிப் பாடி, ஓடி இளமையை உற்சாகத்துடன் வாழவேண்டிய ரோசா, எதிர்பாராத வகையில் திடீர் உடல்நலக்குறைவுக்கு ஆட்படும் சூழல் நேர்ந்தது. இடுப்பெலும்பு நழுவப்பெற்று ஓராண்டு காலம் படுக்கையிலேயே கழிக்க வேண்டிய கொடிய நிலைக்குத் தள்ளப்பட்டார். அவருடைய ஒரு கால் மற்றொரு காலை விட குறுகியதாக அமையப்பெற்று, நிரந்தரமாக  ஊன்றி நடக்கும் நிலைக்கு தள்ளப்பட்ட ரோசா, அச்சிறுவயதிலேயே தன் போராட்ட வாழ்வை எதிர்கொள்ளத் தொடங்கிவிட்டார். பிறர் தன் மீது காட்டும் பரிதாப உணர்ச்சிக்கு ஆளாவதிலிருந்து மீள்வதற்குப் போராடி, தன் நடையில் உள்ள குறை வெளிப்படையாகத் தெரியாத வண்ணம் மாற்றத்தை ஏற்படுத்திக்கொண்டார்.


1884 ஆம் ஆண்டு வார்சா நகரில் பெண்களுக்கான ஜிம்னாசியப் பள்ளியில் (Gymnasium Secondary School) சேர்ந்தார். பிரிட்டிஷ், அமெரிக்க உயர்கல்விப் பள்ளிகளுக்கு ஈடாக, பல்கலைக்கழகத்தில் சேர்வதற்கான அய்ரோப்பிய நகரங்களில் விளங்கிய சிறந்த கல்வி நிலையம் அது. அக்காலங்களில் மிகக் குறைந்த போலிஷ் மாணவர்களையே அனுமதிக்கக் கூடிய, அதிலும் யூத மாணவர்களை அனுமதிக்காத ஜிம்னாசியப் பள்ளிகளுள் ஒன்றில் சேர்ந்து, பல கட்டுபாடுகளுக்குட்பட்டு‌ 1887 ஆம் ஆண்டு மேனிலைக் கல்வியில் (Matura) தேர்ச்சி பெற்றார்.


குடும்ப அரவணைப்பிலும் நண்பர்கள், சுற்றத்தார் அன்பின் பிணைப்பிலும் வளர்ந்த ரோசா இயல்பிலேயே பிறர் படும் துன்பங்களைக் கண்டு வேதனையுறும் கருணை உள்ளம் கொண்டவராக விளங்கினார். செல்வந்தர்களின் அடங்காத பேராசைச் சுரண்டல்களின் விளைவால் ஏழ்மையில் வாடும் மக்களின் இன்னல்களும்; இனப் பாகுபாட்டினால் சொல்லொணா துயரங்களுக்குட்படும் சக மனிதர்களின் தீராத வேதனைகளும் அவள் வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தன. அதன் அழியாத வடுக்கள், ரோசாவின் வாழ்நாள் முழுவதும் ஆறாமல், தன் இலட்சிய சமுதாயம் அமைத்திடும் போராட்டத்தில் அயராமல் பாடுபட அவரை இயக்கின.


தன் இளமைப் பருவம் முதற்கொண்டே ஜார் மன்னர் மூன்றாம் அலெக்சாண்டர் தலைமையிலான எதேச்சதிகார அரசின் அநீதிகளாலும் அடக்குமுறைகளாலும் யூத மக்கள் அடையும் கொடுமைகள், துன்பங்களைக் கண்ணுற்று வந்தார். போலிஷ் - யூத மக்களின் அரசியல், கலாச்சாரம், அறிவுசார், தேசிய சுதந்திரம் ஆகியன முற்றிலும் மறுக்கப்பட்டு, அவர்களின் உரிமையை, உடமையை, உயிரைப் பறிக்கும் கொடுங்கோன்மை ஜார் அரசாட்சிக்கு எதிராகத் ‌தன் தந்தை போலிஷ் தேசியவாதிகளோடு இணைந்து தீவிரமாகப் போராடி வந்ததும் ரோசாவின் மனதில் பெரும் கிளர்ச்சிக்கான - புரட்சிக்கான தீயைச் சிறிது சிறிதாக வளர்த்துக்கொண்டிருந்தது.


1863 ஆம் ஆண்டு போலந்தில் எழுந்த தேசிய அளவிலான கிளர்ச்சியில்  ரோசாவின் தந்தை எட்வர்ட், போலிஷ் தேசியவாதிகளுடன் பங்கெடுத்திருந்தார். மக்களின் அத் தன்னெழுச்சியைத் தன் கொடுங்கரங்களால் ஒடுக்கிய எதேச்சதிகார ஜார் அரசு, யூதர்கள் மீது கடுமையான விதிகளைப் பிறப்பித்தது. அதன்படி இரஷ்யர்கள் அல்லாத யூதர்கள் மற்றும் பிறர் தங்கள் மொழி, கலாச்சாரம், தன்னாட்சியைக் கைவிட்டு இரஷியர்களுடையதே தங்களுடைய அடையாளம் என்று எவ்வித மறுப்புக்கும் இடமின்றி ஏற்கும் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டனர் (Russification). அத்துடன் யூதர்களுக்கு எதிராக (Anti Semitism) அன்றளவில் நடைமுறையில் இருந்துவந்த கொடுமையான செயல்பாடுகளும் விரிவுபடுத்தித் தீவிரப்படுத்தப்பட்டது. அதன் நீட்சியாக 1881 ஆம் ஆண்டு வார்சாவில் யூதர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலை காரணமாக மாண்ட எண்ணற்ற உயிர்களைக் கண்ட போலந்து நாட்டின் குடிமகளும், யூத இனத்தில் பிறந்தவருமான சிறுமி ரோசாவின் மனம் தம் மக்கள் மீது திணிக்கப்பட்டிருக்கும் கொடுமை, அடக்குமுறை, பாகுபாடு ஆகியவற்றை உள்வாங்கி கொதித்தது.


தன் உயர்பள்ளிப் பருவத்திலேயே ஜார் மன்னருக்கு எதிரான போராட்டச் செயல்பாடுகளில் ஈடுபடும் குழுவில் தன்னை இணைத்துக் கொண்டார். அந்த காலகட்டத்தில் தன் தோழிக்கு எழுதிய கடிதத்தின் இலட்சிய வரிகள் தான் கட்டுரையின் முகப்பில் கொடுக்கப்பட்டுள்‌ள ரோசா காண விரும்பிய இலட்சிய சமூக அமைப்பை குறித்த தணியாத வேட்கை! ஜார் அரசுக்கு எதிராக 1886 ஆம் ஆண்டு மாபெரும் வேலை நிறுத்தத்தினை மேற்கொண்டு அரசால் கடுமையாக ஒடுக்கப்பட்ட போலிஷ் மார்க்சிஸ்ட் கட்சியில் தன் பள்ளிப்படிப்பை முடித்ததும் 1887 இல் இணைந்து செயல்படத் தொடங்கினார்.


ரோசாவின் பல்கலைக்கழக கல்வி, போலந்தில் மறுக்கப்பட்டதும் போலிஷ் புரட்சியாளர்கள் வழக்கமாக மேற்கொள்ளும் பயணத்தை 1889 ஆம் ஆண்டு மேற்கொண்டு சுவிட்சர்லாந்து நாட்டில் தஞ்சமடைந்தார். அங்கு கிழக்கு அய்ரோப்பிய நாடுகளில் தஞ்சமடைந்திருந்த புரட்சியாளர்களுடன் இணைந்து செயல்படத் தொடங்கினார். அவர்களுள் ஜெர்மனியிலிருந்து நாடுகடத்தப்பட்டு தஞ்சமடைந்திருந்த சோஷலிஸ்ட் கார்ல் லூபெர்க் (Karl Luberk) உடனான அறிமுகம் ஏற்பட்டது.


பார்வைக் குறைபாடு கொண்ட அவருக்கு உதவியாளராக இருந்த சமயத்தில் ஜெர்மன் சோஷலிசக் கட்சியைச் (German Socialist Party - SPD) சேர்ந்த எழுத்தாளர்களான கார்ல் காட்ஸ்கி (Karl Kautsky), லெய்ப்நெக்ட்  (Liebnect), ஆகஸ்ட் பேபல் (August Babel), எட்வர்ட் பெர்ன்ஸ்டெய்ன் (Edward Bernstein) ஆகியோருடன் அறிமுகம் கிடைத்தது. அந்நிலையில் தான் லித்துவேனியாவைச் சேர்ந்த யூத சோஷலிச சிந்தனையாளர் லியோ ஜோகிசஸ் (Leo Jogiches) உடனான நட்பும் அவருடன் இணைந்து பணியாற்றும் சூழலும் அமைந்தது. இருவரும் இணைந்து 1893 ஆம் ஆண்டு (Social Democracy of the Kingdom of Poland) என்ற கட்சியை நிறுவினர்.


உலகளாவிய மார்க்சிஸ்ட் கட்சியான அவர்கள் தங்கள் தலையாய நோக்கமாக, 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் போலந்து நாட்டைக் கைப்பற்றி பிரிவினை ஏற்படுத்தி ஆதிக்கம் செலுத்தி வரும் ஆஸ்திரியா, ஜெர்மனி, இரஷ்யா ஆகிய நாடுகளிடம் இருந்து விடுதலை அடைய மேற்கொள்ளப்படும் அனைத்து விதமான செயற்பாடுகளில் ஈடுபடுவதை விடுத்து - அதற்கு மாறாக, உலகளவில் உழைக்கும் மக்களின் ஒற்றுமையை ஏற்படுத்தவும், அதன் வாயிலாக பல அய்ரோப்பிய நாடுகளில் சோஷலிசக் கட்டமைப்பை ஏற்படுத்தி போலந்து நாட்டின் ஒளிமயமான எதிர்காலத்தை அமைக்க வேண்டும் என்பதைக் கொண்டிருந்தார்கள். விடுதலை அடைவதால் மட்டுமே, வரலாற்றின் நீடித்த பயணத்தில் தனது இலட்சிய சமூக அமைப்பை ஏற்படுத்தி "அனைவருக்கும் அனைத்தும் சமம்" என்ற நிலையை எட்டிவிட முடியாது என்பதை உணர்ந்த ரோசா, நிலையான, சீரிய சமூக மாற்றம் காணத் தேவையான தொலைநோக்குப் பார்வையை, சிந்தனையைக் கொண்டிருந்தார் என்பது அவரின் நோக்கத்தின் வழியே தெளிவாகப் புலனாகிறது.


உலகளவில் சோஷலிஸ்ட் அமைப்புகள், கட்சிகளின் செயற்பாடுகளை இணைக்கும் உலக சோஷலிஸ்ட் காங்கிரஸ் அமைப்பிற்கு SDKPகட்சியின் பிரதிநிதியாகவும், சுவிட்சர்லாந்து, பாரிஸ் நகரில் இயங்கி வந்த தங்கள் கட்சியின் கொள்கை விளக்கங்களை எடுத்துரைக்கும் பத்திரிகையின் ஆசிரியராகவும் விளங்கிய ரோசா முனைவர் பட்டம் பெறுவதற்கான ஆய்விலும் ஈடுபட்டிருந்தார். தனது ஆய்வுக்கட்டுரைக்காக 1885 ஆம் ஆண்டு பாரிஸ் நகருக்கு‌ சென்று அதற்கான பணிகளில் ஈடுபட்டுத் திரும்பிய ரோசா, அதன் பயனாக 1897 ஆம் ஆண்டு "போலந்தின் தொழிற்துறை வளர்ச்சி" என்ற தனது ஆய்வுக்கட்டுரைக்காக சூரிச் (Zurich) பல்கலைக்கழகத்தின் முனைவர் பட்டம் பெற்றார்.


ஜெர்மனியில் சோஷலிசப் புரட்சி ஏற்படக்கூடிய சூழலை உணர்ந்த ரோசா, அடுத்த ஆண்டே தனது பயணத்தை மேற்கொண்டார். ஜெர்மனியில் பத்திரிகைத் துறையில் பணியாற்றி வந்த ரோசா, அன்றைய காலகட்டத்தில் உலகளவில் மிகவும் சக்தி வாய்ந்த அமைப்பாக கருதப்பட்ட - ஜெர்மனியில் தீவிரமாக செயல்பட்டு வந்த தொழிலாளர் இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டு தீவிரமான செயற்பாட்டாளராக, கொள்கை உறுதிமிக்கவராக அறியப்பட்டார். சோஷலிசப் புரட்சியின் நோக்கத்தைத் தெளிவாக - தீவிரமாக உணர்ந்து செயல்பட்ட ரோசா, மார்க்சிய தத்துவத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருந்த எட்வர்ட் பெர்ன்ஸ்டெய்ன் போன்ற சோஷலிசவாதிகளை வன்மையாக எதிர்த்ததோடு; சோஷலிசப் புரட்சியாளர்கள் தங்கள் இலட்சிய நோக்கத்தை அடைவதை விடுத்து சீர்திருத்தம் செய்வதிலும், திருத்தம் செய்வதிலும் ஈடுபட்டு சோஷலிச இயக்கத்திற்கு எதிரான செயல்பாடுகளில் ஈடுபடுகிறார்கள் என்ற கடுமையான விமர்சனத்தையும் முன்வைத்தார். அது தொடர்பான அவரது கருத்துகள் அடங்கிய கட்டுரைத் தொகுப்பை பின்னர் "சமூக சீர்த்திருத்தமா? அல்லது சமூகப் புரட்சியா?" என்ற தலைப்பில் வெளியிடவும் செய்தார். தனது தீவிரமான உளமார்ந்த செயற்பாடுகளால் சில ஆண்டுகளிலேயை SPD கட்சியின் முக்கியத் தலைவர்களுள் ஒருவராக உயர்ந்த ரோசா, தனது SDKP கட்சியின் தலைமை ஆலோசகராகவும் தொடர்ந்து விளங்கி லித்துவேனியாவில் ஒத்தக்கருத்துடன் செயல்பட்டு வந்த கட்சியுடன் இணைந்து SDKPiL என்பதாக விரிவடையச் செய்தார்.இளம் வயது முதலாக தன் மனதில் உயிர்ப்புடன் இருந்த புரட்சி விதை 1905 ஆம் ஆண்டு இரஷ்ய மண்ணில் முளைவிடத் தொடங்கியது. அதன் வலிமையான கிளைகள் போலந்திலும் விரவிப் பரவின. தான் விரும்பிய இலட்சிய சமுதாயம் அமைய இன்றியமையாத வண்ணம் தேவை என பேசி, எழுதி ஆதரித்து வந்த புரட்சியின் அவசியத்தை ஜெர்மனியிலும் தொடர்ந்து SDP கட்சியின் பத்திரிகையில் தன் எழுத்துகளின் வழியாக ஊட்டி வந்த ரோசா "இரஷ்யப் புரட்சி அற்புதமானது. மற்ற அனைத்தும் முட்டாள்தனமானது" என்ற பொருள்படும்படியாக (The revolution is splendid. All else is bilge) தன் கருத்தை தெரிவித்தார். அவ்வாறான கருத்துச் சீற்றத்தின் தீப்பொறி ஜெர்மன் கெய்சரைச் சுட்டதன் விளைவாக 1904 இல் மூன்று மாதச் சிறைத் தண்டனையையும் பெற்றார். எனினும் இரஷ்யாவில் கிளர்ந்திருக்கக்கூடிய அதே புரட்சி வழியை ஜெர்மன் தொழிலாளர் வர்க்கமும் கைக்கொள்ள அறிவுறுத்தியதோடு அதன் முக்கியப் பகுதியாக வெகுஜன வேலை நிறுத்தத்தை மேற்கொள்ள வலியுறுத்திய ரோசா, அரசியல் போராட்டங்களும்  பொருளாதார போராட்டங்களும் எவ்வாறு ஒன்றோடொன்று பிணைந்து சார்ந்திருக்கின்றன என்பதையும் விளக்கினார். “பொருளாதாரப் போராட்டம் ஓர் அரசியல் மையத்திலிருந்து மற்றொன்றுக்காக மாறிச் செல்லும் கருவியாக இருக்கிறது. அரசியல் போராட்டத்தின் துவக்கமும், வெற்றியும் பொருளாதாரப் போராட்டங்களுக்கு உந்து சக்தியாக விளங்குகின்றன என (The Mass Strike, the Party, and the Trade Unions 1906) என்ற தன் கட்டுரையில் எடுத்துரைக்கிறார். வீறு பெற்றிருந்த புரட்சியில் பங்கெடுக்க அவ்வாண்டு வார்சா சென்ற ரோசா தன் பழைய தோழர்களுடனும் லியோ ஜோகிசஸ் உடனும் சேர்ந்து செயலாற்றி, ஜார் அரசால் கைது செய்யப்பட்டு, வார்சா கோட்டையில் அடைக்கப்பட்டார்.  இரத்தப்போக்கு, கல்லீரல், வயிறு தொடர்பான உடல்நலக் குறைவின் காரணமாகவும்  ஜெர்மனியில் முக்கிய ஆளுமையாக விளங்கிய காரணத்தாலும் சில மாதங்களில் விடுவிக்கப்பட்டு பெர்லின் செல்ல அனுமதிக்கப்பட்டார்.


ஜெர்மனி வந்த ரோசா 1906 முதல் 1914 வரை அங்கேயே வாழ்ந்து SDP கட்சியின் பள்ளியில் ஆசிரியையாகத் தன் பணியைத் தொடர்ந்தார். கடினமான பொருளாதார விஷயங்களைக்கூட எளிதாக, எடுத்துக்காட்டுகளுடன் நகைச்சுவையாக விளக்குவதில் வல்லவராக விளங்கினார். அத்துடன் பத்திரிகைகளுக்கு எழுதுவதிலும், மார்க்சியப் படைப்புகளை இயற்றுவதிலும், SDP கட்சியின் முக்கியச் செயற்பாடுகளிலும், மேலும் போலிஷ் அரசியல் விவகாரங்களிலும் தொடர்ந்து தன் கவனத்தைச் செலுத்தி வந்த பேராளுமை மிக்க பெண்மணியாக விளங்கினார்.


1913 ஆம் ஆண்டு கார்ல் மார்க்ஸ் அவர்களின் மூலதனம் பாகம் 2இல் பேசப்படும் பொருளாதாரச் சிக்கல் ஒன்றைக் குறித்து The Accumulation of Capital : A Contribution to an Economic Explanation of Imperialism என்ற தன் புகழ்பெற்ற படைப்பில் முதலாளித்துவம் குறித்த தன் கடுமையான விமர்சனங்களை முன்வைக்கிறார். "முதலாளித்துவக் கொள்கையானது தன் இருப்பை உறுதிப்படுத்திக்கொள்ள முதலாளித்துவப் பொருளாதாரக் கொள்கையைப் பின்பற்றாத நாடுகளிலும் நுழைந்து அதுவும் தீர்ந்த பின்னர் தானாக நிலைகுலைந்து வீழ்ச்சியடையும்" என்று கூறி "Capitalism is a creeping cancer. Strangling vine" என அதன் தீவிரத்தை எடுத்துரைக்கிறார். விமர்சனத்துக்கு அஞ்சாத அவர் தன் நூலுக்கு மறுப்புரைத்து வெளிவந்த நூலுக்கும் மறுப்பு தெரிவித்து 1915 இல் 'Anti - Critique' என்ற நூலை வெளியிட்டார்.


அக்காலக்கட்டத்தில் ஏகாதிபத்தியத்தின் தீவிரத்தை குறித்தும், மூளவிருக்கும் உலகப் பெரும் போர் குறித்தும் பெரிதும் வருந்திய ரோசா, உலகளவிலான இந்நெருக்கடி நிலை சோஷலிச (சமதர்ம) உலகையோ அல்லது காட்டுமிராண்டி உலகை படைப்பதிலோ தான் முற்றுப்பெறும் என்று பெரிதும் நம்பியதோடு, 1907 ஆம் ஆண்டு ஸ்டட்கார்ட் நகரில் நிகழ்ந்த உலக சோஷலிஸ்ட் காங்கிரஸ் அமைப்பில் "ஸ்டட்கார்ட் தீர்மானம்" சமர்ப்பித்த அய்ரோப்பிய சோஷலிசத் தலைவர்களுள் ஒருவராக விளங்கினார்.


 அவர்கள் நிகழவிருக்கும் முதல் உலகப்போரை தடுத்து நிறுத்தும் பிரச்சாரத்தில் ஈடுபடுவதோடு வளர்ந்து வரும் முதலாளித்துவம் மற்றும் எதேச்சதிகாரத்தின் வீழ்ச்சியைத் துரிதப்படுத்தும் செயற்பாடுகளில் ஈடுபடவும் உறுதியெடுத்தனர். முதல் உலகப்போர் நிகழாமல் இருப்பதற்கான நடவடிக்கையாக ஜெர்மன் தொழிலாளர்களிடம் ரோசா நிகழ்த்திய உரைவீச்சு பெருமளவில் பேசப்பட்டது. உலகப் போர் நிகழும் பட்சத்தில் ஜெர்மன் வீரர்கள் தங்கள் பிரெஞ்சு, பிரிட்டிஷ் சகோதரர்களை எதிர்த்து சுடக்கூடாது என பேசியது அவருக்கு ஓராண்டு சிறைத்தண்டனையை பெற்றுத் தந்தது. அவ் வழக்கு விசாரணையின்போது‌ அரசுத்தரப்பு வழக்குரைஞரின் கேள்விக்கு "அய்யா, நான் நம்புகிறேன், நீங்கள் ஓடிவிடுவீர்கள்; ஆனால், ஒரு சமூக ஜனநாயகவாதி நிச்சயமாக இல்லை. அவர் தனது கடமையை உணர்ந்திருக்கிறார்; உங்கள் தீர்ப்புகளைப் பார்த்துச் சிரிக்கிறார். இப்போது நீங்கள் எனக்கு தண்டனை அளியுங்கள்" என ரோசா அளித்த பதில் ஜெர்மனி மட்டுமல்லாது உலகளவில் இடதுசாரிகள் மத்தியில் அவரை ஒரு வீராங்கனையாக உயர்த்தியது. “உங்கள் விசாரணை நாடகத்தை சீக்கிரம் முடித்துக் கொண்டு, அரசாங்கம் விரும்பும் அளவிலான அதிகபட்ச தண்டனையை எனக்குத் தாருங்கள்” என்று சொன்ன தந்தை பெரியார் உங்கள் நினைவுக்கு வருகிறாரா? உலகெங்கும் புரட்சியாளர்கள் அப்படித்தான் இருப்பார்கள்!


(தொடரும்)


No comments:

Post a Comment