ஆசிரியர் விடையளிக்கிறார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 18, 2020

ஆசிரியர் விடையளிக்கிறார்

சிறப்புக் கேள்வி



கடலூர் இள.புகழேந்தி,


தேர்தல் பணிக்குழு செயலாளர்,


திராவிட முன்னேற்றக் கழகம்


கேள்வி 1: கங்கையில் ஒரு புறம் பிணங்களை, பூஜை என்ற பெயரில் அழுகும் பொருள்களை ஏராளமாக கொட்டிக் கொண்டேயிருப்பதை ஊக்கப்படுத்தி விட்டு, இன்னொருபுறம் கங்கையைத் தூய்மைப்படுத்த ரூ.3000 கோடி என்று நீரில் கரைப்பதன் அர்த்தம் என்ன? யாரை ஏமாற்ற? தொடர் கொள்ளைக்குச் சிவன் அனுமதியா?


பதில் : கேள்விக்கு நன்றி சகோதரரே!


'புனித கங்கை' (Holy Ganges) என்றே பெயர்!  அதையே புனிதப்படுத்த வேண்டியுள்ளது என்றால் - புரட்டு துவக்கத்திலேயே உள்ளதல்லவா?


3000 கோடி 'ஸ்வாகா'! கரோனா   தான் கங்கையை இப்போது தூய்மைப்படுத்தியுள்ளதாம்! என்ன வேடிக்கை பாருங்கள்.


கேள்வி 2: “100 நாட்களுக்குள் கருப்புப் பணத்தை வெளிக் கொண்டுவராவிட்டால், என்னை நடுத்தெருவில் தூக்கில் போடுங்கள்” என்று முழங்கிய மோடி, மக்களை தெரிந்தே ஏமாற்றுகிறாரா? தெரியாமல் உளறுகிறாரா?


பதில் : இப்படி வாய் நீளம் - வக்கணை பேசியள்ளவர்களுக்கு வரலாறு எங்கே இடமளித்திருக்கிறது என்பது தெரிந்த செய்திதானே!


'உண்மை ஒரு நாள் வெளியாகும் - அதில்


உள்ளங்களெல்லாம் தெளிவாகும்


பொறுமை ஒரு நாள் புலியாகும் - அதற்கு


பொய்யும் புரட்டும் பலியாகும்‘ என்ற பட்டுக்கோட்டையின் வரிகளைத்தான்                       நினைவூட்டிக் கொள்ள வேண்டும்.



கேள்வி: ‘’கடவுள் ராமர் இந்தியரல்லர்; அவர் நேபாளி’’ என நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி கூறியிருப்பது எதனைக் காட்டுகிறது? 


- நெய்வேலி  க.தியாகராசன், கொரநாட்டுக் கருப்பூர்.


பதில்: இராமாயணங்கள் 300 உள்ளன என்று சிகாகோ பல்கலைக் கழக (மறைந்த) ஆய்வுப் பேராசிரியர் ஏ.கே.இராமானுஜன் ஓர் ஆய்வுக் கட்டுரையே வெளியிட்டுள்ளார்.


இராமன் என்பது ஒரு புராணக் கற்பனை - வரலாறு அல்ல. எனவேதான் அவர் பிறப்பு எங்கே என்பதே இப்போது கேள்விக் குறியாகிறது. நேபாளம் - உலகின் ஒரே இந்து நாடாக இருந்து, இப்போது ஜனநாயக நாடாக மாறியுள்ள நிலையில், இப்படி ஒரு கருத்து அதன் பிரதமரிடம் இருந்து வெளிவந்துள்ளது. இராமனுக்கு அயோத்திதான் பிறப்பிடம்  என்று பாபர் மசூதியை இடித்து, வழக்கு நடத்தி, புதிதாக இராமனுக்குக் கோயில் கட்ட முயற்சிக்கும் இராம பக்தர்கள்தான் பதில் கூறவோ, தீர்வு காணவோ முன்வரவேண்டும்.


'ராமன் எத்தனை இராமனடி' என்ற பாட்டு வரிகள்தான் நினைவுக்கு வருகின்றன!


கேள்வி: காவல்துறையில் மனிதநேயம் வளர என்ன செய்ய வேண்டும்?


- ஆ.கருணாகரன், குன்னூர்.


பதில்: காவல்துறையில் சேர்வதற்கு முதல் தகுதியே மனித நேயம் (Humanism)தான். மனிதநேயம் பற்றி நமது அரசியல் சட்டம் வலியுறுத்தும் அடிப்படைக் கடமைகளை ஒவ்வொரு குடிமகனுக்கும் சொல்லி பரப்ப, அரசு முன்வராவிட்டாலும், குறைந்தபட்சம் காவல்துறையில் சேர்க்கும் முன்பாகவாவது பயிற்சி கொடுத்து - புரிய வைத்து - பிறகு அதில் சேர்க்க வேண்டும். ஆள் உயரத்தைவிட அந்த மனித நேய உயரம் அவசியம் போதுமான அளவில் உள்ளதா என்பதை ஆராயட்டும்.


கேள்வி:‘கருப்பென்றால் பகுத்தறிவாம்-மூடநம்பிக்கை!” என்றொரு கவிதையை(!) தினமணி ஆசிரியர் (தினமணி - தமிழ்மணி 19.4.2020) மிகவும் மெச்சிப் பாராட்டியுள்ளது எதைக் காட்டுகிறது?                - தி.அன்பழகன், திருச்சிராப்பள்ளி


பதில்: அதன்மூலம் அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு தன்னையும், தனது ஏட்டினையும் நாட்டிற்கு அடையாளம் காட்டியமைக்கு கருப்பினத்தினர் - அசுரர் கூட்டம் நன்றி செலுத்துமாக!


கேள்வி: மக்களவையில் 190, மாநிலங்களவையில் 89, கவர்னர் 30 பேரில் 13, உச்சநீதிமன்றத்தில் 16 நீதிபதிகளுக்கு 9, உயர்நீதிமன்றங்களில் 330 நீதிபதிகளுக்கு 166, தூதுவர்கள் 14 பேரில் 58, துணைவேந்தர்கள் 98-இல் 50, மாவட்ட நீதிபதிகள் 438-இல் 250, அய்.ஏ.எஸ்.கள் 3300-இல் 2376 என பார்ப்பனர் எண்ணிக்கை இருக்கிறதே.. (தகவல்: தி மாடர்ன் ரேசனலிஸ்ட் ஏப்ரல் 2020 இதழ்). இது பற்றி?


- க.பழநிசாமி, தெ.புதுப்பட்டி


பதில்: அதனால்தான் ஓயாத, ஒழியாத சமூக நீதிப் போராட்டம் அன்று முதல் இன்று வரை ஒரு தொடர் அறப்போராக நடைபெற்று வருகிறது.


கேள்வி: உத்தரப் பிரதேசத்தில் ரவுடியைப் பிடிக்கச் சென்ற போது 8 போலீசார் படுகொலை செய்யப்பட்ட மறு நாளே, அதனைக் கண்டித்து தலையங்கம் எழுதிய தினமணி நாளிதழ், சாத்தான்குளத்தில் போலீஸ் தாக்கியதில் வியாபாரிகள் தந்தை, மகன் உயிரிழந்து 20 நாள்கள் கடந்த நிலையில், இது பற்றி தலையங்கம் எழுதாமல் இருப்பது தான் நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வை , யாருக்கும் அஞ்சாத நெறியா?        - பா. ரவிக்குமார், பெருவிடைமருதூர். 


பதில்: அவர்களது அந்த நெறி எல்லாம் ஆர்.எஸ்.எஸ்.சின் ஏடாக அந்நாளேடு வண்ணந்தீட்டி - காவி ஏடாக மலருவதற்கு முன், திராவிட ஆசிரியர்கள் இருந்தபோது ஒரு வேளை இருந்திருக்கலாம். நெருக்கடி நிலை காலத்திலும், இப்போது கரோனா தொற்று மதவாதித்திற்குள் சிக்கிக் கொண்ட பிறகு வெறும் 'பகடி'தான்!


கேள்வி: ஜாதி இல்லை என்று சொன்ன பெரியார், ஜாதிச் சங்க மாநாடுகளில் கலந்து கொண்டு மாநாட்டை துவக்கிவைத்துப் பேசினார் என்று ஒரு புத்தகக் குறிப்பில் உள்ளதே? என்ன காரணம்?                 - குழ.செல்வராசு, உலகம்காத்தான்


பதில்: அங்கும் சென்று, “ஜாதிப் பெருமை பேசுவதை கைவிடுங்கள். இழந்த வகுப்புரிமையைப் பெறுங்கள்” என்பது பற்றிப் பேசி, அவர்களைச் சிந்திக்க வைத்து வரலாறு படைத்தார்!


கேள்வி: தி.மு.க ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ஒழிக்கும் நிலை வருமா? வாய்ப்பு உள்ளதா?                 - ஆறு. கலைச்செல்வன், மஞ்சக்கொல்லை, சிதம்பரம் 


பதில்: தி.மு.க. ஆட்சி வருவதும் நிச்சயம்; நீட் தேர்வு அதனால் ஒழிக்கப்படுவதும் நிச்சயம் - காலம் அதனை வேகமாக விரைவுபடுத்திக் கொண்டுள்ளது.


கேள்வி:அரசுப் பள்ளிகளில் படித்தவர்களுக்கு மட்டுமே இனி அரசு வேலை வழங்கப்படும் என்று ஜார்கண்ட் மாநிலத்தில் பள்ளிக் கல்வித் துறை நடைமுறைப்படுத்த அறிக்கை வெளியிட்டுள்ளார்கள். இதேபோல தமிழகத்திலும் நடைமுறைப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளதா? கழகத்தின் சார்பில் முறையிடப்படுமா?


- பொன்.வெங்கடேசன், வடமணப்பாக்கம்


பதில்: அங்கே உள்ள அரசு - மாநில அரசு - முதுகெலும்புள்ள ஒரு அரசு! இங்கே அந்த நிலை இல்லை என்பதே வேதனைக்கும், வெட்கத்திற்கும் உரியது!


கேள்வி: நடமாடும் பல்கலைக்கழகம் நாவலர் இரா.நெடுஞ்செழியன் என்றவுடன் தங்களின் மனதில் ஓடும் பசுமையான சுவையான சம்பவத்தை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்களேன்?             - மன்னை சித்து , மன்னார்குடி - 1 


பதில்: அ.தி.மு.க.வில் (அரசியல் காரணமாக) இறுதிக் காலத்தில் நாவலர் இருந்த நிலையிலும்கூட, பகுத்தறிவாளர் கழகக் கூட்டங்களுக்குத் தான் அதிகம் வந்து கலந்து கொண்டு, மணிக் கணக்கில் பேசினார். அப்போது சென்னைக்கு ரயிலில் நாங்கள் திரும்பும் போது, “என்னய்யா, இந்தக் கூட்டங்களில் கலந்து கூடும் மக்களின் உற்சாகத்தால் பேசி மகிழ்வது போன்ற ஒரு நிலையோ, மன நிறைவோ, அரசியல் கட்சிக் கூட்டங்களில் ஏற்படுவதில்லை. இம்மாதிரி கூட்டங்கள் நிறைய ஏற்பாடு செய்யுங்கள்; பெரியார் தான் இறுதியில் நிற்பார்!” என்று மகிழ்வுடன் சொன்னதை எண்ணி எண்ணி இன்றும் மகிழ்கிறோம்.


No comments:

Post a Comment