ஆக்கம்: சுப.முருகானந்தம், மதுரை
- தியாக உணர்வு இல்லறத்தில் முளைவிட்டுத் தொண்டறத்தில் கனியக்கூடும். 'தனக்கென வாழாப் பிறர்க்குரியாளராக வாழ்வது, முதலில், அது, குடும்பத்திலிருந்தே தொடங்குகிறது.
வித்தாகி ஈகம் விளைக்கின்ற இல்லறத்தின்
சத்தாகும் தொண்டறந் தான்.
- நம் உணவின் மற்ற பகுதிகளைக் குறைத்து, பழங்களை ஏராளம் உண்ணப் பழகுங்கள். இந்த உணவுச் சத்தை, ஊட்டச் சத்தாக்கிக் கொள்ளுங்கள். கனியிருக்க காய் ஏன்? என்பதைச் சற்று மாற்றி, கனி (பழம்) இருக்க நோய் ஏன்? என்று இனி கேளுங்கள்.
நோயினை வெல்லவும் நோகாமல் சொல்லவும்
காயகற்றித் தேர்வாய் கனி.
- வேளாண்மைக்கு மண்ணைக் கிளறினால் நல்லது. ஆனால், ஆறிட வேண்டிய புண்ணை , ஒருவர் பின் ஒருவராக, வந்துவந்து "எப்படி இறந்தார்? அவர் இல்லாமல் உங்களால் எப்படி இருக்க முடியும் இனி? அவரில்லாமல் எத்தனை காலம்தான் வாழ்வீர்கள் என்பது எங்களுக்கே தெரியவில்லை!" என்று கிளறி, "மங்களம் பாடுவது' நல்லதா?
மண்கிளற வோங்கும் மரமும் மனக்காயப்
புண்கிளறக் கொள்வ தெது.
- "இது விரைவில் ஓடிவிடும், நிலைக்காது; நீடிக்காது; பயங்கர கனவுகள் தூக்கத்தில் உங்களுக்கு வருவது போல. அதுபோல் தான், இந்த அதிர்ச்சியும் எனது வாழ்வில்" என்று கருதி, எந்த துயரத்தையும், துன்பத்தையும், சோகத்தையும் எதிர்கொள்ளுங்கள்.
வருத்துந் துயரும் மறையுமோர் நாளில்
வெருட்டுங் கனவாய் வெளுத்து.
49."நிறைவு", "செம்மை" (Perfection) என்பன பற்றி ஆழமாகச் சிந்தித்தால், இது உண்மையில் ஒரு பொருளற்ற ஆசையேயாகும். காரணம், செம்மை, நிறைவு என்பதே கூட ஓர் ஒப்பீட்டுக் கருத்து அல்லது மதிப்பீடுதான்!
செம்பிலாப் பொன்னணி செய்தவரில்லைகாண்
செம்மையின் தன்மை யறி.
50.வாழ்வின், எந்த மோசமான அனுபவமானாலும், அதிலிருந்து, பாடம் பெற்று வாழ்வதே பகுத்தறிவுவாதியான மனிதனின், சிறப்பான கடமையாகும்.
வாட்டுந் துயரையும் மாற்றி வழியெனக்
காட்ட(ல்) அறிவார் கடன்.
No comments:
Post a Comment