பல்கலைக்கழக வேந்தர் கி.வீரமணி அறிவிப்பு
பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில்
100 விழுக்காடு (டியூசன் பீஸ் மட்டும்) கல்விக் கட்டணச் சலுகையைப் பல்கலைக் கழக வேந்தர் கி.வீரமணி அறிவித்துள்ளார்.
பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் (நிகர் நிலைப் பல்கலைக்கழகம்) வேந்தர் டாக்டர் கி.வீரமணி அவர்கள் காணொலிக் காட்சி மூலம் கல்விப் புரவலர்களிடையே உரையாற்றும்போது, இந்த பல்கலைக்கழகம் அளித்துவரும் பல்வேறு வகை கல்வி உதவித் தொகைகளைக் குறிப்பிட்டார்.
குறிப்பாக அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார் முதல் தலைமுறை பட்டதாரிகள் கல்வி உதவித் தொகை, அன்னை ஈ.வெ.ரா.நாகம்மையார் மகளிருக்கான கல்வி உதவித்தொகை, விளையாட்டு வீரர்களுக்கான கல்வி உதவித் தொகை போன்று பல்வேறு வகை கல்வி உதவித்தொகைகளை இந்தப் பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கி வருகிறது.
அத்துடன் நேற்று (9.8.2020) புதியதாக
பெரியார் கல்வி கரோனா உதவித் தொகையை அறிவித்தார்.
கரோனா (கோவிட் -19) உலக அளவில் பெரும் பாதிப்பினை ஏற்படுத்தியதால், பல குடும்பங்கள் வேலைவாய்ப்பினை இழந்து நிதி நெருக்கடிக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். பல குடும்பங்களின் உறுப்பினர்கள் கரோனா தொற்று நோயினால் பாதிக்கப்பட்டும், பலர் தங்களது குடும்ப உறுப்பினர்களை இழந்தும், இதனால் பல குடும்பங்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் கரோனா நோயினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், களப்பணியில் ஈடுபடும் துப்புரவுப் பணியாளர்கள், சுகாதாரத்துறை ஊழியர்கள் ஆகியோரும் இதில் அடங்குவர். இதனைக் கருத்தில் கொண்டு கரோனா நோயினால் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பாதிப்புக்குள்ளாகி உள்ள குடும்பங்களிலிருந்து வரும் பிள்ளைகளுக்கு, இந்த ஆண்டு பொறியியல் படிப்பில் சேரும் மாணவர்களுக்குப்
'பெரியார் கல்வி கரோனா உதவித் தொகை' என்ற புதிய கல்வித் தொகை ஒன்றை அறிவித்து, இதன் மூலம் இந்த ஆண்டு 2020-21 கல்வி ஆண்டுச் சேர்க்கையின் கல்விக் கட்டணத்தில் 100 விழுக்காடு (டியூசன் பீஸ் மட்டும்) விலக்கு அளிக்கப்படுகிறது என்று பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் கி.வீரமணி அவர்கள் அறிவித்தார்.
இந்தப் புதிய பெரியார் கல்வி காரோனா உதவித் தொகையினால் நிறுவனத்திற்கு பெரும் நிதிச்சுமை ஏற்படும் என்றாலும், மக்களின் நிதி நெருக்கடிக்கு உதவிடும் வகையிலும் மாணவர்கள் தங்கள்
கல்வியினைத் தொடரும் வகையில் இந்தப் புதிய பெரியார் கல்வி கரோனா உதவித்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment