ரஷ்யாவில் வோல்கா ஆற்றில் மூழ்கிய மருத்துவ மாணவர்களுக்கு இரங்கல்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, August 10, 2020

ரஷ்யாவில் வோல்கா ஆற்றில் மூழ்கிய மருத்துவ மாணவர்களுக்கு இரங்கல்!

ரஷ்யாவின் வோல்காகிராட் மாநிலத்தில் உள்ள மருத்துவப் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படித்து வந்த தமிழகத்தைச் சேர்ந்த 4 மாணவர்கள் அங்குள்ள வோல்கா ஆற்றில் குளிக்கச் சென்றபோது நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற செய்தியறிந்து வேதனைப்படுகிறோம்.    வோல்காகிராட் மாநில மருத்துவப் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படித்து வந்த கடலூர் மாவட்டம் திட்டக்குடியைச் சேர்ந்த ராமு விக்னேஷ், சென்னை பெரம்பூரைச் சேர்ந்த ஸ்டீபன், திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தைச் சேர்ந்த முகமது ஆஷிக், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மனோஜ் ஆனந்த் ஆகிய நால்வரும் வோல்கா நதியில் குளிக்கச் சென்ற போது, ஒருவர் அடித்துச் செல்லப்பட, அவரைக் காக்க அடுத்தவர், அடுத்தவர் என்று நால்வரும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளது பெரும் சோகத்தைத் தந்துள்ளது.


மருத்துவக் கனவோடு சென்ற மாணவர்கள், மருத்துவர்களாகத் திரும்பிவருவார்கள் என்ற பெற்றோரின் ஆசையில் பேரிடியாக இச் செய்தி அமைந்துவிட்டது. மறைந்த மாணவர்களுக்கு நமது இரங்கலையும், அவர்களின் குடும்பத்திற்கு ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம். இறந்த மாணவர்களின் உடலைத் தாயகத்திற்குக் கொண்டு வர வெளியுறவுத் துறை மூலம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு முதலைமைச்சரைக் கேட்டுக் கொள்கிறோம்.


சுற்றுலா செல்லுமிடங்களிலும், கடல், ஆறு, குளங்களில் குளிக்கச் செல்லும்போதும் இளமைக்குரிய உற்சாகம் இருக்கும் என்றாலும், எச்சரிக்கையும், நம்முடைய எதிர்காலம், குடும்பத்தின் எதிர்பார்ப்பு, நம் கடமை ஆகியனவும் நம் மாணவர்களின் கண் முன்னால் வரவேண்டும். இழக்கக் கூடாத மாணவச் செல்வங்களை இப்படியான விபத்துகளில் இழப்பது, அந்தக் குடும்பங்களுக்கு மட்டுமல்ல, மனித சமூகத்திற்கே இழப்பாகும்.


 


கி. வீரமணி


தலைவர்


திராவிடர் கழகம்


சென்னை


10.8.2020


 


No comments:

Post a Comment