மேனாள் உச்சநீதிமன்ற நீதிபதியும், சிறந்த தமிழ்ப் புரவலரும், திராவிடர் இயக்கப் பற்றாளருமான டாக்டர் ஜஸ்டீஸ் ஏ.ஆர்.லட்சுமணன் (வயது 79) அவர்கள் உடல்நலக் குறைவினால் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று (27.8.2020) காலை 6 மணிக்கு காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைகிறோம்.
உழைப்பால் உயர்ந்த மாமனிதர் மாண்பமை ஏ.ஆர்.லட்சுமணன் அவர்கள். எவரிடத்திலும் பண்புடன் பழகும் பான்மையர். நம்மிடத்திலும், நமது நிறுவனங்களின்மீதும் அன்பும், மரியாதையும் எப்போதும் வைத்திருந்தவர்.
மணவழகர் மன்றத்தின் தலைவராக இருந்து அவர் ஆற்றிய இலக்கியப் பணி என்றென்றும் வரலாற்றில் நிலைத்து நிற்கும். அவர் தந்த, உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் வரலாற்றுப் பெருமைக் குரியவை.
இரண்டு நாள்களுக்கு முன்புதான் அவரது வாழ்விணையர் திருமதி மீனாட்சி ஆச்சி அவர்கள் காரைக்குடியில் காலமானார்.
இவரது மறைவு அக்குடும்பத்திற்கு மட்டுமல்ல, தமிழ்கூறும் நல்லுலகத்திற்கே ஈடுசெய்ய முடியாத ஒரு மாபெரும் இழப்பாகும்.
அவரது மறைவால் வாடும் அவரது மகன் மூத்த வழக்குரைஞர் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் உள்பட, அத்துணை குடும்ப உறுப்பினர் களுக்கும் நமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு,
மறைந்த நீதியரசருக்கு நமது வீரவணக்கத்தைச் செலுத்துகின்றோம்!
- கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்
சென்னை
27.8.2020
குறிப்பு: தேவகோட்டையில் இன்று (27.8.2020) முற்பகல் 11.30 மணிக்கு இறுதி நிகழ்வுகள் நடைபெற்றது.
No comments:
Post a Comment