தொண்டறச் செம்மல்  டாக்டர் ஏ.சி.ஜான்சன் அவர்களுக்கு  நமது வீரவணக்கம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, August 18, 2020

தொண்டறச் செம்மல்  டாக்டர் ஏ.சி.ஜான்சன் அவர்களுக்கு  நமது வீரவணக்கம்!


தந்தை பெரியாரின் நலத்தைப் பாதுகாத்த முக்கிய டாக்டர்களில் ஒருவரான டாக்டர் ஏ.சி.ஜான்சன் அவர்கள் தமது 90 ஆவது வயதில், உடல்நலக் குறைவினால், நேற்று (17.8.2020) விடியற்காலை 2 மணியளவில் (அமெரிக்க நேரப்படி) அமெரிக்காவில் உள்ள துல்சா நகரில் (ஒக்லகாமா மாநிலம்) கால மானார் என்ற செய்தி நமக்கு மிகுந்த துன்பத்தையும், துயரத்தையும் தரக்கூடிய ஒரு செய்தியாகும்.


தந்தை பெரியார் அவர்கள் வேலூர் சி.எம்.சி. மருத்துவமனைக்குச் செல்லும்போதெல்லாம், அவ ருக்கு சிகிச்சை அளித்த டாக்டர் எச்.எஸ்.பட் அவர் களுடன் கூடவே இருந்து, ஒரு தந்தையைக் காக்கக் கடமையாற்றிய மகன்போல இருந்து தொண்டு செய்ததன்மூலம், தமிழ்நாட்டு பெரியார் குடும்பங்களின் மரியாதையையும், பேரன்பையும், பெருமதிப்பினையும் பெற்றவர் நமது டாக்டர் ஜான்சன் அவர்கள்.


எளிமை, இனிமை, எடுத்துக்காட்டான உயர்பண்பு நலன்கள் - தொண்டறம், எப்போதும் எவரிடத்திலும் கருணை பொழியும், உதவிடத் துடித்திடும் ஒப்புரவு - இவற்றின் மொத்தக் கூட்டல்தான் மனிதநேயரான டாக்டர் ஜான்சன் அவர்கள்.


தந்தை பெரியார் அவர்களிடத்திலும், அறிஞர் அண்ணா அவர்களிடத்திலும், கலைஞர் அவர்களி டத்திலும், நம்மிடமும் மிகுந்த அன்பு கொண்டவர். அவர்களும், இவரை நேசித்தவர்கள்.


தந்தை பெரியார் அவர்களை நல்ல கோணங்களில் படம் எடுப்பதும், நம் போன்றவர்களிடமும், நமது  கொள்கைக் குடும்ப உறுப்பினர்களிடமும் உடன்பிறப் பாகவே கருதிப் பழகுவதும் அவரது வாடிக்கையாகும்.


அவரது 90 ஆம் ஆண்டு பிறந்த நாளில், அவருக்குக் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தொலைபேசியில் அழைத்து வாழ்த்துக் கூறியதுதான் இறுதித் தொடர்பு.


எது தவிர்க்க முடியாததோ, அதனை ஏற்று அமைதி அடைவதுதானே ஒரே வழி!


அதன்படி நாமும், நமது துயரத்தை அடக்கிக் கொண்டு, அவருக்கு நமது இறுதி மரியாதையை, வீர வணக்கத்தைச் செலுத்துகிறோம்.


அவரது மறைவால் நேரடி இழப்புக்கு ஆளாகி யுள்ள அவரது துணைவியார் டாக்டர் சத்தியபாமா ஜான்சன், அவரது மகள், மகன்கள், அவரது சகோ தரர்கள், சகோதரிகளான வசந்தா, பியூலா, அவரது குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் நமது ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம்!


தொண்டறத்தால் உயர்ந்த அந்த மாமனிதரான டாக்டர் ஜான்சன் அவர்கள் மறைந்தாலும், எப் போதும் நம் நெஞ்சங்களிலே நிறைந்தவராக வாழ்வார் என்பது உறுதி!


 


கி.வீரமணி


தலைவர்


திராவிடர் கழகம்


சென்னை


18.8.2020


 


No comments:

Post a Comment