ரூ. 80 ஆயிரம் ‘கரோனா’ நிவாரண நிதி வழங்கிய பிச்சைக்காரர் விருதுக்குத் தேர்வு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, August 16, 2020

ரூ. 80 ஆயிரம் ‘கரோனா’ நிவாரண நிதி வழங்கிய பிச்சைக்காரர் விருதுக்குத் தேர்வு


மதுரை,ஆக.16, கரோனா நிவாரண நிதியாக  மதுரை மாவட்ட ஆட்சியரி டம் பிச்சைக்காரர் ஒருவர் ரூ.80 ஆயிரம் அளித்துள்ளார். மதுரையில் தான் பிச்சையாக பெற்ற பணத்தை சிறுகச் சிறுக சேமித்து 8 முறை தொடர்ந்து தலா ரூ.10 ஆயிரம் வீதம் ஆட்சியர் டிஜி.வினயிடம் கரோனா நிவாரண நிதியாக ரூ.80 ஆயிரம் வழங்கிய பூல்பாண்டியன் என்பவர் மாவட்ட நிர்வா கத்தின் சார்பில் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டார்.


தூத்துக்குடி மாவட்டம், ஆலங்கிணறு பகுதியைச் சேர்ந்த இவர், குடும்பத்தினருடன் நல்ல நிலையில்தான் இருந்துள்ளார். மனைவி இறந்த பிறகு உறவினர்கள் ஆதரவின்றி பூல்பாண்டி பிச்சை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார். ஆரம்பத்தில் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி போன்ற இடங்களில் பிச்சை எடுத்துவந்த பூல்பாண்டி கடந்த ஓராண்டாக மதுரையில் கோயில்கள், பேருந்து நிலையங்கள், சுற்றுலாத் தலங்களில் பிச்சையாக தான் பெற்ற பணத்தை 2 அல்லது 3 வாரங்களுக்கு ஒருமுறை ஆட்சியர் அலுவலகம் வந்து ஆட்சியரிடம் ரூ.10 ஆயிரம் வீதம் 8 முறை ரூ.80 ஆயிரம் கரோனா நிவாரண நிதியாக வழங்கினார். தூத்துக்குடியில் இருந்தபோது இதேபோல தான் பெற்ற பணத்தை பள்ளிகளுக்கும், கிராமங்களுக்கும் உதவியுள் ளார். அவரது பொதுநலத்தை அறிந்த மக்களும், அவர் செல்லும் இடங்களில் எல்லாம் தாராளமாக பணம், பொருள் வழங்கி ஊக்கு வித்தனர்.


இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, ‘மக்கள் வழங்கிய பணத்தை அவர்களுக்கே திரும்பிக் கொடுக்கிறேன். இதில் எனக்கு என்ன பெருமை இருக்கிறது. கரோனா தொற்று முடியும் வரை பிச்சையாக பெற்ற பணத்தை நோய்த் தடுப்புப் பணிக்காக கொடுத்துக் கொண்டே இருப்பேன்’ என்றார்.


இந்நிலையில், மதுரை மாவட்டத்தில் கரோனா தடுப்புப் பணியில் சிறப்பாகச் செயல்பட்ட தன்னார்வலர்களுக்கு விருது வழங்கும் பட்டியலில் 7 பேரை ஆட்சியர் டி.ஜி. வினய் தேர்வு செய்தார். அதில், 5ஆவது பெயராக யாசகர் பூல்பாண்டியின் பெயர் இடம் பெற்றிருந்தது. இருப்பினும் விருதை அளிப்பதற்காக அதிகாரிகள் அவரைத் தேடி வருகின்றனர்.


No comments:

Post a Comment