தமிழ்நாட்டுத் தலைவர்கள் என்பவர்கள் தந்தை பெரியாரின் புகழின் சிதறல்கள்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, August 12, 2020

தமிழ்நாட்டுத் தலைவர்கள் என்பவர்கள் தந்தை பெரியாரின் புகழின் சிதறல்கள்!

‘‘ஒப்பற்ற தலைமை''  பொழிவு 4 - தமிழர் தலைவரின் சிறப்புரை



சென்னை, ஆக. 12-  ‘‘தமிழ்நாட்டுத் தலைவர்கள் என்பவர்கள் பெரியாரின் புகழின் சிதறல்கள்'' என்று.திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.


‘ஒப்பற்ற தலைமை'


கடந்த 19.7.2020 மாலை 6 மணியளவில்  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ‘‘ஒப்பற்ற தலைமை'' எனும் தலைப்பில் நான் காம் பொழிவினைக் காணொலிமூலம் கழகத் தோழர் களிடையே சிறப்புரையாற்றினார்.


அவரது சிறப்புரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:


அய்யாவின் அறிக்கை!


அய்யா அவர்கள் கடைசியாக ஓர் அறிக்கை எழு தினார் பாருங்கள்,


‘‘நான் திராவிட சமுதாயத்தைத் திருத்தி உலகில் உள்ள மற்ற சமுதாயத்தினரைப்போல மானமும், அறிவும் உள்ள சமுதாயமாக ஆக்கும் தொண்டை மேற்போட்டுக்கொண்டு அதே பணியாய் இருப்பவன். அந்த தொண்டு செய்ய எனக்கு யோக்கியதை இருக்கிறதோ, இல்லையோ, இந்த நாட்டில் அந்தப் பணி செய்ய யாரும் வராததினால், நான் அதை மேற்போட்டுக்கொண்டு தொண்டாற்றி வருகிறேன்.


இதைத்தவிர வேறு எந்த பற்று ஒன்றும் எனக்கு இல்லாததால், பகுத்தறிவையே அடிப்படையாகக்கொண்டு கொள்கைகளையும், திட்டங்களையும் வகுப்பதாலும் நான் அத்தொண்டிற்கு தகுதி உடையவன் எனக் கருதுகின்றேன். சமுதாயத்தொண்டு செய்பவனுக்கு இதுபோதும் என்றே கருதுகிறேன்.''


அதுபோலத்தான், யாரும் முன்வரவில்லை பெரியாரைப் பேணுவதற்கு. உடனே அன்னை மணியம்மையார் அவர்கள், தானே முன்வந்தார். எவ்வளவு கெட்ட பெயர் வந்தாலும் சரி, எவ்வளவு சங்கடங்கள் வந்தாலும் பரவாயில்லை என்று முன்வந்தார்கள் என்று சொன்னால், இதற்கு இணையான ஒரு சம்பவத்தை அருள்கூர்ந்து வேறு எங்கேயாவது பார்க்க முடியுமா?


எத்தனைக் காலங்களைக் கடந்து, எவ்வளவு தொலைநோக்கோடு தந்தை பெரியாருடைய ஒவ்வொரு செயலும் அமைந்திருக்கிறது; ஒவ்வொரு அறிக்கையும், ஒவ்வொரு எழுத்தும், பேச்சும், அவருடைய சிந்தனையும் அமைந்திருக்கிறது என்பதற்கு இதைவிட மிகப்பெரிய அடையாளம் வேறு என்ன காட்ட முடியும் என்பதைத் தோழர்கள் அருள்கூர்ந்து எண்ணிப் பார்க்கவேண்டும்.


எனவேதான், மேற்கூறிய இரண்டு சம்பவங்கள்; அன்னை நாகம்மையார், அன்னை மணியம்மையார் ஆகியோர் தந்தை பெரியார் அவர்களுடைய கருத்துகளில் ஊறி ஊறித் திளைத்தவர்கள்.


தமிழ்நாட்டுத் தலைவர்கள் என்பவர்கள் பெரியாரின் புகழின் சிதறல்கள்!


அண்ணா அவர்கள் தலைவர்களைப்பற்றி சொல்லிய தைப்பற்றி நான் ஏற்கெனவே ஒருமுறை சொல்லியிருக்கிறேன்.


‘‘தமிழ்நாட்டுத் தலைவர்கள் என்பவர்கள் பெரியாரின் புகழின் சிதறல்கள்'' என்று.


ஆனால், தொண்டின் சிதறல்களாக, தொண்டின் காவலர்களாக, தொண்டின் அரண்களாக அவர்கள் அமைந்தார்கள்.


அப்படியெல்லாம் தாண்டித்தான் இந்தக் கட்டத்திற்கு வந்திருக்கிறோம் என்பதை நீங்கள் நன்றாகப் புரிந்துகொள்ளவேண்டும்.


ஆகவேதான், இன்றைக்கு இந்த இயக்கத்திற்கு எவ்வளவு பெரிய தொல்லைகள் வந்தாலும், எவ்வளவு பெரிய புயல்கள் வந்தாலும், சுனாமிகள் வந்தாலும்கூட, அய்யா வாழுகிறார் இன்றைக்கும்.


திசை திருப்ப முயற்சி செய்கிறார்கள்!


அவருடைய சிலையைப் பார்த்து மிரள்கிறார்கள், அவருடைய படத்தைப் பார்த்து மிரள்கிறார்கள்; அவருடைய தத்துவத்தைப் பார்த்து மிரள்கிறார்கள். திசை திருப்ப முடியுமா? என்றெல்லாம் முயற்சி செய்கிறார்கள்.


அவருடைய கொள்கைக்குக் கொள்கை - லட்சியத்திற்கு லட்சியம் என்று பதில் சொல்லி, மீண்டுவிடக் கூடிய அளவிற்கு யாரும் இல்லை.


ஆகவேதான், சிலைகளைச் சிதைப்பது, காவிச் சாயம் பூசுவது போன்ற இழிசெயல்களை செய்து கொண்டிருக் கிறார்கள்.


அதற்கடுத்து, இரண்டு செய்திகளை உங்களுக்குச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.


ஒப்பற்ற தலைமை மட்டுமல்ல - ஒரு தனித்தன்மை யான தலைமை தந்தை பெரியார் அவர்களின் தலைமை.


அதற்கு அடையாளமாக, அய்யா அவர்கள் ஆழமான ஒரு கருத்தைச் சொல்கிறார்.


உலக வரலாற்றிலேயே இதுபோன்று


யாரும் இருக்க முடியாது!


என்னோடு வரக்கூடியவர்கள் யாராக இருந்தாலும், நல்ல பெயர் வாங்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டு இங்கே வராதீர்கள். சமுதாயப் பணி செய்யக்கூடியவர் களுக்குக் கெட்ட பெயர்தான் மிஞ்சும்.


நல்ல பெயர் வாங்க விரும்புபவர்கள் பொது நன்மைக்கானச் வேலைகளை செய்ய முடியாது என்றார்.


இதுபோன்ற ஒரு தலைமையை இதுவரையில் கேள் விப் பட்டிருக்கிறீர்களா? உலக வரலாற்றிலேயே இது போன்று யாரும் இருக்க முடியாது.


ஒரு தலைவன் என்று சொன்னால், எடை போடத் தெரிந்திருக்கவேண்டும்.


யாருக்கு என்ன பலம்?


யாருக்கு என்ன பலகீனம்?


யார் இராணுவ வீரர்கள்?


யார் இராணுவத் தளபதிகள்?


இராணுவ வீரர்கள் எல்லாம் தளபதிகளாகி விட முடியாது.


ஆகவே, ஒரு தலைமை என்பது இருக்கிறதே, ஒரு இயக்கத்தை நடத்துவதாக இருந்தாலும், ஒரு குடும்பத்தை நடத்துவதாக இருந்தாலும், நிறுவனமாக இருந்தாலும், தலைமை என்பதற்கு தக்காரை அடையாளம் தக்க முறையிலே காணவேண்டும்.


இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து


அதனை அவன்கண் விடல் (குறள் 517)


என்று சொல்வதே ஒப்பற்ற தலைமையினுடைய மிக முக்கியமான அம்சமாகும்.


நல்ல பெயர் வாங்க வேண்டுமே என்று


நான் ஒரு நாளும் முயற்சித்ததில்லை!


‘‘இப்போது இந்த ஸ்தாபனத்தில் இருக்கவேண்டியவர் கள் முக்கியமாக மனத்தில் வைக்க வேண்டிய காரியம் ஒன்று உண்டு. அதாவது, பொது ஜனங்களிடத்தில் நல்ல பேர் எடுக்க வேண்டுமே என்கின்ற கருத்தோடு இந்த மாதிரியான ஸ்தாபனங்களில் வேலை செய்யவே கூடாது. நல்ல பேர் எடுக்க கொஞ்சம்கூட முயற்சிக்கவே கூடாது. இதுதான் என்னுடைய பொது நலத்தின் குறிக்கோள்.


நான் பல ஸ்தாபனங்களுக்கு, அதாவது முனிசிபாலிட்டி, தாலுகா போர்டு, தேவஸ்தானக் கமிட்டி, ஸ்கூல் நிர்வாகம், வியாபார சங்கம் முதலியவைகளுக்குத் தலைவனாக இருந்திருக்கிறேன். ஜில்லா போர்டுக்கும் ஒரு முக்கிய வாயாடி அங்கத்தினனாக இருந்திருக்கிறேன். வேறு சில ஸ்தாபனங்களுக்கும் சர்வாதிகாரியாகவும், தலைவனாக வும் இருக்கிறேன். இவைகள் ஒன்றிலாவது பொது ஜனங்களிடமோ, நம்மை அனுசரித்துப் பின்பற்றுகிறவர் களிடமோ நல்ல பெயர் வாங்க வேண்டுமே என்று நான் ஒரு நாளும் முயற்சித்ததில்லை. எனது 35 வருடப் பொதுவாழ்வில் நான் நல்ல பெயர் எடுத்ததுமில்லை.


பொது ஜனங்களின் யோக்கியதை எனக்குத் தெரியும். 100-க்கு 85 பேர் தற்குறிகள். தங்களுக்கு வேண்டியவை என்னவென்பதைக் கூடத் தெரியாதவர்கள். தங்கள் முன்னோர்கள் யார்? தங்கள் நாடு எது? தங்கள் ஜாதி - இனம் என்ன? என்பவற்றையே உணராதவர்கள். மீதியுள்ளவர்களில் 14 பேர்கள் சுயநலக்காரர்கள். பக்கத்து வீடு தீப்பிடித்து எரிந்தால் அதை அணைக்க ஒரு சொம்புத் தண்ணீர் கூடக் கொடுக்க மனம் வராதவர்கள். அதுவும் நம் வீடு எரியும்போது அணைக்கத் தண்ணீர் வேண்டாமா என்று கருதிக்கொண்டு அதை மிச்சப்படுத்தி வைத் திருக்கும் அவ்வளவு புத்திசாலிகள். இந்தமாதிரி ஜனங் களிடத்தில் ஒரு மனிதன் நல்ல பேர் வாங்குவதென்றால் அது உண்மையான பொதுத் தொண்டு ஆகுமா? அந்த நல்லபேர் பொதுத் தொண்டினால் ஏற்பட்டதாக இருக்க முடியுமா?


இவர்களிடம் நல்ல பேர் வாங்க அனேக பித்தலாட்டங் களும், அயோக்கியத் தனங்களும், ஏமாற்றல்களும் செய்தாக வேண்டியிருக்கும். ஆதலால்தான் பொது ஜனங்களிடம் நல்ல பேர் எடுக்க முயற்சிப்பவன் பொதுத் தொண்டுக்கு லாயக்கற்ற வனாவான் என்று சொல்லி வருகிறேன்.


மற்றப் படி, நான் என்ன செய்யவேண்டுமென்று சொல்லு கிறேனென்றால், பொதுநல உணர்ச்சி சிறிதாவது உள்ளவர்கள், பொது மக்களுக்கு உண்மையாக நலம் தரக்கூடிய காரியம் எதுவென்று நடு நிலையிலிருந்து ஆலோசித்து முடிவு கட்டி, அது வேறு யாருக்குக் கேடு தருவதாயிருந்தாலும் சிறிதும் பயப்படாமல், துணிவோடு செய்ய வேண்டும்.


பாமர மக்களையும், சுய நலக்காரரையும் திருப்திப் படுத்துவதுதான் பொதுநலத் தொண்டு என்று எண் ணினால், உண்மையான நல்ல காரியம் ஒன்றும் செய்ய முடியாது. இவர்களை லட்சியம் செய்யாமல் நமக்குச் சரியென்றுபட்டதைத் தைரியமாகச் செய்து கொண்டு போனால் அவை இன்றுள்ள மக்களால் போற்றப்படா விட்டாலும் இவர்களது பின் சந்ததியார் நன்மையடைந்து அவர்களால் போற்றப்படத் தக்கவையாக இருக்கும்.


முன்னோர்கள் செய்து வைத்ததை மாற்றக் கூடாதே என்று கவலைப்படுகிறவர்கள் கோழைகளேயாவார்கள். முன்னோர்களைவிடக் கண்டிப்பாக நாம் அதிக அனுபவசாலிகளேயாவோம். நம்மைவிட நமக்குப் பின்னால் வருகிறவர்கள் இன்னும் அனுபவசாலிகளேயா வார்கள். 5 வயதுப் பையனைவிட, 10 வயதுப் பையன் எப்படிக் கொஞ்சம் புத்திசாலியோ, அவனுக்கு விஷயம் தெரிந்து கொள்ள எப்படிப் பல சவுகரியங்களும், சாதனங் களும் இருக்கின்றனவோ, அது போலவே, முன்காலத்தை விட இந்தக் காலத்தவர்களுக்கு அதிக விஷயம் தெரிந்து கொள்ளச் சில சவுகரியங்களும், சாதனங்களும் இருக்கின்றன. அது போலவே, நமக்கு முன் இருந்தவர்கள் செய்த காரியத்திற்கும், நாம் செய்ய வேண்டிய காரியத்திற்கும் தன்மை தெரிய வேண்டுமானால், அவர்கள் யார்? நாம் யார்? அவர்கள் லட்சியம் என்ன? நம் லட்சியம் என்ன? என்பவற்றைச் சிந்தித்துப் பார்த்து நாம் செய்ய வேண்டிய காரியத்தைச் செய்ய வேண்டும்.''


என்று சொல்லியிருக்கிறார்.


ஆகவே, நண்பர்களே! ஓர் இயக்கம் ஒப்பற்ற தலைமை யினால் என்ன பயன்பெற்று இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்.


மாணவர்கள்பற்றி


தந்தை பெரியாரின் கருத்து!


மாணவர்கள் கூட்டத்தில் அய்யா பேச ஆரம்பித்தார்.


மாணவர்களே, உங்களை நம்பித்தான் இருக்கிறேன். நீங்கள்தான் எங்கள் சொத்துகள் என்று அழகாகப் பாராட்டி சொல்லிவிட்டு, அதேநேரத்தில், மாணவர்களே உங்களுக்கு ஒன்றை சொல்கிறேன்.


நீங்கள் எல்லாம் நல்ல சோல்ஜர்கள்; நல்ல இராணுவப் பட்டாளச் சிப்பாய்கள். ஆனால், நல்ல கமாண்டர்கள் அல்ல. ஆகவே, நீங்களே முடிவெடுத்து செயல்படக்கூடிய தகுதி உங்களுக்கு இல்லை.


இன்னொருவர் வழிநடத்தினால், அதனை செய்யக்கூடிய ஆற்றல் உங்களுக்கு உண்டு.


மாணவர்களைப்பற்றி பெரியாருடைய கணிப்பு இதுதான்.


ஓர் அனுபவக் களஞ்சியமாகத்


திகழ்ந்தார்!


பாராட்டவேண்டிய நேரத்தில் பாராட்டி, பயன்படுத்த வேண்டிய நேரத்தில் பயன்படுத்தி, இப்படி எல்லாக் கோணங்களிலும் அய்யா அவர்கள் ஒரு அனுபவக் களஞ்சியமாகத் திகழ்ந்தார்.


புத்தக அறிவல்ல; அனுபவம். பட்டறிவு - ஒவ்வொரு செய்தியும் அவருக்கு அனுபவத்தில் இருந்து கிடைக்கக் கூடியவை.


முத்தமிழறிஞர் கலைஞரின் பதில்!


இந்த நேரத்தில் ஒரு செய்தி நினைவிற்கு வருகிறது.


நெருக்கடி காலத்தில் கலைஞர் அவர்களிடம் ஒரு கேள்வி கேட்டார்கள்,


உங்களையெல்லாம் பதவி நீக்கம் செய்திருக்கிறார்கள்; இந்த நேரத்தில் நீங்கள் தேசிய நீரோட்டத்தில் கலக்கவில்லை, அதனால்தான்  இப்படி பதவி நீக்கம் செய்திருக்கிறார்கள் என்று சொல்லுகிறார்களே, அதுபற்றி உங்கள் கருத்து என்ன? என்று கேட்டார்கள்.


அதற்குக் கலைஞர் அவர்கள் அழகாக பதில் சொன்னார், ‘‘நான் ஈரோடு போனவன்; நீரோடு போகமாட்டேன்; போகவேண்டிய அவசியமில்லை'' என்று சொன்னார்.


ஆகவேதான் நண்பர்களே, எதிர்நீச்சல் மட்டுமல்ல, சுழல் வந்தாலும், அந்தச் சுழலிலிருந்து தப்பிக்கக் கூடிய அளவிற்கு நாம் இயக்கத்தை நடத்த அனுபவங்கள் தெளிவாக உள்ளன.


உடனடியாக லாபத்தைக் கருதி, நல்ல பெயர் வாங்கவேண்டும் என்று நினைப்பதைவிட, தொடக்கத்தில் கெட்ட பெயர் வந்தாலும், கடைசியில் நல்ல பெயர் நிலைக் கக் கூடிய வாய்ப்புகள் வரும்.


69 சதவிகித இட ஒதுக்கீட்டில்


நாம் வாங்காத கெட்ட பெயரா?


எனக்கேகூட அதுபோன்ற ஒரு அனுபவம் உண்டு. 69 சதவிகித இட ஒதுக்கீட்டைக் கொண்டு வரும்போது, எந்த அளவிற்கு நாம் விமர்சிக்கப்பட்டோம். இன்றைக்கு அந்த 69 சதவிகித இட ஒதுக்கீடு பாதுகாக்கப்படவேண்டும் என்று எல்லா மாநிலங்களும் சொல்லக்கூடிய அளவிற்கு வந்து, தமிழ்நாட்டை உதாரணமாகச் சொல்லுகிறார்கள் என்று சொன்னால், திராவிடர் கழகம், தந்தை பெரியாருக்குப் பிறகு, கெட்ட பெயர் எடுப்பதற்குத் தயாராக இருந்த நேரத்தில்தான், நாம் ஒரு துளியாக அந்த வழியில் பயன்பட்ட காரணத்தினால்தான், அந்தப் பணியை வெற்றிகரமாக செய்தோம்.


நாம் எந்தப் பணியை முதலில் செய்தாலும், உடனே நமக்கு நல்ல பெயர் வராது. நல்ல பெயர் - கெட்ட பெயர் என்ற வார்த்தையே தேவையில்லை நமக்கு.


மக்கள் நலன் - பொது நலன் என்பதுதான்


மிக முக்கியம்!


நம்முடைய கொள்கை என்பதை நிலைநாட்ட வேண்டும். அதில் சுயநலம் இருக்கக் கூடாது; அதிலே தன்னலத்திற்குச் சிறிதும் இடமிருக்கக் கூடாது. அது வடிகட்டிய மக்கள் நலன் - பொது நலன் என்பதுதான் மிக முக்கியம் என்ற அளவில் நம்முடைய இயக்கம் இருக்கின்ற காரணத்தினால்தான்,


அய்யா அவர்கள் சொன்னதைப்போல,


உண்மை வென்று தீரும்


உண்மைக்கு ஆரம்பத்தில் சோதனை இருந்தாலும், கடைசியில் வெற்றி கிட்டும் என்றார். அவர் வைதீகர் சொல்வதைப்போல சொல்லவில்லை; அவருடைய அனுபவத்தை வைத்தே சொன்னார்.


நீதிமன்றத்தில் உண்மையைச் சொன்னதற்குப் பிறகு அவர் வென்றார் என்ற அனுபவத்தை அதற்குப் பிறகுதான் எடுத்துச் சொன்னார்.


அய்யா அவர்களுடைய ஒவ்வொரு வாழ்க்கைத் துளியும், ஒவ்வொரு அறிவுரையும் பயன்படக் கூடியவையாக, நம்மை நாமே செதுக்கிக் கொள்ளக் கூடியவையாக அமைந்திருக்கின்றன.


அடுத்த நிகழ்வுகளில் மற்ற செய்திகளைப் பார்ப்போம்!


நன்றி, வணக்கம்!


வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!!


- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.


No comments:

Post a Comment