ஆபாச இருள் எது குருமூர்த்தியாரே - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, August 18, 2020

ஆபாச இருள் எது குருமூர்த்தியாரே

ஆபாச இருள் எது குருமூர்த்தியாரே?


* மின்சாரம்



இன்று வெளிவந்துள்ள ‘துக்ளக்' தலையங்கத்தில்  (26.8.2020, பக்கம் 4) மேற்கண்டவாறு திருவாளர் சாமி நாதன் குருமூர்த்தி அய்யர்வாள் எழுதித் தள்ளியுள்ளார்.


மேலே கூறப்பட்டுள்ளவற்றிற்குப் பலமுறை பதிலடி கொடுத்த பிறகும் அறிவு நாணயமற்றதுகள் பதில் சொல்ல வக்கின்றிப் பதுங்குவதும், குறிப்பிட்ட காலத் திற்குப் பிறகு தான் வாந்தி எடுத்தவற்றை மறுபடியும் விழுங்கி வாந்தி எடுப்பதும் - அவர்களைப் பொறுத்தவரை சர்வ சாதாரணமே!


“ஆன்மிக பாரம்பரியம்தான் திராவிட கழகங்களின் ஆபாச நாத்திக இருளிலிருந்து தமிழகத்தை வெளியே கொண்டு வந்து காப்பாற்றி இருக்கிறது” என்று குருமூர்த்தி எழுதுகிறார்.


குருமூர்த்தி கூறும் அந்த ‘ஆன்மிகம்' என்பது எது? நாம் பதில் சொல்லுவதைவிட, குருமூர்த்தியின் குருநாத ரான மறைந்த திருவாளர்   ‘சோ' ராமசாமி - ஆன்மிகத்துக்கு 'ஆராய்ச்சிப் பூர்வமாகÕ அதிரடி பதில் அளித்துள்ளார். அது ஒன்று போதும் குருமூர்த்தி கும்பலுக்கு சரியான ஆப்பு!


கேள்வி: அரசியல்வாதி ஆவதற்கு என்ன தகுதி வேண்டும்? ஆன்மிகவாதியாவதற்கு என்ன தகுதி வேண்டும்? நடிகராவதற்கு என்ன தகுதி வேண்டும்?


சோவின் பதில்: அரசியல்வாதி ஆவதற்கு பொய் சொல்லத் தகுதி வேண்டும். ஆன்மிகவாதியாவதற்கு பொய்யை அருள்வாக்காக மாற்றத் தெரிய வேண்டும். நடிகராவதற்கு உண்மையாகவே நடிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.


(‘துக்ளக்' 26.10.2016, பக்.23)


ஆன்மிகப் பித்தலாட்டத்திற்கு இதைவிட இன்னும் என்ன விளக்கம் தேவை - குருமூர்த்திக் கும்பலே!


ஆன்மிகம் என்பது என்ன? அதுபற்றி ‘சோ’ என்ன எழுதுகிறார்: மீண்டும் ஒருமுறை படியுங்கள் படியுங்கள். பொய்யை  அருள்வாக்காகக் கூறுவதுதான் ஆன்மிகம்.


இந்த யோக்கியதையில் உள்ளவர்கள் திராவிடர் கழகத்தின் செயல்பாட்டை ஆபாச நாத்திகம் என்று கூறிட  யோக்கியதை உண்டா?


இவர்களின் பக்திக்கு இன்னொரு கூடுதல் சர்டிபி கேட்டையும் கல்வெட்டு போல பதித்துக் கொடுத்துள்ளார் - கார்ட்டூன் படத்துடன் திருவாளர் 'சோ'.



கேள்வி: நீங்க முன்னே பார்த்த மாதிரி ஜனங்களிடம் பக்தி இருக்கிறதா இப்பொழுது?


புரோகிதர் பதில்: பக்தியாவது ஒண்ணாவது? கோவிலுக்கு வர்றவன் சாமி தரிசனத்துக்கா வர்றான். சைட் அடிக்கன்னா வர்றான். பொம்மனாட்டிகள் மட்டும் என்ன யோக்கியம்? அவளும் புடவை, நகை நட்டு இதெல்லாம் போக நேரம் இருந்தா சுவாமி அம்பாளை நெனைச்சுகிறா.


(‘துக்ளக்‘ 1.6.1981, பக்கம் 32)


போதுமா 'துக்ளக்' கும்பலே? இந்த யோக்கியதை உடைய பக்தியையும் கோயிலையும் இன்னும் எத்தனைக் காலத்துக்குக் கட்டிக் கொண்டு மாரடிக்கப் போகிறீர்கள்?


சாமியார் ஆசாராம் ஆசிரமத்தில் நடந்த லீலைகள், ஆபாசங்கள் கொஞ்சமா, நஞ்சமா? நவீன மய கர்ப்பத் தடை சாதனங்கள்  குவிந்து கிடந்தனவே! எத்தனை எத்தனைப் பெண்கள் சூறையாடப்பட்டனர் (இவரின் ஆசிரமத்துக்கு மன அமைதிக்காக வேறு வழியின்றி பிரதம அமைச்சர்கள்கூடச் செல்வதுண்டாம்!)


அவர் கைது செய்யப்பட்ட நிலையில் நீதிமன்றத்தில் அவர் உதிர்த்தது என்ன?


Ôஎங்கள் கடவுள் கிருஷ்ணன் செய்ததைத்தான் நானும் செய்தேன்Õ என்று சொன்னாரே! இதுதான் குருமூர்த்தி வகையறாக்களே - உங்கள் ஆன்மீகத்தின், பக்தியின், இந்துக் கலாச்சாரத்தின் யோக்கியதையா?


இதில் ஒரு கொடுமை என்னவென்றால் ராஜஸ்தான் பி.ஜே.பி. ஆட்சியில் அரசு பாடத் திட்டத்தில் இவரைப் பற்றி சிறப்பாக வந்திருக்கிறது என்பதுதான்.


“மக்களை வழி நடத்த வந்த புனிதர்! இவர் தனது ஆன்மிக பலத்தால் மக்களை ஒருங்கிணைக்கும் வல்லமை பெற்றவர்.  இவரை குருவாக நினைத்த மக்கள் வாழ்க்கையில் பெரும் புகழை அடைந்துள்ளனர்” என்று பாடப் புத்தகத்தில் புகழப்பட்டுள்ளாரே! இவரைப்பற்றி பிள்ளைகள் படித்தால் அவர்களின் நிலை என்னாவது?


“பக்தி தனிச் சொத்து - ஒழுக்கம் பொதுச் சொத்து” என்பதுதான் தந்தை பெரியார் கொள்கைச் சீலம்.


இத்தகு உன்னத சீலத்தைக் கொண்ட திராவிடர் கழகத்தின் பிரச்சாரம் மக்களுக்குத் தேவையானது. அதே நேரத்தில் பக்திப் போர்வையில் சல்லாபமாடும் சங்கதிகள் கொஞ்சமா? நஞ்சமா? (காஞ்சி சங்கராச் சாரியார் ஜெயேந்திர சரஸ்வதியின் “ஆன்மிகமும் அரசியலும்“ எனும் தலைப்பில் எம்.ஆர். ரகுநாதன் ஒரு நூலையே எழுதியுள்ளாரே - அதனை மீண்டும் பாகம் வாரியாக வெளியிட வேண்டுமா?)


கண்ணாடி வீட்டிலிருந்து கல்லெறிய வேண்டாம் குருமூர்த்தி கும்பலே!


குருமூர்த்திகள் அரட்டை அடிக்க அடிக்கத்தான்- தந்தை பெரியாரையும், திராவிடர் கழகத் தலைவர் மானமிகு வீரமணி அவர்களைப் பற்றியும் அபாண்டமாக எழுத எழுதத்தான் - திராவிடர் கழகத்தைக் சீண்டச் சீண்டத்தான் -ஆரியப் பார்ப்பன புராண இதிகாச - சங்கரமட லீலா வினோதங்களை வண்டி வண்டியாக எழுதிக் கொட்டிட எங்களுக்கும் வாய்ப்பு ஏற்படும்! வெகுமக்கள் மத்தியிலும் ஆன்மீகத்தின்மீதான பக்தியின்மீதான தவறான பிடிப்புகளும் விலகி ஓடும் - எழுதுங்கள் - தொடர்ந்து எழுதிக் கொண்டே இருங்கள். வரவேற்கிறோம் - வரவேற்கிறோம்!


பா.ஜ.க. அரசில் பாடத் திட்டத்தில் ஆசாராம்!



வசுந்த்ரா ராஜே தலைமையிலான ராஜஸ்தான் அரசு, கடந்த 2013-ஆம் ஆண்டு சாமியார் ஆசாராம் குறித்து அரசு பாடப்புத்தகத்தில் சேர்த்துள்ளது. அதில் இந்து சாதுக்கள் என்ற தலைப்பில் "மக்களை வழிநடந்த வந்த புனிதர்! இவர் தனது ஆன்மீக பலத்தால் மக்களை ஒருங்கிணைக்கும் வல்லமை பெற்றவர். இவரை குருவாக நினைத்த மக்கள் வாழ்க்கையில் பெரும் புகழை அடைந்துள்ளனர்" என்று குறிப்பிட்டுள்ளது.


காமுகன்தான் பிஜேபி ஆட்சியின் கதாநாயகன்! தெரிந்து கொள்க!


 


ஆன்மிகம் வளர்ந்ததாகக் கூறும் குருமூர்த்தி அய்யரின் பூணூல் பார்வைக்கு அர்ப்பணம்


பக்திக்கும் ஒழுக்கத்திற்கும் சம்பந்தம் இல்லை!



கேள்வி: நம் நாட்டில் இறையுணர்வு குறைந்து வருகிறதோ...?


பதில்: என் அனுபவத்துல சொல்றேன்.. பக்தி அதிகமாயிட்டிருக்கு.. கோயிலுக்குப் போகிறவங்க எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக்கிட்டே இருக்கு?


பழனியில் எம்பெருமான் முருகன் கோயில் உண்டிய லில் முன்னாடியெல்லாம் அஞ்சு லட்சம், ஆறு லட்சம் ரூபாதான் வந்திச்சு. இப்பவோ காணிக்கைத் தொகை ரெண்டு மூணு கோடியைத் தாண்டிடுது. ... பக்தி அதிகமாக இருக்கு... ஆனால் ஒழுக்கம்தான் குறைந்துப் போயிடுச்சு!


கேள்வி: இறைவனிடத்தில் மக்களுக்குப் பக்தி அதிகமாக இருக்கிறதென்றால் ஒழுக்கமும் இருக்கிறதென்று கொள்ளலாமே?


பதில்: ஊ... ஹூம்.. அப்படியில்லை.. பக்திக்கும் ஒழுக்கத்துக்கும் சம்பந்தமே யில்லை.


- கிருபானந்தவாரியார்,  (ஆனந்தவிகடன் 22.12.1991).


No comments:

Post a Comment