பா.ஜ.க. என்றாலே பார்ப்பன ஜனதாவே! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, August 12, 2020

பா.ஜ.க. என்றாலே பார்ப்பன ஜனதாவே!

மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய கல்விக்கொள்கை விளக்கக் கையேட்டில் சமஸ்கிருதம் என்ற வார்த்தை மட்டும் 23 இடங்களில் உள்ளது.


14ஆம் பக்கத்தில் 9 முறையும், 15ஆம் பக்கத்தில் 1 முறையும், 55-ஆம் பக்கத்தில் 11 முறையும், 64, 65 ஆம் பக்கத்தில் 2 முறையும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது இந்தி யிலும், ஆங்கிலத்திலும் மட்டுமே உள்ளது. இதன் ஆங்கில மொழிப்பதிப்பில் கூட பல இடங்களில் இந்தி வார்த்தைகள் ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளன.


15 ஏப்ரல் 2019 இந்துஸ்தான் டைம்ஸ் இதழில் வந்த செய்தி தமிழாக்கம் செய்யப்பட்டு விடுதலையில் வெளியானது.


"2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வித்யாபாரதி என்ற ஆர்.எஸ்.எஸ். கல்வி அமைப்பு மத்திய மனிதவளத்துறைக்கு 21 கோரிக்கைகள் அடங்கிய பட்டியல் ஒன்றைக் கொடுத்தது. இதில் மாநிலங்கள் நடத்தும் கல்வி நிலையங்களில் சமஸ்கிருத வகுப்புகள் தொடங்க வேண்டும் என்ற கோரிக்கையும் ஒன்று!


இதனை அடுத்து அரியானா, குஜராத், மகாராட்டிரா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் சமஸ்கிருதக் கல்வி வலுக்கட்டாயமாக போதிக்கப்பட்டு வருகிறது. (மகாராட்டிராவில் இந்தி பயிற்று மொழி அல்லாதவர்கள் சமஸ்கிருதத்தைக் கட்டாயம் படிக்கவேண்டும் என்ற விதிமுறை உள்ளது) அதாவது மராத்தி, ஆங்கில முறையில் படிப்பவர்கள் சமஸ்கிருதத்தை ஒரு பாடமாக எடுக்கவேண்டும் என்று உள்ளது.


இதர மாநிலங்களில் சமஸ்கிருத வகுப்புகள் சுமையாக இல்லாமல் மாலை நேர சிறப்பு வகுப்பாக நடத்தலாம் என்றும், மாநில அரசுகளுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய மனிதவளத்துறை உடனடியாக செய்து தருமென்றும் தேர்தல் முடிந்த பிறகு சுற்றறிக்கை ஒன்றை மத்திய அரசு அனுப்பியுள்ளது.


மத்திய அரசு நடத்தும் பள்ளிகளில் 3 ஆவது பாடமாக சமஸ்கிருதம் கற்பிக்கப்பட இருப்பதாக வந்த செய்தியை மத்திய மனிதவளத் துறை அமைச்சகம் மறுக்கவில்லை, மாறாக முன்னாள் தேர்தல் ஆணையரும், இன்றைய மத்திய அரசின் சமஸ்கிருத மேம்பாட்டுக் கழகத்தின் தலைவருமான என்.கோபால்சாமி அய்யங்கார் "சமஸ்கிருதம் மூன்றாவது மொழிப்பாடமாகக் கொண்டு வந்தால் நல்லது என்றுதான் கோரிக்கை விடுத்திருந்தேன்" என்று Ôஎங்களப்பன் குதிருக்குள் இல்லைÕ என்பதை ஒப்புக்கொண்டார்.


இவர் பி.டி.அய். செய்தி நிறுவனத்திற்குப் பேட்டியளித்த போது "சமஸ்கிருதம் - அறிவியல், பொருளாதாரம், மருத்துவம் போன்ற துறைகளில் ஆய்வு செய்ய பொருத்தமான மொழி, இம்மொழியைக் கற்பவர்கள் தொழிற்கல்வியில் சிறந்து விளங்க வாய்ப்புள்ளது. ஆகவே மத்திய அரசு சமஸ்கிருத மொழியை அனைத்து மாணவர்களிடமும் கொண்டு சேர்க்க முயற்சி செய்ய வேண்டும்" என்று கூறியுள்ளார்.


தொடர்ந்து மத்திய பிஜேபி அரசுக்கு இப்பிரச்சினையில் அறிவு நாணயம் அறவேயில்லை என்பதைக் காட்டிக் கொண்டு வருகிறது.


புதிய கல்வித் திட்டத்தில் சமஸ்கிருதத்துக்கு முக்கியத்துவம் என்பது உண்மையே என்று சொல்ல வேண்டியதுதானே. ஏன் தயக்கம்-ஓடி ஒளிதல்?


ஆரியம் ஒரு நயவஞ்சகம் என்று அறிஞர் அண்ணா Ôஆரிய மாயை'யில் எழுதியதுதான் நினைவிற்கு வருகிறது.


1938ஆம் ஆண்டில் இந்தியைத் திணித்த ராஜாஜிகூட லயோலா கல்லூரியில் பேசும்போது சமஸ்கிருதத்தைப் படிப்படியாகக் கொண்டு வரவே இந்தியை முதற்கட்டமாகப் புகுத்துகிறேன் என்று பேசவில்லையா?


வாஜ்பேயி பிரதமராக இருந்தபோது, அன்றைய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் முரளிமனோகர்ஜோஷி பல்கலைக்கழகங்களில் சமஸ்கிருதத்தைத் திணிக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லையா? வேதக் கணிதம் என்ற பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தவில்லையா?


ஓர் ஆண்டையே சமஸ்கிருத ஆண்டு என்று கூறி மக்கள் வரிப்பணத்திலிருந்து கோடிகோடியாகக் கொட்டி அழவில்லையா? தமிழ் ஆண்டும் ஓர் ஆண்டாகவே அறிவிக்க வேண்டும் என்று முதல் அமைச்சர் கலைஞர் விடுத்த வேண்டுகோளை மத்திய அரசு ஏற்கவில்லையே!


சுற்றி வளைப்பானேன்! பாரதிய ஜனதா என்றால் பார்ப்பன ஜனதா என்பதால் இந்த ஆட்சியும் பார்ப்பன ஆட்சியே! இதனை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவதுதான் இந்த ஆட்சிக்கான முடிவுரையாக இருக்க முடியும் - ஆம். தேவை தந்தை பெரியார் சிந்தனைகளே!


No comments:

Post a Comment