சென்னையில் கரோனா தொடர் கண்காணிப்பு மய்யம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, August 20, 2020

சென்னையில் கரோனா தொடர் கண்காணிப்பு மய்யம்


சென்னை,ஆக.20, கரோனோ தொற்றால் பாதிக்கப்படும் நோயாளிகள் நுரையீரல் சார்ந்த பிரச்சனைகளுக்கு மட்டுமே ஆளாவதாக இதுவரை மருத்துவர்களால் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், சமீபகாலமாக  தொற்றிலிருந்து குணமாகும் பலருக்கு நிமோனியா, இதயம், சிறுநீரகங்கள், கல்லீரல், ரத்த நாளங்கள் மற்றும் மூளை நரம்பியல் சார்ந்த பல்வேறு பிரச்சினைகளும் ஏற்படுவதாக கூறப்படுகிறது.


இந்நிலையில், இந்தியாவில் முதல் முறையாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்கள் பரிசோதனை செய்ய கரோனா தொடர் கண்காணிப்பு மய்யம் தொடங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் முதல்முறையாக கரோனா தொடர் கண்காணிப்பு மய்யம் சென்னையில் தொடங்கப்பட்டிருப்பதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.


தமிழகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 8 லட்சம் பேர் குணமடைந்து வீடு திரும்பியிருப்பதாகவும். அதில் 10 முதல் 15 சதவிகிதம் பேருக்கு நுரையீரலில் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அய்சியுவில் சிகிச்சை பெற்றவர்கள் இந்த மய்யத்தில் பரிசோதனை செய்யலாம் என தெரிவித்தார்.


தமிழகம் முழுவதும் எந்த மருத்துவமனையில் கரோனா சிகிச்சை பெற்றிருந்தாலும், சிகிச்சைக்கு பின் 4 வாரங்கள் கழித்து இந்த மய்யத்தை அணுகி பரிசோதனை செய்து கொள்ளலாம் என்றும் சென்னைக்கு அடுத்தப்படியாக மதுரையிலும் கரோனா தொடர் கண்காணிப்பு மய்யம் அமைக்கப்பட இருப்பதாகவும் தெரிவித்தார்..


கரோனா சிகிச்சைக்கு அரசு நிர்ணியித்ததை விட அதிக கட்டணம் வசூலித்த தனியார் மருத்துவனையின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டிருப்பதாகவும், தனியார் மருத்துவமனைகள் சேவை மனப்பான்மையுடன் சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.


 


அரசுக் கல்லூரிகளில் சேர இணையவழி மூலம் விண்ணப்பிக்கக் கால நீட்டிப்பு வேண்டும்


தமிழக அரசுக்கு மாற்றுத்திறனாளிகள் சங்கம் கோரிக்கை



சென்னை,ஆக.20, அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கு இணையவழி மூலமாக விண்ணப்பிக்க கால நீட்டிப்பு செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறன் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.


இது குறித்து அந்தச் சங்கம் வெளியிட்ட அறிக்கை:


நடப்பு கல்வியாண்டில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர முழுமையாக இணையவழி மூலமாக, விண்ணப்ப முறையை கல்லூரி கல்வித்துறை அமல்படுத்தியது. ஜூலை 21-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை 11 நாள்கள் மட்டுமே அவகாசம் கொடுத்தது. இந்தக் கெடு தேதியானது, மலைப்பகுதியில் உள்ள குக்கிராமங்கள், தொலைதூர குக்கிராமங்களுக்கு முழுமையாக சென்று சேரவில்லை.


பொது போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளதால், கிராமப் புறங் களில் போதுமான இணைய வசதி செயல்பாடு இல்லாதது உள்ளிட்ட காரணங்களால், மாநிலம் முழுவதும் நூற்றுக் கணக்கான மாணவர்கள் குறித்த நேரத்தில் இணையவழி மூலமாக விண்ணப்பிக்க முடியாமல் போகியுள்ளது. இதில், மாற்றுத்திறன் மாணவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு கலை, கல்லூரிகளில் சேர வாய்ப்பிருந்தும் குறித்த நேரத்தில் விண்ணப்பிக்க முடியாத ஏழை மாணவர்கள் தனியார் கல்லூரிகளில் அதிக கட்டணம் செலுத்த வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.


எனவே, இணையவழி மூலமாக விண்ணப்பிக்க ஒரு வார கால அவகாசம் நீட்டிக்க வேண்டும். மேலும் கிராமப்புற ஏழை மாணவர்கள் அரசு கல்லூரிகளில் சேர வாய்ப்பு அளிக்க கல்லூரி கல்வித்துறை உரிய நடவடிக்கை எடுக்க தமிழக முதல்வர் உத்தரவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment